ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
மதிப்பிற்குரிய ஜெ,
திராவிட மனு என்ற உங்கள் கட்டுரையயும் அதற்கான கடிதங்களையும் இந்த வாரம் முழுவதுமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக எஸ்.ராம்குமார் பகிர்ந்த மொழிபெயர்ப்பு மற்றும் EPW கட்டுரையயும் வாசித்தேன். போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களுக்கு EPW என்பது எத்துனை முக்கியமான, ஆதர்சமான வார இதழ் என்பது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. நான் இரண்டு வருடம் அதை சப்ஸ்கிரைப் செய்து படித்திருக்கிறேன்.
பொதுவாக அதில் எழுதுபவர்களின் அறிவு நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அறிவார்ந்த/ அதிகார வர்க்கத்தில் இருக்கும் மக்களால் படிக்கப்படும் ஒரு வாரஇதழிலில் இது போன்ற ஒரு விடயம் வாசகர் கடிதமாக வருவதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இத்துனை பெரிய அநீதி ஒரு பெரிய கட்டுரையாக வந்திருப்பது என்னை திகைப்பிற்குள் ஆழ்த்தியுள்ளது.
நீங்கள் சொல்வது போல உங்களின் இந்த இடித்துரைப்பைப் பற்றி முகநூலில் உங்கள் வசைபாடிகளின் சல சலப்புகளைக் காண முடியவில்லை. ஒரு வாரமாக மனம் கனமாக இருக்கிறது ஜெ.
இரண்டு ஆண்டிற்கு முன்னர் ஒவ்வொரு வாரமும் நண்பர்கள் சகிதம் ஏதேனும் ஓர் சமூகத் தலைப்பை எடுத்து விவாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படி ஒரு முறை ”ஆணவக் கொலைகள்” என்ற தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தோம். ஆரம்பம் நன்றாகத் தானிருந்தது. இளவரசன்; சங்கர் கொலை வழக்கை பேசிக் கொண்டிருந்த போது தோழர் ஒருவர் தனக்கு சொல்ல வேண்டுவது ஒன்றிருப்பதாகச் சொல்லி ஆரம்பித்தார். அவையாவுமே இந்த EPW கட்டுரையில்/ ராஜன் குறை போன்றோரால் சொல்லப்பட்டுவரும் தலித்துகளின் மீதான ஒரு கண்ணோட்டம் தான்.
பட்டியல் சாதியினரின் மீதான இத்தகைய ஒரு மனநிலை அல்லது அவர்களைப் பொதுமைப்படுதும் STEREOTYPE மன நிலை கண்டு அன்று துடுக்குற்றேன். அதே கருத்தை என் குழுவினின்று ஒரு பெண் வழிமொழிந்து அந்த கொலைகள் யாவும் சரியே என்று வாதிட்டாள். பட்டியல் சாதி ஆண்கள் இதற்காகவே வளர்க்கப்பட்டு, அவர்கள் கூலிங் கிளாஸ் மற்றும் நவீன ஆடைகள் அணிந்து பெண்களை மயக்குவதாக அவள் சொன்னாள்.
திரெளபதி என்ற படத்தின் கீழ்மையை அறிவார்ந்த பலர் இன்று சாடுகிறார்கள். ஆனால் அந்த படத்திற்கான கரு சமூகத்தில் விரவிக் கிடக்கிறது. அந்த படத்தின் டிரைலரின் கீழுள்ள கமெண்ட் பெட்டியில் எத்துனை சாதி வெறிகளைப் பார்த்தேன். அன்று என் நண்பர்கள் பேசிய அனைத்தும் அவர்களின் சமூகம் அவர்களுக்கு சொல்லியதுதான்.
அன்று அந்த பெண்ணிடம் சில கேள்விகளை முன் வைத்தேன். ”ஒரு பெண்ணாக நான் உன்னிடம் கேட்பது இதைத் தான். பட்டியல் சாதி ஆண்கள் மயக்குகிறார்கள் என்பதான வாதம் ஒருபுறபிருக்கட்டும். ஒரு ஆண் மகன் கூலிங் கிளாஸ் போடறான், நல்ல சட்டை அணிகிறான், படத்தில் காண்பது போல ரெளடித்தனம் செய்கிறான் என்பதற்காக காதலிப்பாயா? அல்லது அது போன்ற ஒருவனை நீ திருமணம் தான் செய்து கொள்வாயா?” என்று கேட்டேன்.
அவள் அதைக் கேட்டு எரிச்சலுற்றாள். நான் மேலும் தொடர்ந்தேன்… “ஒரு வகையில் நீ பட்டியல் இன ஆண்களைப் பற்றி இழுக்குறைப்பது இடைச் சாதி/மேல் சாதி என்று வழியக்கூடிய பெண்களையும் சேர்த்து இழுக்குரைப்பதாகும். இந்திய சட்டத்தின் படி வயது வந்த (18 வயதிற்கு மேல்) ஒரு பெண்ணுக்கு தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. அது குறிப்பது இதைத் தான், அவளால் அதைச் செய்வதற்கான பக்குவ மன நிலை வந்துவிட்டது என்பதைத் தான். ஆக நீ குற்றம் சொல்வது இடைச்சாதிப் பெண்களையும் சேர்த்து தான்” என்றேன்.
அவள் பொறுமை இழந்தவளாக “ஆமா! அவர்களுக்கு அறிவில்லாமல் தான் இதைச் செய்கிறார்கள். பக்குவம் இல்லை” என்றாள். “காதலிக்கும் அனைவருமே இப்படி பக்குவம் இன்றி தான் செய்கிறார்களா?” என்றேன். “ஆம்” என்றாள் உரக்க. “ நான் காதலித்துக் கொண்டிருக்கிறேனே” என்றேன். “உன் போன்றவர்களை 1% வைத்தால் மீதி 99% பக்குவமற்ற பெண்கள் தான். ஏமாந்த கோழிகள்” என்று கர்சித்தாள்.
இதற்கு வழி மொழிந்து ஒரு பையனும் சேர்ந்து “இது ஒரு இயக்கமாக நடை பெறுகிறது. உனக்கு விவரம் பத்தாது” என்ற ஒற்றை வரியில் என் வாயடைத்தான். விவாதத்தின் போது இன்னும் நீங்கள் படிக்க வேண்டும் என்று சொல்வது போல சமூகப் பிரச்சனைகள் பேசும் போது இன்னும் நீங்கள் வாழ வேண்டும் நிறைய பார்க்க வேண்டும் என்று முடித்து விடுவார்கள். அன்று ஆத்திரத்தில் எழுந்து வந்து விட்டேன். முட்டாள்களுடன் வாதிடுவது வீண்.
ஒரு பெண் வாயாலேயே தனக்கு முடிவெடுக்கும் பக்குவம் இல்லை என்று விளம்ப வைப்பதற்கு அவள் வாழ்ந்த சமூகம்தான் பொறுப்பு கூற முடியும். சாதிய/மத/குடும்ப மரியாதை என்ற சுமையை பெண்களின் மேல் பெண்களே அறியது ஏற்றி வைக்கும் சுமை என்பது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை. அன்றிரவு தூக்கம் வரவில்லை. சமூகத்தின் வேறு எத்தரப்பினரும் இதைச் சொன்னால் நான் பொறுத்துக் கொண்டிருப்பேன் ஆனால் ஓர் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருக்கும் நபர்கள் இதை பேசியதை நினைத்து நினைத்து தூக்கம் வரவில்லை.
“பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற வார்த்தைகளை அன்று தொடங்கி இறுகப் பற்றிக் கொண்டு விட்டென். சமூகத்திற்காக அக்கறை கொள்பவர்கள் எத்துறையில் இருந்து வேண்டுமானானும் வரலாம். அதே போல களைகளும் நாம் பெரிதும் மதிக்கும்/ அறிவார்ந்தவர்கள் என்று நினைக்கும் துறை/இதழ்கள்/மனிதர்கள் இப்படி எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்று இப்போது புரிகிறது ஜெ.
ஒரு வகையில் இரண்டு வருடங்கள் கழித்து நான் அந்த வாதத்தை ஏதோ சிறு களைகள் தானே என்று மறந்து விட்ட சமயம்.. இது போன்ற கட்டுரைகளைப் பார்த்து திகைத்து நிற்கிறேன். இது ஒரு காட்டுத்தீ போலல்லவா பரவி, விரவிக் கிடக்கிறது என்று மனம் நொந்து கொள்கிறேன். ’அறியா மக்கள்; ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துகிறார்கள்; சிறு களை; கால மாற்றத்தில் மறைந்துபோம்; அறிவார்ந்த சமூகத்திற்கு இதுவெல்லாம் ஏற்றுக் கொள்ளப்படாத விடயம்’ என்றெல்லாம் நினைத்திருந்து ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கும் போது இந்த ”திராவிட மனு” என்ற உங்களின் கட்டுரை என்னை சிதைத்துப் போட்டிருக்கிறது. எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறேன். சாதியம் மீண்டும் எப்போதோ தழைத்தோங்க ஆரம்பித்திருக்கிறது. அதை அறிவார்ந்தவர்கள், பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தவர்கள் யாவும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
‘நாடகக்காதல்’; ‘தலித் இளைஞர்களின் வேலைசெய்யும் திறமை இல்லாமை, ஆண்திமிரை வளர்த்துக்கொள்ளுதல், திருடும் குணம் கொண்டவர்கள்” இந்த வரிகளெல்லாம் அறிவார்ந்த வட்டாரத்தில் கூட உள்ளதென்பது ஆச்சரியமாய் உள்ளது. இதெல்லாம் . 18 ஆண்டுகளாக சர்வதேச அளவில் புழக்கத்தில் இருக்கிறது என்கிற விசயம் மனதைக் கவலைக்குள்ளாக்குகிறது. ஏமாற்றப்பட்ட ஒருவகை உணர்வு.
”மனுஸ்மிருதி போல அவர்களை தப்பாக வகுத்து, இழிவாக அடையாளப்படுத்தி ஒழித்தே கட்டிவிட்டது இது” என்பது எத்துனை நிதர்சனமான உண்மை. மனு பிராமணர்களைத் தவிர இன்றைக்கிருக்கும் பிற சாதிகளை சூத்திரர்கள் என்றியம்புகிறது. அதை எதிர்த்து தானே பெரியார் போரிட்டார். அதை ஒழிக்க அவர் எடுக்காத ஆயுதமென்பதே இல்லை. அன்று அவையாவுமே இந்த ஆதிக்க சாதிகளுக்கு தேவைப்பட்டது. பெரியாரைக் கொண்டாடினார்கள். விரைந்து அணைத்துக் கொண்டார்கள். பிராமணர்கள் இங்கு சிற்பான்மையினர் ஆனால் அதிகார வர்க்கத்தில், பிற துறைகளில் முன்னேரியிருந்தனர். அவர்களை அழிப்பதற்கான மிகப் பெரும் ஆயுதமாக பெரியாரும், திராவிடக் கட்சிகளும், பிறரும் இவர்களுக்கு தேவைப்பட்டனர்.
ஒரு வழியாக சூத்திரஅடையாளத்தை களைந்தாயிற்று. ஆனால் சிறுபான்மை பிராமணர்களையே இன்னும் சாடிக் கொண்டிருக்கிறார்களே. என்றைக்கு தலித்/ஒடுக்கப்பட்டவர்கள்/பட்டியலினத்தவர் என்ற அடையாளத்தை துறப்பது? இவர்கள் அனைவரையுமே எதிர்த்து போராடி வெளிவர சிறுபான்மையினர் எவ்வளவு சிரமேற்கொள்ள வேண்டும். அங்கிருந்து இப்போதைக்கு தெரியும் ஒரே ஒளி அய்யா திருமா தான் என்பது நிதர்சனம். இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்ற மலைப்பு தெரிகிறது.
90 களின் ஆரம்பத்தை தலித் இலக்கியத்தின் எழுச்சி என்கிறார்கள். தலித் அரசியலின் எழுச்சியுங் கூட அதே புள்ளியில் தீவிரமாக ஆரம்பித்தது என்லாம். சிறுபான்மை தலித்துகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் நேரமும் ஆரம்பித்தாயிற்று. ஆனால் அவற்றையெல்லாம் குலைக்கும் போக்கை இந்த 18 ஆண்டுகளாக சர்வதேச அளவிலும் நிகழ்த்திக் கொண்டிருப்பது கண்டு மனம் பொங்குகிறது. முன்னெப்போதுமல்லாத அளவில் சாதியத்தை நிறுவும் போக்கை இப்போது நான் பார்க்கிறேன். சாதியக் கட்சிகளின் எழுச்சியும் இந்த 18 ஆண்டுகளில் மிக அதிகம். கொள்கைகளெல்லாம் ஓரங்கட்டப்பட்டு சாதியம் என்ற ஒரு காரணத்திற்காக ஓட்டு வங்கியாக மக்களை அடிமைப்படுத்த மேலும் சாதியம் திணிக்கப்படுகிறது.
முன்பு திராவிடக் கட்சிகளுக்கு கொள்கை இருந்தது. இன்று சாதியம் தான் அங்கும் தலை விரித்து ஆடுகிறது. மிகப் பெரும் தலைவர்களையும், வரலாற்று வீரர்களையும் சாதியத்துக்குள் அடைத்து சிறுமைப் படுத்தி, யாவரும் தொட இயலா வண்ணம் தீண்டாமைச் சுவர் எழுப்பி வைத்திருக்கிறார்கள். அரசாங்க உத்தியோகத்திலோ அல்லது மிகப் பெரிய அந்தஸ்த்துக்கு போய் விட்டாலோ சாதியம் வந்து சந்திக்கிறது. சந்தித்து நான் உங்க ஆள் என்கிறது. நாம் சேர்ந்து முன்னேருவோம். அவன் இந்த ஆள் அவனை மேலெழ விடக்கூடாது என்கிறது. அப்படியும் கல்வியாலும், ரிசர்வேசன்களாலும், முயற்சியாலும் முன்னேரும் தலித்துகளை அந்த மேற்கூரையினின்றே தற்கொலை செய்து கொள்ளத்தூண்டும் போக்கு ஒரு வித சோர்வை அளிக்கிறது.
2018 Amnesty international reports -ன் படி நடந்த 218 HATE CRIMES–ல் 142 தலித்துகளுக்கெதிரானது என்கிறார்கள். ஆணவக் கொலைகள் தாண்டி, தலித் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தல் போன்றவையும் நடக்கிறது. இது தவிர கடந்த கால கல்வி மரணங்கள்(ரோகித் வெமுலா, அனில் குமாரி மீனா, சேலத்து செந்தில் மற்றும் பல) என்று சொல்லக்கூடிய ”DEATH OF MERIT” –ம் வேறு நடக்கிறது.
எங்கள் ஊரின் முதல் பி.எச்.டி படித்த சித்தப்பா ராசமுனி இன்று பைத்தியமாகத் திரிகிறார். அவருடைய ஆய்வு முடிவுகளை திருடிக் கொண்டார்கள். அவர் செய்ததை வேறொருவர் செய்தது போல காண்பித்து பிறர் பட்டம் பெற்றார்கள். சாதியம் இப்படி பல கொடுமைகளைச் செய்கிறது. முன்பெல்லாம் எங்கள் ஊரிலுள்ளவர்கள் ராசமுனியைப் போல படிக்கணும் என்பார்கள். ஆனால் அவரின் முடிவு கண்டு கிராமம் படிப்பை துச்சமாகக் கருதியது. நாங்களும் கனவு காணத் தகுதியுள்ளவர்கள் என்று சொல்ல ஒரு தலை முறை காத்திருக்க வேண்டியிருந்தது.
இன்றும் நித்தமும் மாலையில் மாட்டை ஓட்டிக் கொண்டு போகும் ராசமுனி சித்தப்பாவைப் பார்க்கையில் மனம் கலங்கும். காலங் காலமாக கடினப்பட்டோம். இன்று ஏமாற்றப்பட்டிருக்கிறோமே என்று மனம் வேதனை கொள்கிறது. இருந்தும் முயற்சியுடன் நடை போடுகிறோம். மாற்றத்தை நோக்கி…
கல்வியைத் தவிர கைகளில் ஒன்றுமில்லை. ஆனால் இந்த கட்டுரையைப் போன்ற அறிவார்ந்த குட்டுகள் வைக்கும் ஆட்கள் சமூகத்தில் இருக்கிறார்கள் என்ற நிம்மதியுடன் நடை பயில்கிறோம். இந்த கட்டுரைகளுக்காய் நன்றி. இது போன்ற பாசிசங்களை எதிர்ப்பதற்காய் நன்றி. சமூகக் குட்டுகளுக்காய் நன்றி ஜெ.
இரம்யா