எழுத்தாளர்களை வழிபடுவது

கலைஞர்களை வழிபடலாமா?

அன்புள்ள ஜெ,

நலம்தானே? எனக்கு உண்மையாகவே ஒரு சந்தேகம், இது நீண்டநாட்களாக எனக்கு இருந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இது மீண்டும் பேசுபொருளாகியது. எழுத்தாளர்களை கொண்டாடுவது சரியா? அது சிந்தனையில் அடிமைத்தனத்தை உருவாக்குவது அல்லவா? சமீபத்தில் ஒருவர் இதைப்பற்றி சொன்னதால் விவாதமாகியது. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்

ஆர்.அர்விந்த்

***

அன்புள்ள அர்விந்த்

இதை சமீபத்தில் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதுடன் சேர்த்துச் சொல்கிறேனே. அவர் என்னிடம் கேட்டது காதல் பற்றி. நான் சொன்னேன். காதல் கொஞ்சம் விலகி நின்றுபார்த்தால் ஒருவகையான அசட்டுத்தனம். அதில் தர்க்கத்துக்கே இடமில்லை. ஒருபெண்ணை தேவதை என நினைப்பது, இரவுபகலாக எண்ணிக்கொண்டிருப்பது, அவளுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பது, சொந்தபந்தம், எதிர்காலம் எல்லாவற்றையும் அடகுவைப்பது வீண்.

காதலில் பலசிக்கல்கள் உள்ளன. கற்பனைநிறைந்த காதலில் இருந்து மணவாழ்க்கையின் யதார்த்தத்திற்கு வரும்போது உரசல்கள் உருவாகின்றன. குடும்பங்களுக்குள் இசைவு உருவாக நீண்டநாளாகிறது. தனித்துவிடப்படலாம். கடைசியாக, வரதட்சிணை கிடைக்காமலாகலாம். பொருளியல் இழப்பு உருவாகலாம்.

‘நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்றே நினைக்கவில்லை’ என்றார் அவர். ‘ஐம்பது வயதைக் கடந்த எவரும் இதைத்தான் சொல்வார்கள். இது யதார்த்தம்’ என்றேன். ‘சரி, நீங்கள் காதலித்தவர், அது தவறு என நினைக்கிறீர்களா?’என்றார். ‘இல்லை, என் வாழ்க்கையின் மிக அழகனா விஷயங்களில் ஒன்று அது. அது நிகழாவிட்டால் வாழ்க்கையின் புதையல் ஒன்றை இழந்திருப்பேன்’ என்றேன்

அவர் குழம்பிவிட்டார். நான் சொன்னேன். ‘ஐம்பது வயதான ஒருவர் சொல்லும் யதார்த்தவாதத்தை கருத்தில் கொண்டு கணக்கு போடுபவன் காதலிக்கும் மனநிலை இல்லாதவன். அவன் காதலிக்காமலிருப்பதே நல்லது. காதல் என்பது ஓர் அழகிய இளமைநாடகம். ஒரு கொண்டாட்டம். அதற்கு தர்க்கமில்லாத மனம் தேவை. கணக்குபார்க்காத கற்பனாவாதம் தேவை. அவையெல்லாம் உள்ளவர்களுக்குரிய செல்வப்புதையல் அது. அவை இல்லாதவர்களிடம் அந்த உணர்வை, அந்த கொண்டாட்டத்தை, அந்த நினைவு அளிக்கும் நிறைவை சொல்லிப் புரியவைக்கவே முடியாது. அவர்கள் காதலித்தாலும் அந்த தொடக்ககாலக் கொண்டாட்டம் முடிந்தபின் கணக்கு பார்த்து சலிப்படைவார்கள்.”’

சொல்லப்போனால் எல்லா இலட்சியவாதங்களும், கற்பனாவாதங்களும் யதார்த்தப்பார்வையில் அபத்தமானவைதான். நான் என் வாழ்க்கையில் பெரும்பகுதியை, பெரும்பணத்தை ஊர்களைச் சுற்றிப்பார்க்கச் செலவிட்டவன். என் அண்ணாவுக்கு அது அசட்டுத்தனமான விஷயம், சொல்லிச் சொல்லிக் காட்டுவார். ஆனால் இதில்தான் நான் நிறைவுகிறேன், இதன் வழியாகவே நான் மேலே செல்கிறேன்

எழுத்தாளர்களை வழிபடலாகாது என்று சொல்பவர்கள் ஹிஸ்டீரியா நோயாளிகள் போல அரசியல்வாதிகளை வழிபடுவதையே நம் சூழலில் பார்க்கிறோம். எந்த தர்க்கமும் இல்லாமல் தரப்பு எடுத்து, நரம்பு புடைக்க கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு அது உலகியலில் லாபமான செயலாக தெரிகிறது. அவர்களிடம் நாம் உரையாடமுடியாது

எழுத்தாளர்களை வழிபடலாமா? நான் வழிபடுகிறேன்.என் பார்வையில் ஒரு பெரும் வழிபாட்டு நிலையில் அணுகினாலொழிய ஒரு படைப்பாளியை நன்கறிய முடியாது. கலைகளையும் கலைஞர்களையும் அப்படித்தான் அணுகவே முடியும். சில வழிபாடுகள் மெல்ல வலுக்குறையும். சில வழிபாடுகள் வாழ்நாள் முழுக்க நீடிக்கும். அந்த பெரும்பற்றுதான் சலிப்பில்லாமல் அவர்களைப் பயிலச் செய்கிறது.

டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் புளூம், பி.கே.பாலகிருஷ்ணன் , சுந்தர ராமசாமி ஆகியோர் மேல் கொண்ட பித்து அலையடித்து சில ஆண்டுகள் ஆட்கொண்டு பின்பு தணிந்துவிட்டது. நித்யா, தல்ஸ்தோய், எமர்சன் , பஷீர் மீதான வழிபாட்டுணர்வு அப்படியே நீடிக்கிறது. இந்தப் பற்றுகள் வழியாகவே நான் என்னை உருவாக்கிக் கொண்டேன். இலக்கியத்தில் கலையில் எதையாவது சாதித்தவர்கள் இதைத்தான் சொல்வார்கள்.

பொதுவாக இலக்கியச்சூழலில் மட்டுமல்ல சமூகச்சூழலிலுமேகூட எதையும் பெரிதாகச் செய்யாதவர்களின் குரலுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் பாமரஉள்ளம் ஏற்பனவற்றைச் சொல்கிறார்கள். கேட்பவர்கள் சொல்பவனையும் தங்களைப்போல ஒரு சாமானியனாக நினைக்கிறார்கள். சாதித்தவர்கள் மேல் சாமானியனுக்கு விலக்கமும் ஒவ்வாமையும் உள்ளது, அவர்கள் சொல்வதை கடைப்பிடிக்கமுடியாதென்று நினைக்கிறான். அதோடு அவர்கள் சொல்வதை எதிர்த்தால்தான் நம் அடையாளம் பேணப்படும் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் சாதித்தவர்களின் கருத்துக்களுக்கே உண்மையான பயன்மதிப்பு உண்டு.

நவீனச்சூழலில் ‘எதன்மேலும் மதிப்பில்லாமல் இருத்தல்’ என்பது ஒரு உயர்ந்த பண்பாக சிலரால் சொல்லப்படுகிறது. சமூகவலைத்தளம் வந்தபின் அது பெருகிவிட்டது. எடுத்த எடுப்பிலேயே எதையும் மதிப்பில்லாமல் விமர்சிப்பது, நிராகரிப்பது. அதில் ஓர் இன்பக்கிளுகிளுப்பு அடைவது. அதைக்கொண்டு தன்னை பெரிய ஆளாகக் கருதிக்கொள்வது இங்கே ஒரு பாமரப்போதை. அதற்கு ஏதாவது அரசியல் நிலைபாட்டையும் பாவனைசெய்ய தொடங்கினால் எல்லா கலைச்சொற்களும் கிடைத்துவிடும். ஆதரவாளர் சிலரும் அமைவர்.

அதோடு இங்கே நடுத்தரவர்க்கத்து, எளிய மனிதர்கள், இணையவெளியில் தங்களை ஒரு வகை கட்டற்ற பொறுக்கிகளாக உருவகம் செய்து முன்வைக்கிறார்கள். பல எழுத்தாளர்களும் அதைச் செய்கிறார்கள். இது ஒரு மதிப்பை உருவாக்குகிறது என்று நினைக்கிறார்கள். உண்மையில் இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பொதுவெளி நடிப்பு மட்டுமே.

அதன் நிகரவிளைவு என்பது எதையுமே கற்றுக்கொள்ள முடியாத மனநிலையை சென்றடைவது மட்டுமே. சகபாமரர் நடுவே ஒரு அடையாளம் கிடைக்கும், அதுவே ஒரே லாபம். அது ஒரு புதிய விஷயம் அல்ல, என்றும் இங்கிருக்கும் ஒரு பாமரநிலை மட்டும்தான். நடிகர்களை, புகழ்பெற்றவர்களை சாமானியர் அவன் இவன் என்று அவமரியாதையாக பேசுவதை நாம் எந்த டீக்கடையிலும் கேட்கலாம். அதை கொஞ்சம் கலைச்சொற்களுடன் சமூகவலைத்தளங்களுக்கு கொண்டுவருகிறார்கள் இவர்கள்.

ஏதோ அரிய உண்மை போல ‘எவரையுமே வழிபடாதே,பின்தொடராதே, உன் புத்தியைக்கொண்டு யோசி’ என்றெல்லாம் சொல்லப்படுகிறது. பதின்பருவத்து இளைஞனுக்கு அன்றாட உலகியலில் சொல்லப்படவேண்டிய ஆலோசனை அது. அறிவுத்தளத்தில் அது அசட்டுத்தனம். உலகிலுள்ள அத்தனை சிந்தனைகளையும் கலைகளையும் ‘பரிசீலித்து’ப் பார்க்கும் அந்த ‘புத்தி’ எங்கிருந்து வரும்? சுயமாக ஊறி மண்டைக்குள் நிறைந்திருக்குமா என்ன? அப்படி உலகையே ஆராய்ந்து முடிவெடுக்கும் புத்தி கொண்டவன் மேற்கொண்டு ஏன் வாசிக்கவேண்டும்? எதை கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும்?

கல்வி வழியாகவே ஆளுமை உருவாகிறது. சிந்தனைத்திறன் உருவாகிறது. நுண்ணுணர்வு கூர்ப்படுகிறது. அவை உருவாக சில்லறை ஆணவங்களை கழற்றிவீசி முழுதாக ஒப்புக்கொடுத்து வெறிகொண்டு பயிலவேண்டியிருக்கிறது. நமக்கு கற்பிப்பவர்களிடம் நம்மை முழுமையாக திறந்துவைக்க வேண்டியிருக்கிறது, அவர்கள் நம்மை மாற்றியமைக்க அனுமதிக்கவேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தையே அப்படி முழுமையாக அளித்தவர்களால்தான் எதையாவது கற்றுக்கொள்ள முடியும். அவர்களிடமே பிறர் சொற்களை பரிசீலிக்கும் அடிப்படைகள் அமைந்திருக்கும். எதை ஒன்றை அர்த்தபூர்வமாக நிராகரிக்கவும் அது தேவை.

நான் கலைஞர்களை, எழுத்தாளர்களை வழிபடுபவன். நான் மதிக்கும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இளையராஜாவும் ரஹ்மானும் அப்படித்தான். சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும் அப்படித்தான். இறப்பதற்குச் சிலநாட்கள் முன் ஆற்றூர் சொன்னார் ‘பி.குஞ்ஞிராமன் நாயரின் கவிதைகளை நாள்தோறும் வாசிக்கிறேன்” நான் ‘தினமுமா?”என்றேன். “ஆம், தினமும். i want to be possessed” அவர் பதின்பருவம் முதல் வாசிக்க ஆரம்பித்த கவிஞர் பி.குஞ்ஞிராமன் நாயர். ’மேகரூபன்’ முதலிய கவிதைகளை அவர் பி.குஞ்ஞிராமன் நாயர் பற்றி எழுதியிருக்கிறார்

அசடுகள் சொல்வதுபோல அந்த ஆட்கொள்ளல்நிலை எவரையும் தேங்கவிடாது, அவர்களை மேலேதான் கொண்டுசெல்லும். சிலசமயம் அந்த ஆட்கொண்ட ஆளுமையைவிடவும் மேலே கொண்டுசெல்லும். ஏனென்றால் அது கல்வி, கல்வி எவரையும் தேங்கவிடாது.

உங்களால் கலைஞர்களை, எழுத்தாளர்களை வழிபட முடியவில்லை என்றால், வழிபடக்கூடாது என்று தோன்றுகிறது என்றால், நீங்கள் வழிபட வேண்டியதில்லை— ஏனென்றால் நீங்கள் அதற்கானவர் அல்ல. ஆனால் வழிபடுபவர்களுக்கே கலையும் எழுத்தும் கனியும், மற்றவர்களுக்கு வெட்டித்தர்க்கமும் ஆணவமுமே எஞ்சும்.

உலகியல், அதைச்சார்ந்த அதிகாரங்கள், போலிப்பாவனைகள் ஆகியவற்றின்முன் ஆணவத்துடன் நிமிர்ந்து நிற்பது என்பதே கலைஞனின், அறிஞனின் இயல்பாக இருக்கும். ஆனால் தன்னைமீறிய கலையிடம், ஞானத்திடம் அவன் பணியவும் ஆட்படவும் வேண்டும். அங்கே போய் தருக்குபவன் கலையை, அறிவை அடையமுடியாத சிறுமதியாளன். நான் கலைஞன், அந்த நிமிர்வு உண்டு, ஆனால் ‘அன்னம்’ கதையின் கறுத்தசாகிப் அருகே அமர்ந்து சாப்பிடுகையில் சிறுவன். அவரை ‘போற்றிப்பாடும்’ பாணனாக என்னை உணர்கையிலேயே நிமிர்கிறேன்

ஜெ

***

முந்தைய கட்டுரைஆமை,சாவி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்