தொன்மங்களும் நவீன இலக்கியமும்

ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிலை- தவ்வை,மூத்தோள் என ஊகிக்கப்படுகிறது

அன்புள்ள ஜெ,

இந்த சிறுகதைகளில் மூதேவி போன்ற சில தொன்மங்கள் பலமுறை பலவடிவங்களில் வருகின்றன. ஒரு நவீனச்சிறுகதையில் இந்தவகையான பழைமையான தெய்வங்கள் வருவதன் அடிப்படை என்ன? நவீனச்சிறுகதையில் இவற்றுக்கு இடம் உண்டா என்ன?

ராஜ்குமார்

***

தவ்வை,மூத்தோள் சிலை

அன்புள்ள ராஜ்குமார்

நேற்று ஒரு இணையவழி உரையாடலில் இதைப்பற்றிய பேச்சுவந்தது. கதைகளில் தொன்மக்குறிப்புகள் இல்லாமலிருந்தால்தான் அது நவீன எழுத்து என்று சொன்னதாகச் சொல்லப்பட்டது. அதற்கு நான் சற்று கடுமையாகப் பதில் சொன்னேன்

இங்கே நவீனத்துவம்,நவீனம் என்றாலே பெரிதாக வாசிப்போ புரிதலோ இல்லாதவர்கள் அது சட்டை-பாண்ட் போட்டுக்கொள்வது போல , கிராப் வைத்துக்கொள்வதுபோல ஒரு  ‘ஃபேஷன்’ என்றும்; அது ஐரோப்பாவிலிருந்து வந்த பழக்கம் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அதிலிருந்து இந்த கேள்வியும் எழுகிறது.

நான் அந்த உரையாடலில் சொன்னவை இவை.

நவீன இலக்கியம் பற்றி தெரிந்த ஒருவன் ஒருபோதும் ‘நவீன இலக்கியம் என்றால் இது’ என வரையறைசெய்ய மாட்டான். உலகமெங்கும் விரிந்து பல்லாயிரம் மேதைகளினூடாக வளர்ந்து வந்த ஓர் அறிவியக்கம்- அழகியல் அலை அப்படி சில வரையறைகளை கொண்டிருக்காது என்ற புரிதல் அவனுக்கு இருக்கும். அப்படி ஒரு வரையறை முன்வைக்கப்பட்டால் மறுகணமே அதை மீறியாகவேண்டும் என எவனுக்கு தோன்றுகிறதோ அவனே நவீன எழுத்தாளன். வரையறைப்படி எழுதுபவன் மரபார்ந்த இலக்கணவாதி.

தமிழில் எழுதப்படும் சாதாரணமான நவீன இலக்கியங்களில் சாத்தான்-கடவுள் என்னும் இருமை, சிசிஃபஸ் நாரிஸிஸஸ், யுலிஸஸ், ஈடிப்பஸ் போன்ற படிமங்கள் எவ்வளவு குவிந்து கிடக்கின்றன என்று பாருங்கள். இவையெல்லாம் அராமிக், கிரேக்கத் தொன்மங்களில் இருந்து வந்தவை.இவற்றைப் பயன்படுத்தலாம் ஆனால் யமனோ,மூதேவியோ வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் எப்படி வருகிறது? சிசிஃபஸ் ஐரோப்பாவைச் சேர்ந்தது, ஆகவே நவீனமானது. மூதேவி இந்தியாவைச் சேர்ந்தது, ஆகவே பழைமையானது என்ற பாமரநம்பிக்கைதான் அது?

இந்த படிமங்களை இவர்கள் வாசிக்கும் ஐரோப்பிய படைப்புகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களுக்கு இவை நவீனத்துவத்தின் அடையாளங்கள் என நம்புகிறார்கள், ஆகவே ஆங்காங்கே தூவிவிடுகிறார்கள், அவை ஒரு தோரணையை அளிக்கின்றன, அவ்வளவுதான்.

இலக்கியத்தில் தொன்மங்கள் பயன்படுத்தப்படுவது அவை ஆழ்மனதுக்குள் ஊடுருவிச் செல்பவை, வரலாற்றையும் பண்பாட்டையும் உள்ளே கொண்டுவருபவை என்பதனால்தான். சிசிபஸோ ஈடிப்பஸோ நம் வரலாற்றையும் பண்பாட்டையும் சார்ந்தவை அல்ல. நம் ஆழ்மனதுக்குள் செல்பவையும் அல்ல. அவை நம் கனவில் எழுபவை அல்ல. இந்த அசட்டுத்தனமான அபிமானமே நம் நவீன இலக்கியத்தை ஐரோப்பிய இலக்கியப்படைப்புக்களின் மங்கலான நகலாக மாற்றிவிட்டிருக்கிறது

இந்த தொன்மங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. இன்றும் நம் சமூகக்கூட்டுமனம் அவற்றைச் சார்ந்தே செயல்படுகிறது. சோதிடம், சிறுதெய்வங்கள், புராணக்கதைகள் போன்றவையே இன்றைய தமிழ் ஆழ்மனதை கட்டமைக்கின்றன. ஆனால் அவையெவையும் இலக்கியத்தில் வரலாகாது என்றால் இவர்கள் எழுதும் நவீன இலக்கியம் என்பது என்ன? ஒரு சமூகத்தின் அகவாழ்வு அச்சமூகத்தின் இலக்கியத்தில் வரலாகாது என்ற அசட்டு வரையறை உலகின் வேறேதாவது மொழிச்சூழலில் பேசப்படுகிறதா?

இவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் ஐரோப்பிய நவீன இலக்கியமே மரபை மறுஆக்கம் செய்வதன் வழியாக உருவாகி வந்ததுதான். கிரேக்க, அராமிக் தொன்மங்களை இலக்கியரீதியாக மறுகண்டுபிடிப்பு செய்த ஒரு கூட்டுச்செயல்பாட்டைத்தான் நாம் நவீனத்துவம் என்றே சொல்கிறோம்.. மரபின் தொனமங்கள் இல்லாமல் நவீனத்துவம் இல்லை, அந்நவீனத்துவம் அடித்தளமாக அமையாமல் பின்நவீனத்துவம் இல்லை.

அதற்குப் பல படிநிலைகள் உள்ளன.ஆரம்பகால நவீன எழுத்தாளர்கள் தல்ஸ்தோய்,தஸ்தயேவ்ஸ்கி ,செக்காவ் முதல் பார்லாகர் க்வெஸ்ட், மேரி கெரெல்லி வரையிலானவர்கள் ஏசுவையும் பாவம், உயிர்த்தெழுதல் போன்ற கிறிஸ்துவக் கருத்துக்களையும்  மதத்திலிருந்து வெளிக்கொண்டுவந்து மறுகண்டுபிடிப்பு செய்திருப்பதை காணலாம். அவர்கள் கிறிஸ்துவை அவருடைய மதக்கட்டமைப்பு, வரலாற்றுக் கட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து மீட்டு தூய தத்துவ உருவகமாக ஆக்கினார்கள். ஆரம்பகால நவீன இலக்கியத்தின் முதன்மைச் சவாலே அதுதான்- மரபை மீட்டு தத்துவார்த்தப்படுத்திக்கொள்ளுதல்.

அடுத்த நிலையில் நிகாஸ் கசன்ட்ஸகீஸ், யோஸ் சரமாகோ போன்றவர்கள் அவ்வாறு முந்தைய படிநிலையில் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டு தத்துவார்த்தமாக வரையறைசெய்யப்பட்ட ஏசுவை மீண்டும் கொண்டுசென்று வரலாற்றிலும் சமூகப்பின்னணியிலும் பொருத்த முயல்கிறார்கள். மரபை புதுவரலாற்று மொழிபில் பொருத்துதல். இது ஒரு தொடர்செயல்பாடு.

யோசித்துப் பாருங்கள், இந்திய நவீனத்துவம் இந்தியப்பண்பாட்டின் அடித்தளமாக அமைந்த கிருஷ்ணனையும் புத்தரையும் அப்படி எதிர்கொண்டிருக்கவேண்டும் அல்லவா? அது எந்த அளவுக்கு நடந்தது? அதற்கும் ஹெர்மன் ஹெஸிதான் சித்தார்த்தா என எழுதி வழிகாட்டவேண்டியிருந்தது. தாமஸ் மன் தான் ‘மாற்றிவைக்கப்பட்ட தலைகள்’ என்று எழுதவேண்டியிருந்தது. அந்த அலை இன்னமும் கூட இங்கே நிகழவில்லை. ஏனென்றால் இங்கே மரபை எழுதும் அளவுக்கு அடிப்படை வாசிப்பும் பயிற்சியும் நவீன எழுத்தாளனுக்கு இல்லை. அந்த பலவீனத்தை அவன் ஒரு வசதியான பாவனை வழியாகக் கடந்துசெல்கிறான்.

ஐரோப்பிய நவீன எழுத்து என்பது தஸ்தயேவ்ஸ்கி முதல் ரோபர்ட்டோ பொலானோ வரை ஐரோப்பியத் தொன்மவியலால் கட்டப்பட்டது. நேரடியாகவும் நுண்மையாகவும். ஐரோப்பிய சினிமாவையே அந்த பின்புலம் சற்றேனும் அறியாமல் உள்வாங்க முடியாது.

நவீன இலக்கியம் ஏன் தொன்மங்களை தன் ஆதாரக் கட்டுமானப்பொருளாகக் கொண்டிருக்கிறது? ஏனென்றால் அவை பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிப்பவை. ஆழ்மனதை கட்டமைப்பவை. ஒர் உள்ளத்தின் வரலாற்று ஆழத்திற்கு, தத்துவார்த்தமான அருவநிலைக்கு, கனவுகளுக்குச் செல்வதற்கான ஒரே வழி அதுதான். அதைத் தவிர்த்து நவீன இலக்கியம் இருந்தால் அது ஆழமற்றது.

இரண்டு கேள்விகள் எழவேண்டும். ஒன்று, இலக்கிய ஆக்கத்தில் தொன்மங்கள் இருந்தாகவேண்டுமா? தொன்மங்கள் இருந்தாலே அது நல்ல கதையாகிவிடுமா?

இலக்கிய ஆக்கத்தில் தொன்மங்களோ ஆழ்படிமங்களோ இருக்கவேண்டுமா என்பது அந்த படைப்பைச் சார்ந்து ஆசிரியன் முடிவெடுக்கவேண்டியது. ஒரு கருவை சமகாலத்தில் மட்டும், அன்றாடத்தில் மட்டும், முன்பின் வெட்டிவிட்டு நிறுத்திவிடவேண்டும் என்று ஆசிரியன் எண்ணலாம். அப்போது மட்டுமே அதன் தீவிரம் வெளிப்படும் என்று நினைக்கலாம். எப்படி மரபுடன், வரலாற்றுடன் இணைப்பது ஒரு திறப்பை அளிக்குமோ அப்படியே முற்றாக வெட்டிவிடுவதும் ஒரு திறப்பை அளிக்கும். குறிப்பாக நவீனப்படிமங்களை பயன்படுத்தும் கதைகளில்.

இந்தச் சிறுகதைகளிலேயே பலகதைகளில் அப்படி நிகழ்தளம் மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டுள்ளது. உதாரணம், இடம். அதில் அந்தக்குரங்கின்மேல் அனுமாரின் சாயல் வந்தாலே கதை அதன் இலக்கை அடையாது. மரபான விஷயங்களை பகடியாக மட்டுமே பயன்படுத்தும் வடிவம் கொண்ட கதைகள் இருக்கலாம். உதாரணம், தீவண்டி. அதன் மையப்படிமம் சமகாலம் சார்ந்தது. அங்கே வேள்வியோ வேறேதுமோ குறிப்பிடப்பட்டிருந்தால் கதை விழுந்துவிடும்.

தொன்மங்களை மரபான முறையில், வழக்கமான பார்வையில், இயந்திரத்தனமாக பயன்படுத்தும்போது அவை பயனிழந்துவிடுகின்றன. சாவு வரும்போது யமன் வந்தான் என்பதுபோல. அவை வாசகனின் கனவுக்குள் ஊடுருவும்படி கூர்மையாகியிருக்கின்றனவா என்பது முக்கியம். கலையில் மறுஆக்கம் செய்யப்படும்போது மட்டுமே அது நிகழ்கிறது. மறுஆக்கம் என்பது மறுவிளக்கம் கொடுப்பது அல்ல. அது இன்றைய ஒருவாசகனின் கனவுள்செல்லும்படி உருமாற்றம் அடைவது.

ஐரோப்பிய நவீனத்துவம் ஒட்டுமொத்த கிரேக்கத் தொன்மங்களையும், கிறித்தவத் தொன்மங்களையும், பாகன் தொன்மங்களையும் முழுமையாக மறுஆக்கம் செய்தது. அப்படிச் செய்யப்பட்ட மரபின்மேல் மீண்டும் ஊடுருவியது. இந்தியாவில் அது நிகழவில்லை. மரபை மறுஆக்கம்செய்த, ஊடுருவிய மகத்தான ஆக்கங்கள் இருநூறாவது உள்ளன என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இந்தியத் தொன்மவியல், இந்திய நாட்டாரியல் மிகமிகப் பிரம்மாண்டமானது. ஆகவே நவீன இலக்கியம் கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாகவே உள்ளது

ஜெ

***

முந்தைய கட்டுரைசிந்தே, தூவக்காளி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு