அஸ்தினபுரியின் அவை கூடத்தொடங்கியிருப்பதை முரசுகள் அறிவித்தன. பெருவணிகர்கள் சிறு குழுவாக அரசமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி, காவலருக்கு தங்கள் முத்திரைக் கணையாழிகளைக் காட்டி ஒப்புதல் பெற்று, அவைக்கு சென்றனர். வெவ்வேறு வணிகர்குடிகளும் வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும் தங்கள் குலத்தை அறிவிக்கும் கொடியை ஏந்திய இளையோன் ஒருவன் முன்னால் செல்ல, இன்னொருவன் கொம்பூதி வருகையை அறிவிக்க, தங்கள் குலமுறைப்படி ஆடைகளும் தலையணிகளும் அணிந்து சிறு குழுக்களாக சென்றனர்.
குடித்தலைவர்கள் பட்டிலும் மென்மயிரிலும் தோலிலுமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். மலைக்கழுகின் இறகோ இருவாய்ச்சிப் பறவையின் இறகோ மலையணிலின் வாலோ முகப்பில் நிறுத்தப்பட்ட, தோலாலும் மரத்தாலுமான தலையணிகளை சூடியிருந்தார்கள். குலமுத்திரைகள் மரத்திலும் வெண்கலத்திலும் வெள்ளியிலும் செய்து பொருத்தப்பட்ட கோல்களை ஏந்தியிருந்தனர். முதியவர்கள் இளையவர்களின் தோளில் கைவைத்து மெதுவாக நடந்து சென்றனர். முற்றமெங்கும் பல வண்ண அசைவுகளாக அவர்கள் பெருகியிருந்தனர்.
உத்கலத்தின் குபேரரின் தலைமையில் அவருடைய குழுவினர் முற்றத்தில் மஞ்சலில் இருந்து இறங்கினர். குடித்தலைவர்களைப் பார்த்த பின் “இவர்கள் தங்கள் தொல்குடி அடையாளங்களுடன் இங்கு நீடிக்கிறார்களா?” என்று குபேரர் கேட்டார். “இல்லை. இவர்களில் பலர் இக்குடி அடையாளங்களுக்கு உரியவர்களே அல்ல. இவ்வண்ணம் கூறுவதற்கு ஒரு குடியோ கொடியடையாளமோ இல்லாதிருந்தமையாலேயே தங்கள் ஊரிலிருந்து கிளம்பி இத்தனை தொலைவு வந்தவர்கள். அடையாளம் உடையவன் நிலத்தை உதறுவதில்லை. நிலத்தை உதறுபவனுக்கு அடையாளம் மறைகிறது. இவர்கள் இங்கே வந்து வேரூன்றி, மண்ணும் மாளிகையும் அடைந்து, தனிக் கருவூலமும் காவல்படையும் கொண்டு, குடி பெருக்கியபோது குலம் தேவைப்பட்டது. அதை உருவாக்கிக்கொண்டார்கள்” என்றான் மிருத்திகன்.
“அது இயல்பாக உருவாகி வந்தது. இங்கே ஓராண்டு முழுக்க அடையாள உருவாக்கம்தான் நிகழ்ந்தது. உன் அடையாளத்தை நான் ஏற்கிறேன், என் அடையாளத்தை நீ ஏற்றுக்கொள் என்னும் வணிகம் நிகழ்ந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் ஏதேனும் ஒரு அடையாளத்தை குலமுத்திரையாக ஆக்கிக்கொண்டார்கள். சான்றாக அதோ முன்னால் கரடித்தோல் சால்வை அணிந்து மலைக்கழுகின் இறகு சூடிய தலையணியுடன் கரடிக்கோல் தலைகொண்ட குடிக்கோலை ஏந்தி சென்றுகொண்டிருப்பவர் ஜாம்பவ குலத்தவர். அவர்களை நான் அறிவேன்.”
“பிரக்ஜ்யோதிஷத்துக்கு அப்பால் உள்ள ஊஷரம் என்னும் ஊரை சேந்தவர்கள். காமரூபத்தின் எல்லையில், பெருக்கெடுக்கும் பிரம்மபுத்திரையின் கரையில் அமைந்திருக்கும் சிற்றூர் அது. அங்கு இவர்கள் சதுப்பு நிலத்தில் பரவி வேளாண்மை செய்து குடியிருப்புகளை அமைத்திருந்தனர். ஆண்டுதோறும் திசைமாறும் பிரம்மபுத்திரையின் வெள்ளத்தில் அவர்களின் ஊர் மொத்தமாகவே அழிந்துபட்டபோது அங்கிருந்து பிரக்ஜ்யோதிஷத்துக்குள் வந்தனர். குடியேறி வந்தவர்களை கீழ்க்குடிகளாக அமர்த்தும் தொல்வழக்கத்தின்படி அவர்கள் அங்கே நிலமற்றவர்களாகவும் இல்லமற்றவர்களாகவும் பிறருக்கு அடிமையும் ஏவலும் செய்து வாழ்ந்தனர்.”
“அஸ்தினபுரியில் புதிய வேதம் எழுந்துவிட்டதை சூதர்கள் சொன்னதும் அங்கிருந்த முதியவர் அங்கிருந்து கிளம்பிச்செல்லலாமா என்ற ஆணையை தங்கள் தெய்வங்களிடம் கேட்டார். ஏழு தெய்வங்களும் அவர் மகள் உருவில் தோன்றி ‘செல்க! பொலிக!’ என்று ஆணையிட்டன. அவர் அதை கூறியதும் அங்கிருந்த பன்னிரண்டு குடிமரபுகளில் எட்டு கிளையினர் கிளம்ப ஒத்துக்கொண்டனர். எஞ்சியோர் அங்கேயே நீடித்தனர். அவர்கள் எண்மரும் வழிப்பயணத்துக்கான பொருட்களை மட்டுமே எடுத்துக்கொண்டு பிரக்ஜ்யோதிஷத்திலிருந்து கிளம்பி நீண்ட நடையாக வந்து கங்கையில் இறங்கி படகுகளில் யமுனைக்குள் புகுந்து இங்கு வந்தனர்.”
“இந்நகர் கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. அவர்கள் இங்கே முழுதுளத்துடன் வரவேற்கப்பட்டனர். குடிமுறைமைகள் ஏதும் அவர்களுக்கு வகுக்கப்படவில்லை. அவர்களே இங்கு தங்களை வேளாண்குடிகளாக நிலைநிறுத்திக்கொண்டார்கள். ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே அனைவரும் இல்லங்களைக் கட்டி வேரூன்றினார்கள். அப்போது அவர்களுக்கு குடி தேவைப்பட்டது. அவர்கள் இங்கு வந்தபோது தங்கும்பொருட்டு கொடுக்கப்பட்ட நிலத்தில் முன்பு ஒரு கரடி வேட்டையாடி கொல்லப்பட்டதனால் அதற்கு ஜாம்பவனம் என்று பெயர் இருந்தது. ஆகவே அக்குடித்தலைவர் தன்னை ஜாம்பவர் என்று அழைத்துக்கொண்டார். அந்தக் குலம் ஜாம்பவ குலம் என்றாயிற்று” என்றான் மிருத்திகன்.
“சிலர் தங்கள் குடும்பத்திற்குரிய பெயர்களையே தங்கள் குலமாக மாற்றிக்கொண்டார்கள். சிலர் வணிகத்தின்பொருட்டு தமக்கு அளிக்கப்பட்ட கொடியடையாளங்களை குலமாக அமைத்துக்கொண்டனர். சிலருடைய குடியடையாளங்கள் அவர்களுடைய பூசகர்களுக்கோ மூத்தோர்களுக்கோ தெய்வங்கள் கனவில் வந்து சொன்னதாக இருந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் விட்டுச்சென்ற குலஅடையாளங்களை தாங்கள் எடுத்துக்கொண்டனர் சிலர். அத்தனை குல அடையாளங்களும் அரசரால் ஏற்கப்பட்டன.”
“அவ்வண்ணம் இங்கே குடிபெருகியது. செல்வம் ஈட்டியவர்கள் ஓராண்டிலேயே அரசவையில் இடம் வகுக்கப்பட்ட பெருங்குலத்தார் ஆயினர். ஆனால் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டு பெருமையை சொல்லிக்கொள்கிறார்கள். குடிப்பெருமையையும் குலப்பெருமையையும் கூறாத எந்தக் குடியையும் இங்கே பார்க்க முடியாது. இன்று அதன்பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் பூசலிடுவார்கள். ஒருவரை பிறர் சுட்டிக்காட்டத் தொடங்கினால் ஓர் எல்லையில் மூத்த ஒருவர் எழுந்து அனைவர் நாவையும் அடக்குவார். அவ்வண்ணமே அப்பேச்சு நிற்கும்.” மிருத்திகன் உரக்கச் சிரித்து “ஆம், ஒருவர் ஆடையை இன்னொருவர் அவிழ்க்கும் விளையாட்டுதான் அது” என்றான்.
“எங்கும் அதுதான் கதை. இங்கு இப்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் சில ஊர்களில் சில நூறாண்டுகளாகியிருக்கின்றன. மகதமும் வங்கமும் கலிங்கமும் விலக்கல்ல” என்றார் குபேரர். “இவர்கள் இங்கு மூத்த குடிகள் எனில் சிறுகுடிகள் யார்? இல்லப்பணி எடுக்கவும் அடிமையென நிற்கவும் எவ்வண்ணமேனும் சிலர் வேண்டுமல்லவா?” என்றார் மரகதர். “இந்நிலம் உருவாகி வருகையில் வந்த குடிகள் அனைவருமே மூத்த குடிகள். நிலம் உருவாகி நிலைகொண்டபின் பிழைப்பு தேடி வந்தவர்களுக்கு நிலம் அளிக்கப்படவில்லை. அவர்கள் முந்தைய குடிகளுக்கு ஏவல் குடிகள் என்றாயினர். அவர்கள் இவ்வடுக்கில் கீழ்க்குடியினர்” என்றான் மிருத்திகன்.
“ஆம், அது எங்கும் அவ்வாறுதான்” என்று குபேரர் கூறினார். “இன்னொரு தொல்குடி இங்கு வரவேண்டும் என்றால் தங்கள் தொன்மைக்கான சான்றுகளுடன், செல்வத்துடன், அரசருக்குரிய முறையான காணிக்கைப் பொருட்களுடன் வந்து வணங்கவேண்டும். தங்கள் குடிக்கு அவையொப்புதல் பெற்ற பின்னரே அவர்கள் இங்கு நிலைகொள்ள முடியும். அப்போதுகூட இங்குள்ள தொல்குடியினர் அவர்களை ஏற்க மறுத்து பூசலிடுவார்கள். அவர்கள் தங்கள் படைவல்லமையால், செல்வத்திறனால், தங்களை உயர்குடிகள் என்று நிறுவிக்கொள்ளும் வரையில் அவர்களை இங்குள்ளோர் ஏற்க மாட்டார்கள்.”
“நான் கூற வருவது என்னவெனில் அமர்ந்தவர்கள் பின்னர் வந்தவர்களை கீழ்க்குடியினராக நிற்கவைத்திருக்கிறார்கள், அமர இடம் அளிப்பதில்லை என்பதைத்தான். சான்று இந்தக் கரடிக்குடியினர்தான். இவர்கள் இங்கு நிலைபெற்றுவிட்ட பின்னர் போரில் நலமழிந்த பிரக்ஜ்யோதிஷம் வணிகமும் இழந்து வீழ்ச்சி அடையத்தொடங்கியது. பிரக்ஜ்யோதிஷத்தில் இவர்களுடன் வர மறுத்த நான்கு குடிகளும் வறுமை தாளாமல் மூன்று ஆண்டுக்குப் பின் இங்கு வந்தனர். தங்கள் குருதியினர் இங்கே வேரூன்றியிருப்பதை அறிந்து அவர்கள் இவர்களை நாடி வந்தபோது அவர்களை இங்கிருந்தோர் ஏற்கவில்லை. தாங்கள் விட்டு வந்த தங்கள் குருதியினரை இன்று தங்களைவிடத் தாழ்ந்தவர்களாக எண்ணுகிறார்கள்.”
“இங்கு நிலைபெற்றுவிட்டவர்களுக்கு ஸ்தவிரர் என்று பெயர் சொல்லப்படுகிறது. பிந்தி வந்தவர்கள் அமூலர் எனப்படுகிறார்கள். வேரற்றவர்கள். அமூலர் தங்களைவிடத் தாழ்ந்தவர்கள், தங்களுக்கு ஏவல்பணி எடுக்க கடமைப்பட்டவர்கள் என்று இவர்களே வகுத்துக்கொண்டார்கள். வந்தவர்களுக்கும் வேறு வழியில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே அவர்கள் இவர்களை விட தாழ்ந்த குடியினராக இங்கு கதைகளாலும் மரபுகளாலும் நிலைநிறுத்தப்பட்டார்கள். பெருங்குடியினரிடம் இணையாக அமர்ந்து உரையாடவோ, மன்றில்களில் குரல் எழுப்பவோ, மணம்கொள்ளவோ, விருந்துகளில் உடன் அமரவோ, இல்லங்களில் முகப்புக்கு அப்பால் சென்று தொடவோ, ஒரு குவளையை பகிர்ந்துகொள்ளவோ உரிமையற்றவர்கள் ஆனார்கள்” என்றான் மிருத்திகன்.
“ஆனாலும் அவர்கள் ஒரே குருதியினர் அல்லவா?” என்று இளைஞனான சங்கமன் கேட்டான். “ஆம், குருதி ஒன்றே. பலர் தாய்மாமன் மருகன் உறவு கொண்டவர்கள். சிலர் நேரடியாகவே உடன்பிறந்தவர்கள். ஒரே அன்னை வயிற்றில் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்களில் மூத்தவர் தாழ்ந்த குடியாகவும் இளையவர் மேற்குடியாகவும் மாறி, இளையவர் மூத்தவரிடம் தனக்கு எதிராக நேர்நின்று பேசலாகாது என்று ஆணையிடும் விந்தையை இங்கு பார்க்கலாம்” என்றான் மிருத்திகன்.
குபேரர் உரக்க நகைத்து “உலகிலுள்ள அனைத்துக் குடியினரும் ஒரு குடியினரே என்று தொல்குடிகளில் பாடல் ஒன்று உண்டு” என்றார். “அதற்கு அவர்கள் என்ன கதை சொல்கிறார்கள்?” என்றார் மரகதர். “அதற்கான கதையை உருவாக்கி அளிப்பதற்குத்தான் இங்கு சூதர்கள் இருக்கிறார்கள்” என்று மிருத்திகன் கூறினான். “சூதர்களின் கதைப்படி அவர்கள் கடலோரத்தில் வேளாண்மை செய்து துயருற்றிருந்தார்கள். அப்போது இந்திரனை வணங்கி தங்கள் மீட்புக்குரிய வழி என்ன என்று கேட்டார் குடிமூத்தவர். இந்திரன் அவர்களுக்கு பன்னிரண்டு பசுக்களைக் கொடுத்து ‘இப்பசுக்கள் செல்லும் வழியே நீங்கள் செல்லுங்கள், இவை எங்கு சென்று தங்கள் மேய்ச்சலை கண்டடைகின்றனவோ அங்கே உங்களுக்கும் வேர்பரப்ப நிலம் கிடைக்கும்’ என்று ஆணையிட்டார்.”
“பன்னிரண்டு குடிகளும் அவ்வண்ணமே காமரூபத்திலிருந்து கிளம்பி வந்தனர். வரும் வழியில் அவர்களுக்கு உணவோ உறைவிடமோ அமையவில்லை. கொடுமழையிலும் வெயிலிலும் மரத்தடிகளில் தங்கி, தளிர்களையும் கிடைத்த காய்கறிகளையும் சிறுபூச்சி புழுக்களையும் பிடித்து உண்டு அவர்கள் நடந்து வந்தார்கள். ஒருகட்டத்தில் உண்ண உணவென்று எதுவுமே இல்லாதாயிற்று. அவர்களில் ஒருவர் ‘அருகேதான் பிரக்ஜ்யோதிஷம் என்ற நாடுள்ளது. அங்கு போனால் குடி நிலைகொள்ள முடியும். ஆனால் அங்கு செல்வதுவரை நமக்கு உணவு தேவை. நம் குழந்தைகள் இப்போதே பசிக்கு அழுகின்றன. இப்போது நம்மிடம் உணவு என உள்ளவை இப்பசுக்களே. இப்பசுக்களைக் கொன்று உண்டால் அங்கு செல்வது வரை நாம் சாகாமல் வாழமுடியும்’ என்றார்.”
“குடித்தலைவர் பதறிப்போய் ‘கூடவே கூடாது. இவை இறைவனால் அருளப்பட்டவை. பசுவைக் கொல்வதென்பது பெரும்பழி’ என்றார். ‘ஆனால் உயிர்வாழும்பொருட்டு செய்வன எதற்கும் பழியில்லை’ என்றார் முதல்வர். ‘உயிர்விட்டாலும் செய்யக்கூடாதன சில உண்டு’ என்றார் குடித்தலைவர். அப்பூசல் வலுத்தது. எட்டு குடிகள் பட்டினியில் உயிர் துறந்தாலும் பசுவை கொல்லமாட்டோம் என்று உறுதி கொண்டனர். நான்கு குடிகள் தங்கள் பசுக்களைக் கொன்று உண்டபின் பிரக்ஜ்யோதிஷத்திலேயே சென்று குடியமரலாம் என்று முடிவு செய்தனர். பசுவைக் கொன்று உண்டவர்கள் பிரக்ஜ்யோதிஷத்தில் சதுப்பு நிலத்தை அடைந்தனர். பசுவை கொல்லாமல் இருந்தவர்கள் பிரக்ஜ்யோதிஷத்தைக் கடந்து பசுவைத் தொடர்ந்தனர். பசு வழிகாட்ட தங்களுக்குரிய நிலத்தை தேடி வந்து அஸ்தினபுரியை கண்டனர்.”
“பசுவின் அருளால் அஸ்தினபுரியில் அவர்கள் குலம் செழித்தது. பிரக்ஜ்யோதிஷத்திற்குள் சென்றவர்கள் பசுவின் பழி கொண்டவர்கள். அங்கே அவர்கள் வறுமையுற்றனர். அவர்கள் உழும் நிலத்தில் மழை பொழிவதில்லை. வெள்ளம் எழுந்து இல்லங்கள் அழியும். நோய் வந்து கால்நடைகள் மறையும். இந்திரனின் தீச்சொல் அவர்கள் மேல் விழுந்துள்ளது. ஆகவே அவர்கள் செல்லுமிடமெங்கும் மழை பொய்க்கும். அவர்களுக்கு நிலமும் புல்வெளியும் அளிக்கப்பட்டாலும் அங்கு இந்திரனின் சினம் இருப்பதனால் அவர்களால் செழிக்க முடியாது. இந்திரனின் அருள்கொண்டவர்களை ஒட்டியே அவர்கள் வாழமுடியும். அவர்கள் பிறருக்கு ஏவல் செய்தே வாழவேண்டியவர்கள்.”
குபேரர் நகைத்து “சிறு வேறுபாடுகளுடன் அத்தனை குலமுறைகளுக்கும் இக்கதையே கூறப்படுகிறது” என்றார். அவர்கள் வாயிற்காவலனுக்கு கணையாழியைக் காட்டி உள்ளே சென்றனர். “நேற்று வியாசர் இங்கு வந்ததைப் பற்றி சொன்னீர்கள். அதன்பின் அவர் அஸ்தினபுரிக்கு வரவில்லையா?” என்று குபேரர் கேட்டார். “இல்லை, அவர் கங்கைக்கரையில் இருந்தே நேராக வடபுலம் நோக்கி சென்றுவிட்டார். பின் எங்கிருக்கிறார் என்று செய்தியே இல்லை” என்றான் மிருத்திகன். “பாண்டவ இளையவர்களும்கூட அங்கிருந்தே திசைவெல்லும் பயணத்திற்கு சென்றுவிட்டனர். இந்நகருக்குத் திரும்பியவர் யுதிஷ்டிரன் மட்டுமே.”
அவையில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய குலமுறைப்படி அமரச்செய்யப்பட்டனர். அந்தணரும் ஷத்ரியர்களும் அவர்களுக்கான வெண்ணிறமும் செந்நிறமும் கொண்ட பட்டு விரிக்கப்பட்ட பீடங்களில் அமரவைக்கப்பட்டனர். ஆயர்களுக்கு மஞ்சள் நிறத்திலும், வேளாண்குடிகளுக்கு பச்சை நிறத்திலும், வணிகர்களுக்கு பொன்னிறத்திலும் பீடங்கள் அளிக்கப்பட்டன. காவலர்களுக்கு இறுதி நிரையும் நீல வண்ண இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. மெல்லிய ஓசைகளுடன் அவைக்கூடம் நிரம்பிக்கொண்டிருந்தது.
“யுதிஷ்டிரனால் அமைக்கப்பட்டது இந்தப் பெரிய அவைக்கூடம். இது ஆயிரம் தூண்கள் கொண்டது. பொன்பூச்சுள்ள பித்தளைப் பட்டைகளால் மூடப்பட்டதனால் இதற்கு ஹிரண்யமண்டபம் என்று பெயர்” என்றான் மிருத்திகன். “ஆனால் அரசர் இங்கே பெரிய நிகழ்ச்சிகள் எதையும் நடத்தவில்லை. இதை உருவாக்கியதுமே அவர் ஆட்சியில் ஆர்வமிழந்து கானேகிவிட்டார். இக்கூடத்தில் அரசமர்ந்து ஆட்சி செய்தது பெரும்பாலும் பேரரசி சம்வகைதான்.”
அதன் மையத்தில் போடப்பட்டிருந்த அரசமேடையில் அரசருக்கும் அரசிக்கும் அரியணைகள் போடப்பட்டிருந்தன. “இப்போது இங்கு அவை அமரப்போவது யார்?” என்று குபேரர் கேட்டார். “வேறெவர், யுதிஷ்டிரன்தான். யுதிஷ்டிரன் முடிதுறந்து போன இடத்தில் அவரது தொடர்ச்சியாகத்தான் யுயுத்ஸு அவை அமர்ந்திருக்கிறார்” என்றான் மிருத்திகன். “ஆனால் யுயுத்ஸு ஹஸ்தியின் அரியணையில் ஒருமுறைகூட அமர்ந்ததில்லை. யுதிஷ்டிரனின் மேலாடையோ தலைப்பாகையோதான் அவ்வரியணையில் வைக்கப்படும். அருகே சிறிய அரியணையில் அமர்ந்து யுயுத்ஸு முடிசூடியிருப்பார்.”
“பேரரசி சம்வகையும் தேவயானியின் அரியணையில் அமர்வதில்லை. தனியான அரியணையையும் தனக்கான மணிமுடியையும் அவரே உருவாக்கிக்கொண்டார்” என்றான் மிருத்திகன். “ஆனால் யுதிஷ்டிரன் முடிதுறந்து சென்றவர்” என்றார் குபேரர். “முடிதுறப்பதற்கென்று அவர் எந்தச் சடங்குகளையும் செய்யவில்லை. அது ஒரு உளநிலையாகவே அவரிடம் இருக்கிறது. ஆகவே அவர் இன்னும் அஸ்தினபுரியின் அரசரே” என்றான் மிருத்திகன். “அஸ்தினபுரியின் அரசரென குடிகள் அவரை நினைக்கலாம். அவர் உள்ளத்தால் முடிதுறந்ததனால் அக்கணமே அவர் அஸ்தினபுரியின் அரசராக அல்லாமல் ஆகிவிட்டார்” என்றார் குபேரர். “அவர் உள்ளத்தால் துறந்தாரா என எவருக்குத் தெரியும்?” என்று மிருத்திகன் சொன்னான்.
அவர்கள் காத்திருக்க யுதிஷ்டிரனின் நட்புநாடுகளின் அரசர்களின் அரசவைத் தூதர்கள் ஒவ்வொருவரக வந்து அவை அமர்ந்தனர். மகதம், வங்கம், கலிங்கம், அங்கம், சிந்து என அனைத்து நாடுகளிலிருந்தும் அரசத் தூதர்கள் வந்திருந்தனர். அவர்களை சூழ பார்த்தபின் “இன்று முதன்மையான அரசநிகழ்வொன்று நடக்கப்போகிறது” என்றான் மிருத்திகன். “ஆனால் அதற்கான அறிவிப்போ ஒருக்கங்களோ நிகழவில்லை” என்று குபேரர் சொன்னார். “ஆம், இதை பெருநிகழ்வாக அன்றி ஓர் அரசமுறைச் செயலாக மட்டுமே நிகழ்த்தவிருக்கிறார்கள் போலும்” என்றான் மிருத்திகன்.
கொம்பொலியும் குழலும் எழுந்தன. கொம்பூதியைத் தொடர்ந்து அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் ஒரு வீரன் அவைக்குள் நுழைந்தான். மங்கலத்தாலமேந்திய சேடியரும் இசைச்சூதரும் வர தொடர்ந்து யுயுத்ஸுவும் சம்வகையும் கைகூப்பியபடி அவை புகுந்தனர். கொடியுடன் வந்த வீரன் அதை அவையில் நாட்டி தலைவணங்கி அகன்றான். அந்தணர் கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி அவர்களிருவரையும் வாழ்த்தினர். யுயுத்ஸு கைகூப்பியபின் சென்று அரியணையின் அருகே நின்றான். சம்வகை அரசிக்குரிய அரியணை அருகே நின்றாள். அதில் அவர்கள் அமர்ந்து செங்கோல் கொள்ளவில்லை.
மீண்டும் கொம்போசை எழுந்தது. ஒற்றை வீரன் அவை புகுந்து “குருகுலத்துக் கொடிவழி வந்த யுதிஷ்டிரன் அவை புகுகிறார்” என்று சுருக்கமாக அறிவித்தான். யுயுத்ஸுவும் சம்வகையும் கைகூப்பி நிற்க யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பி தலைகுனிந்து நடந்துவந்தார். அவர் இடையில் மரவுரி அணிந்து, குழலை ஒரு நாணலால் கட்டியிருந்தார். உடலில் அணிகளேதுமில்லை. காதுகளிலிருந்து குண்டலங்களும் கழற்றப்பட்டிருந்தன. அரசருக்குரிய கணையாழியும் அவர் விரல்களில் இல்லை. நரைத்த குழல் சடை கொண்டிருந்தது. ஈரமான புரிகள் அவருடைய தோளில் விழுந்து கிடந்தன. தாடியிலும் சடைத்திரிகள் இருந்தன.
அவர் தோள்களைக் குறுக்கி கைகூப்பி சிற்றடி எடுத்துவைத்து வந்து இருமுறை அவையை வணங்கினார். “இவரை இப்படியே நான் முன்பு பார்த்திருக்கிறேன்” என்றார் குபேரர். “யுதிஷ்டிரனை நீர் முன்னர் பார்த்திருக்கலாம்” என்றான் மிருத்திகன். “இல்லை, நான் பார்த்தது வேறு ஒருவரை. ஆம், கௌதம முனிவர்! கௌதம முனிவரின் அதே தோற்றம்!” என்று குபேரர் கூறினார். “நன்று, அவர் கௌதம முனிவரை மிக வளைந்த நெடும்பாதைகளூடாகச் சென்று அடைந்துவிட்டார்” என்று அருகிலிருந்த முதியவர் சிரித்தார்.
தொடர்ந்து அர்ஜுனனும் பீமனும் வந்தனர். அர்ஜுனன் தோள் மெலிந்து, உடல் சுருங்கி, சிறுவனைப்போல் ஆகிவிட்டிருந்தான். கைகள் இரு சுள்ளிகள்போல் இருந்தன. கன்னம் ஒடுங்கி, கண்கள் குழிந்து, நரைத்த சடைகள் பின்னால் ஒரு துணியால் கட்டப்பட்டிருக்க, அணிகள் ஏதுமின்றி அலைந்து திரியும் நாடோடி போலிருந்தான். “யாரது?” என்று எவரோ கேட்டார்கள். “பார்த்தன், விஜயன், அர்ஜுனன்” என்று எவரோ சொன்னார்கள். அவை முழுக்க வியப்பும் பெருமூச்சும் எழுந்தன.
“அவரா? அவரேதானா?” என்றார் ஒருவர். “காண்டீபத்தை கைவிட்டுவிட்டார் என்றார்கள்” என்றது ஒரு குரல். “காண்டீபத்தையா?” என்றார்கள் பலர். “காண்டீபம் அவரை கைவிட்டுவிட்டது. இளைய யாதவர் விண்புகுந்த அக்கணமே அது தன் அனைத்து ஆற்றல்களையும் இழந்து மண்ணில் விழுந்துவிட்டது. ஒரு நிழலென எடுக்கமுடியாமல் மண்ணில் படிந்துவிட்டது.” ஒரு வணிகன் “காண்டீபமில்லாத விஜயன் பொருளிலாச் சொல்போல் என்று ஒரு சூதன் பாடினான்” என்றான். இன்னொருவன் “உயிர் நீத்த உடல்போல. இனி அவருக்கு புவியில் எஞ்சுவது எதுவுமில்லை” என்றான்.
அவர்கள் பேச்சு சொல் துலங்கா முழக்கமென எழுந்து தலைக்குமேல் ஓங்காரமாக மாறியது. பீமன் பேருடலுடன் இரு கைகளையும் அசைத்து யானைபோல் நடந்துவந்தான். “அவர் உடல் பெருத்திருக்கிறது. மேலும் பெருந்தோள் கொண்டவராக ஆகிவிட்டிருக்கிறார்” என்றார் மரகதர். “அதுவும் பிறிதொரு கையறுநிலைதான். பிற அனைத்தையும் கைவிட்டுவிட்டார். பயணம் செய்வதையும் மானுடரை சந்திப்பதையும் கூட. இன்று அவரிடம் எஞ்சியிருப்பது உண்பது மட்டுமே. ஒரு நாளைக்கு எட்டு பொழுது உண்கிறார் என்கிறார்கள்” என்றான் மிருத்திகன்.
நகுலனும் சகதேவனும் இரு வயோதிகர்களாக நடந்து அவை புகுந்தபோது அவையிலிருந்த அனைவரும் அமைதியாயினர். ஒருவர் “அவர்கள் நகுலனும் சகதேவனும்தானே?” என்றார். “நூல்களில் கதைகளில் நாம் அறிந்தவர்கள். இத்தருணத்தில் சூடிய அனைத்தையும் இழந்திருக்கிறார்கள்” என்றார் குபேரர். மிருத்திகன் “நகுலனை பேரழகன் என்பார்கள். இத்தருணத்தில் அனைத்தையும் இழந்து, தசை வற்றி, விழிகளின் ஒளியை இழந்த இரு முதியவர்கள். ஆடிப்பாவைகள்போல் ஒருவருக்கொருவர் துயர் பெருக்குபவர்கள்” என்றான்.
“ஆனால் இன்று ஐவரும் சேர்ந்து அவை அமர்ந்திருக்கிறார்கள். ஐவரும் சேர்ந்து அவை அமர்ந்தால் அது விண்புகுவதற்காகத்தான் இருக்கவேண்டும் என்பது வியாசரின் ஆணை என்று ஒரு சொல் உண்டு” என்றார் ஒரு முதியவர். “மெய்யாகவா? இங்கு இன்று விண்புகுபயணம் தொடங்கப்போகிறார்களா?” என்றார் குபேரர். “அவ்வாறு ஒரு பேச்சு அடிபடுகிறது. இளைய யாதவரின் இறப்புச் செய்தியைக் கேட்டே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இன்று அரச முடிவுகள் அறிவிக்கப்படும், இன்றுடன் அவர்கள் அஸ்தினபுரியைத் துறந்து செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது” என்றார் முதியவர்.