சென்ற மார்ச் பத்தாம் தேதி பெங்களூரில் இருந்து தினேஷ் நல்லசிவம் வீட்டுக்கு வந்திருந்தார். அமைதியான, கூச்ச சுபாவமுள்ள இளைஞர். என் தளத்தில் நிறைய நல்ல கடிதங்கள் எழுதியிருக்கிறார். [அவற்றை நானே எழுதிக்கொள்கிறேன் என்று ஒரு நிபுணர்தரப்பு இணையத்தில் உண்டு] பெங்களூரில் இருந்து என்னென்னவோ கொண்டுவந்திருந்தார். ஒன்று டிவிஎஸ் கீபோர்டு. அதில்தான் இதை எழுதுகிறேன். பெரியது, அருமையான அனுபவம் இதில் எழுதுவது. எனக்கு வழக்கமாக ஆறுமாசத்துக்கு ஒரு கீபோர்டு தேவை. இது எப்படி என்று பார்க்கலாம்.
நானும் தினேஷும் பதினொன்றாம் தேதி மதியம் இரண்டுமணிக்குக் கிளம்பி கோழிக்கோடு சென்றோம். கோழிக்கோடுக்கு டிக்கெட் போடச்சொன்னதை கூர்ந்து அவதானித்த அரங்கசாமியின் அலுவலகத்தில் எர்ணாகுளத்துக்கு டிக்கெட் போட்டுவிட்டார்கள். எல்லாம் கேரளம்தானே என்ற நினைப்பு. எர்ணாகுளம் வரை பேசிக்கொண்டே சென்றோம். எர்ணாகுளத்தில் இறங்கி பஸ்பிடித்து கோழிக்கோடு. நள்ளிரவு இரண்டரை மணிக்கு. ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன் அங்கேவந்து மாத்ருபூமி நிர்வாகம் போட்ட அளகாபுரி ஓட்டல் அறையில் தங்கியிருந்தார். நான் சென்றதுமே தூங்கிவிட்டேன்
காலையில் ஆனந்த் உன்னத் பெங்களூரில் இருந்து வந்தார். காலையில் நான் ஒன்பது மணிக்குத்தான் தூங்கி எழுந்தேன். ஆனந்த உன்னத் வந்த கொஞ்ச நேரத்திலேயே சென்னையில் இருந்து ஷாஜியும் வந்துவிட்டார். ஏற்கனவே சென்னையில் இருந்து கூப்பிட்டு, வரமுயல்வதாகச் சொன்னாரென்றாலும் அவர் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அனைவருமாகக் கிளம்பி தளி கோயில் முன்னால் இருந்த வினாயகா ஓட்டலில் சாப்பிடச்சென்றோம்.
தொடர்ந்து கல்பற்றா நாராயணன் டிபி ராஜீவன் ஆகியோர் வந்தார்கள். பேசிக்கொண்டிருந்தோம். மதியம் சாப்பிட மூன்றுமணி. கொஞ்சநேரம் தூங்கி எழுந்தபோது அறைமுழுக்க ஆட்கள். புனத்தில் இக்கா வந்து ஆரத்தழுவிக்கொண்டார். அவரது நண்பரும் எழுத்தாளருமான வி ஆர் சுதீஷ் வந்திருந்தார். கவிஞர் வீரான்குட்டி வந்தார். கவிஞர் ஒ பி சுரேஷ், இதழாளர்கள் என நல்ல கூட்டம். குளித்துவிட்டு வந்தேன். எல்லாருமாக பிரஸ்கிளப் அரங்குக்குச் சென்றோம்.
அன்று இரு நூல்கள் வெளியீட்டுவிழா. சமகால கலையுலகம் பற்றி கல்பற்றா நாராயணன் எழுதிய தல்ஸமயம் என்ற நாவல். நான் எழுதிய சுயசரிதைக்கட்டுரைகளின் தொகுதியான ‘உறவிடங்ஙள்’. இரண்டும் மாத்ருபூமி பதிப்பக வெளியீடுகளாக வந்தன. மாத்ருபூமி பிரசுரம் என்பது கேரளத்தின் மிகவும் கௌரவமான நூல்வெளியீட்டகம். நூறுவருடப் பாரம்பரியம் கொண்டது அது.
இருநூல்களையுமே புனத்தில் வெளியிட்டு உரையாற்றினார். விழாவை டி பி ராஜீவன் தலைமை ஏற்று நடத்தினார். ராஜீவன் மலையாளக் கவிஞர். அவரது முதல் நாவல் ‘பாலெரி மாணிக்கம்’ சமீபத்தில் மம்மூட்டி நடிக்க சினிமாவாக வெளிவந்தது. இப்போது ஃபேபர் ஆண்ட் ஃபேபர் வெளியீடாக ஆங்கிலத்தில் வரவுள்ளது. வி ஆர் சுதீஷும் ஓ பி சுரேஷும் வீரான்குட்டியும் பேசினார்கள். நான் ’வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்’ என்றபேரில் உரையாற்றினேன். கல்பற்றா என்னைப்பற்றி சிறிய உரை ஒன்றை ஆற்றினார்
அன்றிரவு தூங்க மூன்றுமணி ஆகியது. மறுநாள் பதினொரு மணிக்கு நானும் நண்பர்களும் கல்பற்றா நாராயணனின் வீட்டுக்கு சென்றோம். லாரி பேக்கர் பாணியில் அமைந்த அழகான வீடு. ஆனால் பெரியது. ஒரு நாடக அரங்கு போன்ற வீடு என்று தோன்றியது. அங்கே பெரிய மதிய விருந்து.
மாலை நான்கு மணிக்கு நானும் கிருஷ்ணனும் குருவாயூர் கிளம்பினோம். இருவரும் ரயில்நிலையம் வெளியே அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். கிருஷ்ணன் என்னை குருவாயூர் ரயிலில் ஏற்றிவிட்டார். தூங்கிக்கொண்டே திரும்பினேன். பெட்டி நிறைய உறவிடங்ஙள் பிரதிகளுடன் .