சிறகு,ஆமை- கடிதங்கள்

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிறகு கதை இந்த வரிசையில் வரும் பல கதைகளுடன் தொடர்புபடுத்தி வாசிக்கத்தக்கது.முக்கியமாக நற்றுணை கதையில் இதன் தொடக்கம் உள்ளது, எப்படி மிக எளிதாக அவள் சைக்கிள் கற்றுக்கொள்கிறாள் என்பது. இந்த விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். பெண்களுக்கு ஏதாவது வண்டியை ஓட்டக் கற்றுக்கொடுத்தாலே அவர்களின் தன்னம்பிக்கை பெருகிவிடுகிறது. அதோடு ஏதாவது வண்டியை ஓட்டும் பெண்கள் அதிகமாக டிப்ரஸ் ஆவதுமில்லை. மிக எளிதாக அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு பறக்கும் அனுபவத்தை அளிக்கிறது என நினைக்கிறேன்.

ஆகவேதான் உலகம் முழுக்கவே பெண்கள் வண்டிகளை ஓட்டுவதற்கு எதிராக பயங்கரமான எதிர்ப்புகள் இருந்தன. சைக்கிள் இருநூறாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டபோது பெண்கள் அதை ஓட்ட மதரீதியான எதிர்ப்புகள் இருந்தன. அதைமீறி பெண்கள் சைக்கிள் ஓட்டலானார்கள். அதற்கு தோதான உடைமாற்றம் வந்தது. பெண்களுக்கான சைக்கிள் கிளப்புகள் உருவாகி வந்தன. சைக்கிள் அமெரிக்காவின் பெண்விடுதலையில் மிகமிகப்பெரிய பங்கு வகித்தது.

இந்தக்கதையை வாசித்தபோது ஞானக்கூத்தனின் சைக்கிள் கமலம் என்ற ஆபாசக்கவிதை ஞாபகம் வந்தது. அது அன்று சைக்கிளோட்டும் பெண்களைப்பற்றிய ஆண்களின் நக்கல் எப்படி இருந்தது என்பதற்கான சான்று, ஞானக்கூத்தனிடம் எப்போதும் பழைமைசார்ந்த பகடிப்பார்வைதான் உண்டு.அது வெளிப்பட்ட கவிதை அது

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ,

சிறகு இனிமையான கதை. பெண் தனக்குத் தேவையான திறனை, ஆளுமையை ஆணிடம் இருந்து கற்றறிந்து தன்னுடையை உலகத்திற்கு எழுந்து பறந்து செல்லும் இடம் கட்சிதமாக சொல்லப்படுகிறது. சைக்கிளை அவளுடைய லௌகீக வாழ்கையின் ஆளுமையின் திறப்பு சார்ந்த உருவகமாக யோசிக்கும்போது கதை இன்னும் விரிகிறது. பெண் சார்ந்த மதிப்பீடுகள், கணிப்புகள் ஆணுக்கு குறைவாகவே இருக்கிறன. வெளிப்பார்வைக்கு புரிந்துகொண்டதாக நம்பினாலும் உண்மை அப்படியல்ல. கண்ணீருக்கும், சிணுங்கலுக்கும் அப்பால் ஆண்களால் அறிந்து கொள்ள முடியாதவர்களாக, வெல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்தவல்லி அப்படியான ஒரு பெண். சைக்கிளை வாங்கத் தூண்டுதல் கொடுப்பதும் அவள்தான், விரைந்து கற்றபின் சிறகு முளைத்து பறந்து செல்லும் சுதந்திரப் பறவையாகிவிடுகிறாள். அதுவரை ஆண், சிறகு முளைக்க காத்திருக்கும் கூடாக அவளுக்குத் தேவையாக இருக்கிறது.  ஆனந்தவல்லி நினைத்தால் முன்னமே சங்கு வீட்டில் சென்று புகார் அளித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. கதையை படித்து முடித்த போது இனிமையான புன்னகை எழுந்து தழுவிக்கொண்டது.

வெற்றி, நஞ்சு, வேட்டு, லீலை போன்ற கதைகளின் வரிசையில் வைக்கவேண்டிய கதை.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

***

Turtle’s back background texture abstract pattern nature.

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஆமை கதையையும் சைக்கிள் கதையையும் ஒப்பிட்டு வாசித்துக்கொண்டேன். ஆமை கதையில் அந்த அம்மா ஆமையோட்டுக்குள் ஒடுங்கிக்கொள்கிறார். இங்கே பெரும்பாலான பெண்கள் ஆமையின் ஓட்டுக்குள்தான் வாழ்கிறார்கள். ஆமையோட்டை தூக்கி அலைகிறார்கள். ஒரு பெண் ஆமையோட்டை தூக்கி வீசி வெளியே வருவதுதான் சிறகு கதை. ஆமையோட்டிலிருந்து சிறகுடன் வெளிப்படும்போது ஆமை கூட்டுப்புழுவாக ஆகிவிடுகிறது

கதையிலுள்ள குறிப்பு ஒன்று சுவாரசியமானது. கிராமப்பெண்கள் வயசுவந்து மார்பகங்கள் வரத்தொடங்கியதும் தோளைக்குறுக்கிக்கொள்வார்கள். தோள்கள் படகுபோலவே இருக்கும். ஆனால் சைக்கிள் ஏறி அமர்ந்ததும் அதை ஓட்டவேண்டும் என்றால் நிமிர்ந்து அமரவேண்டும். தொலைவை பார்க்கவேண்டும். ஆகவே அந்தப்பழைய பெண் நிமிர்ந்தால் மட்டுமே சைக்கிள் ஓட்டமுடியும். ஆனந்தவல்லி நிமிர்ந்த கணம்தான் அந்தக்கதை

கே.ராஜகோபால்

***

அன்பு ஜெ,

கதைத் திருவிழாவில் அனைத்து கதைகளும் ஒவ்வொரு உச்சம். மணிபல்லவம், ஆமை என அனைத்து கதைகளும் ஒரு தரிசனத்தை, சில மாற்றங்களை என்னுள் ஏற்படுத்துகின்றன.  மனச்சோர்வு, எதிர்கால வாழ்க்கை நிலை மேல் ஐயம் என அனைத்திலிருந்தும் ஒரு நம்பிக்கை தளிர் வர வைத்த கதை ஆமை.

சமூகத்தில் நிலவிய கடும் சாதிய ஒடுக்கில் இருந்து மேலெழுந்து வந்த ஒரு குடும்பத்தின் கதை. அதன் அரசியல் பண்பாடு சாதி  என பல சிடுக்குகளின் இழைக்கொண்டு முன்னேறியவரின் கதை. வாழ்வின் மீது தன்னம்பிக்கை வரவைக்கும் கதை. நூறுநாற்காலிகள் எனும் சிறுகதைக்கு இனையாக வைக்கத்தக்க கதை ஆமை. ஒரு புதுஒளிக்கீற்றுடன், ஒரு சிறுபுன்னகையுடன்,  ஒரு நம்பிக்கையுடன். இதுவரை அடைந்த இன்மைகளும், சோர்வுகளையும் *அதனாலென்ன* என்று புறந்தள்ளி இனி பயனிக்கலாம் என்ற ஊக்கத்தை ஏற்படுத்திய கதை. மிக்க நன்றி ஜெ.

என்றும் அன்புடன்

ரா. பாலசுந்தர்

***

 

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைஆபகந்தி, வண்ணம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]