கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
சிந்தே கதையின் ஈர்ப்பே அது நம்மில் ஏற்படுத்தும் நிலைகுலைவும் அதற்குப் பின்னாலுள்ள கட்டுக்கடங்காமையும் தான். சிந்தேயை எப்படி வரையறுத்துக்கொள்வது என்பதுதான் இக்கதை முன்வைக்கும் சவால். நாவலில் பயின்று வரும் உருவகம் போல அதன் பொருள் மாறிக்கொண்டே வருகிறது.
யோசித்துப் பார்க்கையில் இதற்கு பிரதானமாக இரு முகங்கள் உள்ளன. ஒன்று சிந்தே சர்க்கஸில் பழக்கப்படுத்தப்பட்ட மிருகம். ஐரோப்பிய கனவான்களின் உடல்மொழியைத் துல்லியமாக நகலெடுக்கும் மனிதர்களால் வளர்க்கப்படுவது. அந்த அடையாளத்துடன் தான் கதையில் அது நுழைகிறது. அதனுடன் விரிவாக சித்தரிக்கப்படும் அந்த வீட்டுப் பொருட்களும், அப்பாவின் உடல்மொழியும், ஊரில் அவருக்கு உருவாகும் அதிகாரமும் இணைக்கப்படுகிறது.
அதன் இரண்டாவது முகம் உள்ளுக்குள் அது என்ன என்பது. கதையில் இதன் இணைப்பு மகாவம்சத்தின் தொன்மக் கதையுடன் நடக்கிறது. பேரருள் கொண்டது அதே சமயம் பாவம் பொறுக்காதது. சீனத்தில் அது ஷிஷி. நமக்கு அது யாளி. அது தான் இறுதியில் அப்பாவைக் கொல்கிறது. அது புறத்தில் உருவாக இல்லை. நம் கலையில் பண்பாட்டில் அருவாக உள்ளது. எல்லைமீறும்போது எழுவது. பலி கொண்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் மறைந்துவிடுவது.
இவ்விரண்டின் கலைவை தான் சிந்தே. இதைத் தாண்டியும் நாம் மனதில் உருட்டிக் கொண்டு விரித்துக்கொள்ள வேண்டிய பல இடங்கள் கொண்ட கதை. குறிப்பாக ஹாய்மா கதாப்பாத்திரமும் கதைசொல்லியின் அம்மாவும். இருவரும் பலியாகாமல் வெளியேறிவிடுகிறார்கள். ஹாய்மா பர்மியருடன் சென்றுவிடுகிறாளென்றால் பையனும் அம்மாவும் வெகுமுன்பே தன் கிராமத்தில் தஞ்சம் அடைந்துவிடுகிறார்கள். இவ்விரு பெண்களும் எவற்றின் சுட்டிகள்? வடகிழக்கு மாநிலங்களின் வரலாற்றுப் பிண்ணனியுடன் தான் இவர்களை விளங்கிக் கொள்ள முடியுமா? வெகுகாலம் கூடவே இருக்கப் போகும் கதை.
பாலாஜி பிருத்விராஜ்
***
அன்புள்ள ஜெ
சிந்தே விசித்திரமான கதை. ஏதோ அறியாத மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்ததுபோல ஒரு கதை. தமிழில் இந்தக்கதைக்கு முன்னுதாரணமே இல்லை என்று நினைக்கிறேன். மிருகமும் மனிதனும் என்ற அளவில் வேண்டுமென்றால் இதை நீங்கள் எழுதிய கரடி கதையுடன் ஒப்பிடலாம்.
சிந்தே ஒரேசமயம் புராணத்திலும் யதார்த்தத்திலும் உள்ளது. அது புராணகால மிருகமா சர்க்கஸ் மிருகமா என்பது குழப்பமானதுதான். சிறுவனின் நினைவு என்பதனால் அது குழம்பிவிட்டிருக்கிறது. கதை எந்த மனதுக்குள்ளும் போகவில்லை. எவர் என்ன செய்தார் என்று மட்டும் சொல்கிறது. எந்த உணர்ச்சிகர நிகழ்வும் இல்லை. அதற்குப் பதிலாக அந்த மாளிகையும் அதிலிருக்கும் சிங்கமும் ஒரு கிளாஸிக்கல் ஓவியம் போல மொழியில் சொல்லப்படுகின்றன
மோனாவும் அம்மாவும் பேசிக்கொள்ளும் இடம்தான் கதையின் மையம். அவர் ஒன்றும் போதிசத்வர் இல்லை, ஆகவே சிந்தே அவரை பொறுத்துக்கொள்ளாது என்று அம்மா சொல்கிறாள். “நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றாள் மோனா. “உண்மையாகவே உனக்குப் புரியவில்லையா என்ன?” என்றாள் அம்மா. இந்த இடத்தில்தான் கதையின் மர்மம் ஏதோ உள்ளது
ரவிச்சந்திரன்
***
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நலம், நலமறிய ஆவல்.
செய்தால் அரசு வேலை, இல்லை வெறுமென இருப்பது அல்லது வீரப்பாக வீட்டைவிட்டு கிளம்புவது என்கிற அன்றைய, இன்றைய பல இளைஞர்களின் நிலையில்தான் இருக்கிறான் கிருஷ்ணன். வீட்டில் வறுமை விரித்தாடும் நிலைமை. இருந்தாலும் அப்பாவிடமிருந்து எட்டாவதுத் தலைமுறையாக குலத்தொழிலைக் கற்றுச் செய்ய தயாராக இல்லை அவன். நண்பர்களின் கேலிக்கு ஆளாகுவோமென்ற பயஉணர்வு வேற.
குலத்தொழில்ங்கிறது தலைமுறை, தலைமுறையாத் தாண்டி நிற்கிறது. அதன் அருமையை மறந்ததாலோ என்னமோ காலாவதியான குலத்தொழில்கள் ஏராளம் இன்று. அப்பா கிருஷ்ணனைக் குலத்தொழிலைச் செய்வதற்கு சமரசம் செய்வதாகட்டும், கிருஷ்ணன் செய்யச் சம்மதித்து அப்பா அவனுக்கு செய்யும் உபதேசங்களும், மந்திரங்களும் உச்சரித்து முடிக்கும்போது இளையம்மைக்கு பூஜைப் போட தூவக்காளி வந்தருளுமிடம் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வு எனக்கு.
மனிதத் துக்கத்திற்குள் தான் எத்தனை எத்தனை வகை நியதிகள். அமுதாய் இருக்கும் மனம்தான் நொடியில் விஷமாக மாறிவிடுகிறது.
கிருஷ்ணன் சடங்கு செய்ய ஆரம்பிக்கும் போதே எள்ளி நகையாடுகிறார்கள் கிழவியும் உடனிருக்கும் மற்றப் பெண்கள்களும். ‘நீ அழைச்சா சாமி வருமோடே’ என்று ஏளனம் செய்கிறாள் கிழவி. கிழவி ‘நாலு குழந்தைகளுக்கு உயிர் கொடுத்தவன், பாத்திரம் சரிந்ததால் சிந்திப்போயிற்று’ என்று கருக்கலைப்பு பாவத்தில் தன் வீட்டு ஆணை உயர்த்தி, சுபத்திரையைத் தாழ்த்தியே அனாயசமாகக் குறை சொல்கிறாள்.
இளையம்மை சுபத்திரையும் நாலு கருகலைப்பால் மனதுடைந்து நிலைகுலைந்து போனவள். கிருஷ்ணன் தருவைப் புல்லால் குழைந்தைச் செய்து ஆடை அணிவித்து இதுதான் உன்குழந்தை, மடியில் அமர்த்தி முலைகொடுக்கவேண்டும் என்று சுபத்திரையிடம் சொல்லும்போது, அவளுள் தாய்மை உணர்வு பீறிட்டு எழுகிறது. கருக்கலைப்புகளுக்கு மன்னிப்பு கோரி பிதற்றுகிறாள். குழந்தையைக் கொடுத்தத் தெய்வமே பிடுங்கியும் செல்கிறது சுபத்திரையின் மனதில் இருந்த நஞ்சையும் சேர்த்து. இனியொரு கருக்கலைப்புக்கு உடன்பட மாட்டாள் இளையம்மை சுபத்திரை.
அருமையான சிறுகதை. கதையை வாசித்து மனம் கனத்துப் போச்சு முடிவில்.
அன்புடன்,
முத்து காளிமுத்து
***
அன்புள்ள ஜெ
தூவக்காளி கதையை கடந்துவர முடியவில்லை. ஒரு கதையை வாசித்து அதன் பரவசம் குழப்பம் தனிமையிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்த கதை.தூவக்காளி முன்பு எல்லா மனச்சிக்கல்களையும் குறியீடுகளால் தீர்த்துக்கொண்ட காலகட்டத்தைச் சேர்ந்த கதை.
ஆனால் இன்றைக்கும் அப்படித்தான் தீர்த்துக்கொள்கிறோம் இல்லையா? இன்றைக்கு நமக்கு ’நோய்’ ‘டாக்டர்’ ‘மருந்து’ என்ற குறியீடுகள் நெருக்கமானவை. உறவுச்சிக்கல்கள் முதல் மனச்சிக்கல்கள் வரை அனைத்தையும் இன்றைக்கு மனதத்துவ டாக்டரிடம் போய் தீர்த்துக்கொள்கிறோம். துயரத்தை ஒரு நோய் என்று நினைத்தால் டாக்டர் அதை தீர்க்கமுடியும்தானே?
இந்த தூவக்காளி போன்ற கதைகளில் பூசாரி அதைச்செய்கிறார். ஆனால் அவருக்கு இன்னும் சிறந்த ஒரு காஸ்மிக் ஐடியா இருக்கிறது. உலகையே புல்லாகவும் புல்தூவலை தெய்வமாகவும் அவர் பார்க்கும் அந்த ஒரு விரிந்த பார்வை மனதத்துவத்துக்கு இல்லை
ஸ்ரீனிவாஸ்
***