அறுபத்தொன்பதுடன் கதைகளை முடித்துக்கொண்டபோது மேலும் கதைகள் மனதில் எஞ்சியிருக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக்கதைகள் மனதைவிட்டுச் சென்றபோது புதிய கதைகள் எழுந்து வந்தன. இது எல்லா கதையாசிரியர்களுக்கும் நான் சொல்வதுதான். எழுதுங்கள், எழுதியவை விலகும்போது புதியவை அடியிலிருந்து எழுந்து வரும். வரவில்லை என்றால் நல்லதுதானே, அது ஒரு நிறைவு
இந்தக்கதைகளுக்கான மனநிலை ஒன்றே. ஒருபக்கம் அன்றாடத்தின் பொருளில்லா சுழற்சியில் இருந்து கற்பனை வழியாக தப்பிக்கும் விழைவு. இன்னொருபக்கம் நலிந்த தனிமையில் தன்னிச்சையாக உருவாகிப் பெருகி யதார்த்தத்தை விடப்பெரிதாக நின்றிருக்கும் கனவு. கனவுகள் மேலும் கனவுகளை உருவாக்குபவை. ஒரு கதையை எழுதிமுடித்துவிட்டால் உடனே அதிலிருந்தே இன்னொரு கதை வந்து அருகே நிற்கிறது. ஒரு கேள்விக்கு ஒரு கதையை பதிலென கண்டடைந்தால் அக்கேள்வி சற்றே திரும்பி இன்னொரு கேள்வியாக மாறி இன்னொரு கதை நோக்கிச் செல்கிறது.
நேரடியாகவே கனவாக வந்த கதைகள் உண்டு. கழுமாடன் கதை என் இணையதளத்தில் வெளியாகி அதை நான் மெய்ப்பு பார்ப்பதாக கனவு. காலையில் எழுந்தால் அந்தக் கதையை எழுதவே இல்லை என்று தெரிந்தது, அந்தக்கதையை எண்ணக்கூட இல்லை. ஆனால் அந்த மாடனின் புகைப்படம் நான் முந்தையநாள் நடைசெல்லும்போது எடுத்தது. கனவில் கண்டகதையை திரும்ப எழுதினேன்.
சிலகதைகள் மிகமெல்லிய ஒற்றைவரிகள். ‘அப்பா ஒரு சிங்கத்தை வளர்த்தார்’ என்பது நடைசெல்லும்போது வந்த வரி. திரும்பிவந்து அமர்ந்து பதினொரு மணிக்கு சிந்தே கதையை எழுதி முடித்துவிட்டேன். இம்முறை பன்னிரண்டு கதைகளை எழுதி முன்சென்ற பின்னரே கதைகளை வெளியிடத் தொடங்கினேன்.வெண்முரசும் எழுதவேண்டியிருந்தது.
ஆனால் என் இயல்புக்கு எங்காவது தொடங்கி எழுதிச்சென்று கதை தன்வழியில் வளர்ந்து தனக்கான வடிவையும் முடிவையும் அடைந்தால்தான் உண்டு.பாதியில் நின்றால் அவ்வளவுதான். அதை அப்படியே கைவிடவேண்டியதுதான். இன்று கைவிட்ட கதைகளை எல்லாம் முழுக்க அழித்துவிட்டேன். அவை கையில் இருந்தாலே பெரிய மனச்சிக்கலை அளிக்கின்றன. ஒரே வீச்சில் வடிவமும் மொழியும் வரவேண்டும். கொஞ்சம் யோசித்தாலும் போய்விடும். கனவை கனவென்று உணர்ந்ததுமே விழிப்பு வருவதுபோல
இக்கதைகளில் பலவகையான உலகங்கள் உள்ளன. பலவகையான கூறுமுறைகள். பலவகையான சிக்கல்கள். ஆனால் அடிப்படையில் கதைகளில் ஆர்வமுடைய, கனவு காணக்கூடிய அந்தச் சிறுவனே அழியாமல் இருக்கிறான். அவனுடைய வாழ்க்கை அன்றுமுதல் இன்றுவரை கற்பனைகளால்தான் செறிவூட்டப்பட்டிருக்கிறது. என்னை கனவுகாண்பவன், கதைசொல்லி என்ற அடையாளத்துடன் மட்டுமே முன்வைக்க விரும்புவேன்.
இன்று [1-7-2020] மாலை வரம் எழுதி முடிக்கையில் நூறு கதை என்ற நினைவு. நூறு என்பது நல்ல எண் என்பதனால் நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனால் கதைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் எழுதலாம். எழுதும்போது உற்சாகமாக இயல்பாக இருக்கிறேன். எழுதாத போது நாட்கள் முள்மேல் உரசிச் செல்கின்றன. எவரையாவது குதறி வைப்பேன், அல்லது என்னை நானே குதறிக் கொள்வேன்.
எத்தனை கதைகள். இந்த நூறு கதைகளில் இத்தனை ஆண்டுகளில் நான் ஒருமுறைகூட எழுதாத காஸர்கோட்டின் மக்களும் மண்ணும் உருவாகி வந்திருக்கின்றன. நான் நினைத்துக்கூட பார்க்காத என் தொலைதொடர்புத்துறை வாழ்க்கை வந்திருக்கிறது. இப்போது பார்க்கையில் நட்பும் கிண்டலும் கலந்த சாவகாசமான ஒரு வாழ்க்கை அப்போது அரசுத்துறைகளில் இருந்திருக்கிறது. இன்று அது இல்லை என நினைக்கிறேன்.
இந்தக்கதைகளில் நான் சென்ற நிலங்கள் உள்ளன. லடாக் ஸ்பிடிவேலி போல. நான் கனவுகாணும் நிலம் உள்ளது திபெத் போல. நான் சென்றுமீளும் வரலாற்று உலகம் ஒருபக்கம், என் நினைவில் நான் அடுக்கிக்கொண்ட என் இளமைப்பருவ வாழ்க்கை இன்னொரு பக்கம். ஒவ்வொரு உலகிலும் சென்று வாழ்ந்து மீண்டேன். அங்கே மனிதர்கள் நிறைந்திருந்தனர். எழுதப்பட்டவர்களை விட எழுதப்படாதவர்களே மிகுதி.
அந்த இளமைப்பருவம் பற்றி இதுவரை பெரிதாக ஏதும் எழுதியதில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இப்போது இத்தனை தொலைவு வந்த பின்னர்தான் அதை நான் மறு உருவாக்கம் செய்துகொள்ள முடிகிறது. அப்போதுகூட என் அம்மா கதைகளில் பெரிதாக உருவாகி வரவேயில்லை. ஏன் என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் இந்நாட்களில் நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை அம்மா கனவில் வந்துகொண்டே இருந்தார்கள்.
இந்த மண் அப்படிப்பட்டது. இவ்வளவு எழுதியிருந்தாலும் இதை இப்போதுதான் இத்தனை வீரியத்துடன் கதைகளால் எதிர்கொள்கிறேன். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே குமரிநிலம் அளவுக்கு தெய்வங்களும் தொன்மங்களும் வரலாறும் நிறைந்த நிலம் வேறு இருக்கமுடியாது. குருதியும் கண்ணீரும் இவ்வளவு சிந்தப்பட்டிருக்காது.
என் குமரிநிலத்தின் கதையை ஒருபக்கம் தொன்மங்களாக, மறுபக்கம் வரலாறாக, இக்கதைகளில் எழுதியிருக்கிறேன். அடர்காடும் மலைகளும் கடற்கரையும் அருகருகே அமைந்த இந்தச் சிறிய நிலப்பகுதி மாறுபட்ட நிலங்களின் கலவை. வளமான நிலம் என்பதனால் மூவாயிரம் வருட வரலாறும் மேலும் பல்லாயிரம் வருட தொன்மப்புலமும் கொண்டது. உயர்நாகரீகமும் பழங்குடி வாழ்வும் அருகருகே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது.
இதை எழுதப்புகும் எழுத்தாளன் பல்லாயிரம் தெய்வங்களாலும் பேய்களாலும் பீடிக்கப்படுகிறான். அவன் விலக நினைக்கலாம், தெய்வங்கள் விடவேண்டும்.இத்தெய்வங்கள் என்னை சூழ்ந்துகொண்டு அழுத்தின. இன்றும் உடனிருக்கின்றன. இன்னும்கூட அவற்றைப்பற்றி நான் எழுதக்கூடும். என் இளமையில் எழுதியிருந்தால் அவை வெறும் உருவகங்களாக இருந்திருக்கும், இப்போது அவை இவ்வுலக உண்மைகள் போல இன்னொரு வகை மெய்மைகள் என அறிவேன்.
வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால் இந்த நான்குமாதங்களில் வாழ்விலிருந்து விடுபட்டுவிடவேண்டும் என்ற அதியுக்கிரமான விழைவால் பீடிக்கப்பட்டிருந்தேன். மிகமிக தீவிரமானது. குடும்பம் என்னும் தளை மட்டுமே அதற்கு எதிரானதாக இருந்தது- ஆனால் அதிலும் நான் பெரிதாகச் செய்ய ஏதுமில்லை.
உடனே எளிதாக தற்கொலை விழைவு என்று எவரும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. எளிமையான ஆறுதல் தேறுதல் எதையும் சொல்லவும் வேண்டியதில்லை. ஏனென்றால் அது மனச்சோர்வோ சலிப்போ ஏதுமில்லை. இனிமையும் நிறைவும்தான், ஆனால் எஞ்சுவதொன்றுமில்லை ஆகவே எஞ்சவேண்டியதில்லை என்னும் எண்ணம். வடக்கிருந்து உயிர்துறப்பதோ நீர்புகுவதோ இந்திய மரபில் உயர்வான முடிவென்றே சொல்லப்பட்டுள்ளன.
இந்த நூறுகதைகளில் முதல்கதை அந்த மனநிலை பற்றித்தான். [எண்ண எண்ணக் குறைவது] அதனுடன் போராட நான் முயலவில்லை. அப்படி போராட முடியாதென்று தெரியும். ஆகவே அதை திசைதிருப்ப முயன்றேன். அதன்பொருட்டே இக்கதைகளை எழுதினேன். வெறியுடன், விசையுடன். ‘எண்ண எண்ணக்குறைவது’ முதல் ’வரம்’ வரை ஒரு பயணம் நிகழ்ந்துள்ளது. என்ன என்று என்னால் வரையறை செய்ய முடியவில்லை. ஆனால் இது வெண்முரசில் இருந்து ஒரு திசைதிரும்பும் பயணம்.
***