ஞானி-2

தாமரைக்கண்ணன் என்ற பெயரில் எழுதிய ஒரு பேராசிரியரின் நூல்வெளியீட்டு கூட்டம் அது என்பது என் நினைவு. அன்று கோவையின் அனைத்து மேடைகளிலும் ‘இடதுசாரி அனலைக்’ கக்கிக்கொண்டிருந்த அக்னிபுத்திரன் மிக ஆவேசமாக பேசினார். இன்றைய ‘முகநூல்புரட்சிப்’ பாவனைகளுக்கு அன்றைய முன்னோடிகளில் அவரும் ஒருவர். கோவை ஞானி அதில் பங்கெடுத்தார். பெரும்பாலான முற்போக்குக் கூட்டங்களைப்போல அது அறைகூவல்களும் எதிர்அறைகூவல்களும் கர்ஜனைகளும் நிரம்பியதாக இருந்தது.

கூட்டம் முடிந்து அனைவரும் கலையும் போது நான் சென்று என்னை கோவை ஞானியிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். “என்னுடைய பெயர் ஜெயமோகன், நான் காசர்கோடிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதுமே அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். என் கைகளைப்பற்றிக் கொண்டு காலச்சுவடில் எனது இரண்டு கவிதைகளை படித்ததாக நினைவிருப்பதாக சொன்னார். நான் எழுதிய ஆரம்பகால படைப்புக்கள் அவை. நான் காசர்கோட்டில் இருப்பதாக அவருடைய நண்பர்கள் அவரிடம் கூறியிருந்தார்கள்.

என் தோளில் கைவைத்து பேசியபடி அரங்கைவிட்டு வெளியே வந்தார். “முடிந்தபோது வீட்டுக்கு வாங்க நிறைய பேசுவோம்” என்று கூறினார். அன்று முதல்முறையாக பேசும்போது கூட அவருடன் நான் அந்த வழக்கமான கொம்பு சேர்த்துக்கொள்ளும் விளையாட்டை தொடங்கினேன். தன்னியல்பாக “உங்களுடைய மணல்மேட்டில் அழகிய வீடு ஒருமுக்கியமான படைப்பு. அது புதிய சிந்தனை எதையும் முன் வைக்கவில்லை. ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற ஒருவர் மீது ஒரு சரியான மார்க்சியத் தரப்பு முன்வைக்கக்கூடிய மிகச்சிறந்த விமர்சனத்தை முன் வைத்தது. அரசியல் செயல்திட்டத்தின் பகுதியாக எதிர்கொள்ளாமல், கருத்தியல் தளத்தில் நின்று அவரை எதிர்க்கொள்வது அந்நூல்” என்றேன்.

“ஆம், அதுதான் மதிப்புள்ளதும் நீடிக்கக்கூடியதுமான சிந்தனை. ஆனால் ஒருவரை மிகக்கடுமையாக எதிர்த்தாலே அவரை இல்லாமல் ஆக்கிவிடலாம் என்பது மார்க்சியர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. நடைமுறையில் ஒருவரை வலுவான வாதங்களை முன் வைக்காமல் மிகக்கடுமையாக எதிர்த்து வசைபாடி வெறுப்பை உமிழ்ந்தால் அவர் மேலும் முக்கியத்துவம்தான் பெறுவார், அத்தரப்பு மேலும் அழுத்தம்பெறும். அவருடைய தரப்பினர் மட்டுமல்ல நம் தரப்பிலேயே சிலர் அவர் மேல் ஈடுபாடும் நம்பிக்கையும் கொள்ளக்கூடும்” என்று கோவை ஞானி சொன்னார்.

“பெரும்பாலான மார்க்சியர்களிடம் வசைபாடாதீர்கள், பிரித்து ஆராய்ந்து நிலைபாடு எடுங்கள் என்று நான் சொல்வேன். நம் தரப்பு சரியானதாக இருப்பதே முக்கியம். நம் ஏற்பும் மறுப்பும் தெளிவாக இருக்கவேண்டும். எதிலும் நாம் ஏற்கும் ஒரு பகுதி இருக்க வாய்ப்புண்டு. நாம் எதிர்க்கும் ஒன்றை நாம் எளிமைப்படுத்தினால் நாம்தான் எளிமையானவர்களாக ஆகிறோம், அது நம் பிடிக்குச் சிக்காமல் பெரிதாக வளர்ந்துவிடுகிறது. அதை நம்மால் கையாள முடியாமலாகிவிடும். அதை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இங்கு பார்த்தீர்கள் அல்லவா; ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை பலபடிகளாக பிரித்து, ஒருபகுதியை ஏற்று பிறவற்றை மறுத்து, ஒரு கருத்தை முன்வைப்பதற்கான இடமே இங்கில்லை.”

“அந்த துளி ஏற்பையே துரோகம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அந்த மறுப்பு பலவீனமானதென்று நினைப்பார்கள். அந்த ஏற்பின் வழியாக எதிர்தரப்பு வலுவடைந்துவிடுமென்றும், ஆகவே முழுமறுப்பையே முன்வைக்கவேண்டும் என்றும் கருதுவார்கள். இங்கே இருப்பது கருத்துவிவாதமே அல்ல, எளிமையான கட்சிகட்டல் மட்டும்தான். இந்தப் புத்தகமே ஜே.கிருஷ்ணமூர்த்தி தரப்புக்கு நான் விலைபோய்விட்டதற்கான அடையாளம் என்று இடதுசாரி தரப்பினரால் வசைபாடப்படுகிறது” என்றார்.

நான் “அதை நீங்கள் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்” என்றேன். “ஆம் எதிர்பார்த்தேன். சொல்லப் போனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்போது வருவது வலுவான வசைபாடலாக இல்லை” என்று சிரித்தார். நான் “ஏன்?” என்று கேட்டேன். “நான் முன்பு வானம்பாடி போன்ற அமைப்பின்மேல் நின்று சிலவற்றைச் சொன்னேன். அப்போது எனக்கு எதிர்ப்பு பலமாக இருந்தது. இப்போது தரையில் நின்று சொல்கிறேன், என்னை தனிமனிதனாக பார்க்கிறார்கள், ஆகவே எதிர்ப்பு குறைவாக இருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை அமைப்புபலம் இல்லாதவன் குரலற்றவன்” என்றார் ஞானி.

“ஆகவே ஒருவனுக்கு குரல் இருந்தால் அவனுக்குப் பின்னால் ஏதோ ஒரு அமைப்பு இருக்கிறதென்றும் கற்பனை செய்து கொள்வார்கள். சுந்தர ராமசாமி வெங்கட் சாமிநாதன் போன்றவர்களை இவர்கள் பெரிய அமைப்பு பலத்துடன் பேசுபவர்கள் என்று கற்பனை செய்துகொள்வது இதனால்தான். க.நா.சுவுக்கும் செல்லப்பாவுக்கும் பின்னால் சி.ஐ.ஏவைக் கற்பனை செய்துகொள்ளாமல் அவர்களது செல்வாக்கை இவர்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று ஞானி சொன்னார்.

அந்த உரையாடல் வளர்ந்துகொண்டே சென்றது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் செல்வாக்கு அவர் எந்த நிறுவனத்தையும் சார்ந்து உரையாற்றாமல் இருப்பதனால்தான் என்றார் ஞானி. தியோசபிகல் சொசைட்டியின் குரலாக அவர் ஒலித்திருந்தால் இன்றிருக்கும் மடாதிபதிகளைப்போல ஆகியிருப்பார். அவர் தனிமனிதன் என்பதனால்தான் அவருடைய குரலுக்கு இந்தச் செல்வாக்கு வருகிறது என்று அவர் சொன்னார்.

“தியாசபிகல் சொசைட்டியின் தலைவராக இருந்திருந்தால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் குரல் பல்லாயிரம் பேரைச் சென்றடைந்திருக்குமே?” என்று நான் சொன்னேன். “உண்மை, ஆனால் அதை அவர்கள் தியாசபிகல் சொசைட்டியோடு இணைத்து புரிந்துகொள்வார்கள். தியாசபிகல் சொசைட்டியில் இருக்கக்கூடிய அனைத்து மூடநம்பிக்கைகளும் அசட்டுத் தர்க்கங்களும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மேலும் ஏற்றப்பட்டிருக்கும் ஒரு சராசரி வாசகனால் அவை அனைத்தையும் களைந்து ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்தடைந்திருக்கவெ முடியாது. இன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி அவரை படிக்கும் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடுகிறார். அதுதான் அவரை செல்வாக்கு கொண்டவராக ஆக்குகிறது” என்றார் ஞானி.

“இன்றைக்கு அவரை படிப்பவர்கள் யார் என்று பார்த்தால் நவீனநாகரிகத்தின் மேல் அமர்ந்துகொண்டு, நவீனவாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அடைந்துகொண்டு, வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்தும் இயற்கையின் இயங்குமுறை சார்ந்தும் அடிப்படை வினாக்களை எழுப்பிக்கொண்டு, ஆனால் மரபான ஆன்மீக விடைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தத்துவச் சிக்கல்களையும் அறக்குழப்பங்களையும் எதிர்கொள்பவர்கள். அவர்களுக்கு புதிய குரல் வரவேண்டியிருக்கிறது, புதிய விளக்கம் தேவைப்படுகிறது. அதை ஒரு புதிய மனிதர்தான் அளிக்க முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி பின்னணி ஏதும் இல்லாத புதியவர் என்பதுதான் அவருடைய ஆற்றல். அதுதான் அவரை முன்நிறுத்துகிறது” என்று ஞானி கூறினார்.

“உங்கள் தரப்பில் ஜே.கிருஷ்ணமூர்த்தி முன்வைக்கும் ஒத்திசைந்த வாழ்க்கையைப் பற்றி சொல்கிறீர்கள். இயற்கையுடன் ஒத்திசைவு. சமூக உரசல்கள் இல்லாத தனிவாழ்வு, பிசிறற்ற ஒரு தன்னிலையை கட்டமைத்துக் கொள்ளுதல், அதை உறுதியான நிலையான ஒன்றாக அமைக்காமல் அந்தந்த தருணங்களுக்கு தேவையானபடி கட்டமைத்துக்கொண்டு இயற்கை என்னும் பேரமைப்பு கொள்ளும் தேவையின்படி அதை கலைத்துக் கொள்ளவும் சித்தமாக இருத்தல் ஆகியவை உங்களை கவர்கின்றன. இதற்கு மார்க்சியத்தில் எங்கு ஏற்புள்ளது?” என்றேன்

“நீங்கள் மார்க்சியம் என அறிந்திருப்பது முழுக்க முழுக்க இங்குள்ள கட்சிச் செயல்பாட்டாளர்கள் வழியாக அறிந்த மார்க்சியம். நீங்கள் காசர்கோட்டின் தொழிற்சங்கக் கம்யூனில் இருப்பதாக சொன்னார்கள். அங்கு அவர்கள் அதைத்தான் கற்றுக் கொடுப்பார்கள். களத்தில் செயல்படுவதற்கு என்ன தேவையோ அதை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள் அதற்கு மேல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள். ஆனால் மார்க்ஸியம் இன்று கோட்பாட்டுரீதியாக மிகவும் முன்னால் சென்றுவிட்டது.” என்றார் ஞானி.

“மார்க்சின் அடிப்படை எழுத்துக்களில் அந்நியமாதலுக்கு ஓர் இடமுண்டு. அந்நியமாதலை முன் வைத்து அவர் இளம்வயதில் நிறைய எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் அந்த கருத்துக்களை அவர் கைவிடவில்லை, அதிலிருந்து நகர்ந்து முன்னால் சென்றார். ஆனால் இன்றைய பார்வையில் அவை முக்கியமானவை. அந்நியமாதல் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்கலாம். அண்டோனியோ கிராம்ஷி முதல் அல்தூஸர் முதலியவர்கள் மார்க்ஸியத்தின் மொத்தக் கொள்கையையுமே அந்நியமாதலை முன்வைத்து விளங்கிக் கொள்வதற்கு உதவும் ஒரு புதிய பார்வையை உருவாக்குகிறார்கள்” என்று அவர் தொடர்ந்தார்.

“அந்நியமாதல் என்பது இருத்தலியல் சொல்லும் தத்துவார்த்தமான அந்நியமாதல் அல்ல. முதலாளித்துவச் சுரண்டலமைப்பில் உழைப்பிலிலுள்ள படைப்பூக்கத்திலிருந்தும், உழைப்பின் விளைவை தானே அடைவதன் மகிழ்ச்சியிலிருந்தும் உழைப்பாளி விடுவிக்கப்படுகிறான். அவன் உழைப்பிற்கு சந்தைப் போட்டியால் வகுக்கப்பட்ட கூலி ஒன்று அளிக்கப்படுகிறது. அதன் விளைவாக அவன் தன் செய்திறனிலிருந்தும் அதன் மகிழ்ச்சிகளில் இருந்தும் விலக்கப்படுகிறான். அதன் விளைவாக அவனுக்கு உருவாகும் அந்நியமாதலை மார்க்ஸ் அடையாளம் காண்கிறார். அந்த அந்நியமாதல் ஒரு புரட்சிக்குப் பிந்தைய இலட்சியச் சமுதாயம் வழியாக களையப்படும் என்று கற்பனை செய்கிறார்”.

“அன்று அடையப்படுவது உழைப்பிற்கேற்ற ஊதியமும் சக்திக்கேற்ற உழைப்பும் மட்டும் அல்ல, ஒருவன் தன் அகநிறைவுக்கான உழைப்பையும் உழைப்பினூடான வாழ்வின் முழுமையையும் அடையமுடியும், அன்று அந்த அந்நியமாதல் இல்லாமலாகும். அந்த அந்நியமாதலுக்கான தற்காலிகமான சமாளிப்பாகவே ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விடை அமைகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கனவும் மார்க்சின் கனவும் ஒன்றேதான், ஜே.கிருஷ்ணமூர்த்தி பாதையை காட்டுவதில்லை, மார்க்ஸ் சாத்தியமான ஒரே பாதையை காட்டுகிறார்” என்று ஞானி சொன்னார்.

அவரை எதிர்பார்த்து பிறர் காத்திருந்தார்கள். இப்பேச்சின் நடுவே வெவ்வேறு நண்பர்கள் ஊடுருவி அவரிடம் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர் அவர்களிடம் ஓரிரு சொற்கள் பேசினார். “நிறைய பேசமுடியாது எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது, சாப்பிடவேண்டும், நாம் மறுபடி சந்திப்போம்” என்றார்.

நான் அவரிடம் “உங்கள் கல்லிகையைப் படித்தேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்றார் நமுட்டுச் சிரிப்புடன். “அதில் படைப்பூக்கத்தைச் சென்றடையும் நோக்கம் இருக்கிறது, வழி இல்லை” என்றேன். வாய்விட்டு சிரித்து தோளில் தட்டி “நீங்கள் சுந்தர ராமசாமிப் பள்ளி. எங்களை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்” என்றார். “அதற்காக இடஒதுக்கீடா கொடுக்க முடியும் அங்கு?” என்று நான் சொன்னேன். “தேவையில்லை, ஆனால் எங்கள் பள்ளியில் உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்” என்று சொன்னபின் அவர் சிரித்தபடி கிளம்பிச் சென்றார்.

நான் அன்று பலவகையான மார்க்சியர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அன்று சிந்தனையில் அவர்கள் மிக முக்கியமான தரப்பு, சிந்திக்க ஆரம்பித்ததுமே நம்மைச் சூழ்ந்து கொள்பவர்கள் அவர்களே. நான் அன்று கேரளத்தில் புகழ்பெற்ற பல மார்க்ஸியர்களுடன் நேரில் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் இருவகை. பி.கோவிந்தப்பிள்ளை போன்ற கட்சிசார்ந்த மார்க்சியர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போல தெள்ளத் தெளிவாக ஓர் அரசியல் செயல்திட்டத்தை ஒட்டி மார்க்ஸியத்தின் தொடக்கப் பாடத்தைக் கற்பிப்பார்கள். திரும்பத்திரும்பக் கற்பித்து அவர்களின் சொற்கள் கூர்மையானவையாக, வாதங்கள் தெளிவானவையாக இருக்கும்

இன்னொரு தரப்பு அன்று புகழ் பெற்றிருந்த சிவிக் சந்திரன், ஆர்.வினோதசந்திரன் போன்றவர்கள். இவர்கள் ‘அதீத மார்க்ஸியர்கள்’ என தங்களை எண்ணிக் கொள்பவர்கள். மார்க்ஸியக் கோட்பாடுகளை தொடர்ந்து படிப்பவர்கள். தாங்கள் அறிவுஜீவிகள் என எண்ணிக் கொள்வதனால் தங்கள் மூளைத்திறனுக்கு உகக்கும்படி அனைத்தையும் சிக்கலாக ஆக்கிக்கொண்டே செல்பவர்கள். களத்தில் அனுபவமே இல்லாதவர்கள் என்பதனால் ஒருவகையான சொற்புதரில் வாழ்பவர்கள்

சொல்லப்போனால், இவர்களை பழைய திண்ணை அத்வைதிகளின் மார்க்ஸியப் பதிப்பு என்று சொல்லலாம். இவர்களுக்கு கலைச்சொல் மோகம் அதிகம். நுண்ணிய பாடபேதங்கள், தர்க்க மாற்றங்களில் நம்பிக்கை மிகுதி. இவர்களால் எதையும் அடிப்படையாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிடமுடியாது. ஒன்றை நன்கறிந்த அறிஞர்கள் எடுத்த எடுப்பில் அதன் மிகச்சுருக்கமான வடிவையே முன்வைப்பார்கள். அதன்பின் நடைமுறைச் செய்திகள் வழியாகவும் மேலதிக வினாக்கள் வழியாகவும் அதை விரிவாக்கி, சிக்கலாக்கிக் கொண்டே செல்வார்கள்

அதை இந்த திண்ணை மார்க்ஸியர்கள் கண்டால் அதிர்ச்சி அடைவார்கள். தாங்கள் ’ரத்தம்சிந்தி’ கற்றுக்கொண்டது இந்த எளிய விஷயத்தையா என எண்ணும்போது அவர்களின் ஆணவம் புண்படுகிறது. ஆகவே உடனே அதை மறுப்பார்கள்; அது அவ்வாறல்ல, மிகமிகச் சிக்கலானது என பேசத் தொடங்குவார்கள். நுணுக்கங்களைப் பேசிப்பேசி அதை அணுக முடியாமலாக்குவார்கள். இது இப்படியே வேதாந்தத்திலும் நிகழ்கிறது

அன்று நான் மேலே சொன்ன இருசாராரையும் கண்டு சலிப்புற்றிருந்தேன். பாடப்புத்தக மார்க்ஸியம் ஆரம்ப ஆர்வத்திற்குப் பின் போதாதது ஆகிவிட்டது. ‘அதீத மார்க்ஸியம்’ ஒருவகை அறிவார்ந்த அசட்டுத்தனம் எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. நான் படைப்பிலக்கியவாதி, எனக்குகந்த வகையில் அடிப்படைகளைப் பேசும் ஒருவர் எனக்கு தேவைப்பட்டார். அவரை நான் ஞானியில் கண்டடைந்தேன்.

பின்னாளில் ஞானி என்னிடம் அவரே அதைப்பற்றிச் சொன்னார். “உங்க வழி வேற. நீங்க மார்க்ஸியத்திலேயோ வேறெந்த தத்துவத்திலேயோ நுணுக்கமான விவாதங்களுக்குள்ள போகக்கூடாது, ஆனா அடிப்படையான விஷயங்களைத் தெரிஞ்சும் வச்சிருக்கணும். சும்மா வெட்டித்தர்க்கம் பண்ணிட்டிருக்கிறவங்களை உதாசீனம் பண்ணுற திமிர் ஜெயகாந்தனுக்கு இருந்தது. அது உங்களுக்கு வேணும்” நையாண்டியான சிரிப்புடன் “அதுக்காக கஞ்சாவெல்லாம் இழுக்கவேண்டியதில்லை” என்றார்.

அது முக்கியமான ஓர் அறிவுரை. அத்தகைய அறிவுரைகளுக்காகவே ஒருவரை நாம் ஆசிரியர் என்கிறோம், நூல்களிலுள்ளவற்றை மீண்டும் சொல்வதற்காக அல்ல. நம்மை நன்கறிந்து சொல்லப்படுபவை அவை. அரசியல், தத்துவ, ஆராய்ச்சித் தளத்து நுண்விவாதங்கள் எழுத்தாளனுக்கு உரியவை அல்ல. எழுத்தாளனின் அடிப்படையான அறிதல்கருவியான கற்பனைக்கு எதிர்த்திசையில் செல்பவை அவை. ஆனால் எந்த எழுத்தாளனுக்கும் அந்த நுண்விவாதங்களுக்குள் நுழைவதற்கான சபலம் இருந்து கொண்டுமிருக்கும். ஏனென்றால் எப்போதும் அவன் அவற்றை கூர்ந்து கவனித்துக் கொண்டும் இருப்பான்.

தன்னை ஒரு தத்துவவாதி, கோட்பாட்டுவாதி, ஆராய்ச்சியாளன் என்று கற்பனை செய்துகொள்வதுதான் எழுத்தாளனின் வீழ்ச்சி. ஏனென்றால் மிகச்சரியான பொருளில் அவை நிகழும் தளத்தில் அவனால் புழங்கமுடியாது. அவன் அவற்றிலிருந்து தனக்கான ஒரு மாற்றுவடிவையே தன் கற்பனையால் உருவாக்கிக் கொள்வான். ஆனால் அதை முழுக்க தவிர்ப்பதும் இயலாது. நான் அப்படி எப்போதேனும் சற்றே எல்லைகடக்க முற்பட்டால்கூட ‘அதையெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நீங்க இலக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்க’ என்று ஞானி என்னிடம் சொல்லாமலிருந்ததில்லை.

ஞானியிடம் நான் நிகழ்த்திய உரையாடல்கள் எல்லாமே அரசியல்- தத்துவம் சார்ந்தவை. ஆனால் அவை எல்லாமே ஓரு புனைவெழுத்தாளனுக்கு உரிய வெளியில் மட்டுமே நிகழ்ந்தவை. எப்போதுமே அரசியல்- தத்துவம் இரண்டிலுமுள்ள சாராம்சமான விஷயங்களைச் சார்ந்து அவை நிகழ்ந்தன. ஒருவகையில் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில். ஆனால் அதுவே உண்மையில் பொருட்படுத்தத் தக்கது. நுண்விவாதங்கள் செய்யும் அறிஞர்கள்கூட அவற்றின் விளைவாக அறுதியான எளிமையுடன் வெளியே வந்தால் மட்டுமே அவர்களுக்கு மதிப்பு.

முதிர்ந்த தத்துவ- வரலாற்று ஆய்வாளர்களான பி.கே.பாலகிருஷ்ணன், எம்.கங்காதரன், அ.கா.பெருமாள் ஆகியோரிடம் அவ்வியல்பை கண்டிருக்கிறேன். அவர்களால் புனைவிலக்கியவாதிகளுடன் ஆழமான அர்த்தபூர்வமான உரையாடல்களை நடத்த முடியும். அந்த இயல்பு போதிய தகுதி அற்ற ‘அமெச்சூர்’ தத்துவவாதிகளிடமும் அரசியல் கோட்பாட்டாளர்களிடமும் ஆய்வாளர்களிடமும் இருப்பதில்லை. அவர்கள் தங்கள் நுண்விவாதங்களைச் சொல்லி ‘இதெல்லாம் உங்க தலைக்குமேலே’ என்று இலக்கியவாதிகளிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இலக்கியவாதிகளின் மொத்த புழங்குதளமும் தங்கள் தலைக்கு மிகமிக மேலே இருப்பதை அவர்கள் அறிவதே இல்லை. ஞானி இலக்கியவாதிகளிடம் எப்போதுமே உரையாடலில் இருந்தமைக்குக் காரணம் அவருடைய அந்த முதிர்வுதான்.

சுந்தர ராமசாமியிடம் நான் கோவை சென்றதையும் ஞானியைச் சந்தித்ததையும் பேசியவற்றையும் பற்றிச் சொன்னேன். அவர் உற்சாகமாக “சரிதான், நீங்க ஏகப்பட்டபேர் நடுவே மாட்டிண்டாச்சு. ஏற்கனவே நான், ஆற்றூர் ரவிவர்மா, பி.கே.பாலகிருஷ்ணன், எம்.கங்காதரன், இப்ப ஞானி எல்லாம் சேந்து உங்களை பந்தா வைச்சு வாலிபால் விளையாடுற மாதிரி தோணுது” என்றார். “கோலை நான்தான் தீர்மானிப்பேன்” என்றேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகால்டுவெல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரையார்ட்ட!