ஆழி கதையை இப்போதுதான் வாசித்தேன். பிரிவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன, இணைந்திருப்பதற்கு ஒரே காரணம்தான். அந்தக்காரணம் என்னவென்றே தெரியாது, அது மனிதனை மீறியது- அதுதான் அந்தக்கதை. அது என் வாழ்க்கை. எண்ணி எண்ணி வியக்கும் ஒரு விஷயம் அது. அதைப்பற்றி இன்றுவரை பலகோணங்களில் வரையறை செய்ய முயல்கிறேன், முடியவில்லை
அந்தக்கதையைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசினேன். நேர்மாறாக இருந்தால் என்ன செய்வது என்று யோசித்துப்பார். சேர்ந்திருக்க எல்லா காரணங்களும் இருந்தன, ஆனால் பிரியவேண்டுமென்பதற்கு என்னவென்றே தெரியாத ஒரு பெரிய காரணம் மட்டும் இருந்தது என்றார். அது அவருடைய கதை. புன்னகைத்துக்கொண்டேன்
சி.விஜயகுமார்
***
அன்புள்ள ஜெயமோகன்,
நான் ஒரு கடிதமெழுத நினைத்து தள்ளிபோட்டிருந்தேன். அதற்குள் அடுத்த கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. ஆழி சிறுகதை இன்று வாசித்தேன். அந்த கடல் அவர்களின் செயல்களை கட்டுபடுத்துகிறது. நெருங்க எண்ணுபவர்களை பிரிக்கிறது. தூக்கி வீசுகிறது.
வாழ்வில் ஒரு மாபெரும் கை நம்மை இழுத்தும், தள்ளியும், தூக்கி வீசவும் செய்கிறது. கை ஜோசியம் பார்ப்பதை விட நாம் அந்த கையால் தான் பல வேளைகளில் கட்டுபடுத்தப்படுகிறோம் என்ற அறிதலே பெரும் திறப்பு. கரையை அடைவதற்கான முதல் உந்துதல் அது தான்.
அந்த கை வரலாறாக, குடும்பமாக, பழக்கவழக்கமாக, உயரியல் உந்துதலாக, மரபாக, இதன் உள்ளங்கையில் தவழும் நாம் ஒவ்வொருவரும் சிறு துகள்.
அன்புடன்
பாலமுருகன்
***
85. சிறகு [சிறுகதை]
அன்பு ஜெ
கதை என்னை பால்ய ஆண்களின் உலகத்திற்கு இட்டுச் சென்றது. இரு பையன்களின் வழி அந்த உலகத்தைக் கண்டேன். சங்கு போன்ற பையன்களின் மனநிலையை அப்பட்டமாகச் சொல்லியிருந்தீர்கள். என்ன இவர்கள் பேசிக் கொள்வார்கள் என்று தெரியாதவாறு பெண்கள் மடப் பள்ளியில் படித்திருந்ததால் இந்த அனுபவம் புதிதாக இருந்தது எனக்கு. இருவரும் இரு வேறு துருவங்களாகக் கண்ணுக்குத் தெரிந்தார்கள். சங்கு பெண்களை அவன் கை கொள்வதைப் பற்றிய படி நிலையை சொல்லும் போது துடுக்குற்றேன். மூன்று, நான்கு முறை அவன் நினைத்தவை நடந்ததும் அவன் ஏழைப்பெண்களின் மனநிலையை பொதுமைப் படுத்தி பேசிய போது வருத்தம் இருந்தது. ஆனந்தவள்ளி என்ற பெண் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, அவளுக்கான முதல் சிறகு முளைப்பதற்கு காரணமாக சங்குவை மாற்றிக் கொண்டது கண்டு பெருமிதமடைந்தேன். கண்டிப்பாக நான் சந்திக்கும் பதின்மப் பெண்களுக்கு இக்கதையைக் கொடுப்பேன். அவர்கள் சிறகுகள் முளைவிட இது பெரிதும் உதவும் ஜெ.
பெண்களுக்கு சிறகுகள் மிகவும் முக்கியம் தான். இயக்க சுயாதீனம்(Movement Independence) தான் அவர்களின் முன்னேற்றத்திற்கான முதல் ஏணிப்படி. அதன் மூலம் தான் அவர்கள் கல்வியையோ, பொருளாதார சுதந்திரத்தையோ அடைய முடியும் என்பதை நான் தீர்க்கமாக நம்புகிறேன். சங்குவின் சிறகு என்னை பயமுறுத்தியிருந்தது. ஆனால் சங்கு கட்டமைத்திருந்த அத்தனை பெண் பிம்பங்களையும் உடைத்து, வேறோர் பெண்ணாய் அவனுக்கே அறிமுகம் செய்து கொண்ட ஆனந்தவள்ளியை மிகப் பிடித்திருந்தது எனக்கு.
அவளைத் தாண்டி எனக்கு சங்குவின் நண்பனை மிகவும் பிடித்திருந்தது. பால்யத்தை கேள்விகளோடே எதிர்கொண்டு அறப் பிறழ்வுக்காக வருந்தி, அது பிறழவில்லை எனும்போதான ஒரு மகிழ்ச்சியடைந்தானே அதற்காக அவனைப் பிடித்திருந்தது. காதல் என்றால் இதுமட்டுமில்லை என்று அவன் சாந்தியடையும்போது மகிழ்ந்தேன். இறுதி முடிபில் அவன் மேலும் மகிழ்வடைந்திருக்கக் கூடும். நானும் தான்.
அன்புடன்
இரம்யா.
***
அன்புள்ள ஜெ
வளர்ந்து மேலே எழும் மரங்கள் ஒன்றையொன்று விலக்கி விரிகின்றன. ஆனால் அவை அடியில் ஒன்றுடன் ஒன்று வேர்களால் தொடர்பு கொண்டிருக்கின்றன. நாம் நம்முடைய இளமைநண்பர்களைச் சந்திக்கும்போதுதான் நாமெல்லாம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.விரும்பியோ விரும்பாமலோ அந்த மாறுதல் நடைபெற்றுவிட்டது. அந்த நண்பர்களைச் சந்திக்கையில் அவர்களிடமிருந்து நாம் விலகாமலிருக்கவே முடியாதென்று தோன்றுகிறது
சங்குவும் ஆனந்தவல்லியும் விலகிச்சென்றுவிட்டார்கள். ஆனந்தவல்லி சங்குவின் பார்வையில் உயரமாக சென்றுவிட்டாள். சங்கு அங்கேயே நின்றிருக்கிறான். சிறகு முளைத்து எழும் அந்தக்கணம் ஒரு நல்ல கவிதை
ஆர்.பிரபுகுமார்
***