ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
‘ஜெயமோகனின் அரசியல்’ என்ற தலைப்பில் ராஜன்குறை உயிர்மையில் கட்டுரை எழுதியிருக்கிறார். ஜெயமோகன் தலித் தரப்பில் ராஜன்குறையின் கட்டுரையை முன் வைத்து கேட்கப்பட்ட கேள்விகளை ‘ராஜன்குறை யார்’ என்ற பதிவில் வெளியிட்டதற்கான எதிர்வினை இந்த உயிர்மை கட்டுரை.
நிற்க. ராஜனின் கட்டுரைக்கு ஆட்சேபம் தலித் தரப்பில் இருந்து வந்தது, முக்கியமாக ஏ.பி.ராஜசேகரனின் குறிப்பில் இருந்து ஆரம்பித்தது. ராஜன் பதில் சொல்ல கடமைப்பட்டது தலித் தரப்புக்குத் தான். ஆனால் மிக சவுகரியமாக அவரும் அவரது அடிப்பொடிகளும் ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயமோகன் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதுவா பிரச்சினை? இல்லை. ராஜன், ஜெயரஞ்சன், ஆனந்தி ஆகியோரின் எழுத்து தான் விவாதப் பொருள்.
ஒன்றிரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். (ராஜசேகரன் சுட்டியதும் தான்). கட்டுரையில் ஓரிடத்தில் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் குறைந்தப் பின் விவசாயம் சாராத தொழில்களில் நிரந்தர்மின்மை தலித் ஆண்களின் வேல வாய்ப்புகளும் நிரந்தரமில்லாததாக்கி விட்டது எனப்படுகிறது. சரியே. அடுத்த பத்தியிலேயே தலித் ஆண்களின் வேலை நிரந்தரமின்மைக்கு அவர்களால் தொழில் நிறுவன வேலைக்கான கட்டுக் கோப்பில் வேலைச் செய்ய தெரியாமை (“inability to fit into the work discipline”). அந்த வரிகளில் சாதிய தடித்தனத்தை ஒரு நிமிடம் ஒதுக்குவோம். ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிற மகானுபவர்கள் ஏதேனும் புள்ளி விவரம் அளிக்கிறார்களா, கம்பெனிகளில் ஒழுங்கு நடவடிக்கையின் விவரங்கள் சொல்லப்பட்டனவா? எந்த சுக்கும் இல்லை. பாட்டி வடை சுட்ட மாதிரி கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்கள்.
சும்மா கண் முன்னே தென்பட்டவர்கள் சொன்னதெல்லாம் வேத வாக்காக எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தலித் பெண் சொன்னாராம் தலித் ஆண்கள் எல்லாம் மேல் சாதிப் பெண்களையே குறி வைக்கிறார்கள் என்று. ஆய்வாளர் என்பவர் எதிர் தரப்பையும் கேட்டிருக்க வேண்டும், மேலும் கலப்புத் திருமணங்கள் பற்றி ஏதேனும் புள்ளி விவரம் இருக்க வேண்டும். இது எதுவும் இல்லை.
இன்னொரு இடத்தில் தலித் ஆண் ஒருவரின் நண்பன் பேருந்து நிலையத்தில் நிற்கும் உயர் ஜாதி பெண்ணை காண்பித்து ‘கலாய்ச்சு அனுப்பு’ என்கிறாராம், அந்த ஆணும் ‘கலாய்த்தாராம்’. இங்கே ‘கலாய்ச்சு அனுப்பு’ என்பதை ஆசிரியர்கள் ‘send her dishivelled’ என்று மொழி பெயர்க்கிறார்கள். அடக் கருமமே? இவர்களுக்கும் ஆங்கிலமும் தெரியவில்லை. ‘send her dishevled’ என்பது “அலங்கோலப்படுத்தி அனுப்பு’ என்பது. அதுவா கலாய்ப்பது? பெண்ணை கலாய்ப்பது எல்லா சமூகத்திலும் நடப்பது தானே என்றெல்லாம் கேட்கப்படாது.
கேள்விகள் பிறந்தது தலித் தரப்பில். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஜெயமோகனை வசைப்பாடி எதிர்வினை. “கல்விப்புல ஆய்வுகளில் இதுபோன்ற மறுப்புகளும், மாற்றுக் கோணங்களும் முக்கியமானவை” என்கிறார் ராஜன். மாற்றுக் கோணம் என்பது வேறு சாதியக் காழ்ப்பு என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. “என்னைப் பொறுத்தவரை ஆய்வுகளில் அறுதி உண்மைகளை காண்பது என்பது சாத்தியமல்ல” என்றும் சொல்கிறார் ராஜன். ‘அறுதி உண்மை’ இருக்க வேண்டாம் ஆனால் உண்மை இருக்க வேண்டுமே?
“மேலும் entice என்ற வார்த்தையை தவறான பொருளை குறிப்பதாகக் கூறுகிறார் (ஜெயமோகன்). கவர்வது, வசீகரிப்பது, மயக்குவது எல்லாம் காதலில் ஒரு அங்கம்தான” என்கிறார் ராஜன். உண்மையிலேயே இவருக்கு ஆங்கிலம் கொஞ்சம் வாங்கல் தான். ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் எதிர்மறை உணர்வுடன் கூடியது என்பார்கள். ‘Entice’ has a negative connotation. அதைத் தான் ஜெயமோகன் சுட்டுகிறார். ராஜன் சால்ஜாப்பு சொல்கிறார்.
ஆங்கிலத்தை வைத்து பயமுறுத்துவதை ஒரு டெக்னிக்காகவே வைத்திருக்கிறார்கள்,குறிப்பாக ஆய்வுக் கட்டுரை எழுதுபவர்கள். ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தில் ராஜன் வாசித்த கட்டுரையின் தலைப்பு இது, “Touching Untouchability: Dalit Situations and Theoretical Horizons” –என்ன எழவுய்யா அது?
“அந்த ஒரு EPW கட்டுரையை சுட்டிக்காட்டிவிட்டதால், அவர் எழுத்தைக் குறித்த என்னுடைய விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டதாக ஜெயமோகன் நினைக்கலாம். இது ஒரு திசைதிருப்பல் என்றுதான் நான் கருதுகிறேன்.” — இங்கே திசைத் திருப்பல் செய்திருப்பவர் ராஜன் தான். முதன்மையாக குற்றச்சாச்சு வைத்த தலித் தரப்பை மற்ரி மூச்சுக் கூட விடாமல் அர்ஜுனனை விட உக்கிரமாக குறி தப்பாமல் ஜெயமோகனை மட்டும் குறி வைக்கிறார்.
அன்னார் போதாக் குறைக்கு முடிக்கும் போது முத்தாய்ப்பாக தலித் இளைஞர்கள் போதாமைகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக கைக்கொள்ளும் ஆண்மைய வன்முறையை ஆப்பிரிக்க-அமெரிக்கர்களிடையே காணலாம் என்கிறார். இன்று அமெரிக்கா இருக்கும் நிலையில் இந்தக் கட்டுரையை ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்துக்கு (அவர் முன்பு கட்டுரை வாசித்த இடம்) அனுப்பினால் மிகச் சூடான எதிர்வினை கிடைக்கும்.
[முகநூலில் இருந்து]