ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
தலித் மக்களை ஒட்டுமொத்தமாக முத்திரைகுத்தி பொதுநீரோட்டத்தில் இருந்து அகற்றும் அறிவுச்சதித்திட்டத்தின் ஒருபகுதியாக ராஜன்குறை,ஜெயரஞ்சன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கூட்டணியால் உருவாக்கப்பட்ட நாஸி ஆவணமான கட்டுரைகுறித்த இரு எதிர்வினைகள் இவை
ஜெ
பேராசிரியர் டி.தர்மராஜ்
- அதுவொரு அருவருப்பானகட்டுரை.இதைப் போல நிறைய எழுதுகிற கூடாரம் அது.
- எம்.எஸ். எஸ். பாண்டியன் தொடங்கி இன்னும் நிறைய பேர் இப்படி எழுதியவர்களே!
- வாழ்நாளெல்லாம் சாதியம் பேசிய மறைமலை அடிகள் prominent Saivaite Intellectual ஆகும் பொழுது தமிழன் என்று பேசிய அயோத்திதாசர் எப்படி untouchable parayar intellectual என்று நான் பாண்டியனிடம் கேட்டதைத் தான் ‘முட்டாள்தனமான கேள்வி’ என்று நகையாடியக் கூட்டம் இது.
- ஆங்கிலத்தில் சமூக அறிவியல் எழுதுவது ஒரு பெரிய மாஃபியா போலச் செயல்படக்கூடியது. பெரும் பணமும், புகழும், வசதி வாய்ப்புகளும் புழங்கக்கூடியது. வெகுகாலம் இந்த ஏரியாவை மேற்சொன்ன ‘திராவிட அறிஞர்களே’ கைப்பற்றியிருந்தனர்.
- தமிழில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் திராவிடக் கூட்டத்திற்கு இதுவெல்லாம் தெரியாது என்பதால், இந்தக் குழுவை அண்ணாந்து பார்த்து வியக்க மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள்.
- ஆண் பெண் உறவு குறித்து எத்தனை தட்டையாக ஆங்கிலத்தில் யோசிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதற்கு இதுவொரு உதாரணம், அவ்வளவே!
- இது போன்ற அதிரடியான (தலித்துகளையும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் இணைத்த யோசனை போன்ற) கருத்துக்களை வெளியிட்டால் மட்டுமே ஆங்கில சமூக அறிவியல் ஆச்சரியமாகப் பார்க்கும் என்ற ஆசையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
- இந்தியா வினோதங்களின் தேசம் என்ற கற்பனையை இன்னமும் உயிரோடு வைத்திருப்பதற்கு இத்தகைய ‘தலித் ஆதரவுக் கட்டுரைகள்’ (இப்படித்தான் இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது) தான் தற்கால உதாரணம்.
- திராவிட இயக்கம் சித்தாந்தங்களின் இயக்கம், தலித் இயக்கங்கள் விடலை இளைஞர்களின் தாந்தோன்றி இயக்கம் என்று சொல்வதில் ஒரு கிளுகிளுப்பு இருக்கிறதே அது தான் இது போன்ற கட்டுரைகளின் நோக்கம்.
[முகநூல் பதிவு]
போகன் சங்கர்
ராஜன் குறையின் அந்த புகழ்பெறும் கட்டுரையை வாசித்தேன்.சுமார் பதினொரு பக்கக் கட்டுரை.நான் படித்த வரையில் எம் எஸ் எஸ் பாண்டியனின் பெயர் அதில் இல்லை.2002இல் எழுதியிருக்கிறார்.உடன் ஆனந்தி,ஜெய ரஞ்சன் என்ற இருவர்.
கட்டுரை செங்கல்பட்டு பக்கம் உள்ள திருன்னூர் என்ற கிராமத்தில் செய்த ஆய்வு பற்றிப் பேசுகிறது.கிராமத்தில் மேல் சாதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் முதலியார்கள். இன்னொரு பக்கம் தலித்துக்கள்.பெரும்பாலும் பறையர்கள்.கட்டுரை இரு பிரிவினருக்கும் மாறி வருகின்ற உறவுமுறைகளைப் பற்றிப் பேசுகிறது.விவசாயம் முக்கியமாக இருந்தபோது முதலியார்கள் தலித்களை ஆள்வது எளிதாக இருந்தது.அவர்கள் செய்த கொடுமைகளை தலித்துகள் பொறுத்துக்கொண்டார்கள்.ஆனால் நகர மயமாக்கமும் தொழில் மயமாக்கமும் நிகழும்போது விவசாயம் விழும்போது முதலியார்களின் கை தளர்கிறது.
தலித் வாலிபர்கள் விவசாய வேலைக்குப் போக மறுக்கிறார்கள்.அதே சமயம் தொழிற்சாலைகளின் ஒழுங்குக்கும் அவர்களால் கட்டுப்படமுடியவில்லை.ஒரே வேலையில் அவர்களால் நிலையாக இருக்கமுடியவில்லை.பல நேரங்களில் குற்றச் செயல்களுக்கு எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள்.தலித் ஆண்களுக்கு வன்முறை தான் சரியான வாழ்க்கைமுறை என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.அவர்கள் விவசாய வேலைகளுக்குப் போவதில்லை.பெற்றோர்களையும் போகவிடுவதில்லை. அதே சமயம் அவர்களும் சரியாக வேலைகளுக்குப் போவதில்லை.
அவர்கள் நன்றாக ஆடை உடுத்துக்கொண்டு முதலியார்களின் தெருக்களில் வேண்டுமென்றே திரிகிறார்கள்.அவர்கள் பெண்களை கேலி செய்கிறார்கள். பேருந்துகளில் வேன்களில் வேலைக்குப் போகும் ஏழை முதலியார்ப் பெண்கள் ஆடைகளைப் பிடித்து இழுக்கிறார்கள்.ஒரு முதலியார்ப் பெண்ணைக் கவர்வது பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.அதே நேரம் அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அடிக்கத் தயங்குவதில்லை.நிறைய தலித் வாலிபர்கள் குடி போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதே நேரம் உடலைப் பேண வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.
முதலியார்ப் பையன்கள் மங்காத்தா விளையாடி சோனியாகிக் கொண்டிருக்க வாலிபால் போன்ற கடும் விளையாட்டுகளில் ஈடுபட்டு கட்டாக உடலை வைத்திருக்கிறார்கள்.அதே நேரம் அதற்கான செலவுகளை அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் பாக்டரிகளுக்குப் போய்ச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பொதுவாகவே இந்த தலித் இளைஞர்கள் குறித்த அச்சம் மேல் சாதியினரிடம் மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பப் பெண்கள் மூத்தவர்களிடம் கூட இருக்கிறது.
இதுதான் கட்டுரையின் சுருக்கம்.பல இடங்களில் இது ஒரு பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கையோ என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும்.
[முகநூல் பதிவு]