நாகர்கோயிலில் இந்த வீட்டைக் கட்டி குடிவந்தது 1999 செப்டெம்பரில். காடு, ஏழாம் உலகம், கொற்றவை எல்லாம் இங்கிருந்துதான் எழுதினேன். 2000த்திலேயே கம்ப்யூட்டர் வாங்கிவிட்டேன், ஆனால் கட்டுரைகள் மட்டுமே தட்டச்சிட்டுக் கொண்டிருந்தேன். நான் முழுக்க முழுக்க கணிப்பொறியில் எழுதிய நூல் கொற்றவைதான், 2003-ல்.
2002 வாக்கில் மகாபாரத நாவல் ஒன்றை எழுதத் தொடங்கியிருக்கிறேன். கர்ணன், துரியோதனன் உறவு பற்றி எழுதியிருக்கிறேன். பத்து அத்தியாயங்கள் வரை கையாலேயே எழுதியபின் மேலே எழாதுபோனமையால் கைவிட்டிருக்கிறேன். மகாபாரத பின்புலத்தில் நான் எழுதி முடிக்காமல் கைவிட்ட மூன்றாவது நாவல்வடிவம் அது.
இந்த மூன்றாம் நாவல்வடிவில் இருந்து ஒருபகுதியைத்தான் இறுதிவிஷம் என்றபெயரில் ஓம்சக்தி இதழுக்கு நீள்கதையாக பின்னர் எழுதினேன். அதுதான் முதற்கனல் நாவலின் தொடக்கமாக பின்னர் மாறியது. வெண்முரசு தொடங்குவதற்கு முன்னரே நான் திசைகளின் நடுவே, பத்மவியூகம், நதிக்கரையில், விரித்த கரங்களில், இறுதிவிஷம் ஆகிய மகாபாரத நாவல்களும் பதுமை, வடக்குமுகம் ஆகிய மகாபாரத நாடகங்களும் எழுதிவிட்டேன். அவையனைத்தையுமே உள்ளடக்கித்தான் வெண்முரசு அமைந்திருக்கிறது.
நேற்று பழைய தாள்களைத் தேடியபோது இந்த நாவல்வடிவை கண்டடைந்தேன். ஏற்கனவே கைவிட்ட நாவல்களெல்லாம் ஓர் எரிச்சலை அளித்தமையால் தூக்கிவீசிவிட்டிருந்தேன். இது எப்படியோ தப்பிவிட்டது. பழைய தாள். நிறம் மங்கி ஓரங்கள் கிழிந்திருக்கிறது
சுவாரசியமான விஷயம் ஒன்றுண்டு, நான் நாவல்களின் முதல் வடிவை ஒருபக்கத் தாள்களில்தான் எழுதுவது. இந்நாவல் விஷ்ணுபுரம் நாவலை தட்டச்சுப் பிரதிசெய்த தாளின் மறுபக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதுவே ஏதோ குறியீடுபோல தோன்றுகிறது.
அந்த தட்டச்சுப்பிரதி 1995ல் தர்மபுரியில் இருக்கையில் எடுக்கப்பட்டது. விஷ்ணுபுரத்தின் கைப்பிரதியை தட்டச்சிட்டு பதிப்பகங்களில் கொடுத்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஒரு தொழில்முறைத் தட்டச்சாளர் வீட்டுக்கு வந்து பக்கம் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூலி பேசி வாங்கிக்கொண்டு சென்றார். 25 வயதான பையன். எல்லா வரிகளும் தவறுகள் மிகுந்திருந்தன. பாதி தட்டச்சு செய்தபின் நிறுத்திவிடவேண்டியிருந்தது.
“ரதங்களோடிய மண்சாலையில் செந்நிற மேகம்போல தூசி படந்திருந்தது. முன்னால் சென்ற துரியோதனனின் ரதத்தின் கொடி மட்டுமே அவ்வப்போது தெரிந்தது. குதிரைகளின் குளம்புகள் மென்மையான புழுதியில் பதியும்போது நீரில் கற்கள் விழும் ஒலி கேட்டது. கர்ணன் கைகளைக் கட்டியபடி கண்களை மூடிக்கொண்டான். வெம்மையான தூசிக்காற்று காதுமடல்களை எரியவைத்தபடி மோதியது. நாசியில் வெந்த செம்மண்ணின் முதல் மணம் நிரம்பியது. மனம் வெகுவேகமாக முன்னோக்கிப் பாய்ந்தபோது தேர் நின்ற இடத்திலேயே அசைவதாகப் பட்டது” என அந்த மகாபாரதநாவலின் முதல் அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
அதற்கு நான் எண்ணியிருந்த பெயர் மாநாகம் . அது மகாபாரதக் கதையை எப்படியெல்லாம் நாகங்கள் வழிநடத்திச் சென்றிருக்கின்றன என்பதையே மையக்கருவாகக்கொண்டது
இன்று அந்த பகுதிகளை வாசிக்கையில் என்ன சிக்கல் என்று தெரிகிறது. யதார்த்தமான நேரடிச் சித்திரமாக ஆரம்பித்திருக்கிறேன். மனதிலிருந்த கதையில் இருந்த மாயக்கொப்பளிப்பு புறயதார்த்தத்துடன் ஒன்றவில்லை. ஒரு செவ்வியல் காவிய வடிவை உருவகித்தபின், செவ்வியல் அளிக்கும் வடிவச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே யதார்த்தவாதம் உட்பட எல்லாவகையான எழுத்துமுறைகளையும் கையாளும் வெண்முரசின் எழுத்துமுறையே இதற்கு உகந்தது. ஆனால் அதைக் கண்டுபிடிக்க பன்னிரண்டு ஆண்டுகள் மேலும் தேவைப்பட்டிருக்கின்றன.
இது ஒரு மானசீகமான பாவனைதான். ஆனால் இதுதான் இலக்கியத்திற்கு அடிப்படையானது. ஆசிரியன் தன்னை எப்படி நினைத்துக்கொள்கிறான் என்பது. நான் என்னை ஒரு ‘காலம்கடந்த’ கதைசொல்லியாக உருவகிக்கவேண்டியிருந்தது. மாநாகத்தில் இருந்தது ஒரு அரசியல். வெண்முரசில் எல்லா அரசியல்களும் உள்ளன.
ஆனால் இப்போது பார்க்கையில் இந்த பழையவடிவில் வெண்முரசின் நடையின் தோற்றுவாய் இருப்பதையும் காண்கிறேன். வெண்முரசு தூயதமிழ்நடை கொண்டது—ஆனால் இந்நாவலில் அப்படி இல்லை. செவ்வியல் தன்மைகொண்ட சம்ஸ்கிருத வார்த்தைகள் இயல்பாகவே கையாளப்பட்டுள்ளன.
இப்போது இந்த கைப்பிரதியைப் பார்க்கையில் சின்னவயசில் போட்டிருந்த சட்டையை எடுத்துவைத்துக்கொண்டு எவ்வளவு வளர்ந்துவிட்டோம் என்று எண்ணிக்கொள்வதுபோல ஏக்கமும் மகிழ்ச்சியும் உருவாகிறது.