
கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
உங்கள் கதைகளில் வந்துகொண்டே இருக்கும் ஒன்று, அடித்தளத்தில் இருந்து எழுந்து வந்தவர்களின் சீற்றமும் வேகமும். இங்கே எந்த இடதுசாரி எழுத்தாளர்களும் எழுதாத ஒரு வேகம் அது. இதை சமூக யதார்த்தமாக நீங்கள் சொல்வதில்லை. ஒரு வகையான தனிமனித வேகமாக அகவயமாகவே சொல்கிறீர்கள். வணங்கான் போன்ற ஒரு கதை ஆமை. முயல் ஆமை போட்டியில் ஆமை அதன் விடாப்பிடித்தன்மையல் ஜெயிக்கிறது. அதில் ஒரு பெரிய செய்தி உள்ளது
கொரம்பையை அந்த அம்மாள் தன் தோள்மேலேயே வைத்திருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். அந்த கொரம்பைக்கு என்ன அர்த்தம்? அது உண்மையில் அவளுடைய வீடு. என்ன வந்தாலும் அவள் அந்த வீட்டை விட தயாராக இல்லை. அந்த வீடு அவளுக்கு மறுக்கப்பட்ட நிலம். அதை உயிர்வேகத்துடன் அவள் தக்கவைத்துக்கொண்டிருக்கிறாள். அதை விடமலேயே சாகிறாள். அந்தப்பிடிவாதம்தான் கொரம்பையில் ஹவுஸ் மாளிகையாக ஆகிறது.
செந்தில்குமார்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
’ஆமை’ கதையை கண்ணீருடனேதான் வாசித்தேன். அப்படியொரு யாருமற்ற தங்க, ஒதுங்க தூங்கவென்று எதற்கும் நிழலற்ற ஒரு பெண்ணைக்குறித்து இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. ஒரு குப்பைத்தொட்டியோரம் கூட இல்லாத அந்த வாழ்க்கையை, அதிலும் மகனைக்காப்பாற்ற அவளுக்கிருந்த உறுதியை வாசிக்கையில் என்னையறியாமல் கண்நிறைந்துவிட்டது. பனையில் உடுதுணியும் அந்த கொரம்பையையும் இதுவரையிலும் எங்கும் வாசித்ததில்லை. அதிசயமாக இருந்தது.
பனையில் கிருஸ்துவைக்காணும், அழிந்து வரும் பனையை காப்பாற்றும் முயற்சிக்கே தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் அருட்பணி காட்சன் சாமுவேல் அவர்களை சில ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் தளம் வாயிலாக அறிந்து, பின்னர் சந்தித்து, அவரது பனைத்தேடலின், பனைப்பயணத்தின் ஒரு பகுதியாக என் மாணவர்களுக்கு, உலர்ந்த பனையோலையில் மதிப்புக்கூட்டும் பொருட்களை உருவாக்கும் ஒரு பயிலரங்கையும் பனையின் தாவரவகைப்பாட்டியல் குறித்த வகுப்பொன்றை அவரது பனைபற்றிய குறும்படத்திற்கென ஒரு படப்பிடிப்பையும் கல்லூரியில் நடத்தினோம்.
அதன்பிறகு அவருக்கிருந்த பனைத்தேடல் எனக்கும் தலைக்கு ஏறிவிட்டிருக்கிறது. பனைகுறித்த புதிய செய்திகளை அவருக்கு உடனுக்குடன் தெரிவித்து விடுவேன். பனையைக்குறித்து, முன்னைக்காட்டிலும் இப்போது விரிவாக, மிக நுட்பமான தாவரவியல் தகவல்களையும் இப்போது நானும் கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுத்தும் கொண்டிருக்கிறேன். இனி ஆமைக்கதையையும், யாருமற்ற பெண்ணொருத்திக்கு மொத்த வாழிடமாகவே இருந்த இந்த கொரம்பையையும் அதில் இணைத்துக் கொள்ளுவேன்.
அப்போது இவற்றை பயின்ற மாணவர்களில் பலருக்கும் பனைமீதான கவலையும் விருப்பமும் உண்டாகிவிட்டிருக்கிறது. அவர்கள் படிப்பை முடித்து இப்போது முதுநிலை தாவரவியலை வேறு பல கல்லூரிகளில் படித்தாலும் பனைமரங்கள் வெட்டுப்பட்டு கிடப்பதை, பனந்தடிகள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதை பனம்பழங்களை சாப்பிடுவதை, கடைத்தெருவில் பனக்கூம்புகள் விற்றுக்கொண்டிருப்பதை, பனம்பாய்களை, பனை விசிறிகளை, இப்போது புழக்கத்தில் இருக்கும் பனையோலை மின்விசிறிகளை என்று பனை தொடர்பாக எதைப்பார்த்தாலும் உடன் எனக்கு ஒரு வாட்ஸாப் செய்தியோ, புகைப்படமோ அனுப்பிவைப்பார்கள். காட்சனின் இந்தப்பணி அடுத்த தலைமுறைக்கு கொஞ்சமாவது சென்று சேர்ந்திருக்கிறதென்று தான் நினைக்கிறேன்.
திரு காட்சன் சாமுவேலும் பனையை, பனைமீதான் காதலை, பனைசார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரங்க ளை மேம்படுத்துவதை, பனைமரப்பாதுகாப்பை என பனையை எப்போதும் அனக்கனின் பாட்டியைப்போல முதுகில் சுமந்து கொண்டே இருக்கும் ஆமைதான்.
இந்தக்கதை அவருக்கு எத்தனை மகிழ்ச்சியை கொடுக்கும் என யூகிக்க முடிகின்றது
நன்றியும் அன்புமாய்
லோகமாதேவி
***
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு அனுபவம். என் இடதுகையும் காலும் விளங்காமல் போயிவிட்டது. அப்போது அனுராதா ரமணன் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அந்த மாதிரி ஒரு நோய்க்கு ஆளானதைப்பற்றிச் சொன்னார். அவர் தன் காலுடன் அன்பாக நெருக்கமாகப் பேசிப்பேசி அதை எப்படிச் சரிசெய்துகொண்டார் என்று எழுதியிருந்தார். நானும் அப்படி பேச நினைத்தேன். பேசமுடியவில்லை
ஆனால் ஒருநாள் எங்கோ போய்விட்டு வந்தபோது சாலையோரம் ஒரு பெரிய சிலை. காரை நிறுத்திவிட்டு அதில் இருந்த அம்மனிடம் நான் போய் நேருக்குநேர் பேச ஆரம்பித்தேன். நெஞ்சில் கையை வைத்து அழுதபடியே பேசினேன். நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன். திரும்பும்போது மனம் லேசாகிவிட்டிருந்தது. என்னவானாலும் சரி என்று தெளிவை அடைந்தேன். ஒருவருடத்திலே குணமானேன். ஆனால் மனசு தெளிந்துவிட்டது. நம் கையில் ஒன்றும் இல்லை என்று தெரிந்துவிட்டது
இந்த கொடூரமான தெய்வங்கள் கொடூரமானவை அல்ல. அவை கொடூரமாக தெரிவது நாம் பயப்படுவதனால்தான். நாம் அந்த அச்சத்தை கடந்து அவற்றுடன் பேசினால் இந்த பூமியை ஆட்சிசெய்யும் சில சக்திகளை அருகே காணமுடியும்
ஜெயலட்சுமி சங்கர்
***
அன்புள்ள ஜெ
அருள் சிறுகதையை வெளிவந்த அன்றே ஒருமுறை வாசித்தேன்.முதல் வாசிப்பில் கதையின் கவித்துவ முடிவை அருவமாக உணர்ந்தேன்.மீண்டும் மீண்டும் வாசித்து என் வாசிப்பை சொற்களில் மீட்டியெடுக்க இத்தனை நாட்களாகியது.
முதலில் நீங்கள் சிறுகதைக்கு முன் கொடுத்திருந்த தேவியின் உருவம்,அதனை சில நிமிடம் வெறுமனே பார்த்து கொண்டிருந்தாலே கதையின் கரு நோக்கி செல்வதற்கான உளநிலை உருவாகி விடுகிறது.
நீண்டகால நோயில் சிக்கித் தவிக்கும் சாதானவுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் எண்ணத்துடனே மாட் அவளை அங்கு கூட்டி செல்கிறான். அவளது அறை குறித்த அவன் வர்ணனை அதையே உணர்த்துகிறது.
அவனுக்கும் அவளுக்குமான அந்த முதல் உரையாடலில் அவளது நோயின் தாக்கம் அவளின் தயக்கமாக வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது.நோயாளிகளுக்கே உரிய வகையில் தனிமையை தான் அவள் நாடுகிறாள். அந்த தனிமை ஒருவகையில் நோயிலிருந்து விடுதலை என்னும் விழைவையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இருண்டு இருண்டு என தொடங்கி ஓர் இனிய மாயை என கூறும் அவன் சொற்கள் நாம் நேசிக்கும் ஒருவரை கடும் நோயின் போது பாதுகாக்கும் மனநிலையே குறிக்கிறது. அவர்களின் மரணத்தையோ, வலியையோ, மன வேதனையையோ நம்மால் தடுக்கப்பட முடியாததாயினும் நம் செயல்களால் அவை சாத்தியப்படும் என்பதே அம்மாயை.
அவ்வானவில் காட்சி செல்லும் போது அவனில் வெளிப்படுகிறது.அது அவளுக்கு இப்பயணம் ஒரு ஆறுதலாக, இளைப்பாறுதலாக இருக்கும் என்ற நிறைவிலிருந்து எழுவது.கதை முடிவில் அவளில் வெளிப்படும் நேரம் அரிதான ஒன்றை அடைந்ததிலிருந்து, அறிதலும் குழந்தைமையும் ஒன்றாக சேர்வதிலிருந்து ஞானத்தின் கனிவின் வெளிப்பாடகிறது.
ஆலம்பாலை மெல்வோம் என்ற கணமே அவள் சிறுமி உளநிலைக்கு சென்றுவிட்டதை காட்டுகிறது. அந்த குழந்தைத்தனம் தான் தேவியின் அருகமரும் துணிச்சலையும் தருகிறது.
அவனுக்கு தேவியின் மடிமீது உள்ளது உள்ளவாறே பெண்ணாக தெரிகிறது.எங்கோ உள்ளத்தின் ஆழத்தில் அவளை அங்கு காண்பதே அவ்விடம்விட்டு அகலும் அவன் அச்சமாகிறது. அவளுக்கு அவளே அங்கிருப்பதாக கிடைக்கும் தரிசனம் மிக முக்கியமாகிறது.
மாட்க்கு அவள் மரண தேவதையாக காட்சியளிக்கிறாள். சாதனாவுக்கு தன்னை பிடித்த பெரும்பிணியாக, வாழ்வையே பொருளற்ற தாக்கிய வெறுமையாக காட்சியளிக்கிறாள். அவள் தன்னை கரு என்கிறாள்.
வாழ்வுக்கான ஆசை அவ்வண்ணம் அவளில் வெளிப்படுகிறது. அந்த புலம்பல்கள் அத்தனையும் நெடும் பிணி ஒன்றின் பிடியில் இருப்பவருக்கே வருபவை.
அவள் அக்குகைக்குள் இருந்து மீண்டு திரும்புகையில் இருந்து புத்தம் புதியவளாய் ஆகிவிடுகிறாய். அதன் பின் அவளில் வெளிப்படும் சொற்கள் ஒரு கவிதை போல் பொருள் கொள்கின்றன. நாணயத்தின் இருபக்கங்களை போல ஒரு பக்கம் குழந்தை பருவத்தின் புத்துணர்வையும் மறுபக்கம் ஞானத்தின் சொற்களேன விரிகின்றன.
“ஒரு பெரிய பெல்ட் மாதிரி ஓடிட்டு இருக்கு ரோடு” என்கிறாள். அங்கு செல்லும் போது மணி எத்தனை என்றவள் திரும்புகையில் அது செல்கிறது என்கிறாள். அது நான் என்ற தன்முனைப்பிலிருந்து ஒரு சாட்சி மாத்திரமாய் மாறுகிறாள். “செம மழை பெஞ்சிருக்கு…எல்லாம் கழுவி துடைச்சு வச்ச மாதிரி இருக்கு” என்பது அவளது புறத்தை மட்டுமல்ல அகத்தையும் சேர்த்தே பிரதிபலிக்கிறது. “கிளாஸ் மெட்டிரியல்சுக்கு உள்ள கண்ணே வச்சு பாத்தா விதவிதமா தெரியும்,ஹெவேன்ஸ் ” என்பது ஒரு அனுபவத்தை விலகி நின்று கவனிக்கும் போது நாம் அடைவது என்றே நினைக்கிறேன். அங்கே அவள் நோயின் உருவாக கண்ட தேவியை அருளின் உருவாக கண்டது தன் நோயை நேருக்கு நேராக எதிர் கொண்டமையால் தான்.
நோயை கண்டு ஓட ஓட அது மலை என உரு கொண்டு நிற்கிறது. ஆனால் அணு அணுவாக நோக்குந்தோறும் மலை மேல் மேகமென புகை குளிர்ந்து காற்று வீசி நகர்வது போல் சென்று விடுகிறது. இப்போதும் அம்மலை, நோய் இருக்கிறது. ஆனால் அவள் அதன் மேலேறி நின்று விட்டாள். இனி எளிதில் அவள் மீண்டு விடுவாள்.
“லாங் லிவ் வித் பீஸ் டியர்… நீ ரொம்ப ரொம்ப நல்லவன். ஐ அம் லக்கி டு ஹேவ் யூ…தேங்க் யூ டியர். தேங்க்யூ ஃபர் ஆல்” என்ற அவள் சொற்கள் நெடுநாள் வாடிய ஒவ்வொருவருக்குமே உரியது. இரண்டு ஆண்டுகளுக்கு நீண்ட சளித்தொல்லைக்கு ஆளாகி மீண்டு வந்தேன்.சளி எல்லோருக்கும் வருவது ஆயினும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட என் போல் ஒருவனுக்கு அதுவே எப்போதும் பிடிக்கும் கொடுநோய். அப்போது நலம் விசாரிக்க வந்த உறவுக்கார அண்ணி,” எப்டி இவ்ளோ நம்பிக்கையோட இருக்க ?” என வினவினார். “அதிலேன்ன இருக்கு” என்பது போன்ற ஒரு தெளிவில்லாத பதிலே அன்று என்னிடமிருந்து வந்தது. இக்கதைக்கு பிறகு இன்று உணர்கிறேன். சாதனாவுக்கு மாட் போல எனக்கு என் பெற்றோர் இருந்தனர். நம்மை தாங்கி பிடிக்க மாட் ஒருவர் இருப்பதே மீளமுடியும் என்ற நம்பிக்கையை, உயிர்ப்பை அளிக்கிறது.
அப்புறம் அத்தேவியின் கண்கள் அகண்டு விரிந்து விழுங்கி விடுபவை. அது நோயின் பிடியில் நீண்ட பொழுதுகள் இருக்கையில் என்னிலும் ஒரு கணம் அக்கண்கள் வெளிப்பட்டு இருக்கின்றன.
கதை தலைவியின் பெயர் சாதனா. சில நாட்களுக்கு முன்பு அரூ இதழில் கிராஃபிக் நாவலாசிரியர் ஒருவரின்(பெயரை மறந்துவிட்டேன்) நேர்காணலை வாசித்தேன். அதில் அவர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான பெயர் சூட்டுவதின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருந்தார். சாதகனே அருள் பெறுகிறான், சாதனா பெற்றதை போல. ஒன்றை அடைவதன் பொருட்டு முழு வாழ்வையும் அர்ப்பணிப்பவன் தானே சாதகன். அவ்வாறே எனில் விடுதலையை அடைவதன் பொருட்டு வாழ்வை பணயம் வைத்த சாதனாவும் அத்தகையவளே.
“வானிலிருந்து வான் நோக்கி வளைந்திருந்தது. அதன்கீழே காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.” என்ற வரிகள் கடந்த காலம் என்ற முடிவின்மையிலிருந்து எதிர்காலம் என்ற முடிவின்மையை நோக்கி ஓடி கொண்டிருக்கும் வாழ்வென்றே புரிந்து கொண்டேன்.
அன்புடன்
சக்திவேல்
***