தமிழில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராமானுஜரைப் பின்பற்றி ஒரு வைஷ்ணவ சம்பிரதாயம் உருவாகியது. அது இன்றும் உயிர்ப்புடன் உள்ள ஒரு மரபு. பல பேரிலக்கியங்களையும் உரைநூல்களையும் அது உருவாக்கியது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் அவர்களுக்கு என்று ஒரு பரிபாஷை உண்டு. அதை வைஷ்ணவ பரிபாஷை என்பார்கள். பெருமாளுடனும், ராமானுஜருடனும் தொடர்புள்ள எல்லாவற்றையும் புனிதமாக ஆக்கி திரு என்றும் என்றும் சேர்த்துச் சொல்வார்கள். அதைப்பற்றி நிறைய வேடிக்கைக் கதைகள் உண்டு.
ஒருகதை. வைணவ மடாதிபதி நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமிகளின் ஒரு பிரதிநிதி அந்தக்காலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருப்பார். மொட்டைமீது குடுமியும் நாமமும் உள்ள அய்யங்கார். அவர் ஒருநாள் குளிக்கப்போன இடத்தில் குளத்தில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டுவிட்டது.செய்தியை எழுபது கிமீ தூரத்தில் உள்ள வானமாமலை மடத்துக்கு சொல்லி அனுப்பவேண்டும். ஓடிச்சென்று செய்திசொல்லும் குப்பனை அழைத்தார்கள். செய்தியை அவனிடம் விரிவாகச்சொல்லி மனப்பாடம் செய்யவைத்தார்கள்.
செய்தி இதுதான் பழையகதைதான். ‘ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த தாத்தாச்சாரியர் திருக்குளத்தில் திருப்பாதம் வழுக்கி விழுந்து திருமண்டையில் திருக்காயம் ஏற்பட்டுவிட்டது. இப்போது திருப்படுக்கையில் திருப்பள்ளிகொண்டிருக்கிறார்’. குப்பன் எழுபதுகிலோமீட்டரை ஒரே நாளில் ஓடிவந்து அவன் நினைவிலிருக்கும் செய்தியை சொன்னான் ‘மொட்டைதாத்தன் குட்டையில் விழுந்தான்’
பலசமயம் நம்முடைய படைப்புகளைப்பற்றி எங்காவது விமர்சகர்கள் குறிப்பிட்டிருப்பதைப்பார்க்கும்போது இந்த குப்பனின் செய்தியை கேட்டு வானமாமலை ஜீயர் பெற்ற துணுக்குறல்தான் ஏற்படுகிறது. எந்த இலக்கிய ஆக்கத்தையையும் இவர்கள் ’ஆகமொத்தம் இவ்வளவுதான்’ என்று சுருக்கி ஒடித்து மடித்து தங்கள் பர்ஸுக்குள் திணித்து வைத்துக்கொள்கிறார்கள்.
காதலி லைலாவை சாண் அளவுக்கு டப்பாவில் வைத்திருக்கும் சிந்துபாதை போல. அவளை மீண்டும் பெண்ணாக ஆக்கும் வல்லமை கொண்ட மந்திரவாதியின் ஏழுகடல்களுக்கும் ஏழு மலைகளுக்கும் அப்பால் ஒரு மர்மத்தீவில் இருக்கிறான். அங்கே போய்ச்சேரவே முடிவதில்லை.
இலக்கியம் தேங்கிவிட்டிருக்கிறது என்று அவ்வப்போது குரல்கள் எழும். சிறுகதை செத்துவிட்டது, நாவல் நொறுங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லப்படும். என் பார்வையில் நம் காலகட்டத்தில் மிகமிக திரிபு பட்டிருப்பது வாசிப்புதான். இதைப்பற்றி நாம் பேசுவதில்லை. ஏனென்றால் வாசகன் பெரும்பான்மை அல்லவா? பொதுமக்கள் என்ற சொல்லைப்போலவே அந்தச் சொல்லும் புனிதமானது. வாசகனை குறை சொல்வதென்பது ஜனநாயகத்தையே குறைசொல்வதல்லவா?
சென்ற கால்நூற்றாண்டில் வாசிப்பின் சுதந்திரம், வாசிப்பின் அரசியல் என்றெல்லாம் சொல்லிச்சொல்லி மெதுவாக உகந்த வாசிப்பு, முழுமையான வாசிப்பு என்பதையே இல்லாமலாக்கி வைத்திருக்கிறார்கள். ‘சஹ்ருதயன்’ என்பவனை எங்கோ வழியில் தற்செயலாக கண்டுபிடித்தால்தான் உண்டு. அவனும் ஏதோ தப்பு செய்து கையும் களவுமாக மாட்டிக்கொண்டவனைப்போல ‘மன்னிக்கவேணும் சார், நான் ஒரு வாசகன் மட்டும்தான்’ என்று சொல்கிறான். ‘பரவாயில்லை’ என்று சொல்லி அவனை நாம் தேற்ற வேண்டியிருக்கிறது.
உண்மையில் இன்று எந்த மொழிச்சூழலில் குறைவாக இலக்கிய விமர்சனம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அங்கே நல்ல வாசிப்பு இருக்கிறது. விமர்சனம் என்பது இன்று வாசிப்புக்கு எதிரான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இலக்கியப்படைப்பை தன் நோக்கில் சிதைப்பது மட்டுமே வாசிப்பது என்று ஆக்கிவிட்டிருக்கிறார்கள். எங்கே நிற்கிறார்களோ அங்கிருந்து ஒரு அடிகூட முன்னெடுத்து வைக்காதவர்களாக இருப்பதே விமர்சகனின் இயல்பு என்று சொல்லி விமர்சகனே முன்னுதாரணமான வாசகன் என்று நிறுவிவிட்டிருக்கிறார்கள். ஆகவே அது இலக்கியத்திற்கு எதிரான செயல்பாடாக ஆகிவிட்டிருக்கிறது.
இன்று கேரளச் சூழலில் வெளிவரும் எந்த விமர்சனத்தையும் எடுத்துப்பாருங்கள். அவை இலக்கிய ஆக்கத்தை முடிந்தவரை எளிமைப்படுத்தக்கூடியவையாக இருக்கும். வாழ்க்கையின் பெரும்பரப்பில் இருந்து ஒரு மனிதனால் உணர்வுகளாக சித்திரங்களாக தரிசனங்களாக அள்ளி எடுக்கப்பட்ட ஒரு துளி வாழ்க்கைதான் இலக்கியம். அது செறிவுபடுத்தப்பட்ட வாழ்க்கை. அது முன்வைப்பது உண்மையை அல்ல செறிவுண்மையை. அதை நொறுக்கி இறுக்கி ஒரு ஒற்றைவரியாக ஆக்கி விடுகிறார்கள். கவனியுங்கள் சென்ற இருபதாண்டுகளில் கேரளத்தில் வந்த எல்லா முக்கிய ஆக்கங்களும் அப்படி ஒற்றை வரியாக ஆக்கப்பட்டிருக்கும்
இலக்கியவாசிப்பின் எல்லா நுட்பத்தையும் களைந்து அதை சக்கையாக ஆக்கக்கூடியவையாக இருக்கின்றன விமர்சனங்கள். அந்த பொன் விளைந்த வயலை அறுத்து களத்திலிட்டு மிதித்து கூளமாக்கி நெல்லை விலக்கி வைக்கோலை எடுத்து வெயிலில் காயச்செய்து வைக்கோல்போராக ஆக்கி கூட்டி வைக்கிறார்கள். நம் வாசகர்கள் அதைத்தான் அதை நாளெல்லாம் மென்றுகொண்டிருக்கிறார்கள்.
வாசிப்பின் பாவனைகள்
ஓர் எழுத்தாளனாக நீங்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய கொடுமை என்ன என்று எழுத்தாளர்களிடம் கேட்டிருக்கிறேன். போலி வாசகர்களைச் சந்திப்பதுதான் என்று எல்லாருமே சொல்வார்கள். அந்த வாசகர்கள் விஐபிக்கள் என்றால் கொடுமை பலமடங்காகிறது.சின்னவயதில் பள்ளிக்கூடத்தில் அடிவாங்குவது போல. வலி தாளாமல் கையை இழுத்தால் இன்னும் அடி விழும்.
என்னென்ன வகையான வாசகர் குரல்கள். பொதுவாக மலையாளிகள் ஒரு கதையை வாசித்தால் ‘கதை கண்டிருந்நு’ [கதையை பார்த்தேன்] என்பார்கள். இது என்ன சினிமாவா, பார்ப்பதற்கு. இது வாசிப்பதற்குரியதல்லவா? இது ஓர் இலக்கியப்படைப்பு. வாசித்து சிந்திப்பதற்குரியது.
இன்னொருசாரார் கருத்தே சொல்வார்கள். ‘குழப்பமில்ல’ என்ன குழப்பம்? லோகிததாஸ் இப்படிச் சொல்பவர்களிடம் கேட்பார் ‘சரி நீங்கள் ,என்ன குழப்பத்தை எதிர்பார்த்தீர்கள்?’ அபத்தமான ஏதாவது வார்த்தைகள் இதே மாதிரி.
மூன்றாவது சாரார் உண்டு ‘மூன்றாமுலக யதார்த்தத்தின் பின்னணியில் கருத்தியல் ஊடுருவல்களின் சாயல்களைக்கொண்ட கதைகள் உருவாக்கும் ஈரடித்தல்களில் இருந்து உருவாகும் இவ்வகையான அக இருத்தியல் எதிர்வினைகள்தான் நமக்கு தேவை’. இதற்கு முதல் ஆளே பரவாயில்லை.
வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம் என்று ஒரு நூல் எழுதும் எண்ணம் உள்ளது. [நாட்யம் என்றால் மலையாளத்தில் பாவனை என்றும் பொருளுண்டு] வாசிப்பின் கைமுத்திரைகள், அடவுகள், கால்சுவடுகள், வாய்த்தாரிகள், சொல்லியாட்டம், பதிஞ்ஞாட்டம் எல்லாவற்றையும் அதில் விவரிக்கப்போகிறேன். கிட்டத்தட்ட கதகளி இலக்கணம்.
1. பச்சை வேஷம்
சாத்வீகர்கள். எழுத்தாளனைப் பாராட்ட அவனை வாசிக்கவேண்டியதில்லை என்ற கொள்கை கொண்டவர்கள். எல்லாம் நல்ல எழுத்துத்தான். பஷீரும் எழுத்தாளர். போஞ்ஞக்கர ராபியும் எழுத்தாளர். இருவருக்கும் என்ன வேறுபாடு என்றால் ’ஒருவர் கொஞ்சம் வழுக்கை இல்லையா?’ என்பார்கள். பார்த்ததுமே கனிவாக நம் எழுத்தைப்பற்றி நல்லதாக நான்கு வார்த்தை சொல்வார்கள்.
2 கத்தி வேஷம்
முற்றிய ரஜோகுணம். இலக்கியப்படைப்பு கையில் கிடைத்ததுமே விறையலும் துள்ளலுமாக சொல்லியாடி கிழித்து குடல்மாலையை உருவி போட்டுவிடுவார்கள். கைகளில் அதற்காக நல்ல எவர்சில்வரால் ஆன கோட்பாட்டு நகங்கள் உண்டு. நரசிம்ம அவதாரம்தான். மேற்குக்கும் கிழக்குக்கும் நடுவே வாசல்படியில் அந்தி நேரத்தில்தான் கிரியை நிகழும். பெரும்பாலும் பேராசிரியர்கள். தெரிதா பூக்கோ அதிகாரம் கருத்தியல் என்று எதையெதையோ பாடி அன்றைய மனோதர்மப்படி ஆடுவார்கள்.
3 கரிவேஷம்
அணியறையில் இருந்தே கூவென்று கத்திக்கொண்டு மேடைக்கு ஓடி வருகிறார்கள். சுத்த தமோ குணம். படைப்பைச்சுற்றி வந்து கூச்சலிட்டு மண்ணள்ளிப்போட்டு எம்பிக்குதிக்கிறார்கள். அரசியல் சொல்லியாட்டம்தான் இவர்களுடைய வழிமுறை.
இவர்களைத் தாண்டி எங்கோ நல்ல வாசகன் இருந்துகொண்டிருக்கிறான். அவன் கிட்டத்தட்ட கடவுள். தேடினால் கிடைக்கமாட்டான். விவரிக்கமுடியாதவன். ஆனால் எங்கோ இருந்துகொண்டிருக்கிறான். எல்லாவற்றையும் அவன் தீர்மானிக்கிறான். கடைசியில் அவன் நினைத்ததே நடக்கிறது. சுந்தரிகளும் சுந்தரன்மாரும் முதல் ஸ்மாரகசிலைகள் வரையிலான படைப்புகளை நம் முன் நிறுவியது அவன் அல்லவா?
நுண்வாசிப்பு
இன்றைய வாசிப்பின் சில சிக்கல்களைப்பற்றிச் சொல்ல வருகிறேன். முதல் பிழையாக நான் காண்பது, ஒரு படைப்பை எடுத்த எடுப்பிலேயே ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வையை. இதை ஒரு macro reading என்று நான் சொல்வேன். ஓர் இலக்கிய ஆக்கத்தை நம்மிடமிருந்து மறைக்க இதைவிடச்சிறந்த வழி ஒன்றும் இல்லை.
சிறுவயதில் என் அப்பா ஒரு போட்டியில் கலந்துகொண்டார். நூறு பழங்கள் கொண்ட ஒருகுலை மட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடவேண்டும். கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மிக இனிமையான மணமான வாழைப்பழம் அது. பழங்களில் அதுதான் மிகச்சிறந்தது, மிகவும் விலை உயர்ந்தது. அதில் நாலைந்து பழம்சாப்பிட்டாலே திகட்டும்.
அப்பா ஒரு பாலராமபுரம் ஈரிழை துவர்த்து வாங்கினார். அதை விரித்தார். அதில் நூறு வாழைப்பழத்தையும் உரித்து போட்டார். துண்டை பிடித்து முறுக்கி முறுக்கி இறுக்கி பழத்தை ஒரு கூழ் உருண்டையாக ஆக்கினார். கடையில் ஒரு ஊறுகாய் பாக்கெட் வாங்கிக்கொண்டார். அதை தொட்டுக்கொண்டு உருட்டி உருட்டி சோறு விழுங்குவது போல மொத்த பழங்களையும் விழுங்கி விட்டார். பரிசை வென்றார். ஓடிப்போய் அருகே ஒரு ஓடையில் மொத்தத்தையும் வாந்தி எடுத்தார்
இன்று பெரும்பாலும் நமக்குக் கிடைக்கும் உடனடி வாசிப்பு இதுதான். அந்த வாந்திதான் விமர்சனமாக நம் இதழ்களின் நிறைந்து கிடக்கிறது.
எந்த இலக்கியப்படைப்பும் அதன் நுண்மையினால்தான் முதலில் இலக்கியத்தகுதி பெறுகிறது. அதன் ஒட்டுமொத்தமும் எப்படி இருந்தாலும் அது இலக்கியமா இல்லையா என்பது முழுக்க முழுக்க நுண்கூறுகளினாலேயே தீர்மானமாகிறது. மனிதர்களைச் சித்தரிப்பதிலும் நிகழ்வுகளை விவரிப்பதிலும் தெரியும் வாழ்க்கை மீதான அவதானிப்புகள்தான் எந்த எழுத்தையும் இலக்கியமாக ஆக்கும் முதல் அம்சம். இன்றும் கேரளத்தின் முன்னோடி எழுத்தாளர்களை பெரும்படைப்பாளிகளாக நிலைநிறுத்துவது அதுதான்.
நான் தகழியின் ஏணிப்படிகள் நாவலை இங்கே நினைவுகூர்கிறேன். கேசவபிள்ளைக்கும் இருபெண்களுடன் உறவிருக்கிறது. அந்த உறவின் நுட்பங்களை தகழி கொஞ்சம்கூட மிகை இல்லாமல் மிக சாதாரணமான தொனியில் ஒரு பத்திரம் எழுதுபவன் தகவல்களை முன்வைப்பதுபோல சொல்லிச்செல்லும் விதம் என்னை இன்று பிரமிக்கசெய்கிறது. தங்கம்மாவிற்கும் கார்த்யாயினிக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகத்துல்லியமானது. ஆணின் பிடியில் இருந்து எப்போதும் மீறி எழும் வேட்கை கொண்ட பெண் தங்கம்மா. ஆணுக்குள் தன்னை ஒளித்துக்கொள்ளும் பெண் கார்த்யாயினி.
இனிமேல் வாசிக்கும்போது கவனியுங்கள். கேசவபிள்ளை தங்கம்மாவில் கார்த்யாயினியை எதிர்பார்க்கிறார். கார்த்யாயினியில் தங்கம்மாவை எதிர்பார்க்கிறார். வேட்கையை எதிர்கொள்ளும்போது அவர் அதை வெல்ல எண்ணுகிறார். அடக்கத்தை கைப்பற்றும்போது அதில் வேட்கையை எழுப்ப ஆசைப்படுகிறார். இரண்டையுமே அவர் புரிந்துகொள்ளவில்லை.
இலக்கிய ஆக்கத்தின் அழகுகளில் காட்சிசார்ந்த நுட்பங்களுக்கு மிக முக்கியமான பங்களிப்புண்டு. காட்சி ஊடகத்தின் நுட்பத்திற்கும் இலக்கியம் காட்டும் நுட்பத்திற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இங்கே காட்சியை சந்திப்பது மொழி. ஃபிலிம்மின் ரசாயனத்தின் மீது ஒளி பதிந்து உருவாகும் பிம்பம் போல மொழியின் படலம் மீது காட்சி படிந்து உருவாக்கும் மெல்லிய நிறபேதங்கள் இலக்கியத்தில் அந்த காட்சியை நிறுவுகின்றன.
ஓ வி விஜயனின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றாகிய யுத்தத்தின்றே ஆரம்பம் வாசித்துக்கொண்டிருக்கும்போது நான் ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு வீட்டுக்கு முன்னால் நின்ற ’துயரமான எருமைகள் திரும்பிப்பார்த்தன’ [விஷாதவானாய போத்துக்கள் திரிஞ்ஞு நோக்கி] எருமையின் கொம்புகளின் அமைப்பு காரணமாக அது சற்றே சாய்வாகத்தான் திரும்ப முடியும். தலையை தாழ்த்தினால் கண்ணை தூக்க வேண்டியிருக்கும். அதுதான் துக்கம். ஆனால் அந்த வரி எருமையை அகச்சித்திரமாக கண்முன் நிறுத்திவிடுகிறது. ஒரு புகைப்படக்கருவி இந்த நுட்பத்தை பதிவுசெய்யாது.
சிறுவயதில் எனக்கு கதகளியில் மிகமிகப்பிடித்ததே திரைநோட்டம்தான். செம்பட்டுத்திரைச்சீலை குத்துவிளக்கின் ஒளியில் நலுங்குவதை தாளமுடியாத மனக்கிளர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த திரைக்கு அப்பால் யார்? சுட்டி? கரி? பச்சை? எந்தத் தேவன்? எந்த அசுரன்? கிருஷ்ணனா? நரகாசுரனா? நிழல்கள் ஊடுருவி வருகின்றன. கைபட்டு இடைபட்டு அசைவுகள் புடைத்து மறைகின்றன. சதங்கை ஒலிக்கிறது. கைவளைகள் கிலுங்குகின்றன.
இலக்கிய ஆக்கத்தின் மொழி அந்த திரைச்சீலை போல. அது காட்டுவதும் மறைப்பதும் ஆகும். அதனூடாக நமக்கு வருவதை விட அதை மீறி வருபவைதான் அதிகம். கலைப்படைப்பின் மொழி முடிவில்லாத கற்பனைச்சாத்தியங்களை அளித்துக்கொண்டு நலுங்கிக்கொண்டே இருக்கிறது.
ஒரு கூட்டத்தில் யூ ஆர் அனந்தமூர்த்தி சொன்னார்.’ We have to use and abuse language to create’ மொழியை எங்கும் கொண்டு செல்லக்கூடியவன்தான் கலைஞன். வி கெ என் ஒரு கதையில் எழுதினார், சாத்தன்ஸ் சாலையோரத்தில் ஒரு பீடிக்கனலுக்கு அப்பால் அமர்ந்து மலம்கழித்தான் [ சாத்தன்ஸ் வழிவக்கத்து ஒரு பீடிக்கொள்ளிக்கு அப்புறத்து குத்தியிருந்ந்து வெளிக்கிறங்ஙி ] ஏனென்றால் கதைசொல்லியும் வாசகனும் சாலையில் நிற்கிறார்கள்!
நான் ஒருமுறை ஒரு உணவகத்தில் சாப்பிட்டேன். அந்த உணவகம் மூங்கிலால் ஆனது. நாற்காலிகள் மூங்கில். தட்டு மூங்கில். ஸ்பூன்கள் மூங்கில். சாப்பிடும் எல்லா உணவுகளும் மூங்கில்தான். The Bamboo’ என்று அதற்கு பெயர். அதே போல இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக்கமும் எல்லாம் அதன் மொழிதான்.
இலக்கியப்படைப்பின் உணர்ச்சிகள், காட்சிகள், தரிசனங்கள் எல்லாமே அதன் தனி மொழியில்தான் உள்ளன. மொழிதான் இலக்கிய ஆக்கம். ஒரு குறிப்பிட்டவகையில் ஒன்றைச் சொல்வதன்மூலம்தான் ஒரு தரிசனத்தை முன்வைக்கிறது. ஒரு மொழியனுபவமாக ஆகாத எழுத்து இலக்கிய அனுபவமாக ஆகவில்லை என்றே பொருள்.
ஓர் இலக்கிய ஆக்கத்தில் உள்ள தரிசனம் எதுவோ அது அந்த படைப்பின் சிறப்பான மொழியமைப்பில் எங்கும் எல்லா வரிகளிலும் ஏதோ ஒரு வகையில் ஒளிவிட்டுக்கொண்டே இருக்கும். கல்பற்றா நாராயணனின் நாவலில் ஒரு வரி. கணவன் நடக்கச்செல்கிறான். அந்நேரத்தில் மனைவி இறந்துவிடுகிறாள். அவன் வழக்கமாக வருவதை விட இரண்டு மணிநேரம் தாமதமாக திரும்பி வந்தான். ‘ஆகவே அவள் உள்ள உலகில் மேலும் இரண்டுமணிநேரம் வாழ அவனால் முடிந்தது’ அந்த வரி அளிக்கும் மனத்தூண்டல் evocation தான் அந்நாவலின் தரிசனமாக மொத்த நாவலிலும் விரவி ஒளி விடுகிறது.
எந்த ஒரு இலக்கிய ஆக்கத்தையும் அதன் நுண்மைகளை தொட்டறியும் நுண்வாசிப்பு [ micro reading] மூலமேமுதலில் அணுகவேண்டும். முதலில் தொட்டுப்பார்த்து அதற்கு உயிருள்ளதா இல்லை மண்ணா என்று தெரிந்துகொள்வது போலத்தான் இது. அதன் அத்தனை விரிவாக்கங்களும் அதன் பின்னால் வருவனவே.
இன்றைய வாசிப்பில் மிகமிகக் குறைவாக நிகழ்வது இந்த நுண்வாசிப்புதான். ஆகவேதான் தன் அகம் புரிந்துகொள்ளப்படவில்லை என்ற பெரும் துயரத்தை எழுத்தாளன் அடைகிறான். ஒரு படைப்பாளியிடம் சென்று ‘உங்கள் படைப்பு மூன்றாம் உலக மக்களின் அக நெருக்கடிகளுக்குள் சென்று புதிய சாத்தியக்கூறுகளைக் காட்டுகிறது’ என்று சொல்லுங்கள். ‘அப்படியா?’ என்பான் தர்மசங்கடத்துடன். அவன் படைப்பில் உள்ள ஒரு சிறு நுட்பத்தை சுட்டிக்காட்டுங்கள், அவன் முகம் மலர்வான்
ஏனென்றால் நுட்பத்தில்தான் படைப்பூக்கம் உள்ளது. அது கடவுளே ஆனாலும் சரி. கலையும் கடவுளும் நுட்பங்களில்தான். God is in details .ஒரு எறும்பைக்கூர்ந்து நோக்கி அதனால் இரு பின்னங்கால்களில் மொத்த உடலையே தூக்க முடியும் என்று கண்டு ‘கடவுளே’ என்று கூவும்போது உங்களுக்கு மிக அருகே கடவுள் நின்றுகொண்டு புன்னகைசெய்வார்
முழுமைவாசிப்பு
ஒரு கதை கேட்டேன். எல்லாவற்றுக்கும் போலிகளை உருவாக்கும் குந்நங்குளத்தில் ஒரு டீக்கடையில் மோகன்லால் போய் அமர்ந்து ஒரு டீக்குச் சொன்னார். கடைக்காரர் கத்தினார் ‘டா மோகன்லாலே ஒரு சாய எடுக்கடே’ டூப் மோகன்லால் டீயுடன் வந்தாராம்.
1997ல் ழாக் தெரிதா நியூ டெல்லி ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸில் ஒரு பேருரை நிகழ்த்தவந்தார். The State of the Lie, and the Lie of the State என்ற தலைப்பில். அவர் பேசி முடித்தபின்னர் நம்மூர் பேராசிரிய விமர்சகர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபோது குந்நங்குளத்தில் மோகன்லால் அடைந்த அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் என் நண்பர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டார். அன்றிரவே அங்கே நிகழ்ந்ததை என்னிடம் கூப்பிட்டுச் சொன்னார்.
‘நீங்கள் பேசிக்கொண்டிருப்பது நான் சொன்ன டீகன்ஸ்ட்ரக்ஷனைப்பற்றி அல்ல. நீங்கள் சொல்வதே எனக்கு சரியாக புரியவில்லை. நீங்கள் இலக்கியபிரதியை உடைத்து சிறியதுண்டுகளாக ஆக்குவதைப்பற்றி பேசுகிறீர்கள் . இலக்கியத்திற்குள் இருந்து எதையோ உருவி எடுப்பதைப்பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் இலக்கிய ஆக்கத்தை சிறுமை செய்கிறீர்கள். நான் சொல்லும் டீகன்ஸ்டிரக்ஷன் என்பது இலக்கியப்பிரதியை பெரியதாக ஆக்கும் வாசிப்பு’ என்று தெரிதா மிரண்டுபோய் சொன்னார்.
‘இனிமேல் இலக்கியம் என்பதே கிடையாது, வாசிப்பு மட்டும்தான் உள்ளது என்று நீங்கள் சொல்கிறீர்கள் அல்லவா?’ என்றார்கள். ‘அய்யய்யோ, நான் பேரிலக்கியங்களின் வாசகன். என் வாசிப்பை விரிவாக்கி அவற்றை இன்னும் சிறப்பாக எப்படி வாசிக்கமுடியும் என்றுதான் பேசுகிறேன்’ என்று தெரிதா சொன்னார்.
ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் தொண்ணூறுகளில் நடந்தது இதுதான். சிவாஜியின் படைவீரர்கள் உடும்பை தூக்கி கோட்டை மேல் வீசுவார்கள். அது கோட்டையை இறுகப்பற்றிக்கொள்ளும். அதன் வாலில் கட்டிய கயிறைப்பிடித்துக்கொண்டு ஒவ்வொரு வீரராக மேலே ஏறிவிடுவார்கள். நம்மூர் பேராசிரியர்கள் முதலில் ரோலான் பார்த்தை தூக்கி வீசினார்கள். அந்த உடும்பு சரியாக பிடிக்கவில்லை. மறுமுறை தெரிதாவை கொன்று அந்த சடலத்தை தூக்கி வீசினார்கள். பிடித்துக்கொண்டது. மேலே ஏறி வந்தார்கள். கொஞ்சகாலம் கோட்டை அவர்களின் கைவசம் இருந்தது.
அந்தக்காலகட்டத்தில்தான் இலக்கிய வாசிப்புக்கு இந்திய இலக்கிய வரலாற்றின் மிகப்பெரிய அடி விழுந்தது. அந்த நோய்க்கூறுகளில் இருந்து இன்னமும் நம் வாசிப்பு மேலேறவில்லை.
வாசிப்புக்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கூறவேண்டிய ஒரு கதை ரேமண்ட் கார்வர் எழுதிய கதீட்ரல். ஒரு விழியிழந்தவர் கதைசொல்லியை பார்க்க வருகிறார். விழியிழந்தவரின் மனைவியும் இவர் மனைவியும் வெளியே செல்கிறார்கள். இருவரும் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தற்செயலாக கதீட்ரல் என்று இவர் சொல்கிறார். பிறவியிலேயே கண் தெரியாதவருக்கு அந்த சொல் புரியவில்லை. இவர் விதவிதமாக விளக்கிப்பார்க்கிறார்.
கடைசியில் இவர் ஒரு பென்சிலை எடுத்துக்கொள்கிறார். அந்த கையை கண் தெரியாதவர் பற்றிக்கொள்கிறார். இவர் கதீட்ரலை வரைகிறார். அவர் கூடவே மனதால் வரைகிறார். இருவரும் கதீட்ரலை பார்த்துவிடுகிறார்கள். கண் தெரியாதவருக்கு இவர் ஒரு கதீட்ரலை காட்டுகிறார். இவருக்கு அவரும் ஒரு கதீட்ரலை காட்டுகிறார்
மனைவிகள் வருகிறார்கள். ’என்ன செய்தீர்கள் இருவரும்?’ என்கிறார்கள். ‘நாங்கள் ஒரு கதீட்ரலைப் பார்த்தோம்’ என்கிறார் கண்தெரியாதவர். ஆமாம் என்கிறார் இவர்.
படைப்பும் வாசிப்பும் நிகழும் தளம் இது. எழுத்தாளனும் வாசகனும் ஒரு நுட்பமான தளத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவருக்குள் ஒரு ரகசியமான உரையாடல் நிகழ்கிறது.
டீகன்ஸ்ட்ரக்ஷன் வந்தபோது இந்தச் செயலை ஒரு குஸ்தியாக மாற்றிவிட்டார்கள். எழுத்தாளன் ஒரு பன்ச் வைத்தால் வாசகன் திருப்பி அடுத்த பஞ்ச் வைக்க வேண்டும். இந்த பஞ்ச் வைக்கும் வேலையில் எப்போதுமே எழுத்தாளர்களைவிட விமர்சகர்கள் மேலானவர்கள். அவர்களுக்கு ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை இரும்பு கையுறையாக போட்டுக்கொண்டு ஒரு குத்து. எழுத்தாளன் அவுட்.
அதைத்தான் இங்கே எழுத்தாளனின் மரணம் என்று சொல்லிக்கொண்டார்கள். நாடி பிடித்துப்பார்த்து உதட்டை பிதுக்கி அவ்வளவுதான் போச்சு என்றார்கள். பார்த்தின் The Death of the Author போல தலைகீழாக புரிந்துகொள்ளப்பட்ட கட்டுரையே இல்லை. நான் கோட்பாடுகளை உடனடியாக வாசிப்பதில்லை. தமிழிலும் மலையாளத்திலும் வெளிவந்த பேராசிரியர் உரைகளை வாசித்தபின் கடைசியாக பார்த்தை வாசித்தபோது மண்டையில் தேங்காய் விழுந்ததுபோல இருந்தது.
பார்த் எழுத்தை எழுத்தாளனின் தனிப்பட்ட ஆளுமையில் இருந்து விடுவிக்கிறார். எழுத்தாளனை அவன் வாழும் காலகட்டத்தின் பிரதிநிதியாக காட்டுகிறார். வரலாற்றின் பண்பாட்டின் ஒட்டுமொத்தமாக உள்ள மொழியில் அவன் எழுத்து நிகழ்கிறது. அதாவது எழுத்தாளனை பலமடங்கு பெரிதாக ஆக்கும் ஒரு பார்வை பார்த்துடையது. அதை வைத்து இனிமேல் எழுத்தாளனே இலை, ஆகவே எதையும் எப்படியும் வாசிக்கலாம் என்றார்கள். அதையே இங்கே டீகன்ஸ்ட்ரக்ஷன் என்ற பேரில் செய்தார்கள்.
சார்லி சாப்ளின் கார் ரிப்பேர் செய்வார். காரை அக்காக்காக கழட்டி பூட்டிவிடுவார். ஆனால் பாதிச்சாமான்கள் மிச்சமிருக்கும். அதையெல்லாம் அள்ளி உள்ளே போட்டு கிளப்பிக்கொண்டு செல்வார். அந்த லட்சணத்தில்தான் இங்கே கட்டுடைப்பு விமர்சனங்கள் நிகழ்ந்தன. மனம் திறந்து சொல்லுங்கள் ஒரு சாதாரண வாசகன் அவனது சாதாரண ரசனையால் தொட்டுணராத எதை இந்த கட்டுடைப்பாளர்கள் கண்டு சொன்னார்கள்? சில புதிய கலைச்சொற்களுக்கு அப்பால் நம் வாசிப்பில் இவர்கள் அளித்த பங்களிப்புதான் என்ன?
ஆனால் தெரிதாவின் டீகன்ஸ்டிரக்ஷனை நான் நிராகரிக்க மாட்டேன். அதை மிக விரிவான ஒரு வாசிப்பாகவே நான் சொல்வேன். உண்மையில் எந்த வாசகனும் எந்த ஆக்கத்தையும் டீகன்ஸ்ட்ரக்ட் செய்துதான் வாசித்துக்கொண்டிருக்கிறான். அதை இன்னும் பயிற்சியுடன் இன்னும் முயற்சியுடன் செய்யக் கற்றுக்கொடுக்கிறார் தெரிதா. எளிமையாகச் சொன்னால் ஒன்றை ரசிக்கும்போது என்னை இதை ரசிக்க வைப்பது எது என்று ஆராயும் பார்வைதான் தகர்ப்பமைப்பு. ஒன்றை ஏற்றுக்கொள்ளும்போது ஏன் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கவனிக்கச்செய்யும் ஆய்வுதான் அது.
அந்த ஆராய்ச்சி ஒருவன் தன்னை தன் பண்பாட்டு, வரலாற்று பின்னணியில் மிக விரிவாக அர்த்தப்படுத்திக்கொள்வதை நோக்கித்தான் செல்லும். எந்த குறியீடுகளாலும் குறிகளாலும் படைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதோ அந்த குறியீடுகளாலும் குறிகளாலும்தான் வாசகனின் அகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே மொழிதான் என்கிறார் தெரிதா. கடலில் மீன் போல மொழியில் இருக்கிறான் மனிதன். ஆகவே மீன் தன்னை அறிவதென்பது கடலையே அறியும் பெரும் அறைகூவல்தான்.
தகர்ப்பமைப்பு மூலம் ஒரு வாசகன் தன்னைத்தான் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்க்கிறான். ஓர் இலக்கிய ஆக்கம் என்பது அவனுக்கு வெளியே இருக்கும் ஒரு கட்டமைப்பு அல்ல. அவனுக்குள் இருக்கும் மொழியும் வெளியே இருக்கும் மொழியும் கொள்ளும் நுண்மையான உறவாடலால்தான் இலக்கிய ஆக்கம் நிகழ்கிறது . அதாவது பிரதி நிகழ்வு என்பதே அந்த ஊடாட்டம்தான். தகர்ப்பமைப்பாளன் கவனிப்பது அந்த ஊடாட்டத்தை. தன்னுள்ளும் வெளியேயும், பிரதிக்கும் வாசிப்புக்கும் நடுவே என்ன நிகழ்கிறது என்று.
ஒரு நுண்வாசிப்புக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக அந்த ஆக்கத்தை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சிதான் தகர்ப்பமைப்பு என்று சொல்லலாம். அது பிரதியை நூற்றுக்கணக்கான சரடுகள் மூலம் ஒட்டுமொத்த வரலாற்றுடன் ஒட்டுமொத்த பண்பாட்டுடன் ஒட்டுமொத்த ஆழ்படிமங்களுடன் பிணைக்கிறது. அதாவது அது பிரதியை மொழியில் வைத்துப்பார்க்கிறது.
சும்மா ஓர் உதாரணம். ’அரயத்தி பெண்ணு தபஸிருந்நு, அவனை கடலம்ம கொண்டுவந்நு’ என்ற செம்மீனின் பிரபலமான தொன்மம் உண்மையில் கண்ணகித் தொன்மத்தின் மறுவடிவம் அல்லவா? கரையில் ஆற்றியிருப்பதைத்தானே சங்க காலம் முதல் தமிழ்த்தொல்மரபு பெண்ணுக்குச் சொல்லி வந்திருக்கிறது?
இரண்டாயிரம் வருடத்து தமிழ்மரபில் செம்மீனை வைத்துப்பார்த்தால் எப்படி அதை வகுத்துக்கொள்வோம்? ஐந்து வகை நிலங்களில் செம்மீன் நெய்தல் திணையைச் சேர்ந்தது. நெய்தல் என்றால் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். பிரிந்து கண்ணீருடன் ஆற்றியிருக்கும் பெண். அதைச்செய்யும்படி அந்த தொன்மம் பெண்ணுக்கு ஆணையிடுகிறது. நம் மொழியின் ஆழத்தில் இருக்கும் இந்த குறியீடுதான் செம்மீனை அத்தனை வலுவான படைப்பாக ஆக்கியதா? கறுத்தம்மாவின் மரணத்தை நாம் அங்கீகரிக்க வைக்கப்பட்டமைக்குக் காரணம் அவள் நெய்தலின் விதியை மீறியதுதானா?
இப்படி பலநூறு கண்ணிகளை போட்டு பிரம்மாண்டமான பின்புலத்துடன் படைப்பை பிணைத்து அதை விரித்துவிரித்துப் பலமடங்காக ஆக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் தெரிதா சொன்ன தகர்ப்பமைப்பு. தகர்ப்பும் அமைப்பும் ஒரே சமயம் நிகழும் ஒரு உக்கிரமான படைப்பு நிலை அது.
அதற்கு நாம் நம்மைக் கூர்ந்து நோக்கப் பயின்றிருக்கவேண்டும். நம்முள் மொழியின் ஆழமாக உறையும் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்திருக்கவேண்டும். நம்மை படைப்பைக்கொண்டு உடைக்கவேண்டும். படைப்பை நம்மைக்கொண்டு உடைக்கவேண்டும். படைப்பை வைத்துக்கொண்டு காலப்பெருவெளியில் விரிந்து பரவ வேண்டும்.
அதுதான் இங்கே நிகழ்ந்ததா? நம்முடைய தகர்ப்பமைப்பாளர்கள் எத்தனைபேர் நம்முடைய படைப்புகள் மேல் புதிய ஒளியை வீசினார்கள்? யார் நம் படைப்புகளை பிரம்மாண்டமாக நமக்கு காட்டினார்கள்? நேர்மாறாக நம் ஆக்கங்களை சிறுமைப்படுத்தினார்கள். அவற்றை அற்பமான கருத்துக்கட்டமைப்புகளாக சுருக்கிக் காட்டினார்கள். நம்மை பெரும் படைப்புகளில் இருந்து விலக்கினார்கள், இல்லையா?
அற்ப வாசிப்பு
எங்களூரில் தகடு எடுப்பது ஒரு சடங்கு. ஏதாவது ஒரு வீட்டில் நோயோ மரணமோ நிகழ்ந்தால் மந்திரவாதிக்கு சொல்லியனுப்புவார்கள். அவர் தன் ஆயுதங்களுடன் வந்திறங்குவார். மந்திரவாதி என்றால் பார்த்தாலே தெரியவேண்டும். மீசை , உருண்ட சிவந்த கண், சிவப்பு வேட்டி, சடைமுடி…வீட்டுக்குள் சென்றதும் வீட்டுக்காரர்கள் அவர் காலில் விழுவார்கள். வீட்டை முறைத்து பார்த்துவிட்டு பூஜையை ஆரம்பிப்பார். பூஜை ஏற ஏற பூஜாரி துள்ளி எழுந்து சன்னதம் கொண்டு ஆடுவார்.
ஆடியபடியே வீடெங்கும் சுற்றி வருவார். ஒரு இடத்தில் தோண்டும்படிச் சொல்வார். அங்கே ஒரு தகடு கிடைக்கும். அது எதிரி மந்திரித்து சூனியம் வைத்து துர்தேவதைகளை ஏவி விட்டிருக்கும் தகடு. அவன் அங்கே புதைத்து வைத்திருக்கிறான். இவர் எடுத்து காட்டுகிறார். ஆனால் தகடு மந்திரவாதி அவரே கொண்டு வருவது. அவரது காலிடுக்கில் இருந்து அங்கே போடப்படுவது.
இந்த விஷயத்தில் எனக்கு தமிழகத்தை விட கேரளம் மீது ஆழமான மனக்குறை உண்டு. இங்கே ஓங்கியிருப்பது தட்டையான அரசியல் வாசிப்புதான். எந்த ஒரு படைப்பை கண்டாலும் அதன் நான்கு மூலையிலும் நின்று துள்ளிவிட்டு அதற்குள் இருந்து அரசியல் கருத்தின் தகடை உருவி எடுப்பதையே இங்கே செய்கிறார்கள்.
படைப்புக்கு அரசியல் உண்டா? உண்டு. படைப்பில் அரசியலை ஆராயலாமா? ஆராயலாம். இலக்கியம் ஒரு கருத்தியல் செயல்பாடு. கருத்தியலில் அதிகாரம் உள்ளது. அதிகாரம் அரசியலால் இயக்கப்படுவது. தெரிந்தும் தெரியாமலும் இலக்கியத்தில் அரசியல் உண்டு. அந்த அரசியலை அறிவதும் வாசிப்பின் ஒரு முறைதான்.
ஆனால் இரண்டு விஷயங்களை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஒன்று இலக்கிய ஆக்கம் என்பது அரசியல் மட்டும் கொண்டதல்ல. அதில் அரசியல் இருந்தே ஆகவேண்டும் என்பதும் இல்லை. அது ஒரு மனிதனின் அகவெளிப்பாடு. அவனுடைய அகம் மொழியாலானது என்பதனால் அது ஒரு மொழி நிகழ்வு. மொழி அனைவருக்கும் பொதுவானதாகையால் அது ஒரு பொது நிகழ்வாக ஆகிறது. மொழியில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு நுண் தொடர்புறுத்தல் அது. மொழியை அதுதான் உருவாக்குகிறதென்றே சொல்லலாம். அது வெறும் அரசியல்நடவடிக்கை அல்ல.
இரண்டாவதாக, இலக்கியத்தில் அரசியல் இருந்தாலும் அது ஏற்கனவே நம் சூழலில் அலம்பிக்கொண்டிருக்கும் எளிமையான கட்சி அரசியல் அல்ல. தரப்புகளின் அரசியல் அல்ல. இலக்கியத்தின் அரசியலென்பது இலக்கியத்திற்கே உரிய அரசியல்.
சிலகாலம் முன்பு தமிழின் தலைசிறந்த கவிஞரான பிரமிள் தன்னுடைய கவிதைகள் அரசியலற்றவை என்று சொன்னார். அவர் வைரங்கள் போல என்றார். அதைக்கேட்டு ஒரு முற்போக்கு விமர்சகர் கொதித்தார். அப்படியானால் அக்கவிதைகளுக்கு பயன்மதிப்பு என ஒன்றும் இல்லையா? வெறும் அலங்காரமோ ஆடம்பரமோ மட்டும்தானா அவை?
அதற்கு தமிழின் மகத்தான கவிஞராகிய தேவதேவன் ஒரு கட்டுரையில் பதில் சொன்னார்.. ஆம் , அவை வைரங்கள்தான். ஆனால் வைரங்கள் பயனற்றவையா? நாம் உலகியல் சூழலில் பயன்படுத்துவதுபோன்ற பயன் அவற்றுக்கு இல்லை, அவ்வளவுதான். அவை ஒரு இட்லி போல ஒரு கோவணம் போல ஒரு பாய்போல நமக்கு பயன்படுபவை அல்ல. அவற்றின் பயன் குறியீட்டு ரீதியானது.
வைரம் நமக்கு சுட்டுவது எதை? நம்முடைய உலகியல்செயல்பாடுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று நம்முடைய உலகியலை மதிப்பிடக்கூடிய ஒரு அபூர்வப்பொருளாக அது உள்ளது . நம்முடைய உலகியலின் மதிப்பையும் மதிப்பில்லாமையையும் அது நமக்கு உணர்த்துகிறது.ஒரு வைரம் பல டன் சோற்றுக்குச் சமமாக இருப்பது அதனால்தான்.
கவிதையும் அதைப்போலத்தான். உலகியலை கவிதை மதிப்பிடலாம், கவிதையை உலகியல் மதிப்பிட்டுவிட முடியாது என்றார் தேவதேன்
ஆம், உலகியல் சார்ந்த ஒரு எளிய அரசியலால் ஒருபோதும் இலக்கியத்தின் அரசியலை மதிப்பிட்டுவிடமுடியாது. இலக்கியத்தின் அரசியலென்பது கால இடத்தை மீறிச்செல்லும் அறவுணர்ச்சியால் ஆனதாக உள்ளது. அரசியல் இருபதாண்டுக்காலம் நீடிக்குமா? இலக்கியம் பல்லாயிரம் வருடங்கள் வாழக்கூடும்.
ஒரு முக்கியமான அரசியல்பிரதியை இங்கே நினைவூட்டுகிறேன். சிலப்பதிகாரம். ‘அரசியல்பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று சொன்ன காப்பியம் அது. தமிழ் பண்பாட்டின் ஆகப்பெரிய அரசியல் கருத்து அதுதான். அரசு அறம் இழந்தால் சாமானியனின் அறவுணர்ச்சி கொல்லும் மரணமாக கிளம்பிவரும் என்று அது எச்சரிக்கிறது. மிகப்பெரிய ஒரு புரட்சி அறைகூவல் அது.
இந்த ஆயிரத்தைநூறு வருடங்களில் தமிழகத்தின் அரசியலில் என்னென்ன நிகழ்ந்திருக்கும்? என்னென்ன சிந்தனைகள் வந்து போயிருக்கும்? ஆனால் அந்த அரசியல் கூற்று முனைமழுங்காத வாள்போல, அணையாத தீ போல நின்றுகொண்டே இருக்கிறது, இல்லையா?
அந்த அரசியல்தான் படைப்பிலக்கியத்தின் அரசியல். இன்றைய திமுக அதிமுக அரசியலை வைத்து சிலப்பதிகாரத்தை மதிப்பிட்டுவிடமுடியுமா? அது வைரம், கூர்மையான விஷம். அதை இட்லி தோசையை வைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஆனால் நான் கேரள இதழ்களை வாசிக்கையில் காண்பது அதைத்தான். இலக்கிய ஆக்கங்கள் அவ்வப்போது கேரள அரசியல் சூழலில் என்ன பேசப்படுகிறதோ அதனடிப்படையில் விவாதிக்கப்படுகின்றன. சாப்ளின் கார் சரிசெய்வதுபோல, அந்த விவாதத்துக்கு வெளியே உள்ளவை எல்லாம் தேவையற்றவை என்று அள்ளிப்போடப்படுகின்றன.
கால்நூற்றாண்டாக எந்த அரசியல் விவாதமும் மதவாதம் சார்ந்து மட்டுமே பேசப்படுகிறது. காரணம் அது இன்றைய இடது-வலது அரசியல். தேசியம் இன்னொரு தலைப்பு. இந்த தலைப்புகளை நமக்கு கட்சி அரசியல் அளிக்கிறது. அந்த தலைப்புகளுக்கு ஏற்ப படைப்புகளை வகைப்படுத்துவதை மட்டுமே நாம்செய்து வருகிறோம்.
இப்படி வகைப்படுத்துவதை நாம் தகர்ப்பமைப்பு என்று சொல்கிறோம். ஒரு படைப்பை பிரித்துப்போட்டு அந்த படைப்புக்கு சமகால அரசியல் அர்த்தம் என்ன என்று கண்டுபிடிப்பது அல்ல தகர்ப்பமைப்பு. அது தகர்ப்பமைப்பு [டிகன்ஸ்டிரக்ஷன் ] அல்ல. தகர்ப்பு [டிஸ்டிரக்ஷன்] மட்டுமே.
ஒரு படைப்பை ஒரு கருத்துத்தரப்பாக மட்டும் எடுத்துக்கொண்டு அந்த கருத்துத் தரப்பு தனக்கு உகந்ததா இல்லையா என்று பார்க்கும் சவப்பரிசோதனைக்கும் தெரிதாவுக்கும் சம்பந்தமில்லை. இந்த தெரு அரசியலுக்கு தெரிதாவின் கலைச்சொற்கள் பயன்படுவது மிகமிக துரதிருஷ்டவசமானது. இலக்கியப்படைப்பு என்பது ஒரு அரசியல் சதிவேலை மட்டுமே என்றும், அதன் சதியைக் கண்டுபிடிப்பது மட்டுமே தெரிதா சொல்லும் டீகன்ஸ்டிரக்ஷன் என்றும் சொல்லும் மூடர்களால் நம் சூழல் நிறைந்திருக்கிறது.
மூன்று வகையில் இந்த அபத்த வாசிப்பு நிகழ்வதை நான் காண்கிறேன். ஒன்று அரசியல்கண்ணோட்டம் வெளிப்படையாகவே உள்ள டி பி ராஜீவனின் ‘பாலேரி மாணிக்யம், ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா’ போன்ற நாவல்களில் அந்த அரசியல் மட்டுமே உருவி எடுக்கப்பட்டு அது மட்டும் சமகால அரசியலில் போட்டு அலம்பி எடுக்கப்படுகிறது. இன்னொன்று சமகால அரசியல் கருத்துக்களாக பிரித்து எடுக்கமுடியாத கல்பற்ற நாராயணனின் நாவல் போன்றவை முழுக்க உதாசீனம் செய்யப்படுகின்றன.
சின்ன வயசிலே சைதன்யா சொன்னாள். ’நாய்க்குட்டியோட பிடி’ என்று . எதைச்சொல்கிறாள் என்று கொஞ்சம் கழிந்துதான் புரிந்தது. அதன் காதைச் சொல்கிறாள். ராஜீவன் நாவலில் காதை மட்டும் பிடித்து தூக்கிக்கொண்டிருக்கிறர்கள். கல்பற்றா நாவலை ’என்ன இது பிடிகூட இல்லாமல் ஒரு நாயா’ என்று தொட்டே பார்ப்பதில்லை.
மூன்றாவது அபத்தம் எந்த விதமான படைப்பூக்கமும் இல்லாத, முட்டாள்தனமான ஆக்கங்களை ஆகா என்கிறார்கள். அது ஒரு சூட்கேஸ். எல்லா அரசியல் விவாதங்களுக்கும் அது பிடி கொடுக்கிறது. மிக நவீனமான சூட்கேஸ். அதன் நான்குபக்கமும் நிறைய பிடிகள். தூக்க எளியது. நாய்க்குட்டிகள் பெரிய தொல்லை. அவை நாம் காதைப்பிடித்து தூக்கினால் கத்துகின்றன. இது எவ்வளவு வசதி!
வாசகன் என்பவன்..
நான் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு என்ற ஊருக்கு 1988 ல் வேலைக்குச் சென்றபோது அங்கே குப்புசாமி என்ற நண்பர் அறிமுகமானார். மிகத்தாழ்ந்த ஒரு சாதி/ சமூகப்படிநிலையில் இருந்து முழுக்க முழுக்க சொந்த உழைப்பால் அறிவுத்திறனால் மேலே சென்று இன்று உயரதிகாரியாக இருக்கிறார். என்னுடைய நெருக்கமான நண்பர்.
ஒருமுறை அவர் சுந்தர ராமசாமி நாவலை வாசித்துக்கொண்டிருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.மாரண்டஹள்ளி என்ற சின்ன ஊரில் அவர் இருந்தார். அந்த ஊர் நூலகத்தில் அதை எடுத்து படித்துக்கொண்டிருந்தார். அந்த ஊரில் அவருக்கு நவீன இலக்கியத்தை யார் அறிமுகம் செய்தது?
இப்போது போல அல்ல அப்போது. நவீன இலக்கியம் ஒரு ஆயிரம்பேருக்குள் தான் அன்று புழங்கிக்கொண்டிருந்தது. எந்த அச்சு இதழிலும் இலக்கியவாதிகளைப்பற்றி எதுவும் இருக்காது. எவருமே அசோகமித்திரன் அல்லது சுந்தர ராமசாமி பெயரை சொல்லி நம் காதில் விழாது. இலக்கியம் அறிந்த ஒருவர் நமக்கு ஓர் இலக்கியவாதியை அறிமுகம் செய்து இலக்கியத்தை சொல்லிக்கொடுத்தால்தான் உண்டு
ஆனால் குப்புசாமிக்கு எவருமே அறிமுகம் செய்யவில்லை. அவரே நூல்களை எடுத்து வாசித்து பிடிக்காதவற்றை நிராகரித்து பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து வாசித்து நல்ல இலக்கியங்களைக் கண்டுகொண்டார். முக்கியமான எல்லாவற்றையும் வாசித்திருந்தார்.ஆச்சரியம் என்னவென்றால் அவர் அறிந்த இன்னொரு இலக்கியவாசகன் நான்தான்.
எப்படி உங்களால் நல்ல இலக்கியத்தை அடையாளம் காணமுடிந்தது என்று நான் கேட்டேன். நல்ல உணவை எப்படி அடையாளம் காண்கிறோம் , நல்ல படிப்பை எப்படி தேர்ந்தெடுக்கிறோம்? என்றார் அவர். ‘டேய், நான் பார்த்த வாழ்க்கையை யார் பார்த்திருக்கிறார்கள்? எனக்கு வாழ்க்கை தெரியும். அந்த வாழ்க்கைதான் என் அளவுகோல். அந்த அளவுகோல் கல்கியை பொழுதுபோக்கு எழுத்து என்றும் அசோகமித்திரனை வாழ்க்கையைப்பற்றிப் பேசும் நவீன இலக்கியம் என்றும் அடையாளம் காட்டுவதில் என்ன ஆச்சரியம்?
ஆம், இலக்கியத்தை அறிய வேறொன்றும் தேவை இல்லை. எளியமையான மொழியறிவு, அடிப்படையான கற்பனை சக்தி, வாழ்க்கையை அறிந்துகொள்ளும் தன்மை மூன்றும் போதும். சொந்த வாழ்க்கையை, சொந்த மனத்தை, சொந்த கனவுகளை மட்டுமே இலக்கியத்தை புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் பயன்படுத்தினால் போதும்
[12 -3-2011 அன்று கோழிக்கோடு மாத்ருபூமி அரங்கில் என்னுடைய நூலை வெளியிட்டு ஆற்றிய உரை]
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 17, 2011