திரிப்பு அரசியலின் முகங்கள்

ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
திராவிட மனு- இரட்டை நாக்குகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
திராவிட மனு- கடைசியாக

அன்புள்ள ஜெ,

நீங்கள் முடித்துவிட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் ஒரு கேள்வி. இதைப்போன்ற ஒரு செயல்பாட்டில் நீங்கள் ஈடுபடத்தான் வேண்டுமா? உங்கள் வாசகர்களின் வட்டம் மிகப்பெரியது. அவர்கள் உங்கள்மேல் கொண்டிருக்கும் மதிப்பும் அப்படிப்பட்டது. இந்த அடி ராஜன் குறை போன்ற ஒரு சின்ன பூச்சிமேல் சுத்தியலால் அடிப்பது போன்றது. இது கொஞ்சம் அதிகம் என்பதே என் எண்ணம்

அர்விந்த்குமார்

***

அன்புள்ள அர்விந்த்,

சிலநாட்களுக்கு முன்பு என்னுடைய பத்துலட்சம் காலடிகள் என்ற கதை வெளிவந்தபோது அதில் ஒரு கதாபாத்திரம் சொல்லும் ஒரே ஒரு வரியை எடுத்துக்கொண்டு, அந்த வரி சொல்லும் அர்த்தத்தை நேர் எதிராகத் திரித்து, இங்கே ராஜன் குறை என்ன வகையான தாக்குதலை உருவாக்கினார் என்று கண்டிருப்பீர்கள். இவ்வளவு பெரிய நாஸி ஆவணத்தை கூலிபெற்றுக்கொண்டு எழுதியவரின் போலி அறச்சீற்றத்தை கண்டிருப்பீர்கள்.

அதை ஏற்றுக்கொண்டு, அக்கதையை படிக்காமல், அந்த வரியின் பொருளைக்கூட புரிந்துகொள்ளாமல், மேலதிக அறச்சீற்றத்துடன் எத்தனைபேர் அதைப்பற்றி எழுதினார்கள் என்று பார்த்திருப்பீர்கள். அவர்கள் எல்லாம் கருத்தியலாலோ கட்சியாலோ ஒருங்கு திரட்டப்பட்ட ஒரு கும்பல். தனிப்பட்ட கசப்புகளால் அவர்களுடன் சேர்ந்துகொண்ட சோட்டா எழுத்தாளர்கள்.

[இந்த கொரோனா காலகட்டத்தில் ராஜன் குறையை தோலுரிப்பது அவசியமா என்று என்னிடம் கேட்ட எந்த ஆசாமியும் அவர் எழுதித்தள்ளிய அந்த அசட்டுத் தாக்குதல்களைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.]

அவர்கள் அத்தனைபேரும் இந்த அப்பட்டமான நாஸி ஆவணத்தை பற்றி மௌனம் சாதிக்கிறார்கள். அல்லது சால்ஜாப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். இவர்கள் உண்மையில் யார் என்பதை கண்டறிய இதுவே சந்தர்ப்பம்.

இந்த நாஸி ஆவணம் எப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்கள் வழியாக இங்கே நாடகக்காதல் என்னும் நச்சுக்கருத்தை உருவாக்கியது என நிரூபிக்கப்பட்ட பிறகும் அது ஏதோ ரகசியமாக நடந்த ஆய்வு என்று பாவலா காட்டுகிறார்கள். [இவர்கள் இதை உருவாக்கும் காலகட்டத்தில் நேரடியாகவே டாக்டர் ராமதாஸுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.]

இவர்கள் இவர்களின் கட்சியரசியலில் என்ன வேண்டுமென்றாலும் செய்துகொண்டு போகட்டும். இரு விஷயங்களில் இவர்களின் தலையீடு மிகமிக ஆபத்தானது. ஒன்று பண்பாட்டுச்செயல்பாடுகளில், இன்னொன்று இலக்கியத்தில்.

யாரோ வெளிநாட்டிலிருந்து பணம் கொடுக்கிறார்கள் என்று கிளம்பி தமிழகத்தின் தலித் இயக்கம், தலித்துக்களின் தன்மானம் ஆகியவற்றின் மேல் சேற்றை வாரிப்பூசிவிட்டு அதைப்பற்றி எந்தக்கவலையும் இல்லாமல், அதை நியாயப்படுத்திக்கொண்டு இருப்பது வெறும் அரசியல் அல்ல. அது பண்பாட்டுத்தளம், அது இலக்கியவாதி எதிர்வினையாற்றவேண்டிய தளம். அதன் விளைவுகளை இலக்கியவாதியால் பார்க்கமுடியும், கட்சியரசியல் கும்பல் அதை  புரிந்துகொள்ளாது

இலக்க்கியம் சமகால அரசியலுடன் பெரிய உரையாடலை நிகழ்த்த முடியாது. அதன் பார்வை ஒட்டுமொத்தமானது, நுண்மையானது. அதன் வெளிப்பாடு குறியீட்டுரீதியானது.  அதன் செயல்தளமே வேறு.

இவர்கள் இப்படி இவர்களுக்கு எவ்வகையிலும் சம்பந்தமில்லாத, இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாத, இலக்கிய உலகில் நுழைந்து படைப்புக்களை கட்டுடைக்கிறேன், படைப்பாளிகளின் ஃபாஸிஸத்தை நோண்டி எடுக்கிறேன் என்றெல்லாம் சொல்லி உருவாக்கும் கெடுபிடிகள் ஏற்படுத்தும் அழிவு சாதாரணமானது அல்ல.

இவர்களுக்குத் தெரிந்தது மிகமிக எளிமையான சமகாலக் கட்சி அரசியல்  மட்டுமே. அதைச் சார்ந்த அரசியல் நிலைபாடுகளும் சில்லறை அரசியல் சரிநிலைகளும் மட்டுமே இவர்களின் அளவுகோல். அதை ஒட்டி எழுதாத, அவர்களுடன் அடிமையாக அணிசேராத அத்தனை பேரையும் தாக்கி, அவமானப்படுத்தி, மிரட்டி, சொல்திரித்து அழிக்க முயல்கிறார்கள். அவர்களின் ஆக்கங்கள்மேல் இயல்பான வாசிப்பே நிகழாதபடிச் செய்கிறார்கள்.

இது படைப்பாளிகளை அச்சுறுத்துகிறது. அவர்களின் தன்னிச்சையான வெளிப்பாடுகளுக்குமேல் இவர்கள் ஒரு கண்காணிப்பு அதிகாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். எழுதும்போதே கையைப்பிடிக்கும், பின்னால் நின்று உற்றுபார்க்கும் அதிகாரம் இது. இது மிகப்பெரிய ஒரு தடை.  படைப்பாளிகள் இவர்களை அஞ்சி செய்யும் பாவலாக்களை எவரும் பார்க்கலாம்.

உண்மையில் ‘போடா’ என இவர்களிடம் சொல்லும் திமிர் கொண்ட என்னைப்போன்ற படைப்பாளிகள் சிலரே. இவர்களின் அபத்தமான அறிவுப்பாவனைகளும் கல்வித்துறைத் தகுதிகளும், கும்பல்சேர்க்கும் அதிகாரமும் மற்றவர்களை திகைக்க வைக்கும். இங்கே படைப்பாளிகள்  பலவகையிலும் உள்வாங்கியவர்கள், தனிமைகொண்டவர்கள். அவர்களின் படைப்பூக்கத்தையே இவர்கள் அழித்துவிடுவார்கள்.

இவர்களின் இந்த மூர்க்கமான கும்பல்தாக்குதல், வெறிகொண்ட திரிப்புவேலைகள் தொடக்கநிலை வாசகர்களை தரமான இலக்கியத்தில் இருந்து அகற்றி இவர்கள் உருவாக்கும், இவர்க்ள் சிபாரிசு செய்யும், நாலாந்தரப் பிரச்சார இலக்கியத்தை நோக்கி தள்ளுகிறது. நல்ல ஆக்கங்களையே இவர்கள் குறிவைத்து திரிப்பார்கள் என்பதனால் தொடக்கநிலை வாசகர்களுக்கு இவர்கள் மிகப்பெரிய தடைக்கற்கள்.

இவர்கள் செயற்கையாக உருவாக்கும் கருத்துநிலைகள், அபத்தமான மேற்கோள் குப்பைகள் இலக்கியச்சூழலையே சிந்திக்கவிடாமல் ஆக்குகின்றன. அந்தச் செயற்கைச் செல்வாக்கு கூட வெளியே இருந்து அளிக்கப்படும் நிதியால் நடைபெறுகிறது. நம் சிந்தனைகளையே எவரோ எங்கிருந்தோ குழப்புவதற்கு இவர்கள் கருவிகளாகிறார்கள்.

ஒன்று சொல்கிறேன், இலக்கியத்தின் மேல் எந்த வகையான கண்காணிப்பு அதிகாரத்தையும் எதன் பொருட்டும் நாம் அனுமதிக்கக் கூடாது. அது வலதோ இடதோ, முற்போக்கோ பிற்போக்கோ. அதை அனுமதித்தோம் என்றால் ராஜன் குறை போன்ற மொண்ணையர்கள் வந்து கலாச்சார கமிஸார்களாக அமர்ந்து சவுக்கைச் சொடுக்குவார்கள். இது அத்தனை எழுத்தாளர்களும் கருத்தில் கொள்ளவேண்டிய உண்மை, மறக்கவே கூடாத பாடம்.

நான்  எந்த அடிப்படையில் எம்.எஃப் ஹூசெய்ன், எம்.எம்.பஷீர் மீதான இந்துத்துவர்களின் தாக்குதலை எதிர்த்தேனோ, எப்படி பெருமாள் முருகன் மீதான சாதிய வன்முறையை எதிர்த்தேனோ, எப்படி மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்களை எதிர்த்தேனோ அதே அடிப்படையில்தான் ராஜன் குறை வகையறாக்களை எதிர்க்கிறேன். இவர்களும் அரசியல் சார்ந்த ஆதிக்கக்கும்பல்தான். என் நிலைபாடு இலக்கியத்தின் தனித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள, அதன்மீதான வன்முறையை தடுக்க முன்னிற்பது மட்டுமே.

ஆகவே இவர்களை அடையாளம் காட்டுகிறேன். மற்றபடி ஜெயரஞ்சன் அல்லது எம்.எஸ்.எஸ்.பாண்டியன் என்ன சொன்னால் எனக்கென்ன? எம்.எஸ்.எஸ்.பாண்டியனை எனக்கு நன்றாகவே தெரியும், நேரிலும் அறிமுகமுண்டு. இவர்களின் அன்னிய நிதியாதாரங்கள் பற்றி என்னால் பல பக்கங்கள் எழுதமுடியும். அது என் வேலையே அல்ல.

இவர்கள் இதனாலெல்லாம் ஓய மாட்டார்கள். இவர்களின் இலக்குகள் வேறு. ஆகவே கூச்சம் வெட்கம் ஏதும் இருக்காது. இந்த பிரச்சினை மறக்கப்படுவதற்காக காத்திருப்பார்கள். மீண்டும் ஏதாவது ஒற்றைவரியைப் பிடித்துக்கொண்டு ‘கட்டுடைக்க’ கிளம்புவார்கள். இப்போது மௌனமாக இருக்கும் குப்பைகள் எல்லாம் அந்தக்காற்றில் எழுந்து சுழன்று பறக்கும்.

ராஜன் குறை போன்றவர்கள் அடிப்படையிலேயே தன்னலமிகள், அதற்காக அறிவுச்சூழலை திரிக்கும் நாசகாரச் சக்திகள். நான் அதை தொடக்கநிலை வாசகனுக்குச் சுட்டிக்காட்ட மட்டுமே விரும்பினேன். அரசியல் கும்பலை வாயடைக்க வைக்க என்னால் இயலாது என நான் அறிவேன்.

இத்தனை தூரம் வெளிப்பட்ட பின்னரும் ஒருவன் அவரை புரிந்துகொள்ளவில்லை என்றால் அவன் மடையன் அல்லது இடைநிலைச் சாதிவெறியன். அவன் கட்சியரசியலில் போஸ்டர் ஒட்டவேண்டியவன், அவன் இலக்கியம் வாசிக்காமலிருப்பதே நல்லது.

எழுத்தாளனாக எனக்கு ராஜன் குறை ஒரு பொருட்டே அல்ல, அவரை அறிமுகம் செய்துகொண்டபின் இந்த முப்பதாண்டுகளில் ஒருபோதும் ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. அவர் எழுதிய ஒரு கட்டுரையைக்கூட முழுமையாக வாசித்ததில்லை. தனிப்பட்ட சந்திப்புகளில் கேலிசெய்து சிரித்திருப்பேன், அதை எல்லா எழுத்தாளர்களும் செய்திருக்கிறார்கள். இனிமேலும் அவரை ஒரு பொருட்டாக கொள்ளப்போவதுமில்லை.

ஜெ

***

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு? டி.தருமராஜ்

ராஜன் குறையின் மறுப்பல்லாத மறுப்பு- அரவிந்தன் கண்ணையன்
கருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்? – டி.தருமராஜ்
கதையின் கதை – இராவணன் அம்பேத்கர்

இக்கட்டுரையில் இருந்து 2002லிருந்து இன்று வரை 88 ஆவணங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. எங்கெங்கே மேற்கோள் காட்ப்பட்டிருகின்றன என்று தேடினால் பயங்கரமாக இருக்கிறது. இதே போல் ஒடுக்கப்பட்ட ஆண்களை குற்றத்தன்மை கொண்டவர்களாக சித்தரிக்கும் நிறைய நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறது. வட இந்திய கட்டுரைகள், சீனமொழி, அய்ரோப்பிய ஆய்வுகள், ஆப்பிரிக்க ஆய்வுகள் என்றெல்லாம் பரவி வருகிறது.

கதையின் கதை- ராவணன் அம்பேத்கர்

=======================================

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

பஷீரும் ராமாயணமும்

எம்.எஃப்.ஹுசெய்ன்

கமல்ஹாசன், மகாபாரதம், மதம்

பெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்

பெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…

முந்தைய கட்டுரைஅருகே கடல், முதலாமன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-31 வரம் [சிறுகதை]