சங்கர் கொலை,நீதியும் சமூகமும்
ஆசிரியருக்கு,
ஒரு இலக்கிய பிரதியை விமர்சிக்க குறைந்தபட்சம் அதை படித்திருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது ஒரு தீர்புக்கும் பொருந்தும். தீர்ப்பு 311 பக்கங்கள் கொண்டது, சட்டக்கலைச்சொற்கள் கொண்டது. இருந்தாலும் நீதித்துறைக்கே களங்கம் என கூறும் முன்பு நீங்கள் அதை படித்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். இதில் கருத்து சொல்ல அவ்வளவு அவசரம் காட்ட தேவை இல்லை. உடனடியாக கருத்தை சொல்ல இன்று சமூக ஊடக நிர்பந்தம் உண்டு, இதுவரை அதை சரியாகவே கையாண்டு வந்து இப்போது பிறழ்ந்து விட்டீர்கள் என எண்ணுகிறேன்.
148 பக்கங்கள் வரை முதல் குற்றம்சாட்டப் பட்டவரான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி தொடர்பான வழக்கு பரிசீலனை. இதை படித்தேன், அதுபோக தேவையான இடங்களில் படித்தேன். திருப்பூர் விசாரணை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றபோதே இந்த வழக்கை வாசித்துள்ளேன். சங்கர் பள்ளர் வகுப்பை சேர்ந்தவர், கௌசல்யா பிறமலை கள்ளர் வகுப்பை சேர்ந்தவர். குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலானோர் பிறமலை கள்ளர் வகுப்பு. இவ்வழக்கில் 11 பேர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரண நீதிமன்றத்தால் மூவர் விடுவிக்கப்பட்டனர், உயர்நீதிமன்றம் மேலும் 3 பேரை விடுத்துள்ளது. ஆக இப்போது தண்டனை குற்றவாளிகள் என சிறையில் உள்ளோர் 5 பேர். இவர்கள் அனைவரும் நேரடியாக ஈடுபட்டவர்கள், சிசிடிவி பதிவில் உள்ளவர்கள்.
நேரடியாக சங்கரை கொன்ற 5 பேர்களை கௌசல்யாவின் தந்தை சின்னசாமி பிறருடன் சேர்ந்து சதி ஆலோசனை செய்து கூலிக்கு அமர்த்தினார் என்பது வழக்கு. அவரை விடுவித்தது தான் களங்கம் என எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன். சின்னசாமிக்கு எதிரான ஆதாரங்கள் என முன்வைக்கப்பட்டவை இவை.
அ. அவர் மற்ற கூலிப்படை குற்றவாளிகளை பழனியில் ஒரு பூங்காவில் ஒரு மாதத்திற்கு முன் சந்தித்து உள்ளார்.
ஆ.அவர் கூலிப்படைக்கு ரூ. 50,000 பணம் வழங்கி உள்ளார், கூலிப்படை குற்றவாளிகளை ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார்.
இ.அவர் கூலிப்படையை சேர்ந்த 3 பேருடன் செல்பேசியில் பலமுறை பேசியுள்ளார்.
பழநி பூங்காவில் கூலிப்படையை சந்தித்து பேசியது ஜோடிக்கப்பட்ட கதை என்பதை குற்றப் பத்திரிக்கையை படித்தாலே உணரலாம், நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. இது சரியே.
ரூபாய் 50,000 தை இரு தவணைகளில் கொலை நிகழ்ந்த சுமார் 15 நாட்களுக்கு முன் எடுத்துள்ளார் இது நிரூபணம் ஆனது, அதை ஒரு குற்றவாளி கையில் பெற்றுக் கொண்டார் என போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தள்ளார். அது ஏற்கப்படவில்லை. போலீசார் தாமே அப்படி எழுதுவது வாடிக்கை ஆகவே நீதிமன்றம் இதை ஏற்காததும் சரியே.
சின்னசாமி கூலிப்படையினரை தங்கவைத்த ஆதாரம் எதுவும் இல்லை, விடுதி பதிவேடு முறையாக பராமரிக்கவும் இல்லை, அதில் யார் பெயரும் இல்லை. சின்னசாமியை தொடர்பு படுத்த எந்த சாட்சியும் ஆவணமும் இல்லை ஆகவே அதுவும் ஏற்கப்படவில்லை. இதுவும் சரியே.
குற்றவாளிகளுடன் 20 நாட்களுக்கு முன் பலமுறை அலைபேசியில் சின்னசாமி பேசியுள்ளார் இது நிரூபிக்கப் பட்டுள்ளது. உரையாடல் பதிவு இல்லை. ஏதோ பேசியுள்ளார் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை வழங்க இது போதுமா? பாராளுமன்ற தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்பட்ட அப்சல் குரு வழக்கில் இது போதாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த அடிப்படையில் இவர் தற்போது விடுவிக்கப்படுகிறார்.
இந்த தொலைபேசி அழைப்பு குறித்து சின்னசாமியிடம் நீதிமன்றத்தில் நீதிபதி கேள்வி கேட்ட போது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்து உள்ளார்.
ஆனால் இது சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்ட விசாரணை அல்ல, குற்றம் சாட்டப்பட்டவரை கூண்டில் ஏற்றி விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. இது சாட்சிகள் விசாரண முடிந்தபின்பு குவிமுச பிரிவு 313 இன் கீழ் சாட்சியங்கள் குறித்து கேட்கப்படும் கேள்வி. விளக்கம் கொடுக்காமல் இருக்கும் உரிமை அவருக்கு உண்டு. இது போன்ற வழக்கில் நிரூபிக்கும் கடமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்த இயலாது என்பது இந்திய சாட்சிய சட்டத்தின் அடிப்படை கூறு.
பிற குற்றவாளிகளும் அவ்வாறே கூறியுள்ளார்கள். ஆனால் நேரடிக் குற்றவாளிகள் அனைவரும் வெளியூர்காரர்கள், சின்னசாமிக்கு முன்னர் அறிமுகம் அற்றவர்கள் என்பது தெளிவு. இந்நிலையில் சின்னசாமி எதற்காக அவர்களுடன் பேசினார் என்பதை அவர் விளக்காததை அவருக்கு எதிராக கொள்ளவேண்டும் என அரசு தரப்பு வாதிடவில்லை. இதற்கு ஆதரவாக சில முன் தீர்ப்புக்கள் உள்ளன. இதை அரசுத்தரப்பின் வாதிடலில் நடந்த ஒரு சிறு தோல்வி எனக் கூறலாம்.
20 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வழக்கு நடத்திவரும் நான் சின்னசாமியை விடுதலை செய்ததை தவறு என எண்ணவில்லை. தண்டித்து இருந்தாலும் தவறு என எண்ண மாட்டேன். ஏனென்றால் இரண்டிற்கும் சம வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த தீர்ப்பு நீதித்துறையின் களங்கமல்ல. சல்மான் கான் வழக்கு, உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது போன்றவற்றை அப்படி சொல்லலாம், இதையல்ல.
உயர்நீதி மன்றத்தில் விடுதலை ஆனவர்களில் ஒருவர் பைக்கில் வந்து ஒரு குற்றவாளியை அழைத்து சென்றவர். இதற்கு சிசிடிவி ஆதாரம் இல்லை, பார்த்த ஒருவரின் சாட்சியம் நம்பும் படி இல்லை. ஆகவே இந்த விடுதலை சரியே. இன்னொருவர் சம்பவத்திற்கு பின் குற்றவாளிகளுக்கு தன் இடத்தில் அடைக்கலம் கொடுத்தவர். இதுவும் நிரூபிக்கப் படவில்லை, இந்த விடுதலையும் சரி தான்.
அரசு தரப்பில் விசாரண சிறப்பாகவே நடத்தப்பட்டது. கொலையாளிகள் சங்கரை பின்தொடரும் போது அவர்களின் செல்கோபுரத் தடம் சங்கரின் செல்கோபுரத் தடத்துடன் ஒருங்கிணைந்தது முதற்கொண்டு காவல் துறையால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டது. இது முன் எப்போதும் நடந்திராதது. காவல்துறை விரைந்து விசாரண முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
விசாரணை நீதிமன்றத்தில் 4 சிறப்பு வழக்கறிஞர்கள் அரசால் நியமிக்கபட்டு அவர்களும் சிறப்பாகவே வழக்கை நடத்தினர், விசாரண நீதிமன்றமும் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஆக சட்டம் தன் சாத்தியமான கடமையை செய்திருக்கிறது எனவே கூறலாம்.
ஆனால் நான் பார்த்தவரை அறிவுஜீவிகள், பத்திரிக்கைகள் பார்வையில் பரிசீலிக்கப் படாத சில விஷயங்கள் இவ்வழக்கில் உள்ளன.
முதலாவது, வாய்ப்பிருந்தும்கூட கௌசல்யா திருப்பூர் நீதிமன்றத்திலும் சரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி, தன் சார்பில் வழக்கறிஞரை அமர்த்தவில்லை. அவர் தன் பெற்றோருக்கு எதிராக பத்திரிகைகளுக்கும், தொலைகாட்சிக்கும் பேட்டி கொடுக்கும் தீவிரத்தை வழக்கில் காட்டவில்லை. அவர் சாட்சியத்திலும் சில முரண்கள் உள்ளன. இது ரத்த உறவு சம்பந்தப்பட்டதா, மெத்தனமாக இருந்தாரா, அல்லது உளவியல் ரீதியாக இவை இரண்டின் கலவையா என்பதெல்லாம் இலக்கியம் அணுக வேண்டிய இடம்.
இரண்டாவது, சமூகநீதியை தனது அடிப்படைக் கொள்கையாக கொண்டிருக்கும் திமுக விசாரணை நீதிமன்றத்திலும் சரி, உயர்நீதி மன்றத்திலும் சரி, தாமும் இவ்வழக்கில் இணைக்கிறோம் என கோரவில்லை. அவ்வாறு கோருவதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. ஜெயலலிதாவுக்கே தண்டனை பெற்றுத்தந்த ஆற்றல் உடைய திமுக நினைத்திருந்தால் இவ்வழக்கை இன்னமும் வலுப்படுத்தியிருக்க முடியும்.
நம் பத்திரிக்கையாளர்கள் திமுக தலைவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பும் அளவுக்கு அறிவுத் தகுதி கொண்டவர்கள் அல்ல, முறையாக ஜர்னலிசம் பட்டம் பெற்றவர்கள் ஒரு சதத்திற்கும் குறைவாகவே இருப்பார்கள், பெரும்பாலானோர் அறிவுத்திறன் குன்றியவர்கள் மற்றும் குறு லாபமீட்டிகள்.
இப்போது தாழ்த்தப்பட்டவரை தலைவராக கொண்டிருக்கும் பாஜகவும் இதை செய்யவில்லை. புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் என எந்த கட்சியும் வெறும் அறிக்கையிடல் மட்டும்தான் செய்தன. இடதுசாரிகள் கூட பெரிய பங்களிப்பை ஆற்றவில்லை.
இப்போது கூட பத்திரிக்கைகளும் பிறரும் நிர்ப்பந்தித்தால் மேற்சொன்ன இந்த கட்சிகளை உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்படும்போது வழக்கறிஞரை அமர்த்தி வாதிடச் செய்ய முடியும். சின்னசாமியின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடும் செய்யலாம்.
மூன்றாவது, விடுவிக்கப்பட்ட சின்னசாமியை சிறை வாசலில் ரோஜா மாலை அணிவித்து வரவேற்றவர்கள் அவர் சாதியினராகவே இருக்கக் கூடும். கௌசல்யாவின் தாய் இந்த 5 பேர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து வெல்வோம் என வெட்கமின்றி கூறுகிறார். இதை இதுவரை யாரும் கண்டிக்கவில்லை.
இவைகளை குறித்து தான் நாம் கூடுதலாக விவாதிக்க வேண்டும்.
கிருஷ்ணன்
ஈரோடு.
***