கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வண்ணம் இந்த வரிசை சிறுகதைகளில் மிக வித்தியாசமான ஒன்று. ஒரு பழங்கதை போல, ஒரு பகடிக்கதைபோல ஒரே சமயம் தோன்றுகிறது. நடையும் வேறுபட்டிருக்கிறது. பகடி இழையோடும் நீண்ட சொற்றொடர்கள். கதை ஒரு காலகட்டத்தை சித்தரிக்கிறது. விவசாயிகளுக்கும் அரசமைப்புக்குமான உறவாடல். அதிலுள்ள அபத்தமும் அயோக்கியத்தனமும் பரிதாபமும்.
இன்றைக்கும்கூட அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான உறவு இப்படித்தான் உள்ளது. அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான உறவு என்பது இன்றைக்கும் ஒருவழிப்பாதைதான். அரசு மக்களுக்கு ஆணைகளை தான் பிறப்பிக்கும் மக்களின் செய்தி அரசாங்கத்தைச் சென்றடைவதில்லை. அத்ற்கு பியிரோக்ரசி உள்ளது
முன்பு ஓர் உரையில் நானி பால்கிவாலா சொன்னார். பியூரோக்ரஸியின் பிரச்சினை என்பது அது மேலிருந்து கீழ்நோக்கி பேசும் அமைப்பு என்பது. அதைக்கொண்டு கீழிருந்து மேலே நோக்கி பேச முடியாது. அதற்கு வேறு அமைப்புக்கள் வேண்டும். இன்றுதான் விமன்ஸ் கமிஷன் ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷன் போன்ற அமைப்புக்கள் உருவாகி வந்திருக்கின்றன. அவற்றை பியீரோக்ரஸியில் இருந்து விலக்கித்தான் வைத்திருக்கவேண்டும்.
அரசு மூச்சுவிடும் நுரையீரல்போல. காற்று உள்ளே போகவேண்டும் வெளியே வரவேண்டும். ஒரு பேரபிள் போல இருந்தாலும் யோசிக்கயோசிக்க விரியும் கதையாக இருந்தது,
ஆர்.எஸ்.பிரபாகர்
***
அன்புள்ள ஜெ
வண்ணம் கதையை ஒரு சத்யாகிரகத்தின் கதையாகவே நான் வாசித்தேன். அது ஒத்துழையாமையின் கதை. எல்லா வழிகளும் மூடிவிடும்போது மக்கள் அப்படியே கல்லாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் ஒன்றும் செய்யமுடியாது. அரசன் வந்து கும்பிட்டுத்தான் ஆகவேண்டும். அரசனை கும்பிடவைப்பது எது? சாபம் பற்றிய பயந்தான். சாபம் படர்ந்து பரவும் என்று அவன் அஞ்சுகிறான். ஆகவேதான் அவன் வருகிறான். ஒரு கிராமம் கல்லானால் சரி, நாடே கல்லாக ஆனால் அவன் என்னதான் செய்ய முடியும்?
இத்தகைய போராட்டங்கள் இந்தியாவில் நிறையவே நடந்திருக்கின்றன. அதைப்பற்றிய வரலாற்றுச் சித்திரங்கள் நிறைய உள்ளன. வரிகொடாப் போராட்டமென்பது இந்தியாவின் தொன்மையான மரபிலேயே இருந்து கொண்டிருக்கிறது. மன்னன்வந்து விழுந்துகும்பிட்டாகவேண்டும் அங்கே
ஜெயக்குமார்
***
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆபகந்தியின் கதை இந்த கதைவரிசையில் நீங்கள் திரும்பத்திரும்ப கையாளும் கதைக்கருவின் இன்னொரு வடிவம். அல்லது ஒரு முக்கியமான கேள்வியை பலகோணங்களில் ஆராய்ந்துகொண்டே இருக்கிறீர்கள். நன்மை தீமை, ஆக்கம் அழிவு என்ற இருமையை கடந்த ஒன்று உண்டா என்றகேள்வி என்று சுருக்கமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இந்தக்கதையும் அப்படித்தான். புதையல் எடுக்கலாம், ஆனால் ஆபகந்தியை எடுக்கும்போது கூடவே வரும் அழிவை எடுக்கும் ஆற்றல் உண்டா என்று கேட்கிறது இந்தக்கதை. நம் பேராசைக்காக லட்சுமியை அகழ்ந்து எடுத்தால் கூடவே வருவது மூதேவியும்தான்.ஆபகந்தி—நீரின் மணம் உள்ளவள். தூமகந்தி. புகையின் மணம் உள்ளவள். மிக வலுவான மையப்படிமம் இது
ஆனால் உயிர்வாழ்வதற்காக சாவின் முனையில் நின்று அகழும்போது ஆபகந்தியே எழுந்து வந்து பொன்னை கொடுக்கிறாள். இன்றைக்கு கொரோனா உட்பட நாம் அகழ்ந்து வைத்திருப்பதுஎல்லாமே தூமகந்தியைத்தான். ஆபகந்தியை எடுக்க நம்மால் முடியவில்லை. ஏனென்றால் நம்மிடம் தேவை இல்லை. அடைக்கல உணர்வு இல்லை. இருப்பதுபேராசை மட்டும்தான்
புதையல் எடுக்க தோண்டிக் கொண்டே இருந்த அப்பா ஒரு பெரிய உருவகம்
மகாதேவன்
***
அன்புள்ள ஜெ
ஆபகந்தி பலவகையிலும் வளர்ந்துகொண்டே இருக்கும் கதை. சென்ற காலகட்டத்தில் பாரம்பரிய வீடுகள் எல்லாவற்றிலும் இப்படி புதையல் எடுக்க முயன்றுகொண்டே இருக்கும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே ஒருவகையான தோற்றுப்போன மனிதர்கள். அவர்கள் தோண்டிக்கொண்டிருந்தது மண்ணை மட்டும் அல்ல.
அவர்கள் தோண்டி எடுக்க நினைப்பது அவர்கள் மறந்துவிட்ட ஒன்றை. தோண்டி தோண்டி எடுப்பது தூமகந்தியைத்தான்.அந்தக்கதையே மனதுக்குள் இருப்பதை தோண்டி எடுப்பதுதான். அதைத்தான் சித்தர் சொல்கிறார். அவர் தோண்டி எடுத்தால் மூதேவியைத்தான் எடுத்திருப்பார். அந்த அம்மா தோண்டி எடுத்தால்தான் பொன்னை எடுப்பார்கள். ஆனால் அவர்கள் பிள்ளைகள் பசியாற்ற மட்டும்தான் அதை தோண்டி எடுப்பதற்கு முயல்வார்கள்.
பாபு குமார்
***
கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]
கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1