அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நலம்தானே. ஆமை கதை படித்தேன். பரவசமாக இருந்தது. பனை வாழ்வளித்த ஒரு புலையக்குடும்பத்தின் கதை. பனையின் மகத்துவத்தைப் பேசும் அற்புதமான கதை. கதைக்குள் அனக்கன் பிரவேசித்ததும் கதைத்தளம் எல்லையின்மையில் விரிகிறது. ஒரு வரியில் சொல்லிச் செல்லும் வர்ஷா பாத்திரம் கூட மனதில் ஒன்றுகிறது.
உங்கள் மற்ற கதைகள் போலவே நாவலாக விரியும் வல்லமை இந்த சிறுகதைக்கும் உண்டு. குறிப்பு : ‘தமிழிலே ஒரே சொலவடை தான் அடைமழை. அடைச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் பெய்யுத மழைதான் அவனுக கண்டது…’ இந்த வரிகள் தமிழ் பண்பாட்டை அவமதிப்பதாக ”தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் ” கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடும்.
இதே உற்சாகத்தில் தொடர்ந்து எழுத உடல் நலமும் மன நலமும் குரு அருளால் உங்களுக்கு வாய்க்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்
மணி[ நிர்மால்யா]
***
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நானும் நலமே
ஆமை சமீபகாலத்தில் வாசித்த ஒரு கொந்தளிப்பான கதை. மிக எளிமையான கட்டமைப்பு. ஒருவர் பழைய கதையைச் சொல்கிறார், அவ்வளவுதான். ஆனால் இந்த வகையான கதைகளுக்கு இந்த நேரடித்தன்மைதான் அழகே. இதுதான் நம்பகமானது. உண்மையின் மிக அருகெ நின்றிருக்கும் புனைவு இது
பனை என்ற நாகத்தை நம்பி வாழும் ஒரு அடித்தளக்குடும்பம் மேலெழுந்ததன் கதை. நூறுநாற்காலிகளை ஞாபகப்படுத்தியது. பழைய காலத்தில் முனிவர்கள்தான் இந்தமாதிரி தவம் செய்வார்கள். இந்த அம்மாவும் தவம்தான் செய்கிறார். தன் சந்ததிக்கான தவம். அந்த கொடுந்தவ்த்தின் வெற்றியை மேலே இருந்து பார்த்து மகிழ்வாள் என நினைக்கிறேன்.
ராபர்ட் ஜெயசீலன்
***
அன்புள்ள ஜெ
சுக்ரர் கதையை ஒருவகையான மிஸ்டிக் கதையாகவே வாசித்தேன். நேரடியான கிரைம் கதை- ஆனால் அதில் ஒரு மிஸ்டிக் எலிமெண்ட் இருந்துகொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய அப்செஷனுடன் எதற்காக அரிகிருஷ்ணன் குற்றவாளிகளை பின்தொடர்கிறார். நீதியுணர்வு கடமையுணர்வு எல்லாம் இவ்வளவு பெரிய அர்ப்பணிப்பை உருவாக்காது. கடவுளின் லீலையையே பார்க்கும்போதுதான் ஒரு வேலை யோகமாக ஆகிறது. கீதை வகுப்பில் சத்குரு சொன்னது இது. எந்த வேலையாக இருந்தாலும் அதில் இந்த லீலையை அன்றாடம் உணரமுடிந்தால் அது யோகமாக ஆகிவிடும்
ஸ்ரீகாந்த்
***
அன்புள்ள ஜெ,
‘சுக்ரர்’ சிறுகதையில் வரும் ‘அரிகிருஷ்ணன்’ போலவே தான் நீங்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. கற்பனையின் ஊற்றாக உங்களின் கதைகளில் எத்தனை எத்தனை மனிதர்கள். இவ்வளவு மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவு கூர்வதும், அதே சமயம் அதில், புனைவு மனிதர்கள் யார், நிஜ மனிதர்கள் யார், புனைவு சம்பவங்கள் என்ன, உண்மை சம்பவங்கள் என்ன என்பதைப் பிரித்து மனதில் வைத்துக் கொள்வது என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
அரிகிருஷ்ணன் சொல்வது போல “அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்.” , நீங்களும் அப்படித்தான் போல என்றே நினைக்கிறேன். அது உங்களுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு இலக்கியத்திற்கும், கருத்து செயல்பாட்டிற்கும் நல்லது என நினைக்கிறேன். உங்களின் மனக் குவியலின் கூர்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த அளவு குவியல் வேண்டுமெனில், ஒரு தீராத கட்டுக்கடங்காத ஒரு மனச் சிதறல் எப்பொழுதும் உங்களிடம் இருக்குமென நினைக்கிறேன். இது ஒரு வகையான உணர்வு மட்டுமே. அறிவது கடினம்.
உங்களின் ஒரு வீடியோவில் (ஜெயகாந்தன் நினைவேந்தல் என்று நினைக்கிறேன்), நீங்கள் ஜெயகாந்தன் முன் அமர்ந்து பேசியதை பற்றி சொன்னீர்கள். அதில், “நான் ஒரு வார்த்தையை கூட மறக்க மாட்டேன்” என்று நீங்கள் கூறியதை நான் அப்போது மிகவும் ஆச்சரியமாக பார்த்தேன். பிறகு உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பொழுது அது உங்களுக்கு இயல்பானது என்றே தோன்றியது.
கதையின் இறுதியில் அரிகிருஷ்ணன் “தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?” என்று கிரிமினல்களின் வாழ்க்கை அறிதல் என்ற ஒன்றை மட்டுமே தன் வாழ்நாளில் செய்து கொண்டிருந்த அவருக்கும், இலக்கியம் மட்டுமே வாழ்நாள் முழுவதும் சுவாசிக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. நீங்கள் தான் அவர்.
அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி
***