நேற்று கும்பகோணம் அருகே தாரசுரம் கோயிலில் நின்றுகொண்டிருக்கும் போது குறுஞ்செய்திகள் வந்தன. ஜெயகாந்தனுக்கு பத்மவிபூஷண் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதற்காக பின்னர் தகவல் வந்தது. இரண்டுமே மகிழ்ச்சிக்குரிய செய்திகள்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கியச்சூழலில் அறத்தின் குரலாக ஒலித்துவருகிறார் ஜெகெ. சீற்றமும் கனிவுமாக அவரது ஆளுமை நம்முடன் உரையடிக்கொனே இருக்கிறது. அது ஒரு கொள்கையை முன்வைக்கும் அரசியல்வாதியின் குரல் அல்ல. தத்துவவாதியின் குரலும் அல்ல. அது தடுமாற்றங்களும் தொடர்ச்சியான சுயகண்டடைதல்களும் கொண்ட இலக்கியக் கலைஞனின் குரல்.
அரைநூற்றாண்டாக தமிழ் மனத்தில் தனிமனிதனின் அகச்சான்றையும் அவனது தனித்துநிற்கும் துணிவையும் வலியுறுத்திய குரல் ஜெகெயுடையது. கும்பலாகவே சிந்திக்கும் நம் பழங்குடி மனப்பானையிலிருந்து மேலெழுந்த தனிமனிதர்களின் ஆண்மையை அக்குரல் பிரதிநித்துவம் செய்தது. ஜெயகாந்தனை ஆதர்சமாகக் கொண்டு தன் அவழ்க்கையை துணிவுடன் தானே தீர்மானித்துக்கொண்ட வாசகர் பலர் உண்டு, நானறிந்த சிறந்த உதாரணம் அருண்மொழியின் அப்பா சற்குணம் அவர்கள்.
ஜெகெ தமிழ்ச்சமூகத்தில் எழுத்தாளனின் முகமாக அறியப்படுபவர். எல்லா விருதுகளும் அவரை வரிசையாக தேடிவந்தன. இப்போது பத்ம விபூஷண். விருதுகளை அர்த்தமுள்ளதாக்கும் ஜெகெயின் ஆளுமைக்கு வணக்கம்
இருபது அவ்ருடம் முன்பு ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்தது முதல்தான் தமிழில் நாம் இன்று காணும் இலக்கிய விழிப்புணர்ச்சி உருவாயிற்று. தினமணி நவீன இலக்கியத்தை பரவலாக அறியச்செய்தது. புதுமைப்பித்தன் மௌனி போன்றவையெல்லாம் சிறுவட்டத்துக்குள் உலாவும் பெயர்களாக இருந்த நிலைமையை மாற்றியது. தூய தமிழ்ச்சொற்களை செய்தித்துறையில் அறிமுகம் செய்தது. அச்சொற்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.
ஆனால் ஐராவதம் மகாதேவனின் சாதனைகள் தொல்தமிழ்ப் பண்பாடு குறித்த அவரது ஆய்வுகளில்தான் இருக்கின்றன. நாணயங்கள் கல்வெட்டுகள் பானை எழுத்துக்கள் வழியாக அவர் உருவாக்கியளித்த சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்தின் சித்திரம் உத்வகமளிப்பது. கல்வியும் எழுத்தும் அன்றாடவாழ்க்கையாக ஆகிவிட்டிருந்த அச்சமூகத்தின் நீட்சியாக சங்க இலக்கியங்களை வாசிப்பது ஒரு பெரிய வாசலை திறப்பது போன்றது.
ஆனால் வழக்கமான ஆய்வென்ற பேரில் நம் தமிழியர்கள் செய்யும் அபத்தமான ஊகங்களும் கற்பனைப்பாய்ச்சல்களும் அல்ல ஐராவதம் மகாதேவனுடைய ஆய்வுகள். சர்வதேச அளவில் எந்த ஆய்வாளர் அரங்கிலும் செல்லுபடியாகக் கூடியவை அவை. அவ்வகையில் நம் காலக்ட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் அவர்
ஜெகெயையும் ஐராவதம் மகாதேவனையும் வாழ்த்தி வணங்குகிறேன்.
http://www.geocities.com/Athens/Acropolis/6551/jeya.htm#intro
http://members.tripod.com/~kkalyan/jkntn.html
என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்
கடவுள் எழுக! ஜெயமோகனின் ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை