கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
அன்புநிறை ஜெ,
சிறகு கதை வாசித்ததும் எனக்கு அருள் கதை நினைவிற்கு வந்தது. இக்கதை நாயகி ஆனந்தவல்லி ஆரம்பத்தில் சாந்தமாக இருந்து பின்பு சாமுண்டியாக உருமாறும் அந்த இடம் நான் மற்ற பெண்கள் போல் அல்ல என்று சீறும் இடம், சைக்கிள் நவீனத்தின் குறியீடு, ஒருவகையில் அவள் இவ்வளவு தைரியம் வர கதைநாயகனே காரணம் ஆகிறான். சைக்கிளுக்கு முன்பு ஆனந்தவல்லி நம் பழைய உலகின் பெண்கள், சைக்கிளுக்கு பின்பு வந்த ஆனந்தவல்வி புதுயுகத்தின் பெண்கள். தமிழகத்தில் அறிவொளி இயக்கத்தில்தான் பெண்களுக்கு பரவலாக சைக்கிள் ஓட்ட கற்பிக்கப்பட்டு சுயமுன்னேற்றம் ஏற்படுத்த உதவியது. ஆண்களுக்கு மட்டுமே உரிய சைக்கிள் பெண்களுக்கு பரவலாக பயன்படுத்த அந்த இயக்கம் கொண்ட முயற்சிக்கு அளவே இல்லை. இறுதியில் வெற்றியும் கண்டது. பல கிராமப்புற பெண்களுக்கு எழுத்தறிவும் கொடுத்த மகத்தான இயக்கம். தமிழகத்தை ஒரு காலகட்ட வளர்ச்சிக்கு உந்திதள்ளியது.
பெண்கள் பற்றிய அந்த வயதிற்குரிய குணம், நவீனத்தின் மாற்றம், பணக்காரன் ஏழையிடையே உள்ள வேறுபாட்டினால் ஏற்படும் சிந்தனை மாற்றம் என அழகாக பின்னிப்பிணையப்பட்ட கதை. இறுதியில் அவளின் வளர்ச்சி ஒரு வெற்றியின் கதை. மீறலின் கதை. வாழ்வின் கதை.
பாலசுந்தர்
***
அன்புள்ள ஜெ
சிறகு புன்னகைக்க வைக்கும் கதை. ஆனால் இதை தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருமுறையேனும் அறிந்திருக்காதவர்கல் கம்மியாகவே இருப்பார்கள். பெண்கள் தீ போல. சட்டென்று பற்றிப்படர்ந்து ஏறிவிடுவார்கள். என் மனைவியை இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை என் ஆபீசுக்கு அழைத்துவந்தேன். இன்றைக்கு என் ஆபீஸில் அவள்தான் சீஃப். இது எப்படி நிகழ்கிறது என்றால் அவர்களுக்கு வெளியுலகு தெரியும். ஆனால் தெரியும் என்பது தெரியாது. தெரியவந்ததும் பறந்துவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையை கூர்ந்து பார்க்கிறார்கள். ஆணகளை விட லௌகீகமானவர்கள். ஆகவே இயல்பாக இப்படி இருக்கிறார்கள். இந்தக்கதையிலேயே ஆனந்தவல்லிக்கு மிக எளிதாக சைக்கிள் வருகிறது. ஆனால் அதட்டி ஏறவைக்கவேண்டியிருக்கிறது.
ஆனந்தவல்லி சங்குவிடம் கடைசியில் நட்பாக இருப்பது ஒரு காரணத்தால்தான். அவள் அவனைக் கடந்துசென்றுவிட்டாள். அவன் அவளுக்கு ஒரு பொருட்டு அல்ல. அவன் ஒரு சின்னவயசு ஞாபகம். அதேசமயம் சைக்கிள் கற்றுக்கொடுத்தவன் அவன். அந்த நன்றி அவளுக்கு இருக்கிறது. பெண் சிறகுகள் முளைத்து பறக்க ஆரம்பிக்கும் காலம் இது.
சந்தானகிருஷ்ணன்
***
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கணக்கு ஒரு அழகான உதாரணகதை போல இருந்தது. இந்தக் கதைகளை வாசிக்கையில் சிறுகதைக்குத்தான் எவ்வளவு வடிவங்கள் சாத்தியம் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. நிகழ்வுகளைச் சொல்லும் நேரடியான கதைகள், வண்ணம் போன்ற உருவகக்கதைகள், ஆமை போன்ற வெறும் படிமங்கள் மட்டுமே கொண்ட கதைகள். இந்தக்கதையின் அழகும் முழுமையும் நினைக்க நினைக்கபெருகுகின்றன. ஒரு சின்னக்குழந்தைக்கு கொஞ்சம் எளிமையாக இந்தக்கதையைச் சொல்லலாம். கொஞ்சம் பெரியவர்களுக்கு மேலதிக அர்த்ததுடன் சொல்லலாம்
கணக்கு இரண்டு. இன்னொருவரை ஏமாற்றும் கணக்கு. தன்னைத்தானே கண்டடையும் கணக்கு. ஏமாற்றும் கணக்குதான் அரசாங்கமாகவும் ஆதிக்கமாகவும் ஆகிறது. அறிவியல் எல்லாம் அதற்கு அடிமைப்பட்டே கிடக்கிறது. ஒருவகையில் வர்க்கவேறுபாடுகள் உருவானதையே சொல்லும் கதை இது
ஒருவேடிக்கை. நான் என் தொழிற்சங்கத்தில் நண்பர்களிடம் இதைச் சொன்னேன். எழுதியது யார் என்றார்கள். ச.தமிழ்ச்செல்வன் என்றேன். ஒரே பாராட்டுமழை. முற்போக்குக்கதை என்றால் இப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அதன்பிறகு நீங்கள் எழுதியது என்றேன். ஒரு அமைதி. ஒருவர் கதையெல்லாம் நல்லாத்தான் எழுதறாப்ல என்றார். இன்னொருவர் வேறே ஏதாவது உள்குத்து வச்சிருக்காரான்னு பார்க்கணும் என்றார்
எஸ்.கணேஷ்குமார்
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு
வணக்கம். நலம்தானே?
கணக்கு சிறுகதை படித்தேன். “இது வேற கணக்குவே. இந்தக் கணக்கு உம்ம மாதிரி ஆளுக்குப் புரியாது” என அச்சுதன் சொல்லும் வரிகளில்தான் கதையின் மையம் அடங்கி உள்ள்ளது. கணக்கு உலகில் தோன்றிய காலத்திலிருந்தே பொய்க்கணக்கு என்பதும் தோன்றி இருக்கிறது. எக்காலத்திலும் அது ஏழ்மையில் உள்ளோரை வஞ்சித்துத் திறமை உள்ளவரை வாழவைக்கிறது.
ஒருவரிடத்தில் திறமை இருந்தால் அதற்கு வணக்கம் சொல்லிப் பாராட்டும் மனம் பெரும்பாலோரிடம் இல்லை. அதுவும் அச்சுதன் போன்றோர் அதிகம் உள்ளதுதான் இவ்வுல்கம் போலிருக்கிறது.
எழ்மையில் உழலும் காளியன் பிள்ளையின் படிப்புச் செலவுக்காக மரப்பலாக்காயை விற்றுப் பணம் வாங்க வருகிறான். அவனிடம் உள்ள கணக்குக் கண் (தமிழுக்கு இச்சொல் புதுவரவு) என்பதன் அருமை அவனுக்கு மரப்பலாக்காய் பற்றித் தெரியாதது போலத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அதை வைத்தே அவன் பணம் பண்ணியிருப்பான்.
அச்சுதன் கூட்டத்திற்கு அவன் திறமை கண்டு றாமையும்,பொச்சரிப்பும் வந்துவிடுகிறது.
இப்பொழுது ஒருசிலர் வசைபாடுவதுபோல அச்சுதன் உடனே உள்ளே சென்று பலகை எடுத்து வந்து மீண்டும். காளையனை வரச்சொல்லித் திட்டமிட்டு அவனைத் தோற்கடிக்கிறார்.அவன் மனம் வெதும்பி,குழம்பிப் புலம்பிக்கொண்டே செல்ல பொறாமைக் கூட்டம் மகிழ்கிறது.
ஆனால் தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும.மறுபடியும் தருமம் வெல்லும். அது சரி இப்பொழுது காளயன் தேவையில்லாமல் மடும் மன உளச்சலுக்கும் வேதனைக்கும் என்ன விலை? எப்படிக் கணக்குப் போட்டாலும் இன்றும் விடை வராது.
வளவ. துரையன்
***