அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும்

ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
திராவிட மனு- இரட்டை நாக்குகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
திராவிட மனு- கடைசியாக
திரிப்பு அரசியலின் முகங்கள்

அன்புள்ள ஜெ,

இந்த ராஜன் குறை விவகாரத்தில் முக்கியமான அம்சமாக இருப்பது அன்னிய அமைப்பு ஒன்றின் நிதி. அந்த நிதிக்காகவே இந்த ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. ஜெயரஞ்சன் நடத்திய ஒரு என்.ஜி.ஓ அமைப்புக்காக ராஜன் குறை இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். ‘அமெரிக்க நிறுவனத்துக்காக மார்க்ஸிய ஆய்வு’ என்ற வேடிக்கை நடந்திருக்கிறது. இங்கே ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசுபவர்கள் எவருக்கும் அதில் எந்த விமர்சனமும் இல்லை.

என் கேள்வி என்னவென்றால் இந்த நிதி ஏன் அளிக்கப்படுகிறது? அவர்கள் இதனால் அடைவது என்ன என்பதுதான்?

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

1991 ல் முதல் முறையாக இதை நான் விரிவாக எழுதினேன். அதன்பின் இருபது தடவைக்குமேல் எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இதைச் சுட்டிக்காட்டி ஓயாமல் எழுதிவருபவன் நான் மட்டுமே. இப்போதுதான் தர்மராஜ் போன்றவர்கள் எழுதுகிறார்கள்- இன்னும் விரிவாக.

1988ல் நான் பி.கே.பாலகிருஷ்ணனைச் சந்தித்தபோது இந்த நிதியுதவிகளின் சர்வதேச அரசியலைப்பற்றி அவர் என்னிடம் சொன்னார். அன்று அவர் அளித்த ஓர் அறிக்கையை நான் கையால் நகலெடுத்துக் கொண்டேன்.[அப்போது ஜெராக்ஸ் பரவலாக இல்லை] அதன் பல பகுதிகளை அன்று எழுதிய கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

பழைய கட்டுரை ஒன்றில் இருந்து அந்த மேற்கோளை மீண்டும் எடுத்தேன். Perspective of recent American Anthropology. பிரபல அமெரிக்க மானுடவியலாளரான Cora du Bois எழுதியது. அதில் 1970களில் அமெரிக்க மானுடவியலில் நடந்த பொருந்தா வீக்கம் பற்றிச் சொல்கிறார். 1947ல் அமெரிக்க மானுடவியல் கழகம் [American Anthropological Association] கிட்டத்தட்ட 400 உறுப்பினர்களை கொண்டிருந்தது. 1975ல் அதன் உறுப்பினர் எண்ணிக்கை 5000. இந்த வளர்ச்சி மிகையான நிதியுதவியால் வருவது. மானுடவியல் தரவுகளை விரும்பும் வணிகநிறுவனங்களின் தேவைக்கேற்ப இந்த ஆய்வுகள் செய்யப்படுவதனால் நிதி வருகிறது என்கிறார்.

இந்த நிதியுதவிகளைச் செய்பவை அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அல்லது ஆய்வுநிறுவனங்கள். அவற்றுக்கு நிதி எங்கிருந்து வரும்? பெரும்பாலும் அவை வணிகநிறுவனங்களால் அளிக்கப்படுகின்றன. எல்லா ஆய்வுகளுக்கும் வணிகநிறுவனங்களின் நிதியே அளிக்கப்படுகிறது.

வணிகநிறுவனங்கள் எப்படி நிதி அளிக்கின்றன? ஒன்று அந்த ஆய்வின் தரவுகள் அவர்களின் வணிகத்திற்கு தேவையானவையாக இருக்கும். அல்லது அந்த வணிகநிறுவனத்திற்கு அமெரிக்க உளவமைப்பின் நிதி அளிக்கப்பட்டு அது ஆய்வுநிறுவனங்களுக்கு அளிக்கப்படும்

இப்படி வரும் நிதி இங்கே பற்பல சிறுஆய்வு அமைப்புகள், என்.ஜி.ஓக்களுக்கு வந்து சேர்கிறது. அவர்கள் ஆய்வுசெய்து தரவுகளை அனுப்புகிறார்கள். இது ஒருவகையான மூலப்பொருள் திரட்டல் மட்டும்தான். இது ஒரு குடிசைத்தொழில். பல ஆயிரம்பேரின் பிழைப்பு

இந்த ஆய்வுகள் எப்படி நடைபெறவேண்டும், எந்த கோணத்தில் நடைபெறவேண்டும் என்பதை அந்த ஆய்வுநிறுவனமே வகுக்கிறது. பலசமயம் என்ன முடிவுகள் சொல்லப்படவேண்டும் என்பதையும் முன்னரே வகுத்து அளிக்கிறது.

தமிழகத்திலோ இந்தியாவெங்கிலுமோ எந்த ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லுங்கள், அங்கே இந்த  ‘ஆய்வு’ நிகழ்ந்திருப்பதை காணலாம். முன்பு எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு பழங்குடி கிராமத்திற்குச் சென்றபோது ஒரு வெள்ளைக்கார இளைஞன் அந்த கிராமம் அவன் ஆய்வின்பொருட்டு அவன் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லி அவரை விரட்டியதைப் பற்றி எழுதியிருந்தார்.எனக்கும் கேரளத்தில் அந்த அனுபவம் அமைந்ததுண்டு

இந்த ‘ஆய்வுகள்’ அவர்களுக்கு எதற்கு? அதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது. இவை உலகம் முழுக்க நடைபெறுகின்றன. பல்லாயிரம் தரவுகள் வந்து அவர்களிடம் குவிகின்றன. அவற்றை அவர்கள் ஆய்வுசெய்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு வேறு நிபுணர்கள், உண்மையான அறிஞர்கள், இருப்பார்கள்

தகவல்களே இன்று உலகை ஆள்கின்றன. ஐரோப்பா- அமெரிக்காவின் ஆதிக்கம் தரவுகளால் ஆனது. அதை உலகம் முழுக்க இருந்து சுரண்டிச் சேகரித்து அனுப்புவதே இந்த மாபெரும் வலைப்பின்னலின் பணி.

இந்தத் தரவுகள் நுகர்வோரின் ரசனையையும் தெரிவுகளையும் உணர்வதற்குப் பயன்படலாம். ஒரு வணிகப்பொருளின் சர்வதேசத் தேவையை கணிக்க இவற்றை பயன்படுத்தலாம். இன்று கூகிள் வந்தபின் தொழில்நுட்ப உலகுக்குள் வந்துவிட்டவர்களின் ரசனையும் தெரிவும் வேறுவகையில் சேகரிக்கப்பட்டுவிடுகிறது. மலைப்பழங்குடிகள், குடிசைவாழ் மக்கள் ஆகியோரின் மனநிலையை இந்த மானுடவியல் ஆய்வுகள் வழியாகவே அவர்கள் அறிந்துகொள்ளமுடியும்

இந்தியா உள்ளிட்ட மூன்றாமுலக நாடுகளின் அரசியலின் உள்ளோட்டங்களை, அதிகாரச் சமநிலைகளை புரிந்துகொள்ளவும் இந்த தரவுகள் பயன்படுத்தப்படலாம். தேவையானபோது உள்ளே நுழைந்து இங்குள்ள அரசியலதிகாரத்தில் விளையாடவும் இவற்றை பயன்படுத்தலாம். இந்த தரவுகளை கையில் முறையாக பகுப்பாய்வு செய்து வைத்திருப்பவர்கள் நினைத்தால் ஒரு மதக்கலவரத்தை, சாதிக்கலவரத்தை எளிதாக உருவாக்கலாம்.

உதாரணமாக ஆப்ரிக்காவின் இனக்குழு அரசியல் முழுக்கமுழுக்க இந்தவகையான மானுடவியல் ஆய்வாளர்கள் அளித்த தரவுகளின் அடிப்படையில் ஐரோப்பாவால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவின் கனிமங்கள்மேல் ஐரோப்பா இப்படித்தான் அதிகாரத்தை அடைகிறது.

ஆய்வு என்பது வணிக- பொருளியல் மேலாதிக்கம் உள்ளே நுழைவதற்கான வழிகளில் முக்கியமானது. இது எப்படி நடைபெறுகிறது என்பதை அறிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் படித்துப்பாருங்கள்.

அனைத்தையும் விட நுட்பமானது, இங்கே என்ன சிந்திக்கப்பட வேண்டும், என்னென்ன விவாதங்கள் நிகழவேண்டும் என்பதை இந்த நிதியுதவிமூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இந்த நாடகக்காதல் என்பதே அமெரிக்க நிறுவனமான International Centre For Research on Women, Washington DC [https://www.icrw.org/] உருவாக்கியதாகக்கூட இருக்கலாம். ராஜன் குறையும் ஜெயரஞ்சனும் அவர்களின் கருவிகளாக இருக்கலாம். அவர்கள் இப்படி நிதிவாங்கிய நிறுவனங்கள் என்ன, அவற்றின் பின்னணிகள் என்ன, அவற்றின் நிதியாதாரம் என்ன என்பதெல்லாம் நம்மால் ஒருபோதும் சென்று தொடமுடியாத ரகசியங்கள்.

இந்த அழிவைத்தான் நான் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். நமக்கு இங்கே பிரச்சினைகள் உள்ளன. நமக்கு கல்வியும் உள்ளது. நாமே முட்டிமோதி நமது எல்லைகளுக்குள் இருந்துகொண்டே சிந்தனைகளை உருவாக்கமுடியும். கொள்கைகளை வகுக்க முடியும். தீர்வுகளை கண்டடைய முடியும்.

ஆனால் இந்த அன்னியத்தூண்டல் வழியாக நம் சிந்தனைகள் தொடர்ச்சியாக குலைக்கப்படுகின்றன. நாம் சிந்திக்கவே முடியாதபடி ஆக்கப்படுகிறோம். அன்னிய நிதியின் இந்த அறிவுக்கருவிகள் நம் சூழலில் சலிக்காமல் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். போலிக்கொள்கைகளை கொண்டுவந்து கொட்டுகிறார்கள். போலி நூல்களை மேற்கோளாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். மெய்யான சிந்தனைகளை தூற்றுகிறார்கள். இலக்கியப்படைப்புக்களை திரித்து வாசிப்பு நிகழாதபடி செய்கிறார்கள். சிந்திப்பவர்களை வசைபாடி அவதூறுசெய்து நிலைகுலைய வைக்கிறார்கள்

இந்தியா இன்னும் தாக்குப்பிடிப்பதே ஆச்சரியம்தான். ஆப்ரிக்காவும் ஆசியாவின் பலநாடுகளும் இந்த அன்னியநிதித் தாக்குதல்களால் சொந்தமாக எதையுமே சிந்திக்க பேச முடியாதவையாக ஆகிவிட்டிருக்கின்றன.

அதைவிட ஒன்று உண்டு, இன்று நாம் ஆப்ரிக்கா பற்றி என்னென்ன அறிகிறோமோ எல்லாமே இவ்வாறு அங்கு திணிக்கப்பட்ட ஆய்வாளர்கள் உருவாக்கிய கருத்துக்களையும் சித்திரங்களையும்தான். இங்கே தலித் வாழ்க்கை எப்படி இருந்தாலும் சரி, வெளியே தலித் இளைஞர்களை பற்றி உலகம் அறிவது ராஜன் குறை, ஜெயரஞ்சன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கூட்டணி உருவாக்கிய சித்திரத்தைத்தான்.

அந்தச்சித்திரம் அவர்களுக்கு அமெரிக்க ஆய்வுநிறுவனத்தால் அளிக்கப்பட்டது. தலித்துக்கள் அமெரிக்க ஆப்ரிக்கர்களைப்போல ஒருவகையான ‘குற்றகரமான ஆணாதிக்க நோக்கு’ கொண்டவர்கள் என அந்த ஆய்வுநிறுவனம் வழிகாட்ட இவர்கள் ஆய்வுநடத்தி ஆதாரம் திரட்டி அளிக்கிறார்கள். அக்கட்டுரை உலகமெங்கும் 88 முறைக்குமேல் முக்கியமான ஆவணங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த கருத்தை ஏன் அவர்கள் உருவாக்கி உலகளாவ பரப்பி நிலைநாட்டுகிறார்கள் என நம்மால் உணர முடியாது. ஆனால் விளைவை அறியலாம். தமிழகத்தின் சாதிய உறவு எப்போதைக்குமாகச் சீரழிந்துவிட்டது. நாடகக்காதல் என்ற கருத்து இங்கே நிலைநிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிதிவலையில் வலதுசாரி அமைப்புக்கள், குறிப்பாக இந்துத்துவ அமைப்புக்களும் உண்டு. அது சார்ந்த தரவுகள் இப்போதுதான் வருகின்றன சென்ற பதினைந்தாண்டுகளில் பல இந்துத்துவ அமைப்புக்கள் அமெரிக்க ஐரோப்பிய அமைப்புக்களின் நிதிகளை பெற்றுக்கொள்கின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்களால் ஒருவகை ‘அரசியல் இந்துத்துவம்’ உருவாக்கப்படுகிறது. இந்த நியோஇந்துத்துவம் இந்துமதத்தின் பன்மைத்தன்மைக்கு எதிரானது, இந்து மதத்தை ஓர் அரசியல் கொள்கையாகச் சுருக்குவது.

[சென்றமுறை இந்த நிதிவலை பற்றி நான் எழுதியபோது எந்தெந்த அன்னியநிதிபெறும் அமைப்புகளைப் பற்றி குறித்தேனோ அவற்றில் பல இன்றைய ஆட்சிக்கு நெருக்கமானவையாக மாறிவிட்டிருக்கின்றன.]

ஆனால் இப்போதும் அன்னியநிதியின் முக்கியமான இலக்கு ராஜன் குறை போன்ற போலி இடதுசாரிகளை உருவாக்கி இடதுசாரிக் கருத்துக்களுக்குள் ஊடுருவுவதே. அவை ஒட்டுமொத்தமாகவே இங்குள்ள இடதுசாரிச் சிந்தனைகளை கடத்திக்கொண்டு சென்றுவிடுகின்றன. அமெரிக்க எதிர்ப்பு பேசிக்கொண்டே அமெரிக்க நிதிபெற்று செயல்படுவது இங்கே மிகச் சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

நான் தொடர்ச்சியாக இதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். எப்போதுமே தன்னல அரசியல் இம்மாதிரி உண்மைகளை கருத்தில் கொள்வதில்லை. உண்மை சொல்பவனை எதிரியாக முத்திரை குத்திவிட்டால் போதும். மூர்க்கமான கட்சிகட்டலின் நடுவே உண்மை நசுங்கிவிடும்.

திரும்பவும் சொல்கிறேன், நாம் இங்கே சிந்திப்பதை வேறு எவரோ அவர்களின் வணிக அரசியல் விரிவாக்கத்தின் பொருட்டு கையாள்கிறார்கள். நம்மால் இன்றைய சூழலில் அதை கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால் குறைந்தபட்சம் நமது மூளையையாவது சுதந்திரமாக வைத்துக்கொள்வோம்.

ஜெ

***

ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்
அன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]
அன்னியநிதி இன்னொரு பார்வை
அன்னியநிதித் தன்னார்வர்கள் – ஒரு கடிதம்
ஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்
அந்நிய நிதி- தொகுப்புரை
ஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள்
நிதிவலையின் செயல்முறை- தகவல்கள்
‘நிதிப்பிள்ளை’களைப் பற்றி…
ஆய்வும் மேற்கும்

முந்தைய கட்டுரைகருத்தியலும் கழைக்கூத்தும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12