நூறு கதைகளை முடிக்கப்போகிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகுக்குக் கொண்டுசெல்கிறது. இத்தனை முடிவில்லாத அலைகளை எழுப்பும் கதைகளை தொடர்ச்சியாக வாசிக்கநேர்ந்ததே இல்லை. இந்தக்கதைகளில் என்னை மிகக் கவர்ந்தவை உருவகத்தன்மை கொண்ட கதைகள்தான். அவற்றில் நாம் தர்க்கபூர்வமாக வாசிக்கமுடியத ஒரு அம்சம் உண்டு. அதை நாம் வகுத்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால் நம் மனசுக்குள் அவை சென்று ஒரு புரளலை உருவாக்குகின்றன
குமிழி அப்படிப்பட்ட கதை. அந்தக்கதை எளிமையாகச் சொன்னால் ஒரு குயவனிடம் சென்று குழந்தைப்பொம்மைக்கு உத்தரவு கொடுப்பது. ஆனால் களிமண்ணிலிருந்து குழந்தையை உருவாக்கி எடுப்பதற்கான கைகளின் தவிப்பை நான் அருகே பார்த்தேன். அந்த இமேஜிலிருந்து இதுவரை வெளியே வரவே முடியவில்லை.
கே.நடராஜன்
***
அன்புள்ள ஜெ
குமிழி கதையை மிகவும் தாமதமாக இன்றுதான் வாசித்தேன். ஒரு கொந்தளிப்பான கதை. ஆனால் கதையில் அந்தக்கொந்தளிப்பே இல்லை. வேறு ஏதோ சொல்லப்பட்டிருக்கிறது. கதை முழுக்க முழுக்க அடியிலே இருக்கிறது
எனக்கு 7 முறை அபார்ஷன் ஆகியிருக்கிறது. கடைசியில் பிள்ளை பிழைத்து இன்றைக்கு 8 வயது. அந்த அவஸ்தையை முழுக்க அந்தக்கதையிலே கண்டேன். அந்தக்கதையிலிருந்து விலகிச்செல்லவே முடியவில்லை. நம் கையிலிருந்து அந்த கலம் நழுவிப்போகும் அனுபவம் சாதாரணமாக உணரவைக்கக்கூடியது அல்ல.
சாந்தி மகாதேவன்
அன்பு ஜெ,
கழுமாடன் கதையைப் படித்ததும் பீடம் கதையை படித்தேன். கழுமாடன் கதையில் பீடம் அமைக்கையில் சித்தரிக்கும் இளைஞனில் ஓர் எச்சத்தை உணர்ந்தேன். அதை இங்கு இந்தக் கதையில் முடிபு செய்து கொண்டேன். ஒரு வகையில் கழுமாடன் சாமியின் அவதாரங்களாய் மேலும் மேலும் கதைகளைப் பின்னிக் கொள்ள ஏதுவான கதைகள்.
புனைவு என்பதைத் தாண்டி புலையர்களின் வாழ்க்கையை, வழிபாட்டை, நம்பிக்கைகளை, துன்பங்களை, சடங்குகளை நீங்கள் பல கதைகளில் விரவி வைத்திருக்கிறீர்கள். அவையாவையும் மீட்டிப் பார்த்துக் கொண்டேன். எளியவர்கள்/ ஒடுக்கப்பட்டவர்கள் துன்பமடைந்தவர்களுக்கான குரலாக இதை நான் பார்க்கிறேன். அதிலிருந்து எழும் அறச் சிக்கலை எங்கள் மனதுக்குள் நுழைத்து ஒரு கேள்வியை எழுப்புகிறீர்கள். வரலாற்று ரீதியாக செய்யட்ட ஒரு வகை அநீதிக்கு நீதி கேட்கும் குரலாக இந்தக் கதைகளை அணைத்துக் கொள்கிறேன். ஒருவகையில் இன்று இது போன்ற எளியவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளும், ரிசர்வேசன்களும் ஒருவகையான பலி தான் என்று நினைத்துக்கொண்டேன். காரியாத்தான் à சுண்டன் à உருமன் என தலைமுறை தலைமுறையாய் அவர்களுக்கு இழைத்த அநீதிக்கான பலிகள். அவர்கள் பலியைக் கொண்டு சாந்தியடையும் வரை, இழுக்குகள் மறையும் வரை பலி தொடரும் என்று நினைத்துக் கொண்டேன்.
அன்புடன்
இரம்யா.
***
அன்புள்ள ஜெ
கழுமாடன், பீடம் இரண்டும் தமிழ் தலித் இலக்கியத்துக்கே முன்னோடியாக அமையவேண்டிய கதைகள். அவை தலித்துக்களின் தனிவரலாற்றை பேசுகின்றன. வெல்லப்பட்டவர்களின் வரலாறு. அவர்களின் வீரம் என்பது எதிர்ப்பிலும் தியாகத்திலும் இருக்கிறது. ஆக்ரோஷமான கதைகள். கதையாக வாசிப்பதற்கு மட்டுமல்லாமல் உணர்ச்சிகரமாகச் சொல்வதற்கும் ஏற்றவை
கா.அழகர்
***