கதைகளின் முடிவில்..

ஜனவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம். நாலைந்து நாட்களாகவே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்நிகழ்ச்சி என் மனதை அரித்துக்கொண்டிருந்தது. அது உருவாக்கிய கேள்விகள், சங்கடங்கள், சந்தேகங்களுடன் அதை ஒரு கட்டுரையாக எழுதிவிடலாமென்று எண்ணியிருந்தேன். கட்டுரையாக எழுத ஆரம்பித்து சிலவரிகளுக்கு மேலே செல்லாமல் அது நின்றுவிட்டது. அன்று காலை ஒரு கணத்தில் அது கதை என்று தெரிந்தது. உடனே எழுத ஆரம்பித்தேன். எழுதிமுடித்து கீழே வந்து ஒரு டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே சோற்றுக்கணக்கு கதை வந்து விட்டது. உடனே மேலே சென்று அதை எழுத ஆரம்பித்தேன். எழுத எழுத என் அறைக்குள் அம்மனிதர்கள் நிறைந்து நிற்பதாக தோன்றியது. எழுது எழுது எனச் சொல்லும் கண்களுடன்.

மொத்தம் பதினாறு கதைகள். அவற்றில் இரண்டு கதைகள் சரியாக வரவில்லை என அரங்கசாமி சொன்னார். அருண்மொழியும் அதை உறுதிப்படுத்தினாள். இரு கதைகள் முடிவுறாமல் நின்றுவிட்டன. மற்ற கதைகள் பன்னிரண்டும் இப்போது வெளியாகியிருக்கின்றன. எல்லா கதைகளும் ஒரேமூச்சில் எழுதிமுடிக்கப்பட்டவை. அச்சில் அறுபது பக்கங்களுக்குமேல் வரக்கூடிய ஓலைச்சிலுவைகூட. இவையனைத்துக்கும் மையச்சரடு என்பது இவை உண்மை மனிதர்களின் கதைகள்தான் என்பதே.

இந்த நடுவயதில், அடுத்தவருடம் எனக்கு ஐம்பது நடக்கும், இதுவரை என்னைக் கொண்டுவந்துசேர்த்த பல நம்பிக்கைகளில் தேய்மானம் ஏற்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் என்னை பீடித்திருந்தது. என் இருபத்து நான்காம் வயதில் வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கச் சாத்தியமான எல்லா கொடும் துயரங்கள் வழியாகவும் சென்று விட்டிருந்தேன். மரணங்கள், அவமதிப்புகள், ஊரையும் மண்ணையும் உறவுகளையும் இழத்தல், அலைதல். பிச்சை எடுத்து தெருவில் வாழ்ந்தாகிவிட்டிருந்தது. உடல்நிலை சாத்தியமாக கீழ் எல்லைக்குச் சென்றுவிட்டிருந்தது.

அன்றொருநாள் தற்கொலைக்கெனச் சென்றேன். காசர்கோட்டில் இருந்து கும்பளா செல்லும் பாதையில். அந்த காலைநேரத்தைப்பற்றி பலமுறை எழுதியிருப்பேன். புத்தம்புதியகாக அந்த காலையைக் கண்டேன், அது என் கடைசி புலரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் என்னை அப்படிப்பார்க்கச்செய்தது போலும். அந்த பொன்னிறமான காலையில் ஒளியே உடலாக சுடர்ந்த ஒரு புழுவைக் கண்டேன். ஒளியேயான அகம் கொண்டது. அது ஒரு தரிசனம். அந்த தரிசனத்தை என் வாசிப்புகள் வழியாக நான் என் தத்துவமாக ஆக்கிக்கொண்டேன்.

அன்று முடிவெடுத்தேன், எனக்கு இனிமேல் துயரமில்லை என. இனிமேல் கசப்புகளும் வன்மங்களும் இல்லை என. இனி ஒரு கணத்தைக்கூட சோர்ந்தும் நம்பிக்கையிழந்தும் செலவிடப்போவதில்லை என. என் வாழ்க்கையில் ரகசியமென ஏதும் இருக்கலாகாது என. எது நானோ அது எப்போதும் வெளியேதான் இருக்கும் என. அன்றுமுதல் அதுதான் நான். என்னை உற்சாகமிழந்த நிலையில், சோர்ந்த நிலையில், ஏன் உடல்ரீதியாக களைத்த நிலையில்கூட எவரும் பார்த்திருக்கமுடியாது. இருபதாண்டுக்காலமாக என்னுடன் வாழும் அருண்மொழிகூட.

ஆனால் இன்று அனுபவங்கள் அளித்த பொதுப்புத்தி என் அகத்தை மாற்றியிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டது. நான் இதுவரை நம்பிய இலட்சியவாதத்தை அது களிம்புமூடச்செய்திருக்கிறதோ? ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு வந்த ஒரு தனிப்பட்ட கடிதம் அதைச் சொன்னது. இந்த லௌகீக உலகம் அதிகாரத்தால் இயங்குவது, அதிகாரம் பொருளால் ஆனது, பொருள் அறமீறலால் சேர்க்கப்படுவது என்பது ஓர் லௌகீக விவேகம். ஆனால் அதை நான் முன்வைக்கும்போது என் இலட்சியவாதத்தை கைவிட்டு அதை எடுத்துக்கொள்கிறேன் என்றது அக்கடிதம்.

அன்றிலிருந்து ஆரம்பித்த சஞ்சலம் இது. நான் பொய்யான இலட்சியவாதத்தில் நிற்க விரும்பவில்லை. நடைமுறைப்பார்வை இல்லாமல் கனவில் வாழ்வதில் பொருளில்லை. அதிகார விருப்புறுதியால் உருவாக்கப்பட்டுள்ள மானுட வரலாற்றை யதார்த்தபோதமில்லாமல் அணுகுவது சுய ஏமாற்றாகவே முடியும். நான் வரலாற்றுணர்வை இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக எண்ணக்கூடியவன். வரலாற்றின் பெரும்பிரவாகத்தில் என் இலட்சியவாதநோக்குக்கு என்ன இடமென்று பார்த்தாகவேண்டிய நிலையை அடைந்தேன்.

என்னுள் ஓடிய தவிப்பு என்பது எதையும் மழுப்பிக்கொள்ள, எதையும் மறைத்துக்கொள்ள மறுக்கும் நேர்மையின் விளைவே என நான் அறிந்திருந்தேன். ஆனாலும் ஒரு பதிலின்றி அமைய முடியாதென்றே உணர்ந்தேன். அறம் கதை ஒரு திறப்பாக அமைந்தது. இலட்சியவாதத்தில் ஊன்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் வாழ்க்கை வழியாக, அவர்களை மதிப்பிடும் கண்கள் வழியாக என் வினாக்களை நானே எழுப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். இந்தக்கதைகள் அனைத்தும் அந்த பொதுத்தன்மையில் அமைந்தவை.

இவை இலட்சியவாதத்தை ஒட்டுமொத்த வாழ்க்கையில் இருந்து பிரித்து எடுத்து வைக்கவில்லை. இலட்சியவாதம் நிற்கும் சூழலின் இருட்டுடனும் குப்பையுடனும் அது கொள்ளும் உரையாடலையே இக்கதைகள் முன்வைக்கின்றன. இலட்சியவாதம் தன் ஆற்றலால் தானே ஒளிவிடக்கூடியது, பிறிதொன்றின் உதவியின்றி நிற்கக்கூடியது. எத்தனை பிரம்மாண்டமான எதிர்விசைகளாலும் அழித்துவிட முடியாதது. அனைத்தையும் விட மேலாக அது விசித்திரமான முறையில் இன்னொருவரிடம் தொற்றிக்கொள்ளக்கூடியது. இக்கதைகளில் நான் காண்பது அதையே

இக்கதைகள் வழியாக நான் என்னை மீட்டுக்கொண்டேன் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். ‘-இருந்தபோதிலும்’ என்று ஆரம்பித்து நான் சொல்ல மகத்தான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன

ஜெ

கதைகள்


உலகம் யாவையும்

கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைஉலகம் யாவையும் [சிறுகதை] 3
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்