தங்கப்புத்தகம், வண்ணம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் குறுநாவல் வெளிவந்து இருபது நாட்களாகின்றன. நான் இப்போதுதான் அதை வாசித்து வெளியே வந்தேன். எனக்கு அதன் தொடக்கத்தில் தன்னந்தனியறையில் மனதுடன் இருப்பதைப்பற்றிய பகுதிகள் நிலைகுலையச் செய்வனவாக இருந்தன. நாம் எழுப்பும் ஓசைகள் வழியாகவே நாம் நம் இருப்பை அறிகிறோம் என்பது என்னுடைய சொந்த அனுபவமாகவே ஆகிவிட்டது.

நான் எட்டாண்டுகளாக விபாசனா பயிற்சிகள் செய்பவன்.நாம் ஒலிகளைக் கேட்பது ஒலிகளை எழுப்புவது வழியாகவே நம் உடலை உணர்கிறோம். நம் மனதை ஒரு எடையில் கட்டி வைத்திருப்பது உடலால்தான். உடல் இல்லை என்றால் மனம் கட்டற்று அலையும். புகைமாதிரி பறக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் மனமே இல்லாமலாகியும் விடும். உடலுணர்வு என்பது இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லாமலாகும் கொஞ்சநேரம்கூட பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும்.

மனம் ஏன் அந்த பதற்றத்தை அளிக்கிறது என்றால் அதற்கு வடிவம் இல்லை என்பதனால் மட்டுமல்ல. நாம் அறியும்போது உடனே நாம் அறியும் விதத்திலே அது மாறிவந்து நின்றுவிடுகிறது என்பதனால்தான். அந்த இயல்புதான் அந்த தங்கப்புத்தகத்திற்கும். அது மனம்தான்

ராஜேஷ்குமார்

***

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையை நான் என் தியானமுகாம் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.அவர்களில் பலருக்கும் தமிழ் தெரியாது. அந்தக்கதை அவர்களை திகைக்க வைத்தது. நிறையபேர் தொடர்ச்சியாக பலநாட்கள் கூப்பிட்டு பேசிக்கொண்டே இருந்தார்கள். இந்தியாவிலுள்ள எல்லா நூல்களுக்கும் பாடபேதம் உண்டு. வேண்டுமென்றே பாடபேதங்களை உருவாக்குவது ஒரு அறிவுச்செயல்பாடாகவே இங்கே காணப்படுகிறது. இது ஏன்? நான் என் அர்த்தத்தை உருவாக்கிக்கொள்கிறேன் என்ற ஆணவமா? அல்லது உண்மையிலேயே அவ்வாறுதான் அர்த்தம் கொள்ள முடியுமா?

ஒரு உதாரணப் பயிற்சியைச் செய்தோம். கீதையில் இருந்து ஒரே ஒரு சுலோகத்தை எடுத்தோம். அதை அர்த்தம் சொல்லாமல் வாசித்து அதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்று ஐந்துநிமிடம் செல்போனில் பேசி பதிவுசெய்து அனுப்பச் சொன்னோம். இருபத்திரண்டுபேர். ஒரு அர்த்தம் இன்னொன்றுக்கு சம்பந்தமே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. பொதுவான ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் விளக்கிக்கொள்ளுதல் வேறுபட்டது. அதுதான் உண்மையில் முக்கியமானது

ஆகவே எந்த நூல் அதிகமாக பெர்சனல் பாடங்களை உருவாக்குகிறதோஅதுவே சிறந்த நூல் என்று நினைத்துக்கொண்டேன்

ஜி.ராகவன்

***

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வண்ணம் சிறுகதையை சிறுகதையின் ஒரு வடிவமாக நினைக்கிறேன். சிறுகதையின் சாத்தியங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அது சிறுகதையாக ஆவது அதன் உச்சம் எப்படி நிகழ்கிறது என்பதிலிருந்துதான். மற்றபடி அதை எப்படிப்பட்ட கதையாகவும் சொல்லலாம். மெல்லியபகடியும் ஃபாண்டஸியும் கலந்து சொல்லப்பட்ட அந்தக்கதை ஒரு காலகட்டத்தின் கதைவடிவமாகவும் உள்ளது.

வரிகொடாமை இயக்கம் என்பது பலவகையில் இந்தியா முழுக்கவும் நிகழ்ந்த ஒன்றுதான். மக்கள் தங்களை கல்லாக இறுக்கிக்கொள்வதுதான் போராட்டம். உண்மையில் எந்தஒரு போராட்டமும் அப்படி மக்கள் கல்லாக இறுகிக்கொள்வதிலிருந்தே ஆரம்பமாகின்றன.

கே.கே.பிள்ளை அவர்கள் சோழர் காலத்திலேயே மக்கள் வரிகொடுக்க மறுத்து காடுகளுக்குள் சென்றுவிடும் போராட்டம் நிகழ்ந்ததை பதிவுசெய்திருக்கிறார்

அந்தக்கதையின் அழகான முடிச்சு வண்ணத்துப்பூச்சிதான். அதிகார வர்க்கம் ஆயுதங்களுடன் முதலில் வருகிறது. ஜெயிக்கமுடியவில்லை. கல்லாகிவிடுகிறார்கள். வண்ணத்துப்பூச்சியுடன் வருகிறது, ஜெயித்துவிடுகிறது.

டி.டி.கோசாம்பி அவருடைய பார்வையில் இந்திய வரலாற்றில் பிராமணர்கள் ஆற்றிய பங்களிப்பு இதுதான் என்று சொல்கிறார். சாத்விகமான அதிகாரம். அதிகாரம் ஆனால் வன்முறை இல்லை. வன்முறையான அதிகாரத்தைவிட இதுமேலானது, அவ்வளவுதான்.

ஆனால் எல்லா மதங்களும் இதைத்தான் செய்தன. ஜைனம் பௌத்தம் எல்லாமே. ஆனால் கோசாம்பி அவர்கள் இந்து பிராமணர்களை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார். பௌத்தமும் ஜைனமும் அதர்கு எதிரான புரட்சிகள் என்ற அளவிலேயே சொல்கிறார். அங்குதான் ஆய்வாளருக்கான நடுநிலையை தவறவிட்டுவிடுகிறார்.

அந்த வண்ணத்துப்பூச்சியின் கதைதான் இது. தலைப்பு வண்ணம் என்று சொல்வது அதைத்தான்

ஜி.பி.சாரதி.

***

அன்புள்ள ஜெ,

வண்ணம்’ சிறுகதையானது  அன்றைய திருவிதாங்கூரின் கதையல்ல. இன்றும் இதுவே அறமில்லா அரசுகளின் கதை.  துறைசார் அறிவில்லா அசமந்தப் போக்குள்ள அரச அதிகாரிகளின் கதை, வரிகளின் மூலம் அரசுகள் காவு கொள்ளும் அப்பாவி மக்களின் கதை என்ற ஆழ்நோக்கு   மனதுக்குப் புரிகிறது. ஆனால் அந்தக் கதையை சொல்வதற்கு நீங்கள் கையாண்ட மொழிநடையின் அழகே மனதை அதிகம் கவர்கிறது. அதை அங்கதம், ஏகடியம்,எள்ளல்,எகத்தாளம் இதில் எந்த  வகைக்குள் அடக்குவது என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

புன்னகைத்துக் கொண்டே  விவசாயிகளின் உழவு பொய்த்த கதையை வாசிக்க முடியுமா?கோரையை நெல் என்று  எண்ணும் கண்டெழுத்துக்காரர்களின் ‘மேதமையை’  ரசிக்க முடியுமா?

உண்ண உணவில்லாத போதும் “துன்பம் வருங்கால் நகுக” என்று அந்த ஊரே கூடிச் சிரித்துக் கொந்தளித்த மக்களின் உள்ளழகை கண்டு மனம் கனக்காமல் இருக்க முடியுமா ? முடியும் என்கிறது உங்கள் மொழியழகு.

“கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே’ன்ற கண்ணதாசனின் வரிகள் மனதில் ஓடுகின்றன

மனம் கல்லாகியும் கூட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் மக்களை ஏமாற்றும் அரசின்  பிரதிநிதிகள், அவர்களை அறியாக் குழந்தைகளாக நினைத்து அரசியல் ‘வண்ணம்’ காட்டி ஏய்க்கும் வித்தைக் காரர்கள், இவர்களைக் கூட ரசிக்க வைப்பது உங்கள் வார்த்தைகளின் அழகு.

இயல்பாகவே எனக்குள் ஊறும் நகைச்சுவை உணர்வு இந்தக் கதையை அதிகம் ரசிக்க வைத்தது. வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சிரிப்பினால் கடப்பதும், களிப்பதும் ஒரு வழி. வாழ்த்துக்கள் ஜெ.

ரஞ்ஜனி சுப்ரமணியம்

கொழும்பு

***

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10
அடுத்த கட்டுரைஅருகே கடல், முதலாமன் -கடிதங்கள்