98. அருகே கடல் [சிறுகதை]
அந்த விலக்கம் சக மனிதர்கள் மீதா? அல்லது வெளிச்சத்தின் மீதேவா? ஏனெனில், அது அவனை இருளுக்குள் செல்ல உந்துகிறது. ஒருவித நம்பிக்கையின்மையுடன், அல்லது குறை நம்பிக்கையுடனேயே செல்கிறான். ஓசைகள் எழுந்தவண்ணம் உள்ளன.
“உட்செறிவுகொண்டவை என்றால் ஓசையே இடுவதில்லை”. அனைத்தையும் உதறிச் செல்வதற்கான வாய்ப்பு இருந்தும், வெளிச்சத்தின் மேல் ஒரு துளி நம்பிக்கையை விட்டுவைக்கிறான். எனவே, அறிந்தோ, அறியாமலோ, கதவின் அந்த சிறு சாவித்துளையை அடைக்காமல் விடுகிறான். (புத்தகங்களை உடன் கொண்டுசெல்கிறான்) அவனுடைய மீட்பிற்கு அந்த துளையினூடே கசியும் வெளிச்சமே காரணமாகிறது.
இருளில் அவன் அடைந்த ஞானம், வெளிச்சத்தைப் பற்றியதே. அது சுவற்றில் தெரியும் தலைகீழ் பிம்பங்களை அவனுக்கு அர்த்தப்படுத்துகிறது. மேலும், இக்காவின் மனிதம் அவனுக்கு நம்பிக்கை எற்றுகிறது. அவன் இப்போதுதான் கடலை ஆழ்ந்து பார்க்கிறான். பின்னர் வீடு திரும்பியதும்தான் உணர்கிறான். சுவற்றில் அவனுக்குத் தெரிவது தலைகீழ் கடல். மீண்டுவிட்டான்.
பார்த்தா குரு
***
அன்புள்ள ஜெ
அருகே கடல் ஒரு விசித்திரமான கதை. கதையே இல்லை, ஒரு சின்ன வாழ்க்கைத்துணுக்கும் ஒரு படிமமும்தான். தலைகீழ்க்கடல் என்பதே துணுக்குறவைக்கும் படிமம். அறைக்குள் வரும் கடல் என்பது இன்னொரு படிமம். கடல் வெளியே இரைந்து ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமைதியான தலைகீழான அலைகளாக நிகழ்கிறது
அவன் அந்த இருட்டுக்குள் இருந்து வாசிக்கும் புத்தகங்களும் அப்படித்தான் வாழ்க்கையைக் காட்டுகின்றனவா? ஒற்றைக்கண் வழியாக அவனுக்குள் வெளியே இரையும் கடலை வீழ்த்திவிடுகின்றனவா?
ராஜ்குமார்
***
100. வரம் [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
பெருமழை பெய்துகொண்டிருக்கும் அதிகாலையில் தனிமையில் வரம் சிறுகதையில் ‘’நூற்றெட்டு விளக்குகளிலும் சுடரேற்றியதும் உருகிய பொற்குழம்பென தகதகக்கும் கருவறையில் பொன்னாலான ஒரு பெரிய குமிழி போல நின்றிருந்த பகவதியை’’ வாசித்து, மனக்கண்ணில் கண்டும் கொண்டிருந்த கணத்தை எழுத்தில் கொண்டு வரவே முடியாது. அதே நேரம் வானொலியில் இளையராஜா’’ மந்தகாசினி, மதுரபாஷினி’’ என்று உருகிகொண்டிருந்தார். உடல்மெய்ப்புக்கொண்டது வாசிக்கையில்.
யாரும் காணாத மேப்பலூர் ஸ்ரீமங்கலம் பகவதியை பெயர் சொல்லப்பட்டிருக்காத அந்தத் திருடன் ஸ்ரீதேவியில் கண்டுகொண்டிருக்கிறான். இருவரையும் உலகிற்கு காட்டியும் விட்டிருக்கிறான். இந்தக்கதை ஏற்படுத்திய உளஎழுச்சியை எனக்கே விளங்கிக்கொள்ள முடியவில்லை. அலை பாய்ந்துகொண்டிருக்கிறேன் உள்ளே. ’என்ன கதை என்ன கதை’ என்று மனம் அரற்றிக்கொண்டெ இருக்கிறது.
வெண்முரசின் கூடவே இப்படி 100 கதைகளை உங்களால் எழுதிவிட முடிந்திருப்பதும் வெண்முரசு உருவாக்கிய அதே பிரமிப்பை எனக்குள் உருவாக்கிவிட்டிருக்கிறது.
தொடர் சிறுகதைகளின், கதைதிருவிழாக்களின் வழியே திருடர்கள் இப்போது அணுக்கமாகிவிட்டனர். எஸ்தரை சிரோமணியிடம் ஆசி வாங்க அழைத்துவரும் பிறசெண்டின் ஏ.இன்னாசி முத்தும், வருக்கையின் கள்ளன் தங்கனும், இன்றைய திருடனுமாய் ஒரு பெரிய பிரியம் ஏற்பட்டுவிட்டது இவர்களின் மீது
இன்றைக்கென்னவோ ஒருமுறை கூட திருட்டே நடந்திருக்காத, திருடும் முயற்சி கூட நடைபெற்றிருக்காத, திருடன் ஏறி வந்தே இருக்காத, இந்த வீட்டின் பேரிலும் வாழ்வின் பேரிலும் ஒரு துயர் வந்துவிட்டது. ஐந்தே ஐந்து வீடுகளுடன் தெருவென்று பெயரிருக்கும் ஓரிடத்தில், அதுவும் கடைசி வீடாக இருக்கும் ஒன்றில், வீட்டிற்கு அடுத்து பரந்து விரிந்திருக்கும் வயலும் தோப்புமாய் இருக்கும் ஏகாந்தத்தில், வீட்டினுள்ளும் 10 பேர் வந்தாலும் மறைந்துகொள்ள ஏதுவாக மரங்கள் செறிந்திருக்கும்.அவ்வப்போது பூட்ட மறந்துவிடும் பின் வாசலுடன் இருக்கும் ஒரு வீட்டிற்கு ஏன் இதுநாள் வரை திருடர்கள் வரவில்லையென்று ஒரே வருத்தமாக இருக்கிறது
ஸ்ரீதேவியின் உலர்ந்த உதடுகளில் முத்தமிட்ட வரத்தின் திருடனைப்போல, பாட்டா என்று உரிமையுடன் களவு கொடுத்த சிரோமணியை அழைத்த இன்னாசியைப்போல, ஏசு சொன்னதின் பொருட்டு திருடும் விசுவாசியான தங்கனைப்போல அத்தனை உன்னதமான, நுட்பமான, சுவாரஸ்யமான திருடர்கள் வராவிட்டால் போகிறது மறந்து வாசலில் வைத்துவிட்ட செம்பை, வருஷக்கணக்காக மகன்கள் ஓட்டாமல் அப்படியே நிற்கும் சைக்கிளை அல்லது நாற்காலிகளை, குறைந்தபட்சம் அழகிய மலர்கள் செறிந்திருக்கும் பலவகை செடிகளுடன் இருக்கும் ஏராளமாக வாசலில் வரிசையாக யாரெடுத்துக்கொண்டு போனாலும் கேட்பாரற்று இருக்கும் பூச்சட்டிகளில் ஒன்றையாவது ஒரு திருடன் வந்து திருடிச்சென்றிருக்கலாமே இத்தனை வருடங்களில் என்று ஏக்கமாகவும் துயரமாகவும் இருக்கிறது.
இந்தகதைகளுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி, எத்தனை நன்றிகளை சொல்வது என்று தெரியவில்லை. //ஒவ்வொன்றூம் பொன்னென மாறும் ஒரு தருணம் உண்டு// ஆம் வாசகர்களின் வாழ்வின் பொற்கணங்கள் ‘எண்ண எண்ண குறைவதிலிருந்து வரம் வரை வாசித்த நாட்களும் இனி வாசிக்கவிருக்கும் காலங்களும்.
அன்பும் நன்றியுமாய்
லோகமாதேவி.
***
அன்புள்ள ஜெ
வரம் நிறைவான கதை. ஒரு மிகப்பெரிய அனுபவம். ஒரேசமயம் சிறுகதையாகவும் ஒரு தேவதைக்கதையாகவும் இருக்கிறது. சில அபூர்வமான லத்தீனமேரிக்கக் கதைகளில்தான் இந்த அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன்
நீங்களே எழுதியதுபோல எண்ணஎண்ணக் குறைவது ஒரு கேள்வி. தற்கொலை பற்றி. வரம் அதற்கான பதில். திருடன் எல்லாவற்றையும் அறிதவன். திருடனின் அருள் உங்களுக்கு இருக்கட்டும். குழந்தையில் வெளிப்படும்போது உள்ளங்கவரும் அந்த திருடன்
ராஜசேகர்
***