கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சிறகு கதை வாசித்து முடித்த போது பெரும் உற்சாகத்தை அளித்தது. சைக்கிள் பழகுதல் என்பது பறத்தலின் குறியீடு தான். பல நேரங்களில் வேகமாக வண்டி ஓட்டிச் செல்லும் பெண்களால் ஆண்கள் சீண்டப்படுகிறார்கள். இது இன்றளவும் நகர்புறமாக இருந்தாலும் நில பிரபுத்துவ மனநிலையில் உள்ள நம் பெரும்பாலோரின் நிலை இதுவே. பெண் விடுதலை என்று உரக்கப் பேசுதல் போலி பாவனை தான் நிறைய பேரிடம். உள்ளூர பெண் ஒரு படி கீழ் என்ற நினைப்பே அதிகம். அமுதவல்லிக்கு ரூட்டு போட்டவனும் புத்திசாலியாக இருக்கும் பட்சத்தில் இதனால் மாற்றமடைவான். Positive women empowerment story
சிவக்குமார் ஹரி
***
அன்புள்ள ஜெ
சிறகு கதையை மிக இயல்பாக, எந்த முயற்சியும் இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றும்.நண்பரின் பட்டறை ஒன்றுக்கு போயிருந்தேன். அங்கே ஒரு மிஷின் இரும்புப் பட்டைகளை வெண்ணையை வெட்டுவதுபோல வெட்டுவதை கண்டேன். அந்த மிஷினில் முந்நூறு டன் எடை வந்து அழுத்துகிறது என்று சொன்னான். ஆனால் பார்க்கும்போது மிக எளிதாக இருக்கும். சிறகு போன்ற கதைகள் அப்படிப்பட்டவை
சங்கு, ஆனந்தவல்லி, கதைசொல்லி என்று மூன்று கதாபாத்திரங்கள். அவர்களின் குணச்சித்திரம் மிகத்தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று கதை சொல்லவுமில்லை. இயல்பாகவே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது கதையிலே வந்து நிகழ்கிறது.
சங்கு பணக்காரவீட்டுப்பையன். வில்லன் போல, ஆனால் வில்லனும் அல்ல. அம்மாவுக்கு பயந்தவன். அவன் வீட்டுச்சூழலில் அவனுக்கு சொல்லப்பட்டிருக்கிற வேல்யூஸ் தான் அவனிடமிருக்கின்றன. பெண்களை வென்று அடைவது அவனுக்கு விளையாட்டு. பணம் கொடுத்துவிட்டேனே என்று நினைத்துக்கொள்வான். தோரணை முரட்டுத்தனம் எல்லாம் இருந்தாலும் ஒரு கள்ளமில்லாத கிராமியத்தனமும் உள்ளது. அவன் மாறவே இல்லை. கடைசிவரை அதே சங்குதான். அவன் அவமானப்படுத்திய பெண்ணிடம் அதை மறந்து சொந்தக்குழந்தைகளைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறான்
ஆனந்தவல்லி, கதைசொல்லி இருவருமே அவ்வாறு தெளிவாக இருக்கிறார்கள். கதைசொல்லி ஒரு முதிர்ச்சியிலல நிலையில் இருக்கிறான். கதைவழியாக ஒரு கட்டத்தை கடந்துசெல்கிறான். அந்த விஷயத்தில் மனம் உழன்றபோதிலும் அதிலிருந்து விலகிநின்றிருக்கும் ஒரு ஆழமும் அவனிடமிருக்கிறது. ஆனந்தவல்லிதான் சிறகு முளைத்துப் பறப்பவள். பயந்த கிராமத்துப்பெண், அவளுக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டுகொள்கிறாள்.
இந்த இருவரும் அடையும் மாற்றங்கள் மாற்றமே இல்லாத சங்குவை முன்னிறுத்தி காட்டப்படுகின்றன. ஒரு வாழ்க்கைச்சித்திரமாகவே இருக்கிறது இந்தக்கதை
மகேந்திரன்.
சென்னை
***
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
சாவி கதை எனக்கு பலவகையான உணர்ச்சிகளை உருவாக்கிய கதை. கதையின் தத்துவதளம் அதன் புராணக்குறிப்புகள் வழியாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த புராணத்தைச் சொல்ல ஒர் அடித்தளத்தை இயல்பாக உருவாக்கிக்கொண்டுவருகிறீர்கள். அரிகிருஷ்ணனின் வில்லுப்பாட்டுப் பின்புலம். முதல்பகுதியில் பகடியாக அந்த விஷயம் வருகிறது. ராமாயண உட்குறிப்புகளைக்கொண்டு ஒரு பெரிய கேலிச்சித்திரம்.
ஆனால் அரிகிருஷ்னனின் அம்மா பேச ஆரம்பிக்கும்போது வேறுதளங்கள் வருகின்றன. அந்த அம்மா ஞானத்தைப்பற்றிச் சொல்லுமிடமெல்லாம் மிகமிக முக்கியமானவை. ஞானம் இரண்டுவகை, உள்ளேபோகும் ஞானம் ஒன்று. வெளியேறும் ஞானம் இன்னொன்று. உள்ளேபோகத்தால் சம்சாரிகளால் முடியும். ஞானிகள் வெளியேறுபவர்கள். அதை அழகாகச் சொல்லியிருக்கும் கதை இது. குரங்கு உள்ளே நுழைகிறது, ஆனால் வெளியேற முடியாது.
அது திகழும் காட்டில் இருந்து வெளியே வருகிறது. மனிதன் ஞானத்தை உதறி காட்டுக்குச் செல்கிறான்
ஜெயக்குமார்
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.
சாவி சிறுகதை படித்தேன்
அரிகிருஷ்ணனின் அம்மாவின் பேச்சில்தான் கதையின் சாவி இருக்கிறது. “அது பாட்டுக்குக் காட்டையும் வானத்தையும் பாத்துக்கிட்டிருக்கும்.. நீ அதுக்குத் துக்கத்தைக் கத்துக் கொடுக்கற” என்கிறார் அவர்.
உண்மைதானே. இந்த உலகத்தில் துக்கம்தான் அதிகம் என்பார்கள். அதை இன்பமாக மாற்றி அல்லது இன்பத்தைக் கண்டறிந்து வெற்றி அடைபவர் சிலரே.
குரங்கு முதலில் ஸ்குருவைப் போட முடியாமல் பின் போட்டு விட்டு அடையும் மகிழ்ச்சிதான் வாழ்க்கை. எதிலுமே இன்பமாயினும், துன்பமாயினும் உள்ளே செல்வது போல வெளியே வருவதையும் அறிந்து செயல்படவேண்டும்
இல்லையேல் பத்மவியூகம் புகுந்த அபிமன்யு கதைதான்.
இனி அக்குரங்கு அங்கேயே சுழன்று கிடக்கவேண்டியதுதான். வெளியே வர அறியாதது அது. அதையே பழக்கிக்கொண்டு தற்கால மனிதன் போல உழல வேண்டியதுதான். பாவம்.
ஆங்காங்கே வரும் நகைச்சுவைகள் தக்கபடி அமைந்துக் கதையைச் சலிப்பின்றி வாசிக்க வைக்கின்றன.
வளவ. துரையன்
***