ராஜன் சோமசுந்தரம் – கடிதங்கள்

அமேசான், ராஜன் சோமசுந்தரம்

அன்புள்ள ஜெ

இப்போது தான் ராஜன் சோமசுந்தரம் அவர்களின் சந்தம் ஆல்பம் அமேசானின் சர்வதேச  இசை  டாப்#10 பட்டியலில் 7வது இடம் பிடித்திருக்கும் செய்தியை தங்கள் தளத்தில் கண்டேன்.”ஞாயிறு காயாது மரநிழல் பட்டு” என்ற அண்மையில் வெளிவந்த சங்கப்பாடல் முதற்கொண்டு ராஜன் அவர்கள் இசையமைத்த அனைத்து சங்கப்பாடல்களை கேட்டிருக்கிறேன்.வழக்கமாக சினிமா பாடல்களை மட்டுமே ரசிக்கும் எனக்கு அவற்றில் எவ்வித ஒவ்வாமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் ரசித்த கேட்ட பாடல்கள் தான் இவையனைத்தும்.குறிப்பாக கலம் செய் கோவே மிகவும் ரசித்த பாடல். இந்த சிறிய வாசகனின் மகிழ்ச்சியை இச்செய்தியை நான் அறிய செய்த என் அன்பு ஜெ வுக்கும் ராஜன் சோமசுந்தரம் அவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள ஜெ

ராஜன் சோமசுந்தரம் அவர்களின் இசைத்தொகுதியை நான் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். இந்த இசைமுயற்சியின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு ஒரு பின்னணி தேவை. எனக்கு வயது 62. என்னால் தூயகர்நாடக இசையை ரசிக்க முடியாது. நான் பலமுறை முயற்சி செய்திருக்கிறேன்.

ஏன் ரசிக்கமுடியவில்லை என்று யோசித்துப்பார்த்தேன். ஒரு பாட்டில் சரிகமபதநிச என்று பாட ஆரம்பித்தாலே என் மனம் ஒவ்வாமை கொள்கிறது. ஒரு நல்ல வரியின் நடுவே கமபதநி என்று ஒரு வார்த்தை வந்தாலே பாட்டிலிருந்து நான் வெளியே போய்விடுவேன்.

ஏனென்றால் அது இசையின் நோட்டு, இசை அல்ல. இங்கே எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் நோட்டையே இசையாக வாசிக்கிறார்கள். இது கவிதைக்குப் பதிலாக கவிதையின் இலக்கணத்தைப் பேசி ரசிப்பது போல.

ஒரு நல்ல பாட்டில் மூன்று இன்பங்கள் உண்டு. இசையின்பம் அதில் ஒன்று. உணர்ச்சிகளின் இன்பமும் மொழியின்பமும் அதிலுள்ளன. கர்நாடக இசை எப்போதுமே பாட்டிலிருக்கும் உணர்ச்சிகளையும் மொழியழகையும் வடிகட்டி அகற்றிவிட்டு அதை ஒரு தொழில்நுட்பமாகவோ தேர்ச்சியாகவோ ஆக்கித்தான் பாடிக்கொண்டிருக்கிறது.

இசையின் உணர்ச்சிகளை விரும்புபவர்கள் கர்நாடகசங்கீத கீர்த்தனைகளைக் கேட்டால் தன்னுடைய மெல்லுணர்ச்சிகளை ஒருவர் பிய்த்துப்பிய்த்துப் போட்டு தன் கைத்திறமையைக் காட்டுவதுபோல உணர்ந்து கடுமையான ஒவ்வாமையைத்தான் அடைவார்கள். கர்நாடக இசையை பாட ஒரே வகையான டெம்ப்ளேட் அமைப்பையும் டெம்ப்ளேட் குரலையும் வைத்திருக்கிறார்கள். அதில் எந்தவகையான புதுமையும் இருப்பதில்லை.

ஆகவே கர்நாடக இசைக்குள் சென்றுவிட்டவர்களால் அதன்பின் பாடலின் கவித்துவம், உணர்ச்சிகள் இரண்டையும் அறியவோ ரசிக்கவோ முடிவதில்லை என்பதையும் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு இசை என்பது ஒரு ஓசையின்பம் மட்டுமாக ஆகிவிடுகிறது. எனக்கு பாட்டில் பொருளின்பம் மிக முக்கியமானது.

இந்த அபத்தம் இந்தியாவில் இந்துஸ்தானி, கர்நாடக இசையில் மட்டும்தான் உள்ளது. கஸல் போன்றவை உணர்ச்சிகளும் பொருளின்பமும் இசையுடன் கலந்திருப்பவை.

என்னால் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்களை ஒருவகையான மூடர்களாகவே பார்க்கமுடிகிறது. அவர்கள் பாடும் அரிய பாடல்களின் அர்த்தமென்ன என்றே தெரியாதவர்கள். மொழியழகையோ உணர்ச்சியழகையோ உணராதவர்கள்.[உடனே சந்தேகம் வரும். நான் பிராமணன்தான். அதை இங்கே சொல்லவேண்டியிருக்கிறது இல்லையா?]

நெடுங்காலம் முன்பே நான் கர்நாடக இசையிலிருந்து வெளியே வந்துவிட்டேன். அதற்கு நான் வெளிநாட்டுப் பயணங்கள் செய்ததும் ஒரு காரணம்.இன்றைக்கு என் செவிக்கு மேலையிசையும் கலவை இசையும்தான் பிடித்தமானவை. என் குழந்தைகளுக்கும் அதைமட்டுமே கேட்கமுடிகிறது.

ஆனால் சுத்தமான ஐரோப்பிய இசையில் சங்கப்பாடல்களை அமைக்க முடியாது. அன்னியமாக இருக்கும். நம் கர்நாடகசங்கீதம் அவற்றை வெறும் ஓசைகளாக ஆக்கி மொழியழகை இல்லாமலாக்கிவிடும். சங்கப்பாடல்களின் மொழியழகும் உணர்ச்சியும் வெளிவரவேண்டுமென்றால் கலப்புசங்கீதம்தான் மிகச்சிறந்தது.

ராஜன் சோமசுந்தரத்தின் இந்த முயற்சி அவ்வகையில் மிகச்சிறப்பானது. இதில் சங்கப்பாடல்களின் மொழியழகும் உணர்ச்சியும் சிதறாமல் வெளிவந்துள்ளது. அவருக்கு கிடைக்கும் அங்கீகாரத்துக்கு என் வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

***

முந்தைய கட்டுரைநித்யமானவன், மறைமுகம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆழி, சிறகு- கடிதங்கள்