பின்தொடரும் நினைவுகளின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

பின்தொடரும் நிழலின் குரல் 1998ல் நான் பத்மநாபபுரத்தில் தங்கியிருந்த நாட்களில் எழுதப்பட்டது. நெடுநாள் திட்டம் ஒன்றுமில்லை. என் அம்மாவின் பழைய சேமிப்புகளில் இருந்த ஒரு நூல் ‘பனைபாடுமோ’ என்ற சிறுகதைத் தொகுதி. அந்நூலை சுந்தர ராமசாமியின் நூலகத்தில் கண்டடைந்தேன். அங்கிருந்து நினைவுகள் கே.கே.எம். கதாபாத்திரத்தில் மூலவடிவமான ஆளுமையைத் தொட்டு விரிந்தன. சட்டென்று எழுத ஆரம்பித்துவிட்டேன்

தமிழினி வசந்தகுமார் பத்மநாபபுரம் வந்து என்னுடன் தங்கியிருந்து அந்நாவலை மெய்ப்பு பார்த்தார். அது மகிழ்ச்சியால் நான் நிறைந்திருந்த காலகட்டம். விஷ்ணுபுரம் நாவல் வெளியாகி எதிர்பார்த்ததை விட பலமடங்கு வரவேற்பு பெற்றுக்கொண்டிருந்தது. ஒர் எழுத்தாளராக நான் தமிழில் முதன்மையான இடம்பெற அது வழிவகுத்தது.

என் பழைய சேமிப்பில் 1998ல் பின்தொடரும் நிழலின் குரல் முதல்பதிப்பை தமிழினி வெளியிட்டபோது புத்தகக் கண்காட்சியில் அளிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்  சிக்கியது. அதிலிருந்த கோட்டுப்படம் யூமாவாசுகி வரைந்தது என நினைக்கிறேன். அப்போது அவர் தமிழினி வசந்தகுமாருக்கு மிக அணுக்கமானவராக இருந்தார்

எண்ணியதுபோல பின்தொடரும் நிழலின் குரல் தமிழக மார்க்ஸிய வட்டாரங்களில் வெளிப்படையான எதிர்ப்பையும் மறைமுகமான ஆதரவையும் பெற்றது. முதன்மையாக ஆதரவாக இருந்தவர் தொ.மு.சி.ரகுநாதன். அவர் இந்நாவலின் கருவை ஒட்டி, ஆனால் இன்னும் கடுமையாக, தாமரையிலேயே சோவியத் ருஷ்யா மற்றும் ஸ்டாலினிசம் பற்றி எழுதினார்

இன்று இந்நாவல் பல பதிப்புகளை கடந்துவிட்டது. 12 ஆண்டுகளில் அதன் மொழியையே நான் கடந்துவந்துவிட்டேன். அந்நாவல் ஓர் அரிய நினைவாக என்னில் எஞ்சுகிறது.

இன்று இதைப்படிக்கும் பல இளம் வாசகர்கள் ஸ்டாலினைப் மட்டுமல்ல லெனினைப் பற்றிக்கூட  விக்கிப்பீடியாவில்தான் வாசித்து அறிந்தேன் என்று எனக்கு எழுதுகிறார்கள். மொத்த ரஷ்ய வரலாறே விக்கிப்பீடியாவின் பதிவாகச் சுருங்கிவிட்டது. அன்று ஆக்ரோஷமாக விவாதிக்கப்பட்ட செய்திகளுக்கு இன்று எளிய தகவல்மதிப்பு மட்டுமே.

ஒட்டுமொத்தமாக கம்யூனிசம் என்னும் இலட்சியவாதமே மிகச்சில பழைய ஆட்களின் கடந்தகால நினைவும் சபலமும் என ஆகிவிட்டிருக்கிறது. அதைப்பேசுபவர்கள்கூட அதற்கு புதிய விளக்கங்கள் அளித்து வேறுவகை சாதிய- இனவாத அரசியல்களுடன் இணைத்துப் பேசவேண்டியிருக்கிறது

ஆனால் இன்று நாவல் வேறொரு வடிவை அடைந்துள்ளது. கருத்தியல், இலட்சியவாதம், அதிகாரம் ஆகியவற்றுக்கிடையேயான ஊடாட்டத்தைப் பேசும் நாவலாக இதை வாசிக்கிறார்கள். இலட்சியவாதத்திற்கும் தனிமனிதனின் குடும்பவாழ்க்கைக்கும் இடையேயான முரண்பாடாக விளக்குகிறார்கள். இலட்சியவாதங்களின் எல்லைகளைப்பற்றி பேசுவதாக புரிந்துகொள்கிறார்கள். இன்று வரும் கடிதங்களின் வாசிப்புக்கோணம் வியப்படையச் செய்கிறது

பேரரசுகள்கூட தற்காலிகமானவை, இலக்கிய ஆக்கங்கள் காலம்கடந்தவை என்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம்

பின் தொடரும் நிழலின் குரல்

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் நமது அரசியல் சிந்தனைகளை நிர்ணயித்துவந்த ஒரு பெரும் கனவின் சிதைவாகும். அது எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்குமுன் தர்மசங்கடம் நிரம்பிய உதாசீனத்தையே நமது சூழல் இதுவரை முன்வைத்து வந்துள்ளது.

ஒவ்வொரு பெருங்கனவும் கோடிக்கணக்கில் பலிகொள்கிறது, தியாகங்களை நிகழ்த்திக்கொள்கிறது. ஒவ்வொரு இழப்பும் அக்கனவு வாக்களிக்கும் வெற்றிகளை வைத்து நியாயப்படுத்தப்படுகிறது. அக்கனவு மீதமின்றிச் சரிந்து அழிகையில் அதுகுறித்துப் பேசப்பட்ட எல்லாச் சொற்களும் வற்றி உலர்ந்து மறைகின்றன. மிஞ்சுபவை அர்த்தமிழந்துபோன பலிகளும் தியாகங்களும் மட்டுமே. அவற்றுக்கு யார் பதில் சொல்வது? அக்கணக்கைத் தீர்ப்பது யார்?

பல்லாயிரம் வருட மானுடவரலாற்றின் நீட்சியில் எதனாலும் வகுபடாமல் இந்த எண்ணிக்கை பெருகியபடியே செல்கிறது. இதன் பாபச்சுமை ஒவ்வொரு மானுடனின் தோளிலும் கனத்தபடியே உள்ளது. அதை மறைத்துக்கொள்ளத்தான் புதிய பெருங்கனவுகளை நாம் உருவாக்கிக்கொள்கிறோமா?

கம்யூனிசப் பரிசோதனை கொண்ட உயிர்ப்பலி தோராயமாக ஐந்துகோடி. அப்பலிகளின் குற்றவுணர்ச்சி ஒரு கம்யூனிஸ்டின் அகமனதை அதிரவைத்தபடி கடந்துசெல்வதைச் சித்தரிக்கும் நாவல் இது. அதன் வழியாக மானுடஅறம் சம்பந்தமான முடிவில்லாத வினாக்கள் இதன் பக்கங்களில் எழுந்து வருகின்றன. இலட்சியவாதம், தியாகம், கருணை, நீதியுணர்வு இவற்றுக்கெல்லாம் வரலாற்றின் ரத்தவெளியில் உண்மையில் என்னதான் அர்த்தம்? நமது அரசியல் மனசாட்சியை நோக்கி தீவிரமாக உரையாடும் நாவல் இது.

சோவியத் ரஷ்யாவின் வரலாறு, நமது சமகால அரசியல்வரலாறு, நமது அன்றாட அரசியல்களம் ஆகிய பற்பல தளங்களில் இந்நாவல் நிகழ்கிறது. அதற்கேற்பச் சித்தரிப்பு, விவாதங்கள், கடிதங்கள், குறிப்புகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் ஆகிய பற்பல மொழிவடிவங்கள் கலந்த கலவை வடிவில் இந்நாவல் அமைந்துள்ளது. பல்வேறுபட்ட புனைமொழிகளும் புனைகளங்களும் மாறிமாறி வருகின்றன. இதில் கூர்ந்த வாசகர் ஒருவர் ஒன்றை ஒன்றும் மறுத்தும் விளக்கியும் முழுமைசெய்தும் நகரும் எண்ணற்ற புனைகோடுகளினூடாக மிக விரிவான ஒரு படைப்பனுபவத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்

தீர்வுகளையோ முடிவுகளையோ நோக்கி நகரும் ஒற்றைப்படையான இலக்கியப்படைப்பல்ல இது. பல்வேறுபட்ட ஊடுபிரதிகளினூடாக அறிதலின் முடிவற்ற சாத்தியங்களை அடையமுயலும் ஓர் அதிநவீன இலக்கிய ஆக்கம், அவ்வகையில் முன்னோடியான ஒன்று

சரளமும் உத்வேகமும் கொண்ட நடையில் வாசகனை தன்னுள் முழுமையாக ஈர்த்துக்கொள்ளும் புனைவுத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது.

தமிழினி 342 டிடிகே சாலை, ராயப்பேட்டை  சென்னை-14

பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

பின் தொடரும் நிழலின் அறம்

மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் – அறம்

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்க

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குர

முந்தைய கட்டுரைநித்யமானவன் [சிறுகதை] – செந்தில் ஜெகன்னாதன்
அடுத்த கட்டுரைசிந்தே, வண்ணம்- கடிதங்கள்