தென்னிலத்தில் இருந்து மீள்கையில் சீர்ஷன் ஆஸ்திகமுனிவரின் நாகர்நிலத்துக்கு சென்றான். வேசரதேசத்தில், கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில், புஷ்கரவனத்தில் அமைந்திருந்த நாகர்குலத்து அன்னை மானசாதேவியின் ஆலயத்தையும், அருகே அன்னைக்கு ஜரத்காரு முனிவரில் பிறந்த மைந்தன் ஆஸ்திகனுக்கு அமைந்த ஆலயத்தையும் வழிபட்டுவிட்டு வடக்கு நோக்கி சென்றான்.
அன்று சிறப்புநாள் ஏதுமில்லை என்றாலும் மானசாதேவியின் ஆலயத்திற்கு பலநூறு அடியவர்கள் வேசரநாடெங்கிலுமிருந்து வந்திருந்தனர். கமுகுப்பாளையாலான நாகபட முடியை சூடி, இளநீல ஆடை அணிந்து, அன்னையின் பெயர்சொல்லி பாடி ஆடியபடி, கால்நடையாக வந்தவர்கள். நாகபட முனைகொண்ட கோலேந்திய குடித்தலைவர்கள். இளஞ்சிவப்பாடை சுற்றி நாகாக்ஷமாலை அணிந்த பெண்கள். அவர்கள் அரிசிப்பொடியும் மஞ்சள்பொடியும் இட்டு நாகவடிவளான அன்னையை வணங்கினர். அருகமர்ந்த நாகச்சுருளுடல் கொண்ட மைந்தனுக்கும் வழிபாடு செய்தனர்.
வணங்கிவிட்டு அருகிருந்த அம்பலத்தில் அன்னம் உண்ண அமர்ந்தபோது “அருகென தழைப்பதே ஆலெனப் பெருகும். ஆலெனப் பெருகுவது அருகென உறையவும் அறிந்திருக்கும்” என்று அங்கிருந்த நாகமுதியவர் சொன்னார். “இன்று பாரதவர்ஷமெங்கும் மானசாதேவி அன்னைக்கு நூற்றெட்டு ஆலயங்கள் உள்ளன. அவை நாகஸ்தலங்கள் என்று அறியப்படுகின்றன. அவற்றில் ஒன்பதில் பதினெட்டில் நூற்றெட்டில் சென்று வழிபடுவதை நோன்பெனக்கொண்டவர்கள் நாகர்கள். நாகரில்லா நிலம் இன்று பரதகண்டத்தில் எங்கும் இல்லை.”
“ஆனால் இங்கு வருபவர்கள் நாகர்கள் மட்டுமல்ல” என்றார் இன்னொரு நாகர்குலத்து முதியவர். “நாகர்களுடன் பிற குடியினர் நிகழ்த்திய போர்கள் முடிந்துவிட்டன. இன்று இப்பெருநிலத்தில் குடிகள் மழைக்கால நீரோடைகளென ஒன்றுடனொன்று கலக்கின்றன. ஒன்றை ஒன்று வளர்க்கின்றன. நாகர்களில்லாத வழிபாடுகளேதும் இன்றில்லை. ஆழிவண்ணனின் படுக்கையென, அனல்வண்ணனின் ஆரம் என, அன்னையின் மேகலை என அனைத்திடங்களிலும் நாங்களே திகழ்கிறோம். வென்றவர்கள் நாங்களே.”
சீர்ஷன் மேலும் வடக்கே சென்று விஜயபுரியில் வணிகர்களுடன் தங்கும்போது நாகர்குலத்தில் எழுந்த அருகப்பேருருவனைப் பற்றி கேட்டறிந்தான். “ரிஷபதேவரில் தொடங்கும் அகம்வென்ற பெருவீரர்களின் நிரையில் இருபத்து ஒன்றாமவரான நமிநாதர் ராகவராமனின் குலத்தில் எழுந்தார். இருபத்தி இரண்டாமவரான நேமிநாதர் ஆழியேந்திய அண்ணலின் யாதவக்குடியில் தோன்றினார். இருபத்தி மூன்றாமவரான பார்ஸ்வநாதர் நாகர்களின் குருதியில் பிறந்தார்” என்று முதுவணிகர் ஒருவர் சொன்னார். “ஐம்புலன் வென்றவர். அமுதனைத்தையும் நஞ்சென்றாக்கி இப்புவியிருப்பைக் கடந்து மெய்யிருப்பை அடைந்தவர்.”
“அன்னை மானசாதேவியின் குருதிவழியில் வந்த வாமையை காசிநாட்டரசர் அஸ்வசேனர் மணந்தார். அவர் வயிற்றில் பிறந்தவர் பார்ஸ்வநாதர். அருகத் தவநெறி ஓங்கி பாரதவர்ஷத்தை தன் ஆயிரம் கைகளால் தழுவிக்கொண்டிருக்கிறது” என்றார் முதுவணிகர். “இன்று பாரதவர்ஷமெங்கும் குடிப்போர்களும் முடிப்போர்களும் நின்றுவிட்டன. நிலையரசர்களுக்கும் எழுமரசர்களுக்கும் நடுவே என்றும் இலங்கும் எல்லையென்ன என்பது வரையறுக்கப்பட்டுவிட்டது. போரிலாதபோது வணிகம் செழிக்கும். வணிகர் செழிப்பதனால் வணிகர்களின் மெய்மைவழி சிறக்கிறது.”
சீர்ஷன் அவருடன் சென்று விஜயபுரியின் வடக்கே மலைப்பாறை ஒன்றில் செதுக்கப்பட்ட பார்ஸ்வநாதரின் பேருருவச் சிலையை பார்த்தான். அசோகமரத்தடியில், காலடியில் பத்மாவதி யக்ஷி பணிந்து அமைந்திருக்க ஊழ்கத்தில் நின்றிருந்த பேருருவரின் தலைக்குமேல் ஏழுதலை நாகம் படமெடுத்து குடைபிடித்திருந்தது. விழிமூடி நின்றிருந்த மாமத்தகம் தொடுவான்கோட்டிலென எழுந்திருந்தது. அங்கே ஆடையில்லா மண்படிந்த மேனியராகிய அருகநெறியினர் கூடி பெருமானை வாழ்த்தி வணங்கிக்கொண்டிருந்தனர்.
விஜயபுரியில் இருந்து வடக்கே செல்கையில் மையச்சாலையில் இருந்து சற்றே வழிதவறி வேளாண்சிற்றூர்களினூடாக சீர்ஷன் அலைந்தான். நெடுவழிக் களைப்புடன் அந்தியில் ஒரு சிற்றூரை அடைந்தான். அவ்வூரின் மூங்கில்வேலிக்கு வெளியே நின்று “அன்னையரே, அயலவன், நெடுவழியன். அந்திக்கிடக்கை நாடிவந்தேன்” என்றான். உள்ளிருந்து வந்த முதியவர் அவனைப் பார்த்ததும் கைகூப்பி “வருக, பாணனே! இச்சிற்றூருக்கு சொல் தருக!” என்று அழைத்துச் சென்றார்.
இரவுணவாக பால்சேர்த்து சமைத்த கஞ்சியும் இன்கிழங்குப் புழுக்கும் உண்டு, அவர்களின் விருந்தினர் குடிலின் சிறுதிண்ணையில் உடல் ஓய மல்லாந்து படுத்து, அரைநிலவு எழுந்த வானை பார்த்துக்கொண்டிருந்தான் சீர்ஷன். ஊர் அடங்கிவிட்டிருந்தது. தொலைவில் தொழுவத்து மாடுகளின் கழுத்துமணி ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சூழ்ந்திருந்த காட்டிலிருந்து சீவிடுகளின் ஓசை எழுந்தது. அவன் துளித்துச் சொட்டவிழைவன என எழுந்த விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது சிறுமதலை ஒன்று அழுதது. அதன் அன்னை மெல்ல தட்டியபடி தாலாட்டு பாடத் தொடங்கினாள். வண்டென ரீங்கரித்த மெல்லோசை மெல்ல திரண்டு சொல்லாகி பொருள் கொண்டது.
‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்றழைத்த சிறுகரிச்சான் பைதலே, பாடுக மைநீலம் விலக்கி மணித்தளிர் விழித்துக்கொள்ள மால்திகழ் பெருஞ்சோலை அறிந்த குழலிசையின் இனிமையை. அவன் நீலமலர்க் காலடி படிந்த பூம்பொடிப் பொன்பரப்பே கூறுக, நீ கொண்ட மெய்விதிர்ப்பின் குளிரை. மணிக்கழுத்து மரகதப் புறாத் தொகையே சாற்றுக அவன் மயிற்பீலி நலுங்கலில் எழுந்த நீலவிழி நகைப்பை.
கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? இறையோய்! இங்குளாய்! கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்! கருநீலத் தழல்மணியே! வானெழுந்த சுடரொளியே! காட்சியில் கண்ணே, கண்ணில் கருத்தே, கருத்தில் மெய்யே, மெய்யென்றானவனே, மெய்கடந்துறைபவனே.
மெல்லிய குரலில் அந்தப் பாடலை அவள் பாடிக்கொண்டிருந்தாள். அங்கு வீசிய காற்றே குளிர்ந்து துளித்து அச்சொற்களென்றானதுபோல. அங்கிருந்த இருளின் முழுப்பே ஒளிகொண்டதுபோல. மானுடர்பாடும் குரலுக்கு அவ்வினிமை எவ்வண்ணம் அமைந்தது என அவன் வியந்தான். அன்றி, மானுடர்க்கன்றி அவ்வினிமை மண்ணில் அளிக்கப்பட்டுள்ளதா என உளம்பொங்கினான்.
பாலாழியின் சுழிப்பென்றெழுந்த ஆழியே, அதிலெழுந்த முத்தெனும் வெண்சங்கே காத்தருள்க! விழிகொண்ட நீலப்பீலியே, ஏழு துளைகொண்ட பொன்மூங்கிலே, கொன்றை மலர்ந்தெழுந்த பட்டாடையே காத்தருள்க! இசையில் விழிமயங்கிய கன்றே, எழுந்து குடையான அரவே, சூழ்ந்து அலைகொண்ட காற்றே காத்தருள்க என் கண்ணனை. சுடரை ஒளி என சூழ்ந்துகொள்க!
இரண்டென்று எழுந்த மயக்கே, இங்கு இன்று இவ்வண்ணமென்று அமைந்த சழக்கே, இனியென்று ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே, யானென்று எனதென்று எழுந்த பெருக்கே, தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே, மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே, வாழ்வென்று சாவென்று காட்டும் பசப்பே, காத்தருள்க என் மகவை! கதிரை காத்தமைவது இருளின் பொறுப்பென்று உணர்க!
சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே, சற்றென விலகி விரிமலரின் முதலிதழோ எனத் தோன்றும் பெருவிரலே, இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே, அதிலெழுந்த ஆழிச்சங்குச் சுழியே, அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே, அமைக என் தலைமேல்! அமைக இப்புவிமேல்! அமைக திருமகள் மடிமேல்! அமைக இக்ககனவெளிமேல்! அமைக காப்பென்று அமைக!
செவ்விதழ் சிறுதளிர்மேல் பால்துளி எழுந்த நகைப்பு. முகிழ்த்த வேதமுதற்சொல். இது அறிதற்கொண்ணாது ஆயிரம்கோடி அருந்தவ முனிவரை அகற்றும் பெருஞ்சுடர். அள்ளி முலையோடணைத்து சின்னஞ்சிறு பண்டி தடவி சிரித்துக் குழையவைக்கும் அன்னையர் கைவிரல் கணையாழியின் சிறு மின்னொளிச்சுடர். களியாடும் கன்னியர் தோழியர் கையிலெடுத்து கழற்சியாடும் மாமலை.
முலைக்கண் முனையில் சொட்டிநின்றிருக்கும் கொழும்பால் வெண்துளி தயங்க, அன்னை குனிந்து நோக்கிக் கனியும் விழிமுனை ஒளிகொள்ள, சிறுகுமிண்வாய் விலக்கி கைவிரித்து சுட்டுவிரல் தூக்கி எதையும் சுட்டாமல் ஒலித்த முதற்சொல். சொல்லென்று திரளாத இன்பறவைச் சிற்றொலி. அன்னை நெஞ்சறிந்த பொருளனைத்தும் சென்றமையும் குளிர்மலைமுடி.
கைத்தளிர் விரித்து ஆடுக செங்கீரை! கால்மலர் கொண்டு ஆடுக செங்கீரை! சின்னஞ்சிறு நகையொலியுடன் இணையும் விழிச்சுடரொளித்துளியுடன் ஆடுக செங்கீரை! இச்சிறுகுடிலின் முன் இளங்கதிரெழும் புலர்காலையில் முதல்மலர்மணம் சூழும் மென்காற்றில் ஆடுக செங்கீரை!
ஆயர்குடிபிறந்த அழகே, இச்சிற்றில் நிறைக்கும் ஆழிப்பால் பெருக்கின் அலையே, எழுதிசை தொட்டு விழுதிசை முட்டி மீண்டு புவியாள ஆடுக! இன்மையென்ற ஒருமுனையும் இருத்தலென்னும் மறுமுனையும் தொட்டுத்தொட்டு ஆடுக! பொருளென்று அங்கும் மயக்கென்று இங்கும் ஆகி விளையாடுக!
கூரைமூங்கிலில் கட்டிய கொடிவள்ளிக் கயிற்றில் பிணைத்த அன்னை பழஞ்சேலை குவிப்பில் கால்மேல் கால்வைத்து, நெஞ்சில் சிறுகை சேர்த்து விழிமயங்குக! இத்துணியில் எழுகின்றது அன்னையின் அடுமனை புகைமணம். அவள் உடல்கொண்ட வியர்வை வாடை. கண்வளர்க கண்ணே, அதிலுள்ளன அன்னையின் விழிநீர் வெம்மையும் நெடுமூச்செறிந்த வெதுப்பும். பறக்கும் கருவறையே தொட்டிலென்றறிக! அங்கே நீ காணும் கனவுகளில் உடன் வந்தாடும் அந்த மழலைச்சிறுமியே உன் அன்னையென்றுணர்க!
சிறுதொட்டிலாடி அமைக! சொல்லுரைத்து செயல்காட்டிச் சென்ற அரசே, இங்கு சொல்லவிந்து செயலமைந்து மயங்குக! உன் சிறுகைவிரல்கள் தளர்க! உன் தளிர்க்கால் சரிந்தமைக! நீள்பீலி நெடுவிழிகள் வளர்க! உன் முடியிலெழுந்த பீலிவிழி மட்டும் இமையாதாகுக! கண்ணே, இப்புடவிமேல் உன் நோக்கு ஒருகணமும் அணையாதாகுக!
கொட்டும் கைகொண்டு குவிக்கும் கைகள் பற்றி அன்னை சொல்லும் மழலைக்குச் சப்பாணி கொட்டி அருள்க! தொட்டு இதழொற்றி, மீண்டும் தொட்டு விழியொற்றி, விடாய்மீளாது அன்னை கொள்ளும் தவிப்புக்கு சப்பாணி கொட்டி அருள்க! விழிவிரித்து மகிழ்ந்து, தன் விழியெண்ணி அஞ்சி, அன்னை கொள்ளும் அலைவுக்கு சப்பாணி கொட்டி அருள்க!
கூட்டுச் சிறுகுருவிக் குஞ்சின் சிறகென எழுந்தசைக உன் கைகள்! துள்ளி வாய்விரித்து கூவிக் கரைக உன் இதழ்மலர்கள்! விடாயென்றும் பசியென்றும் விம்மி எழுக உன் சிற்றுடல்! முலையுண்டு, அன்னை உளமுண்டு, ஆழத்து கனவுண்டு, கடந்த வெளியுண்டு, உடற்கூடென்று இங்குதிர்த்து விண்ணென்றாகி எழச்செய்க! ஆயர்குலத்தெழுந்த ஆழியனே, உன் நெஞ்சிலெழுக அன்னை அனலனைத்தும் அணைக்கும் அலகிலா பெருவெள்ளக் குளிர்க்கடல்!
பாய்ந்து எழுந்து மென்தளிர் கைகளால் சூழ கழுத்தை அணைத்து, இதழ்நீர் குளிர்ந்து கன்னம்தொட முத்தமிடுக! உன் மூச்சுக்காற்றுபட்டு செவிமடல் சிலிர்க்க அன்னை அறிக சொல்லிச் சொல்லி நால்வேதமும், வேதம்கடந்த சொல்லும், வேறுஆயிரம் மெய்நூல்களும் ஆற்றிய பிழைசுட்டி நின்றிருக்கும் அறியா முழுமையை!
பால் உலர்ந்த கன்னங்களுக்கு ஆயிரம் முத்தம். குழைந்த தோள்களின் மென்மடிப்புகளுக்கு பல்லாயிரம் முத்தம். சிறுபண்டிச் சுழிக்கு பல்லாயிரம் பல்லாயிரம் முத்தம். தொடைத்தசையின் அடுக்குகளுக்கு, தண்டை இறுகிய கணுக்கால்களுக்கு, இதழ்ப்பாத மென்மைக்கு முத்தங்கள் பல்லாயிரமாயிரம்.
அன்னை சிரிக்கும் முகம்கண்டு துள்ளும் சிற்றுடலுக்கு கோடி முத்தம். நெற்றிப்பரப்பில் கலைந்து விழுந்த கருங்குருவி மெல்லிறகுபோன்ற குழலிழைக்கு கோடி முத்தம். சிரிப்பில் நீண்ட இதழ்களுக்கு, கன்னத்து நீள்குழிகளுக்கு, காதிலாடும் முத்துச்சிறுதுளி குழைகளுக்கு கோடி முத்தம். கண்ணெழுந்த ஒளியே, உன் சிறுமார்பில் சொட்டிய வாய்த்துளியின் ஈரத்திற்கு பல்லாயிரம்கோடி முத்தம்.
முத்தம்போல் பொருளற்ற பிறிதொன்றுண்டோ? ஒற்றி ஒற்றி வெறிகொள்ளுதல். பருகப்பருகத் தீராத இன்கடல். செய்வதற்கொன்றிலாதோள் செய்து செய்து கலிதீர்க்கும் வீண்செயலன்றி அது வேறென்ன? உண்ணாது உண்ணுதல், ஒன்றாது ஒன்றுதல் அன்றி முத்தம் என்பதுதான் என்ன? உடல்கடந்தெழும் உள்ளப்பெருக்கை உடலால் வெளிப்படுத்தலன்றோ அது? ஆனால் மானுடருக்கு வேறென்ன அளிக்கப்பட்டுள்ளது?
மெல்ல வருக சிற்றடியே! ஒன்று ஒற்றி பிறிதொன்று, காற்றில் வைத்து மற்றொன்று ஊன்றி, இக்கணம் இக்கணம் என்று தள்ளாடி அருகணைக என் அரசே! கைதட்டி அழைத்து, களிப்பேறி நகைத்து அன்னையரும் செவிலியரும் அருகே சூழ அடிவைத்து அடிவைத்து அகிலத்தை ஆள வருக!
ஒற்றிய சிற்றடித் தடங்கள் பதிக என் அடுமனைச் சாணிமெழுக்கில். என் கூடத்து பட்டுக்கோரைப்பாயில். என் மஞ்சத்து ஆடையில். விடாய்திகழும் மார்பில். ஆழிவண்ணத்து அழகனே, அவை பதிக என் தலையில். என் தலைகொண்ட அனலில். என் ஆயிரம்கோடி மூதாதையரின் பெயர்களில்.
இது குருவிச்சிற்றடி. தொட்டுத்தொட்டு எழுந்தமையும் சிறு எழுத்துக்களின் நிரை. இது மென்பூனைக் காலடியின் பதுங்கிய பஞ்சுத் தொடுகை. இது சிறுநாய்க்குட்டியின் நான்குகால் தடம். நாலில் ஒன்று நிரைபிழைக்க எழுந்து விழுந்து, கண்ணில் ஒளிதுள்ள, வாலில் உவகைசுழல எழும் உயிர்த்துடிப்பு. இது கன்றுக் காலடியின் துள்ளல். முரசுக் கழிமுழையின் தாளம்.
வருக கரியோனே! நீர்வெம்மை நிறைகாற்றின் அசைவென்று. தென்மூலை வானோசையின் சிறுமுரளல் என. ஆடி திருப்பி காட்டிய ஒளிச்சுழல்போல அதிராதெழுந்தமைந்த சிறுமின்னல் என. இலையசையாது ஊழ்கமியற்றி காடு காத்திருக்கும் முதுவேனில் பெருமழையே வருக!
ஆயிரம் பல்லாயிரம் தவளைகள் வாழ்த்துரைக்க பொழியும் விரிவானே வருக! ஆயிரம் கோடி சிற்றுயிர்கள் இசைமுழக்கி எதிரேற்கும் குளிர்ப்பொழிவே வருக! ஓசையிட்டுப் பெருகியணைந்து, மண்ணறைந்து சூழத்தழுவி, துளிகோடிப் பெருகி, வீழ்கடலென்றாகி, வான்மூடி மண்மூடி நீரொன்றே என்றாகி நின்றிருக்கும் பேரளியே வருக!
நிலவெழுந்த முகில்நிரையில் ஒளிர்வதென்ன நகைப்பு? கருமுகிலை பொன்னாக்கும் ஒளியென்ன ஒளி? இங்கெழுந்த விழியொளியே அங்கெழுந்து அம்புலியென்றானதோ? நோக்குக விழியோனே, கைவீசி அள்ள முயல்க அங்கே பூத்தெழுந்த அப்பொன்மலரை!
தேய்வதொன்று, வளர்வதொன்று, திகழ்வதொன்று வானில். தேய்விலாது வளர்ந்தெழுந்து எந்நாளும் திகழ்வதொன்று என் கையில். ஒளிர்வதொன்று, மறைவதொன்று, முகில்திரை விலக்கி எழுவதொன்று, மண்ணெல்லாம் மிளிர்வதொன்று அவ்விண்ணில். ஒளிர்வதொன்று, என் ஆடையில் மறைவதொன்று, முந்தானை நுனிவிலக்கி எழுவதொன்று, இப்புற்குடிலும் சூழ்காடும் புவியும் பொலிய மிளிர்வதொன்று என் மடியில்.
விழிப்பீலி சுடர்கொள்ள, வீழ்நிழல் அசையாதமைய நோக்குக அந்நிலவை! தண்காற்றில் மெய்ப்படைந்த தளிருடல் மடிவெம்மை கொண்டு ஒடுங்க, தண்டைச்சிறுகால் ஒன்றின்மேல் ஒன்று அமைய, வளையணிந்த கையிரண்டும் வயிற்றின்மேல் பூண்டிருக்க, காலமில்லா கனவொன்றில் காணுக இம்முழுநிலவை! விழிப்புற்று புன்னகைத்து, அண்ணாந்து முகவாய் தொட்டுத்திருப்பி சுட்டுக அன்னைக்கு அவள் முதல் நிலவை!
அள்ளி மணல்கூட்டி, அதன்மேல் வரியிட்டு, நீ அமைத்த இந்நகர்தான் அத்தனை அழகு. மென்மணல்மேல் படிந்த உன் சிறுவிரல் கோடுகள் பேரழகு. இடைக்கிண்கிணி வெள்ளிச்சரடு மண்மேல் விழுந்து இழுபட கால்மடித்தமர்ந்து, தன்னுள் தான்பேசி தலையாட்டி, தன்னைத் தானே ஏற்று தருக்கி, தான் படைத்ததை தள்ளி நின்று நோக்கி தானே மகிழ்ந்து, நீ அமைக்கும் இந்த மணல்நகரம் நிகரற்ற அழகு.
சுற்றிவந்து அமர்ந்தெழுந்து, மண் அள்ளி பொத்தி அழுத்தி அமைத்து, விழும்போது சலிப்புற்று, விடாமல் மீண்டும் அமைத்து, மெல்ல அகழ்ந்து உள்ளறைகள் அமைத்து, இலைபறித்து கொண்டுவந்து சரிவில் பொருத்தி, உச்சிமுகடில் மலர்கொண்டுவந்து சூட்டி நீ சமைத்த சிற்றில்மேல் சுற்றிச் சுழன்றுசெல்லும் சிறுகாற்றும் சரிந்தாடும் கிளைநிழலும் சிதறொளியும் காட்டுவதொன்றுண்டு கண்ணே, படைக்கும்போது நீ அழகன்.
கட்டிய சிற்றிலைக் கடந்து அப்பால் நின்று நோக்கி கைதூக்கி கூவி ஆர்ப்பரித்து ஓடிவந்து கால்தட்டி வீழ்த்தி நீ விளையாடும் கோலம் கண்டு திகைக்கின்றனர் தோழியர். உன் தோழர் உடன்சேர்ந்து களியாடுகின்றனர். திண்ணைமேல் நின்று தன் நெஞ்சோடு கைசேர்த்து அன்னை அறிந்த அழியாமெய் ஒன்றுண்டு அரசே, அழிக்கையில் நீ பேரழகன்.
செவிநூறு நிறைய, தொழுக்கன்று உவகைகொண்டு துள்ள, தோழர் துணையாகிவர சிறுபறை முழக்கிச்செல்க! தோல்வட்டம் அதிர துள்ளிக் கூத்தாடுக இணைக்கோல்கள்! இயைக இருகால் நடனம்! இணைந்தெழுந்தாடுக உன் தோழர் கூட்டம்!
நோயெழும் மழைமுன்காலம். நனைந்த மண்ணிலிருந்து நச்சு ஆவியெழும் பருவம். உன் கால்தொட்டுச் செல்லும் பாதைகளிலெல்லாம் மருந்தென மண்குழைக! உன் பறையோசை கேட்டு செவிமடல் மடித்து நின்றிருக்கும் கன்றுகளெல்லாம் அமுதெனச் சொரிக! பல்லாயிரம்கோடி நாவுகளுடன் சூழ்ந்திருக்கும் மரங்களெல்லாம் கேளாச் சொல்லுரைத்து வாழ்த்துக! வாழ்த்துக வெளிவானம்! வாழ்த்துக கண்ணே உன்னை அன்னை உளம்!
முகில்கணம் முழங்குக! முழங்குக மாமலைகள்! முழங்கி அலைகொள்க ஆழிப்பெருவெளி! எளியோருக்கென எழுந்த புதுவேதம் சொல்பெருக ஓங்குக உன் பறையோசை! முட்டை விரிய ஈரச்சிறகு உதறி எழுந்த சிறுகிளிக்குஞ்சு செவ்வலகு விரித்துச் சொல்லட்டும் ‘ஆகுக, ஆழிவண்ணா’ என்று. சிறுவளைவிட்டு முகம்நீட்டி ஒளிநோக்கும் முயல்குட்டி உரைக்கட்டும் ‘அவ்வண்ணமே, அணிச்சங்கனே’ என்று. தேவர்க்கிறைவனே, பனிக்குடம் உடைத்து எழுந்து தள்ளாடி நின்று நாநீட்டி இளமூக்கை நக்கி கன்று உரைக்கட்டும் ‘ஆம், அலைமலர்கண்ணா’ என்று.
துவாபரம் கலியை முட்ட, ஆர்ப்பரித்த மாந்தர் அலைகொண்டு சூழ, விண்ணெலாம் கண்ணென்றாகி விழியிமையார் நிறைய, சொல்லெல்லாம் பொருள்மாறும் பெருங்களத்தில், பொருளெல்லாம் உதிர்ந்தழியும் குருதிப்பெருவெளியில், எழுந்த பெருஞ்சொல் அன்று திகழ்ந்த மணித்தேரே உருள்க! அறவாழியென்றே உருள்க உன் அணிச்சகடங்கள் நான்கும்!
ஏந்தாத படையாழி, இசைக்காத வேய்குழல், ஒருபோதும் உலையாத பொற்பட்டு திகழ்ந்த தேர்த்தட்டே, போருழன்ற பெருஞ்சகடே, அழியாத சொல்லெழுந்த அணிமன்றே உருள்க! செங்குருதிமேல், துயர்கள்மேல், சாவின்மேல் உருள்க! அமுதின்மேல் அழிவின்மைமேல் உருள்க! உருள்க பெருந்தேரே, இப்புவியின்மேல் சுடராழியென்றே உருள்க!
வெண்பனி மாமலைமேல் உருள்க! கங்கைமேல், காவிரிமேல் உருள்க! சிந்துவின்மேல், பிரம்மபுத்திரையின்மேல் உருள்க! விந்தியன்மேல் சஹ்யன்மேல் உருள்க! அணித்தேரே, அறத்தேரே, அழியாவேதத் திருத்தேரே, மாநதியின்மேல், துங்கையின்மேல், கிருஷ்ணையின்மேல், கோதையின்மேல் உருள்க! அலைகொண்ட கடல்சூழ தவம்கொள்ளும் கன்னியின் காலடியில் சென்றமைக! கண்ணே, தென்முனைமேல் சென்றமைக! முந்தையோர் சென்றமைந்த ஆழிப்பேராழத்தைச் சுட்டும் சிறுவிரல்நுனிமேல் அமைக! அங்கமைக கண்ணா, என்றும் அவ்வண்ணமே அமைக! ஆம், அவ்வாறே ஆம்.
ஒரு வயிற்றில் தோன்றி, ஒரு நெஞ்சில் முலையுண்டு, ஓருடலில் திகழ்ந்து, ஓரம்பில் மறைந்து, ஓராயிரம் கோடியெனப் பெருகிய கண்ணனுக்கே சரண். கருதோறும் எழுந்து, முலைதோறும் அமுதுண்டு, மடிதோறும் திகழ்ந்து, மண்ணெல்லாம் நிறைந்த மன்னனுக்கே சரண். ஆழிவெண்சங்கு அழகனுக்கே சரண்.
அன்னையின் சொல் தேய்ந்து மீண்டும் இன்னொலியென்றாகியது. இருள்வெம்மையில் விழிமயங்கும் புவிக்குஞ்சின்மேல் பெருஞ்சிறகணைத்து அமர்ந்த அன்னைப்பெரும்பறவையின் ஓசை என. அது ஓய்ந்த பின்னரும் சீர்ஷன் அது சென்றடைந்த இடத்திலேயே இருந்தான். அங்கே அவன் இரு கரிய குழவிச்சிற்றடிகளை கண்டான். அவற்றை தன் தலைசூடி கைகூப்பி உள்ளமெல்லாம் இனிக்க, உடலே தித்தித்து தவிக்க “மாமழைக்கண்ணா, உனக்கே சரண்” என்றான்.