திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருடன் கதைகளில் வாழ்கிறான். அன்னையர் மைந்தர்களை மடியில் வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் வழிவழியாக வரும் திருடர்களின் கதைகளைச் சொல்கிறார்கள். சபைகளில் எவரேனும் திருடர்களைப் பற்றி வெடிப்புறப் பேசுகிறார்கள். திருடன் காகத்தில் குரங்கில் பூனையில் வெளிப்படுகிறான். குழந்தைகளில் வெளிப்படுகையில் அனைவரும் மகிழ்ந்து சிரிக்கிறார்கள்.
திருடர்கள் பொதுவாக நன்றாகக் கதை சொல்வார்கள். திருட்டை அவர்கள் ஒரு பரபரப்பான நுட்பமான கதையாகவே முதலில் நிகழ்த்திக் கொள்கிறார்கள். அதை வேறுவகையாக விரிவாக்கி தன் நண்பர்களிடமும் காதலியரிடமும் பெருமையடித்துக் கொள்கிறார்கள். பிடிபடும்போது முற்றிலும் வேறொரு கதையாக மாற்றி கண்ணீருடன் சொல்கிறார்கள். அவர்களே அக்கதையை மற்றொன்றாக பிறர்வாய்களில் இருந்து கேட்கிறார்கள்.
திருடன் இரவில் பக்கத்து ஊருக்கு வந்து இறங்கினான். அங்கே இரவுவரை காத்திருந்தபின், இருட்டு போதுமான அளவு செறிவடைந்த பிறகு, தாழை செறிந்த கரைகள் கொண்ட தாரவாஹினி ஆற்றின் வெண்மணல் பரப்பு வழியாக கையில் ஒரு பையுடன் நடந்து வந்தான். அவன் அவசரமில்லாமல்,, எவர் பார்த்தாலும் வழிதவறிய குடிகாரன் என்று தோன்றும்படி நடந்தான். அவனுக்கு வலப்பக்கம் தாரவாஹினி ஆற்றில் கரிய நீர்ப்பரப்பின் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருந்தன.
ஏழாம் நிலவு வானில் எழுந்திருந்தது. அந்த மென்மையான ஒளியில் இலைகள் இருளுக்குள் பளபளத்தன. தென்னை ஓலைகளின் ஒவ்வொரு பீலியும் தனித்தனியாக வானின் பகைப்புலத்தில் துலங்கித் தெரிந்தன. காற்று வீசி நிழல்களை இழுத்து நெளியச்செய்து அடங்கியது. காற்றில் பகல்வெம்மையில் வெந்து உதிர்ந்த மலர்களின் ஆவிமணம் இருந்தது. நீர்ப்பாசியின் மணமும் குளிரும் கலந்திருந்தது.
சீவிடுகளின் கூரியஓசை இரவை முடிவில்லாமல் கிழித்துக் கொண்டே செல்ல, அதை அடிக்கோடெனக் கொண்டு கூகைக் குமுறல்களும் தவளைக் கூச்சல்களும் சிற்றோடைகளின் நீரொலியும் கேட்டன. மிகமிக தொலைவில் எங்கோ ஏதோ மாதாகோயிலின் மணியோசை ஒரு மழைத்துளி நீர்ப்பரப்பில் விழுந்து கரைவதுபோல அலையெழுந்து அடங்கியது.
திருடன் அடர்நீலநிறமான சாயவேட்டியை மடித்து கட்டியிருந்தான். சாம்பல் நிறமான சட்டை. அவன் வெண்மணல் பின்னணியில் நிழலுரு போல தோன்றினான். அசையாமல் நின்றுவிட்டால் மணலில் விழுந்து கிடந்த தென்னை மட்டைகளின் வெவ்வேறு வடிவம்கொண்ட நிழல்களுடன் அவனும் கலந்துவிடுவான்.
அவன் ஆற்றங்கரையில் இருந்து மேடேறும் ஊடுவழியை அடையாளம் கண்டபின் அதன் வழியாக மேலே சென்றான். அவன் வருகையை காகங்கள் கலைந்து ஓசையிட்டு அறிவித்தன. காலடியோசை கேட்டு புதர்களுக்குள் ஏதோ ஓடி அப்பால் சென்றது. தவளை ஒன்று அவன் காலடிக்குக் குறுக்காகப் பாய்ந்தது.
திருடன் மேப்பலூர் ஸ்ரீமங்கலை பகவதி கோயிலின் நிழலுருவை தூரத்தில் பார்த்தான். அதற்குமேல் வானம் நிலவொளியால் எண்ணை தேய்த்த தாள்போல ஊமைஒளி கொண்டிருந்தது. அவன் கோயிலை அணுகி நின்று வேட்டியை உதறி மீண்டும் மடித்துக் கட்டிக்கொண்டான். செருப்பை உருவி அங்கே நின்றிருந்த முதுமையான இலஞ்சி மரத்தின் பொந்துக்குள் ஒளித்து வைத்தான்.
திருடன் ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தபடி கோயிலின் கல்படிமேல் அமர்ந்தான். கன்னம் குழிந்து எழ, வானத்தையும் மரக்கூட்டங்களின் நிழலுருவ விளிம்புகளையும் பார்த்தபடி அந்த பீடியை அவன் முழுமையாக இழுத்து முடித்தான். பின் அந்த குச்சியை மணலில் அணைத்து தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். எப்போதுமே அப்படிச் செய்யும்படி அவன் பழகிவிட்டிருந்தான்.
திருடன் பெருமூச்சுடன் எழுந்து மூச்சை இழுத்துவிட்டபின் மேப்பலூர் பகவதி கோயிலின் கிழக்கு நோக்கிய மரவாசலை பூட்டியிருந்த துருப்பிடித்த பூட்டை, தன் பைக்குள் இருந்து எடுத்த ஒரு சிறு இரும்புக் கம்பியை உள்ளேவிட்டு நெம்பி திறந்தான். ஆனால் கதவு உளுத்துப்போய் உதைத்தாலே உடைந்துவிடும் நிலையில் இருந்தது. அதைச் சத்தமின்றி திறந்து உள்ளே போனான். அதை உள்ளே சாத்திக்கொண்டான்.
பகவதியின் கருவறை மேற்கு நோக்கியது. அது மிகப்பழைய கோயில், கல்லாலான பகவதி கோயில்கள் அப்பகுதியில் ஒன்றிரண்டுதான். அங்குள்ள வழக்கப்படி மேப்பலூர் பகவதி கோயிலும் வட்டவடிவமானது. கல்லால் ஆன அடிஸ்தானம் துல்லியமான வட்டமாக மூன்று அலைவளைவுகளாக அமைந்திருந்தது. அதன்மேல் கல்லடுக்கி எழுப்பப்பட்ட வட்டச் சுவரில் பின்பக்கம் மட்டும் ஒரு சிறுகோட்டம். அதில் பகவதியின் பெருந்தோழியின் சிறிய சிலை கோயில் கொண்டிருந்தது.
கோயிலின் கூரையும் கல்தான். கல்லடுக்கிய தளத்தின்மேல் முற்காலத்தில் கற்களாலான சிறிய கோபுரம் இருந்திருக்க வேண்டும். அதன் சிற்பங்களும் வளைவான கோட்டங்களின் அலங்காரக் கற்களும் உதிர்ந்து, உள்ளே அக்கற்களை பொருத்திப் பிடித்து வைத்திருந்த சுதைமையம் மண்குவியலாக ஆகி, அதன்மேல் நாணல்களும் நெருஞ்சியும் முளைத்து, அந்த கோடையில் முற்றாகக் காய்ந்து, இருளில் வானத்தின் பின்னணியில் சிலுப்பி நிற்கும் பரட்டைத்தலையின் முடிபோல தெரிந்தது.
கூரைவிளிம்பின் கற்பலகைகள் சரிந்து வந்து விளிம்பு நீட்டி நின்றிருந்தன. ஆனால் அவற்றில் பெரும்பகுதி நெடுங்காலம் முன்பே உதிர்ந்துவிட்டிருந்தது. மழைநீர் கற்சுவர்களில் வழிந்த தடங்கள் ஆலமரவிழுதுகள் போல இறங்கி மண்ணில் படிந்திருந்தன. கோயிலின் கல்விரிசல்களுக்குள் வேரிறக்கி மேலெழுந்த ஆலமரங்களை அவ்வப்போது வெட்டி விட்டிருந்தாலும் வேர்கள் பாம்புச் சட்டைகள் போல காய்ந்து படிந்து எஞ்சியிருந்தன.
திருடன் கோயிலின் கருவறையைப் பூட்டியிருந்த பூட்டை ஒரு சிறு ஆணியால் திறந்தான். கருவறைக்குள் கரிய சுவர்போல் இருட்டு நின்றது. அவன் கூர்ந்து நோக்கிக் கொண்டே நின்றான். மிக மிக மெல்ல உள்ளே நின்றிருந்த பகவதியின் கற்சிலையின் விளிம்புக்கோடு தெளிவடைந்து வந்தது.
பிரமைதானோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு மிகமெல்லிய கோடுகள்தான். அதிலேயே பகவதியின் முகத்தின் மூக்குச்செதுக்கும், இதழ்க்குமிழ்வும், கன்னத்து மெருகும், தோள்குழைவும், முலைமுகிழ்ப்பும், இடைவளைவும், தொடையுருள்வும் துலங்கி வந்தன. அவன் அதைப் பார்த்துக்கொண்டே சற்றுநேரம் நின்றிருந்தான்.
அந்த பகவதி நூறாண்டுகளுக்கு முன்புவரை அப்பகுதியை ஆட்சி செய்த மேப்பலூர் மூப்பர்கள் என்னும் சிற்றரசர் குடும்பத்தவரின் குலதெய்வம். முந்நூறாண்டுகளுக்கு முன்பு அவர்களில் புகழ்மிக்கவர் ஒருவரால் கட்டப்பட்டது. அன்று கோயிலில் மூன்றுகாலம் பூசையும் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்களும் யானைமேல் எழுந்தருளலும் இருந்தன.
மேப்பலூர் குடும்பம் மெல்ல மெல்ல அதிகாரமிழந்து வெறும் நிலக்கிழார்களாக நீடித்தது. சுதந்திரம் கிடைத்து, புதிய குத்தகைச் சட்டங்கள் வந்தபோது நிலங்களை இழந்தது. அவர்கள் எஞ்சிய செல்வங்களுடன் அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். கோயிலில் நாள்பூசையும் சடங்குகளும் சீராக நடைபெறுவதற்குரிய நிலங்களை அளித்து ஒரு குடும்பத்தினரை பொறுப்பாக்கிவிட்டுச் சென்றனர்.
மேலும் ஒரு தலைமுறைக்காலம் அவர்கள் பலிகொடைக்கும் அன்னப்படைப்புக்கும் வந்து கொண்டிருந்தனர். முந்தைய தலைமுறையினர் ஒவ்வொருவராக மறைந்து, திருவனந்தபுரத்தில் இருந்து அவர்களின் வாரிசுகள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தபோது அந்தக்கோயிலை அவர்கள் மறந்தார்கள்.
அக்கோயில் இருந்த இடம் தாரவாஹினி ஆற்றங்கரையைச் சூழ்ந்திருந்த தென்னந்தோப்புகளுக்கும் தோட்டங்களுக்கும் நடுவே காடுமண்டிப்போன ஒரு குன்றின் அடிவாரம். அங்கே சுற்றிலும் வீடுகள் எவையும் இல்லை. தேங்காய் பறிப்பதற்கு மாதமொருமுறை வருபவர்கள் அன்றி மக்கள் நடமாட்டம் இருப்பதில்லை. அங்கே ஒரு கோயில் இருப்பதே ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஊரில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
மேப்பலூர் ஸ்ரீமங்கலை பகவதியின் கோயிலின் முழுப்பொறுப்பும் கோயிலில் இருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் தனியாக அமைந்திருந்த மேப்பலூர் போற்றிமனையிடம் இருந்தது. நூறாண்டுகளுக்கு முன்பு அந்த மனையைச் சேர்ந்த கேசவன் போற்றியிடம்தான் மேப்பலூர் குடும்பத்தினர் கோயிலை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். சூழ்ந்திருந்த தோப்புகள் எல்லாம் அவர்களுக்கு ஊதியமாக அளிக்கப்பட்டன.
நூறாண்டுகளில், நான்கு தலைமுறைக் காலத்தில், அந்நிலங்கள் அனைத்தும் மேப்பலூர் போற்றிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டன. குத்தகைதாரர்களும் பட்டாதாரர்களும் நிலங்களை தாங்களே எடுத்துக்கொண்டனர். உள்ளூர் பண்ணையார்களும் நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டனர். போற்றிகளின் நிலஉரிமை சிக்கலானது, நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட முடியாதது.
மேப்பலூர் போற்றிகள் நொடித்து, வீட்டைச் சூழ்ந்திருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் தேங்காய், பாக்கு, வாழைக்குலைகளைக் கொண்டும் தொலைதூரம் சென்று வீடுகளில் பூசை செய்து ஈட்டும் ஓரிரு நாணயங்களைக் கொண்டும் அரைப்பட்டினியாக வாழ்ந்தனர். மேப்பலூர் குடும்பத்தின் அப்போதைய தலைவரான பார்கவன் போற்றியும் அவருடைய மனைவி சாவித்ரியும் ஒரே மகள் ஸ்ரீதேவியும் மட்டுமே அங்கே அப்போது குடியிருந்தனர்.
பகவதிக்கான பூசைகளை மட்டும் அவர்கள் விடாமல் செய்து வந்தமையால் கோயிலில் நாளும் ஒருவேளை விளக்கெரிந்தது. கைப்பிடி அவல் நனைத்து நைவேத்தியமும் செய்யப்பட்டது. ஆனால் ஏற்கனவே அடித்தளம் சற்றே அசைந்து, கற்கள் விலகி, சுவர்விரிசல்கள் விழுந்துவிட்டிருந்த கோயில் நாளுமென அழிந்து கொண்டிருந்தது. அக்கோயிலில் பல ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒரு பக்தர்கூட வந்து வணங்கியதில்லை என்றாலும் கருவறைக்குள் பேரழகியான பகவதி கன்னங்கரிய ஒளிகொண்ட உடலுடன் நின்று மலர்ந்த விழிகளால் நோக்கிக் கொண்டிருந்தாள்.
மேப்பலூர் மனையின் பார்கவன் போற்றிக்கு எட்டாண்டுகளாக கண்களில் திமிரநோய் வந்து உலகின்மேல் வெள்ளைப் புகைத்திரை படிந்துவிட்டது. அவர் கால்பழக்கத்தால் வந்து கைப்பழக்கத்தால் பூசைசெய்து திரும்பிச் செல்வதனால் பகவதியை எவருமே பார்ப்பதில்லை.
எவரும் பார்க்காத மேப்பலூர் ஸ்ரீமங்கலை பகவதியின் விழிகளை திருடன் இருட்டால் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த விழிகள் அவனை அறிந்திருந்தன, புன்னகைக்க தயங்கிக் கொண்டிருந்தன. அவன் உடைந்து சரிந்து நெருஞ்சி முளைத்து காய்ந்திருந்த படிகளில் ஏறி உள்ளே சென்றபோது அவை துணுக்குற்றன. பதற்றமும் படபடப்புமாக அவனைப் பார்த்தன.
அவன் உள்ளே சென்று கருவறையின் கதவுகளை மூடி உள்ளே தாழிட்டுவிட்டு அமர்ந்தான். பின்பு தன் பையை அருகே வைத்து அதற்குள் இருந்து தீப்பெட்டியையும் எண்ணைப்புட்டியையும் வெளியே எடுத்தான். இருபுறமும் இருந்த கல்விளக்கில் எண்ணையை ஊற்றி திரியிட்டு பற்றவைத்தான். கருவறை அந்த ஒளியில் திரண்டு வந்தது. சிறிய வட்டவடிவ அறை. தரையில் கல்பாளங்கள் எழுந்தும் சரிந்தும் கிடந்தன. பகவதியின் முகம் சிவந்த ஒளியில் அனல் கொண்டது.
அவன் பையில் இருந்து ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்தான். அவற்றை வெவ்வேறு இடங்களிலிருந்து அவன் சேகரித்திருந்தான். சிலவற்றை அவனே செய்திருந்தான். இன்னொரு பகவதி கோயிலின் அருகே கடைகளில் விற்கும் தேவிக்கு வேண்டுதலாகச் சார்த்தப்படும் பித்தளையாலான உயரமான கிரீடமும் புஜகீர்த்திகளும் ஆபரணங்களும் அவனால் கடையை உடைத்து திருடப்பட்டவை. மலிவான குருதிநிற நைலான் சேலையும் மலர்மாலைகளும் கடையில் வாங்கியவை.
அத்திருடன் மிக ஏழை. அவன் நல்ல திருட்டொன்றைச் செய்து நீண்டநாளாகிறது. போலீஸ் அவனைப் பிடித்து அவனிடமிருந்த முழுப்பணத்தையும் கைப்பற்றி சிறையிலடைத்தது. அவன் சிறைமீண்டு வந்தபோது போலீஸின் அடியால் குதிகாலிலும் தோள்பட்டையிலும் கடுமையான நீடித்த வலி இருந்தது. அவனால் முன்பு போல மதில்களை ஏறிக்குதிக்கவும், தூண்களில் தொற்றி ஏறவும், ஓட்டுக்கூரைமேல் தவழவும், கம்பிகளை வளைக்கவும் முடிவதில்லை.
அவன் மிகச்சிறிய திருட்டுகளில் அன்றாட உணவுக்கு தேவையானவற்றை மட்டுமே திருடிக் கொண்டிருந்தான். அந்த கையிருப்பும் தீர்ந்துவிட்டமையால் சிலநாட்களாக ஒருவேளை மட்டும் உணவு உண்டு, அவன் வாடகைக்கு எடுத்திருந்த உடைந்துபோன கூரைகொண்ட ஒற்றை அறைக்குள் தனியாக தங்கியிருந்தான். முந்தையநாள் மாலைதான் தன்னிடமிருந்த டார்ச் லைட்டையும் விற்றிருந்தான்.
திருடன் பகவதியை அலங்கரிக்கத் தொடங்கினான். சேலையை மிக அழகாக சுற்றி அணிவித்தான். நிறைவுறாமல் கொசுவங்களின் விசிறிமடிப்பையும் முந்தானையின் அடுக்குகளையும் மீண்டும் மீண்டும் சீரமைத்துக்கொண்டே இருந்தான். அதன்பின் நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து அணிவித்தான். அவை ஒன்றுடன் ஒன்று சரியாக இசைந்து போவது மனதுக்கும் கண்ணுக்கும் நிறைவளிக்கும் வரை மாற்றி மாற்றி அமைத்தான்.
காதில் குழைகளும், மார்பில் பதக்கமாலைகளும், இடுப்பில் மேகலையும், தோள்களில் தோள்வளையும், மணிக்கைகளில் காப்புகளும் கங்கணங்களும், காலில் சிலம்பும் அணிவித்தான். அவை எளிமையான நகைகள் என்றாலும் அந்த செவ்வொளியில் அவை பொன்னென்று மாறின. ஒவ்வொன்றும் பொன் என மாறும் ஒரு தருணம் உண்டு.
திருடன் ஆபரணத்தால் பொலிந்த ஸ்ரீமங்கலை பகவதியை விழிகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தான். பின்னர் தேவியைச் சுற்றியிருந்த கல்லால் ஆன ஜோதிவலையத்தில் இருந்த நூற்றெட்டு கல்லகல் விளக்குகளிலும் எண்ணை ஊற்றி திரியிட்டு சுடரேற்றினான். அவனே மண்விளக்குகளை கொண்டு வந்திருந்தான். தேவியின் காலடியிலும் கருவறையின் உள்ளே படிகளிலும் எல்லாம் வரிசையாக அவற்றை ஏற்றிவைத்தான். கருவறை உருகிய பொற்குழம்பு என தகதகத்தது. அதில் பொன்னாலான ஒரு பெரிய குமிழி போல பகவதி நின்றிருந்தாள்.
திருடன் கோயிலின் கருவறைக்குள் தொங்கிய இரண்டு மணிகளின் நாவுகளிலும் கயிற்றை கட்டி அவற்றின் நுனியில் இரண்டு பனையோலைவிசிறிகளை கட்டித் தொங்கவிட்டான். கருவறையின் கதவின் கீலில் எண்ணை ஊறி எளிதாக்கிவிட்டு அதைச் சற்றே திறந்து வெளியே வந்து அதை மூடினான். மூடுவதற்குள் உள்ளே எல்லா விளக்குகளும் எரிகிறதா என்று பார்த்தான். பின்னர் மெல்லிய காலடிகளுடன் சென்று அங்கிருந்த ஒரு தூணுக்குப் பின்னால் முழுமையாக மறைந்துகொண்டான்.
அவனுடைய கால் நீண்ட நடையால் சற்று வீங்கி வலித்துக்கொண்டிருந்தது. அவன் அதை நீட்டி, முதுகை பொளிந்த கற்சுவரில் சாய்த்து, அமர்ந்தான். கண்களை மூடிக்கொண்டான். அவன் முகத்தில் ஓர் எதிர்பார்ப்பும், அவனால் வகுத்துக் கொள்ள முடியாத துயரமும் இருந்தன.
திருடன் அருகே இருந்த மேப்பலூர் மனையை தன் கற்பனையால் பார்த்தான். அதன் பின்புற வாசலை திறந்து மேப்பலூர் பார்கவன் போற்றியின் மகளான ஸ்ரீதேவி இருட்டில் ஓசையில்லாமல் வெளியே வந்தாள். கதவை மூடிவிட்டு கொல்லைப்பக்க முற்றத்திற்கு இறங்கினாள். அவள் இடுப்பில் பழைய ஒற்றைவேட்டி கட்டி, மேலே நைந்துபோன ஜாக்கெட் அணிந்திருந்தாள். வெளியே வந்து கொடியில் கிடந்த இன்னொரு கந்தலை எடுத்து முந்தானையாக போட்டுக்கொண்டாள். பெருமூச்சுடன் திரும்பி மனையை பார்த்துவிட்டு நடந்தாள்.
மேப்பலூர் மனை ஒருகாலத்தில் மிகப்பெரிய வீடாக இருந்தது. அதைச்சுற்றி இருந்த மண்ணாலான தடித்த சுவர் இடிந்து சரிந்து, மழையில் கரைந்து, மண்குவியலாக ஆகி, முட்செடிகள் முளைத்த புதர்வேலியாக மாறியிருந்தது. ஓடுபோட்ட கட்டிடத்தின் முன்பகுதிகள் முன்னரே கூரை சரிந்து விழுந்து, சுவர்கள் இடிந்து மண்மேடாகி, புதர்கள் முளைத்திருந்தன. எஞ்சிய பகுதி ஒருபக்கமாகச் சரிந்து நின்றிருந்தது. ஓடுகள் விலகிச்சரிந்த கூரை தாழ்ந்து தரையை தொட்டு ஊன்றி நின்றது.. முன்பு தொழுவமாகவும் உரல்புரையாகவும் இருந்த இடங்களெல்லாம் மண்மேடுகளாகிவிட்டிருந்தன.
அவள் கொல்லைப்பக்கம் இருந்த சிறிய வழியினூடாக வளைப்பிலிருந்து வெளியே வந்தாள். மீண்டும் ஒருமுறை வீட்டை பார்த்துவிட்டு சிறிய ஒற்றையடிப் பாதையினூடாக நடந்தாள். அவளுடைய வெள்ளை உருவம் நிலவொளியின் ஒரு சிறு கீற்றுபோல அசைந்தது. அவள் பதற்றத்துடன் ஆனால் தயக்கமும் இல்லாமல் நடந்தாள்.
அவள் தென்னந்தோப்புக்கு குறுக்காக ஏறி கோயிலின் மேற்கு முற்றத்தை வந்தடைந்தாள். நிலவொளியில் அவளுடைய கூந்தலின் இழைகள் மின்னின. அவளுக்கு பின்னாலிருந்து வீசிய காற்றில் அவள் கூந்தல் எழுந்து முன்னால் பறந்தது முடிச்சுருள்களின் நிழல் முகத்தில் விழுந்து அசைந்தது.
அவள் உடலில் காதிலோ கழுத்திலோ கையிலோ நகை என ஏதுமில்லை. தொடர்ந்த பட்டினியால் மெலிந்து வெளிறிய சிறிய உருவம். நரம்போடிய சிறிய கைகளும் ,மெல்லிய உதடுகளும், கூரிய மூக்கும், அச்சம்நிலைபெற்ற கண்களும் கொண்டவள். புறாபோல சிற்றடி எடுத்துவைத்து நடந்து வந்தாள்.
அவள் ஒவ்வொரு நாளும் குடிப்பதற்கான நீரை மட்டும் கோயிலின் வளைப்புக்குள் இருந்த கிணற்றிலிருந்து எடுத்து வந்தாள். அவர்களின் வீட்டு வளைப்புக்குள் இருந்த கிணற்றின் சுவர்கள் உள்ளே இடிந்துவிழுந்து வெளிநீர் உள்ளே செல்லும் என்பதனால் அதைக் குடிக்கமுடியாது. அந்தக்கிணறு வற்றி அப்போது நீரும் இல்லாமல் இருந்தது. அதற்குள் புதர்கள் முளைத்து செறிந்து மேலே வந்திருந்தன.
கோயில் கிணறு மிக ஆழமானது. உள்ளே பார்த்தால் அது பாதாள உலகுக்கான பாதைபோல முடிவில்லா இருளாகத் தெரியும். அங்கே ஒரு மாநாகத்தின் கண் இருப்பதுபோல. அவள் அந்த கிணற்றின் கல்படிகளில் அமர்ந்து நீண்டநேரம் தன்னிரக்க நினைவுகளில் மூழ்கி இருப்பதுண்டு. பலநூறு முறை அதில் குதித்து அனைத்தையும் முடித்துக் கொண்டதுண்டு. அன்று அறுதிமுடிவு எடுத்து கிளம்பி வந்திருந்தாள்.
அவள் வாழ்க்கையே கனவுகளால்தான் நிறைந்திருந்தது. இளமை முதலே அந்தப் பெரியவீட்டின் புழுதியும் இருட்டும் ஒட்டடையும் படிந்த எஞ்சிய அறைகளுக்குள்ளும், புதர்மண்டி பாழடைந்த தோட்டத்திலும் மட்டுமே அவள் வாழ்ந்திருந்தாள். என்றோ ஒருமுறை சிறுமியாக அப்பாவின் கைபற்றி ஆலும்மூடு சிவன்கோயில் திருவிழாவுக்குச் சென்றுவந்தது அல்லாமல் அவள் எந்த ஊருக்கும் சென்றதில்லை.
நினைவு தெளிந்தபின் அவ்வாறு செல்வதைப்பற்றி எண்ணிக்கூட பார்த்ததில்லை. ஏனென்றால் முன்பின் தெரியாதவர்களின் முன்னால் சென்று நிற்கும் அளவுக்கு அழுக்கில்லாத கிழியாத ஓர் ஆடை அவளிடம் இருக்கவில்லை. அவ்வாறு அயலாரிடம் பேசியும் அவளுக்குப் பழக்கமில்லை. எவர் கண்கள் முன்னும் அவளால் நிற்கமுடியாது.
எப்போதாவது தோட்டத்தில் தேங்காய் பறித்துக் கொண்டுபோக வரும் வியாபாரிகளில் அவளறியாத எவராவது ஒருவர் வந்துவிட்டால் அவள் ஓடி தன் சிற்றறையின் இருட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வாள். அவர்களில் எவருக்காவது வெட்டுகத்தியோ குடிக்க நீரோ கொண்டு கொடுப்பதென்றால் தரைவிட்டு விலகாத கண்களுடன் சென்று கொடுத்துவிட்டு மீள்வாள்.
அப்போது அவள் கைகளும் கால்களும் நடுங்கிக் கொண்டிருக்கும். கழுத்தில் மூச்சு குழிந்து எழுந்து அதிரும். மெலிந்த வெண்ணிற உடலில் நீலநரம்புகள் புடைத்திருக்கும். வியர்வையில் நெற்றியிலும் கன்னங்களிலும் தலைமுடி ஒட்டியிருக்கும். திரும்பச்சென்று தன் இருட்டுக்குள் புதைந்து கொள்ளும்போது நெஞ்சில் கைவைத்து நீள்மூச்சு விட்டு ஏங்குவாள். அவள் எவராலும் பார்க்கப்படாமலிருக்க விரும்பினாள். மிகமிகக் குறைவாகவே அவள் பார்க்கப்பட்டிருந்தாள்.
ஆனால் அவள் தனிமையில் அந்தச் சிறிய உடலில் இருந்து விடுபட்டு எழுவாள். ஊதுவத்தியிலிருந்து புகை எழுந்து வானில் வளர்ந்து நெளிவதுபோல. அவளுடைய கனவுகளை எவரும் அறிந்ததில்லை. அங்கே அவள் பிறிதொருத்தியாக இருந்தாள். வேட்கை மிக்கவளாக, வேட்கையால் எழுந்த ஆற்றல் மிக்கவளாக, ஆற்றல் அளிக்கும் நிமிர்வு கொண்டவளாக. அனைத்தும் அவள் வெல்வதற்காக காலடியில் கிடந்தன.
அக்கனவுகள் எவருமறியாதவை என்பதனால் தீங்கற்றவை என அவள் நினைத்தாள். அக்கனவுகளிலேயே வாழ்ந்து அங்கேயே மடிவதுதான் நல்லது என்று எண்ணியிருந்தாள். பாறைகளுக்குள் அவ்வாறு எத்தனையோ தேரைகள் பாறைவிரிசலின் வடிவிலேயே உடலை ஆக்கிக்கொண்டு வாழ்ந்து அங்கேயே மடிகின்றன.
ஆனால் கனவுகள் அப்படி அல்ல. எங்கோ அவை வெறுமையை அளிக்கத் தொடங்குகின்றன. இனிமையில் இருந்து வெறுமையென அவை திசைதிரும்புவது அறியாத ஒரு கணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. அந்தமாற்றத்தை நெடுந்தொலைவு சென்றபின்னரே உணரவும் முடிகிறது. அதன்பின் அக்கனவுகள் அதே உக்கிரத்துடன் வேகத்துடன் தனிமையை வளர்க்கின்றன, அவநம்பிக்கைகளை, சோர்வுகளை, கசப்புகளை, வெறுமையை உருவாக்குகின்றன. ஒன்றும் எஞ்சாமல் நின்றிருக்கவைக்கின்றன.
அந்த வெறுமையில்தான் ஒருமுறை அவள் அக்கோயிலுக்கு நீர் எடுக்க வந்தபோது கிணற்றை குனிந்து பார்த்தாள். அவள் உள்ளத்தில் அவ்வெண்ணம் அப்போது எழுந்தது. அதை முதலில் அஞ்சி திரும்பி ஓடிவிட்டாள். மூச்சிரைக்க தன் வீட்டு புழுதிமூலையில் உடல்சுருட்டி அமர்ந்திருந்தாள்.
அக்கிணறை பின்பு அவளால் தன் எண்ணத்திலிருந்து அகற்றவே முடியவில்லை. கனவில் அது திரும்பத் திரும்ப வந்தது. எந்த நினைவும் கனவும் சுழன்று அங்கேயே சென்று சேர்ந்தது. பின்னர் அது அவளுக்கு மெல்லிய படபடப்பை ஊட்டும் இனிய நினைவாகியது. அவளுடைய வெறுமை நிறைந்த வாழ்வில் மனக்கிளர்ச்சியென எஞ்சியிருந்தது அது மட்டும்தான்.
எங்கிருந்தும் எளிதில் அங்கே சென்று தப்பிவிடமுடியும் என்ற வாய்ப்பு அவளை திகைக்க வைத்தது. எதிலிருந்து என்றாலும் மிகவிரைவாக வெளியேற ஒரு வாசல் மிக அருகே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அவள் அதனூடாகச் சென்று கொண்டே இருந்தாள். மீண்டு வருகையில் ஏக்கத்துடன் மூச்செறிந்தாள். அன்று அவள் உறுதி பூண்டிருந்தாள்.
அவள் மேற்குவாசல் முன் நின்றாள். பின்னாலிருந்து வீசிய விசைகொண்ட காற்றால் அவள் வேட்டி எழுந்து முன்னால் உப்பியது. முந்தானையாக போட்டிருந்த துணியின் நுனி எழுந்து படபடக்க அதை கையால் தோளுடன் பற்றிக்கொண்டாள்.
அவளிடம் மேற்குவாசல் பூட்டை திறக்கும் சாவி இருந்தது. அதை நுழைத்து பூட்டைத் திறந்தபின் ,பெரிய கதவுகளைத் தள்ளித்திறந்தாள். அவள் கையின் விசையை விட ஆற்றலுடன் காற்றும் அந்தக்கதவுகளை உந்தி விலக்கியது. தேய்ந்து வழவழப்பாக இருந்த பித்தளைக் கீல்களில் கதவு ஓசையில்லாமல் திறந்தது.
அந்தக் காற்று சென்று அறைய பகவதியின் கருவறையின் கதவுகள் இரண்டும் எண்ணையூற்றிய கீல்களின்மேல் ஓசையில்லாமல் வழுக்கி விரிந்து திறந்துகொண்டன. உள்ளே மணிகள் ஓசையிட்டன. தேவி நூற்றெட்டு எண்ணைச்சுடர் விளக்குகளின் ஒளியில் முழு அலங்காரக் கோலத்தில் விண்ணாளும் சக்கரவர்த்தினி போல நின்றிருந்தாள்.
அவள் திடுக்கிட்டு, ஓசையின்றி அலறியபடி பின்னால் நகர்ந்து, கதவில் முட்டிக்கொண்டு, பதறும் கைகளால் கதவைப் பற்றியபடி நின்றாள். மணியோசை முழங்கிக்கொண்டே இருக்க, எழுந்த செஞ்சுடர் போல அணிக்கோலத்தில் துலங்கிய ஸ்ரீமங்கலை பகவதி அவளருகே அணுகி வந்து தொட்டுவிடலாம் என நின்றிருந்தாள். “என் தெய்வமே!” என்று அவள் நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் அழைத்தாள்.
திருடன் மிக அருகே அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகம் புன்னகையும் கண்ணீரும் கலந்ததாக இருந்தது. அவள் சட்டென்று பாய்ந்து வெளியே சென்று கதவை இழுத்து மூடி பூட்டிவிட்டு முற்றத்தைக் கடந்து தென்னந்தோப்பு வழியாக தன் வீட்டை நோக்கி ஓடினாள்.
திருடன் கருவறைக்குள் சென்று தேவியின் அணிகலன்களையும் ஆடையையும் ஒவ்வொன்றாக கழற்றினான். அப்போது அவன் உதடுகள் புன்னகைக்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அத்தனை திரிகளையும் அணைத்தான். அகல்களையும் பிறபொருட்களையும் மீண்டும் தன் பையில் போட்டுக் கொண்டான். முன்பிருந்தது போலவே அனைத்தையும் அமைத்துவிட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியே சென்றான். அந்தப்பூட்டை மீண்டும் பூட்டிவிட்டு நடந்தான்.
திருடன் மீண்டும் தென்னந்தோப்பின் வழியாகச் சென்று தாரவாஹினியில் இறங்கினான். வெண்மணல் விரிந்த கரையினூடாக தாழம்பூக்கள் மலரும் மணத்தை முகர்ந்தபடி, குளிர்ந்த காற்றை நெஞ்சிலும் முகத்திலும் வாங்கியபடி, நடந்தான். அவனுக்கு இணையாக தாரவாஹினியின் கரிய நீர்ப்பரப்பு நட்சத்திரங்கள் நிறைந்து அசைவில்லாததுபோல ஒழுகிக்கொண்டிருந்தது.
திருடன் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அவள் அங்கிருந்து சென்றபின் பிறிதொருத்தியாக மாறியதை அவன் கேள்விப்பட்டான். வீட்டிலேயே பலகாரங்கள் செய்து அருகிருக்கும் ஊரில் சில கடைகளுக்கு கொடுக்கத் தொடங்கினாள். அவை அரிய சுவை கொண்டிருந்தமையால் மிக விரும்பப்பட்டன. பின்பு அவள் கல்யாணங்களுக்குரிய பலகாரங்களையும் செய்தாள். தேவையான வேலைக்காரர்களை வைத்துக்கொண்டாள். அனைத்தையும் செய்யும் ஆற்றல் கொண்டவளாக இருந்தாள்.
டீக்கடை வைத்திருந்த கரசேரி அப்புநாயர் அவளைக் கண்டு விரும்பி திருமணம் செய்துகொண்டபின் அவள் ஊருக்குள் குடியேறினாள். குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. டீக்கடை ஓட்டலாகியது. வீடு கட்டிக்கொண்டார்கள். அவள் திடமான காலடிகளும் உறுதியான உடலும் தன்னம்பிக்கையான பேச்சும் கொண்ட பெண்மணியாக மாறினாள்.
அவள் மேப்பலூர் பகவதி கோயிலுக்கு வாரத்தில் இரண்டுமுறை சென்றாள். அங்கே அவள்குடும்பம் கொடைகளும் பூசைகளும் நடத்தியது. அவளுடைய வெற்றி மேப்பலூர் பகவதியின் அருள் என மக்கள் நினைத்தனர். பகவதி கோயில் பொலிவு பெற்றது. ஊர்க்குழுவின் முயற்சியால் அது பழுது பார்க்கப்பட்டது. பூசைக்கு அய்யர் நியமிக்கப்பட்டார். அங்கே ஆண்டுதோறும் திருவிழாவும் நடக்கலாயிற்று.
திருடன் அதன்பின் ஒரு முறைகூட அவளை நேரில் சந்திக்கவில்லை. அவளுடைய ஓட்டல் இருந்த பாதைவழியாக பஸ்ஸில் செல்ல நேர்ந்தால்கூட அவன் மறுபக்கம் திரும்பிக் கொண்டான். கருவறை விளக்கின் ஒளியில் செஞ்சுடர் இளவெயிலின் கதிர்போல பரவியிருந்த அவளுடைய முகத்தின் காட்சியையே அவன் தனக்குள் வைத்திருக்க விரும்பினான்.
அதற்கு முந்தைய நாள் அவள் வீட்டுக்குள் திருடும்பொருட்டு நுழைந்து, அந்த இருண்ட புழுதிபடிந்த அறைகள் வழியாக துழாவி அலைந்தபோது அவன் அவள் தன் அப்பாவுக்கு எழுதி முடிக்காமல் வைத்திருந்த நீண்ட கடிதத்தை படித்திருந்தான். எழுதுவதை நிறுத்திவிட்டு பாயில் படுத்து தூங்கிவிட்ட அவள் முகத்தில் இருந்த உலர்ந்த கண்ணீர்க் கோடுகளை அவன் மறக்க விரும்பினான். அந்த வீட்டிலிருந்து தடமே இல்லாமல் நீங்கும்போது அந்த துயர்நிறைந்த முகத்தில் உலர்ந்த உதடுகளில் அவன் ஒரு முத்தமிட்டிருந்தான்.
***