கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆமை கதையை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருந்தேன். கதைகள் இரண்டு வகை. ஒன்று நாம் மீண்டும் படிப்பவை. இன்னொன்று நம் நினைவில் வளர்ந்து ஒரு ஐதிகக் கதை மாதிரி ஆகிவிடுபவை. இது அப்படிப்பட்ட கதை
என் அப்பா மிக வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். கடுமையாக உழைத்து வேலை செய்து படித்தார். அவர் சின்னப்பையனாக இருந்தபோது சட்டை கிடையாது.ஸ்கூலில் மாவுச்சாக்குத் துணியை சட்டையாக தைத்துக் கொடுப்பார்கள். அதுதான் சட்டை. அந்தச் சட்டையுடன் அப்பா பள்ளிக்கூடம் போனார். ஒரே சட்டையை துவைக்காமல் போட்டிருந்தார். அவருடைய ஆசிரியர் ‘இது என்ன ஆமை ஓடா?”என்று கேட்டார்.அப்பாவுக்கு அந்த வார்த்தை மிகவும் தொந்தரவு தந்தது
அப்பா ஆசிரியர் இப்படி கேட்டதைச் சொல்லியிருக்கிறார். அப்பா இப்போது இல்லை.நான்கு வருடம் முன்பு தவறிவிட்டார். இருந்திருந்தால் இந்தக்கதையை அப்பாவிடம் சொல்லியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
எஸ்.கணேசன்
***
வணக்கம் திரு ஜெயமோகன்,
‘ஆமை’ கதை படித்தேன்.ரொம்ப நல்லா இருக்கு.
கதை கண்முன்னே நடப்பதைப் போன்ற ஒரு மொழி. நல்ல நீரோட்ட நடை. நீரோட்டம் போன்ற மொழி இக்கதையைச் சிறந்த கதையாக்கியிருக்கிறது என்பதென் எண்ணம்.
பனையைப்பற்றிப் பற்பல செய்திகளைப் படித்திருக்கிறேன்.க.பஞ்சு அவர்கள் எழுதிய ‘அக்கா’ நாவல் பனைமரத்தை மையப்படுத்திய ஒரு சமூக வாழ்வின் பல பகுதிகளை எனக்குக் கற்பித்த ஒன்று.
ஐயா பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘பனைமரமே! பனைமரமே!’ நூல் பனையைப்பற்றிய ஒரு பெரும் அறிவைத் தந்தது.
அதைப்போலவே உங்கள் கதை. நல்ல கதை படித்த அனுபவமாகவும் கூடவே எனக்கொரு புது செய்தியைத் தருவதாகவும் அமைந்தது. இதுவரை நான் கேள்விப்படாத ஒரு பொருள் கொரம்பை. அதன் படத்தையும் கொடுத்தது பாராட்டுக்குரியது.
ஒரு பொருள் ஊடாக ஒரு சமுக வாழ்வியலைப் படித்தது மிகவும் நல்ல வாசிப்பனுவமாய் அமைந்தது. வாழ்விழந்து வரும் ஒரு பொருள் (அல்லது ஒரு சொல்) எத்தனை ஆயிரம் வாழ்க்கையைத் தனக்குள் வைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது ஏற்படும் பிரமிப்பு இப்போதும் ஏற்படுகிறது.
“ஆமைக்க சக்தி அதாக்கும் மக்கா, அதுக்கு வேகமில்லை, ஆனா விட்டுக்குடுக்காத பிடிவாதம் உண்டு” என்ற வரி மனதில் பல எண்ணங்களைக் கிளறிவிட்டது. ‘முயலும் ஆமையும்’ கதைக்கு முத்தாய்ப்பாக இனி இவ்வரியைச் சொல்லலாம்.
ஒரு சந்தேகம்; தமிழில் அடைமழை என்ற ஒரு சொலவடைதான் உண்டு என்கிறீர்களே, எப்படி? தமிழில் தான் மழைக்கு நிறைய இருக்கிறதே…?
அன்புடன்
மாலா
***
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
வணக்கம் ஜெ
சாவி கதையை வாசித்தேன். குரங்கு நட்டுக்கு மையத்திலிருந்த வெட்டுக்கோட்டில் திருப்புளியை விட்டுச் சரியாகச் சுழற்றி எக்காளமிடும் தருணமே இந்தக் கதையில் உச்சமாக இருந்தது. லெளகீகத் துக்கம் என்பது பொருந்தாப் பட்டையில் நட்டு வைத்துச் சுழற்றிக் கொண்டிருப்பதுதானே அல்லது பொருந்தும் பட்டை காணாதிருத்தலே என அந்தக் கணம் சுட்டியது.
அரவின் குமார்
***
அன்புள்ளஜெ
சாவி கதையை வெடிச்சிரிப்புடன் வாசித்தேன். குரங்கு மனிதனின் பரிணாமத்தில் இரண்டாவதாக ஓடிவந்துகொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். நாம் செய்த தவறுகளை அது செய்கிறது. பண்டோராவின் பெட்டியை திறந்துவிடுகிறது
ஆர்.ராஜேஷ்
***