‘காந்திபடம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காரு’உண்மைதான். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், காந்தியின் சிரிப்பு, ‘என்னடாவெள்ளகாரன வெரட்டிபுட்டு, கொள்ளக்காரன் கையில கோல குடுதுப்புட்டமே’, என்ற சங்கடத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பதுபோல இருக்கலாம்.
கோட்டி-பூமேடை ஒரு காமெடியன் போல மக்களால் நடத்தப்பட்டது அறியாமையின் வெளிபாடுதான். அவருடைய நகைச்சுவைப் பேச்சு அவரைப்பற்றிய தோற்றத்தை மக்கள் மனதில் தோற்றுவித்திருக்கலாம்.
எனக்கு இந்த கதையை படித்தபோது நகைச்சுவை உணர்வு தோன்றவில்லை. வலிதான் தோன்றியது. என்னுடைய தாத்தா ஒரு விடுதலை போராட்ட வீரர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் இரண்டரை வருடம் சிறைத் தண்டனையும்
பன்னிரண்டு கசையடிகளும் தண்டனையாகப் பெற்றிருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் இது போன்ற சிறைப் பறவைகளை தறுதலைகள் என்றுதான் தூற்றியிருப்பார்கள். பூமேடை போன்றவர்கள் சமரசமே இல்லாத போராளிகள். அவர்களின் போராட்டம் நிகழ்காலத்திலும் நடந்ததால்தான் அவரின் போராட்டம் மற்றவர்களுக்கு வித்தியாசமாகத் தோன்றியிருகிறது. அது நகைப்புக்கிடமாகவும் இருந்திருக்கிறது.
திராவிட இயக்கங்களின் மயக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் காந்திய சிந்தனையாளர்கள் கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமே. ‘தியாகி’ என்ற சொல்லை ஒரு கேலிக்குரிய விசயமாக பேசுவது திராவிட இயக்கத்தவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் கூட என்னுடைய தாத்தாவைப் பற்றிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் தலைவர்கள் டால்மியாபுரத்தை, கல்லக்குடியாக மாற்ற போராட்டம் நடத்தியதுதான் தியாகம். இந்திமொழியை எதிர்த்து நடத்தியதுதான் போராட்டம். இன்று அவர்கள் எங்கு சென்று குலாவுகிறார்கள் என்று நான் எழுதித் தெரிய வேண்டியதில்லை.
பூமேடை அவர்களின் பெர்சனாலிட்டி பற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டிய அளவுக்கு
செய்திகள் இருப்பதாகத் தோன்றுகிறது. காந்தியச் சிந்தனைகள் மனித உரு எடுத்தால்
எப்படி இருக்குமோ அதுதான் பூமேடை என்று எனக்குத் தோன்றுகிறது. நம் காலத்தில்
ஒரு உண்மையான காந்தியப் போராளி வாழ்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியாகவும்,
அவர் புறக்கணிக்கப்பட்டு, சிறுமைப் படுத்தப்பட்டார் என்பது மனதில் வலி கொடுப்பதாகவும் இருக்கிறது. காந்தி சிலைக்குப் பூமேடை அணிவித்த கோமாளிக்குல்லா காந்திக்கு அல்ல. காந்திக்கு மாலைகள் அணிவிக்கும் அயோக்கியர்களுக்கு.
என்னுடைய தாத்தா அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னால் கூடச் சுகந்திர தினத்திற்கு
எங்கள் வீட்டு வாசலில் கை ராட்டினம் அச்சிட்ட மூவர்ண கொடியேற்றி, ‘வந்தே மாதரம்’,
ஜெய் ஹிந்த் !’, என்று சொல்லி, குழந்தைகளுக்கு மிட்டாய் எல்லாம் கொடுத்தார்.
உண்மையான காந்தியவாதிகள் மாறுவதில்லை. இவர்களுக்குப் பிறகு காந்தியச் சிந்தனைகள் ஒரு வரலாறாக மட்டுமே இருந்துவிடுமோ என்பதுதான் என்னுடைய அச்சம்.
பூமேடை பற்றி இந்த சிறுகதை போதாது. தூக்கத்தில் இருக்கும் இந்த இந்தியச் சமுகத்தை எழுப்ப ஒரு நாவலும் எழுதவேண்டும். படிக்காத பாமரர்களுக்கு புரிய வைக்க பெரிய நடிகர்களை நடிக்க வைத்தாவது ஒரு படம் எடுக்க வேண்டும்.
பூமேடை என்ற மகத்தான மனிதனின் நினைவுகள் கணக்கும் இதயத்துடன் ,
(பூமேடை அவர்களின் படம் கிடைக்குமா?)
குருமூர்த்தி பழனிவேல்
லாகோஸ்
அன்புள்ளகுரு
நானும் தேடினேன். படம் ஏதும் கிடைக்கவில்லை
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
போண்டா வடை சுற்றித்தரும் காகிதத்தைக் கூட வாசித்து விட்டு தான் கிழே போட வேண்டும் என்பது உங்கள் கதைகளை படிக்கும் போது தோன்றுகிறது.
உங்கள் அனுபவமாக இருந்தாலும் இல்லை வாசிப்பின் வெளிப்பாடாக இருந்தாலும்,அதிகம் அறியப்படாத அவர்களுக்கு இந்த கதைகள் ஒரு “சுயசரிதை” யாக இருக்கும் உங்கள் எழுத்தில்.
இந்த கதையில் எத்தனை கற்பனைகள் கலக்கப்பட்டு இருந்தாலும் முடிவாக மனதில் நிற்பது பூமேடையின் துணிவு தான். எல்லா வரிகளும் நகைச்சுவையாக இருந்தாலும் முடிவு இருக்கம்.
நீங்கள் கதைப்படுத்தும் எந்த மனிதர்களையும் நான் எங்கேயும் கேள்விப்படவில்லை.காரணம் என் வாசிப்பின் எல்லை மிகவும் சிறியது.முயற்சிக்க வேண்டும் இனியாவது எல்லையை விரிவு படுத்த.
என்றும் அன்புடன்,
சி.கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்,
நீங்கள் சென்னையில் நில மோசடிகளுக்கு எதிராக, கட்டிட மோசடிகளுக்கு எதிராக சலியாத சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் டிராஃபிக் ராமசாமி என்பவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரும் ஒரு பூமேடைதான்.
தனிப்பட்ட முறையில் அவருக்கு இதில் என்ன லாபம்? அவரது குடும்பம் அவருடன் இல்லை. அவருக்கு எந்தப் பின்புலமும் இல்லை. கொலைமிரட்டல்கள் நடுவே வாழ்கிறார். பணம் இல்லை. சிலசமயம் நீதிமன்றங்கள் நீதிமன்ற அவமதிப்பு விதிக்கும்போது சிறைசெல்லவே தயராக இருக்கிறார்
புகழ் என்றால் ஓர் ஊழல் அரசியல்வாதிக்கு உள்ள புகழில் கால்வாசிகூட அவருக்கு இல்லை. அவதூறுகளால்தான் அவர் மூழ்கடிக்கப்படுகிறார். சராசரி மனிதர்களுக்கு ஒரு தியாகமோ பொதுப்பணியோ நம்பக்கூடியனவாக இல்லை. ஏனென்றால் அவர்கள் அப்படி ஏதும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் செய்வது எல்லாமே லாபத்துக்காகத்தான். ஆகவே உலகில் எல்லாரும் எல்லாவற்றையும் லாபத்துக்காகத்தான் செய்கிறார்கள் என நம்புகிறார்கள். அப்படி நம்பினால்தான் அவர்கள் தங்கள் சொந்த சில்லறைப்பிழைப்புவாதத்தை நியாயப்படுத்திக்கொள்ளமுடியும். அவர்கள் இத்தகைய போராளிகளைப்பற்றிய எந்த அவதூறையும் நம்புவார்கள்.
இதற்கிணையாக சொல்லப்படவேண்டியவர் கேரளத்தின் சமூகப்போராளியான நவாப் ராஜேந்திரன். ஆனால் அவர் அங்கே விரிவான அங்கீகாரம் பெற்றவராக இருந்தார்
பூமேடை ஒன்றும் அபூர்வமானவர் அல்ல. எல்லா ஊரிலும் அத்தகைய சிலர் இருப்பார்கள்
ஜெ