இடம் நினைத்ததுபோல அமையவில்லை. ஏகப்பட்ட புரோக்கர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்ததுமே நான் உள்வாங்கிவிட்டேன். என் ஆர்வம் வற்றிவிட்டதை என்னை அழைத்துச்சென்ற முகுந்தராஜ் உணர்ந்தார். என் கண்களை பார்த்தார். நான் “மறுபடி வருவோம்” என்றேன்.
“சரி சார்” என்று முகுந்தன் சொன்னார்.
நான் நடக்கத்தொடங்கியதும் புரோக்கர்களில் ஒருவர் “பேசிக்கலாம் சார். ஒண்ணும் பிரச்சினை இல்லை. எல்லாம் பேசிக்கலாம்” என்று ஆரம்பித்தார்.
“மறுபடி வரேன்” என்றபடி காரை நோக்கிச் சென்றேன்.
இடத்தின் உரிமையாளர் வீட்டு முகப்பிலேயே நின்றார். புரோக்கர்கள் அவரை நிற்கச் சொல்லிவிட்டு “சார் ஒரு நிமிஷம்! சார், சார், பேசிக்கலாம் சார்” என்றபடி என் காரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
“வண்டியை எடுப்பா” என்றேன்.
வண்டியை டிரைவர் ஸ்டார்ட் செய்தார். முகுந்தன் முன்னிருக்கையில் ஏறிக்கொண்டார். டவேரா வண்டி. இந்த சாலை மோசம் என்பதனால் அதை கொண்டு வந்திருந்தேன். வண்டி படகுபோல அசைந்தாடி சாலையை அடைந்தது.
”இவ்ளவு கூட்டம் எதிர்பார்க்கலை” என்றார் முகுந்தன்.
“நீர் சொல்லாம எப்டித் தெரியும்? நீர் சொல்லியிருக்கணும்” என்றேன். “இங்க யார்ட்டயும் சொல்லவேண்டாம்னு சொல்லியிருந்தேன்ல?”
“நான் சொல்லலை சார்”
“பொய்… நீர் சொல்லியிருக்கீர்… சொல்லல்லேன்னு சொல்லும் பாப்பம். விசாரிக்கச் சொல்றேன்.”
“சண்முகம் கிட்ட மட்டும் சொன்னேன்”
“சொன்னீர் இல்ல? அவன் புரோக்கர், அவன் வாயிலே நிக்குமா?”
“எதிர்பார்க்கலை” என்றார் முகுந்தன்.
“எதிர்ப்பார்க்கலை… ஆனா நீர் ஏன் சண்முகம்கிட்ட சொன்னீர்னு ஊகிக்கத் தெரியலைன்னா நான் தொழில் செய்ய லாயக்கில்லாதவன்” என்றேன்.
“இல்லை, அப்டி இல்லை… சத்தியமா அப்டி இல்லை.”
“நீர் இங்க என்ன திட்டம் போட்டீர்னு தெரிஞ்சாகணும்.. அதுக்கு பிறகுதான் இந்த டீலிங்.”
“இல்லை சார் சத்தியமா இல்லை.”
“நாம இதைப்பத்தி பேசவேண்டாம்.”
“சார் சத்தியமா…”
“நாம பேசவேண்டாம்” என்றேன். என் உரத்த குரல் அவரை பணியவைத்தது. ஆனால் முகத்தில் ஒரு கணம் குரோதம் வந்து மறைந்தது.
“சரி சார்.”
கார் மண்சாலையில் வளைந்து வளைந்து சென்றது.
“பக்கத்திலே ஓட்டல் இருந்தா நிப்பாட்டு கண்ணன்” என்றேன்.
“இங்க வளைவிலே ஒரு ஓட்டல் இருந்தது சார். கண்ட்ரி ஓட்டல்தான்.”
“பரவாயில்லை” என்றேன். இடத்துக்கு உரிமையாளன் அங்கே சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தான். அதை முன்னரே சொல்லியிருந்ததனால் நான் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. உண்மையில் அங்கே இன்றிரவு தங்கி காலையில் கிளம்புவதாகத்தான் நினைத்திருந்தேன்.
“இங்கயா ஓட்டல்?” என்றேன்.
“இந்த டர்னிங்குக்கு அப்பாலதான் சார்.”
நான் இன்சுலின் மாத்திரையை விழுங்கி தண்ணீர் குடித்தேன். கொஞ்சம் படபடப்பாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டு ஏஸி காற்றை வாங்கி கால்களை நீட்டிக்கொண்டேன். காரின் உலுக்கலில் தலை கொஞ்சம் சுழன்றது.
“சார், என்னை தப்பா நினைச்சுட்டீங்க” என்று முகுந்தன் தொடங்கினார்.
“ஸ்டாப் இட்” என்றேன்.
கொஞ்சம் உரக்கவே கத்திவிட்டேன். அவன் அமைதியானார். வண்டி உலுக்கிக்கொண்டு மேலே சென்றது.
“என்னாச்சு?” என்று நான் கேட்டேன், “என்ன லேட்?”
“சார், என்னமோ வழி தவறிட்டுது…”
“ஏன்?”
“இந்த மண்ணுரோடுதான் சார், இதே பட்டைபூசின பாறை… ஆனா…. ஓட்டல் காணும்”
“ஸ்பீடா வந்ததனாலே நீ பக்கத்திலேன்னு நினைச்சிருப்பே” என்றேன். “சீக்கிரம்போ… நான் மாத்திரை போட்டிருக்கேன்.”
அவன் அக்ஸிலேட்டரை மிதித்தான். வண்டி சீறிக்கொண்டு சென்றது. இருபக்கமும் செழித்த காடு உருகி பச்சைத்தீற்றலாக மாறியது. நான் சற்று கண்ணயர்ந்திருப்பேன் வண்டி நின்றுகொண்டிருப்பதைக் கண்டு விழித்தேன்.
“என்னப்பா?” என்றேன்.
“சார் வழி தவறிப்போச்சு, ரொம்ப வந்திட்டோம்.”
“ஜிபிஎஸ் பாரு.”
“சுத்தமா சிக்னலே இல்லை சார். இந்த ஏரியா சேவிங்லே காட்டவுமில்லை.”
“வந்தவழியே திரும்பு…வேறே என்ன பண்றது?” என்றேன். என் குரல் தளர்ந்திருந்தது. கைகளில் நடுக்கம் வந்துவிட்டது. “டாஷ்போர்டிலே சக்லேட் இருக்கான்னு பாரு.”
ஒருபார் சாக்லேட் இருந்தது. அதை வாங்கி தின்று மீண்டும் தண்ணீர் குடித்தேன். படபடப்பு குறைந்தது.
“நான் சாப்பிடணும்.. மாத்திரையை வேற அவசரப்பட்டு விழுங்கிட்டேன்.”
அவன் யூடர்ன் அடித்து வண்டியைத் திருப்பிக் கொண்டுசென்றான். கார் எம்பி எம்பி விழுந்தது.
“இது என்ன சஸ்பென்ஷன் போயிடுச்சா?” என்றேன்.
“ரோடு மோசம் சார் ”
“சீக்கிரம் போ… என்ன இது.”
கார் விரைவுகொள்ள சட்டென்று எனக்கு ஒரு மயக்கம் வந்தது. ஏதோ நினைத்தேன். அதற்குள் ஓசை மயங்கிவிட்டது. விழித்தபோது தலை தொய்ந்து தோளில் எச்சில் வழிந்திருந்தது. கார் நின்றிருந்தது. கைகளை ஸ்டீரிங்கில் ஊன்றி கண்ணன் அமர்ந்திருந்தான்.
“என்ன? என்ன?” என்றேன்
“ரொம்பதூரம் வழிதவறி வந்திட்டேன் சார். எல்லா பக்கமும் ஒரே மாதிரி ரப்பர்த்தோட்டமா இருக்கு. எல்லா ரோடும் ஒண்ணு மாதிரி இருக்கு… வழியே தெரியல்லை.”
“எதாவது ஒரு பக்கம் போ… யாராவது ஆள் தெரியுதான்னு பார். ஒரு வீடாவது இருக்கான்னு பார்.”
“இல்லசார், அப்டி நினைச்சுத்தான் ரொம்பதூரம் வந்தேன்… இந்த ஏரியாவிலேயே மனுஷநடமாட்டத்தைக் காணல்ல. வீடே இல்ல.”
“போடா… முன்னாலே போடா. வண்டிய இங்க நிப்பாட்டி என்னைய சாவடிக்கலாம்னு பாக்கிறியா?” என்று நான் கூவினேன்.
அவன் வண்டியை மெல்ல முன்னகர்த்தினான். “டேய், வேகமா போடா. சாவடிக்காதடா!” என்று நான் சீட்டில் கையால் தட்டிக்கொண்டே கூச்சலிட்டேன்.
”ப்ளீஸ் சார், இப்ப வழி கண்டுபிடிச்சிடறேன்…” என்று அவன் வண்டியை எடுத்தான்.
“பிஸ்கட் சாக்கலேட் ஏதாவது இருக்கா?” என்றேன்.
“சார்.”
“டேய், பிஸ்கட் சாக்கலேட் ஏதாவது இருக்காடா வெண்ணை?”
அவன் அமைதியாக வண்டியை ஓட்ட முகுந்தன் டாஷ்போர்டை திறந்து பார்த்து “இல்லை சார்” என்றார்.
வண்டி சுழன்று சுழன்று சென்றது. இருபக்கமும் ரப்பர்த்தோட்டங்கள் மறைந்து செறிந்த காடு வரத்தொடங்கியது. அவன் வண்டியை நிறுத்தினான்.
“என்ன?” என்றேன்.
“ரொம்ப காட்டுக்குள்ள வந்திட்டோம் சார்…”
“வண்டியோட்ட தெரியல்லைன்னா நீயெல்லாம் என்ன மசுத்துக்குடா வர்ரே நாயே?” என்று கூவினேன்.
“அப்டின்னா நீங்க ஓட்டுங்க” என்று அவன் கதவைத் திறந்து இறங்கி வெளியே சென்றான்.
“சார், சார்” என்று முகுந்தன் பதறினார். “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்று இறங்கி அவன் பின்னால் ஓடினார்.
அவன் வேகமாக நடந்து சென்றான். அவர் பின்னால் ஓடினார். நான் காரைவிட்டு இறங்கினேன். “செத்துடறேண்டா… அப்ப திருப்தியா? நீங்க ரெண்டு பேரும் பிளான்போட்டு என்னை கொல்லக் கொண்டு வந்திருக்கீங்க… கொல்லுங்கடா நாயிங்களா” என்று கூச்சலிட்டேன்.
“சார் சார்” என்று கண்ணன் கூச்சலிட்டான் “வண்டியிலே ஏறுங்க வண்டியிலே ஏறுங்க…”
“என்னடா?” என்றேன்.
“வண்டியிலே ஏறுங்க சார்.”
அவனுடைய பார்வையைக் கண்டு நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரிய பிடியானை ரோட்டின்மேல் நின்றிருந்தது.
முன்னால் ஓடி கண்ணனை நோக்கிப்போக அங்கே இன்னொரு யானை ஏறிவந்தது. இருபக்கமும் யானைகள் நின்றிருக்க நான் பாய்ந்து காருக்குள் நுழைந்தேன். கதவை மூடிக்கொண்டபோது என் கால்சட்டை சிறுநீரால் நனைந்திருந்தது. உடல் துள்ளித்துள்ளி விழுந்தது.
யானைகள் பிளிறியபடி காரைச் சூழ்ந்துகொண்டன. காரின் முகப்புக்கு வந்து ஒரு யானை உள்ளே பார்த்தது. மண்மூடி சிறிய குன்று போலிருந்தது. சாண் நீளமான தந்தங்களும் இருந்தன அதன் கண்களை மிக அருகே பார்த்தேன்.
அப்போது பின்பக்கம் கார் முட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தேன். இன்னொரு யானை குனிந்து டிக்கியை முட்டிக்கொண்டிருந்தது. கார் அலைமோதியது. சீட்டில் கையை ஊன்றி நான் சரிந்து விழாமலிருக்க முயன்றேன்.
முன்னால் நின்ற யானை பிளிறியது. கண்களை மூடிக்கொண்டேன். சிவப்பும் நீலமுமாக சுழல்கள் தெரிந்தன. வலத்தொடை துள்ளித் துள்ளி விழுந்தது. நெஞ்சு உடைந்துவிடுவதுபோல வலித்தது.
மேலும் யானைகள் வந்து காரைச் சூழ்ந்துகொண்டன. எல்லா திசைகளிலும் இருந்து அவை காரை முட்டின. காரின் கண்ணாடிகளை துதிக்கைகள் துழாவிப்பற்ற முயன்றன. முன்னால் நின்ற யானை காரை மேலே தூக்க நான் சீட்டில் மல்லாந்தேன். ஆனால் அது அலறியபடி காரை படீலென்று தரையில் விட்டுவிட்டு பின்னகர்ந்தது. எஞ்சின் சுட்டுவிட்டது என்று தெரிந்தது. அது வெறியுடன் கூச்சலிட்டுக்கொண்டு துதிக்கைச் சுழற்றியபடி பக்கவாட்டில் ஓட அத்தனை யானைகளும் கூட்டமாக பிளிறின.
கண்ணன் தன் சட்டையை கழற்றி தீவைத்து கையில் தூக்கி சுழற்றியபடி கூச்சலிட்டுக்கொண்டே ஓடிவந்தான். முகப்பில் நின்ற யானை தீயைப் பார்த்ததும் அலறியபடி பின்னால் ஓட அத்தனை யானைகளும் அதனுடன் சேர்ந்து பின்னால் சென்றன.
“சார் இறங்கி ஓடிவந்திருங்க… வந்திருங்க!” என்று கண்ணன் கூவினான்
நான் காரின் கதவை திறக்க முயன்றேன். அது சிக்குண்டிருந்தது.
யானைகள் பின்னால் கூடி நின்று பெருங்கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. ஒரு யானை துதிக்கை சுழற்றியபடி ஓடி கண்ணனை நோக்கி சென்றது. அவன் அலறலோசை எழுப்பியபடி அந்த எரியும் சட்டையை எடுத்து அதை நோக்கி எறிந்தான்
“சார் வந்திருங்க… வெளியே வந்திருங்க.”
நான் கதவை திறக்கமுயன்றேன். என் கையில் வலுவே இல்லை. யானைகளின் ஓசை மிக அருகே கேட்பது போலிருந்தது. சீட்டில் அமர்ந்து இரண்டு கால்களாலும் கதவை ஓங்கி மிதித்தேன். கதவு திறந்தது. அப்படியே சறுக்கி இறங்கி ஓடினேன். ஒரு ஷூ உதிர்ந்துவிட்டது. இன்னொன்றையும் உதறிவிட்டு மூச்சிரைக்க ஓடினேன். முழங்கால் அடிபட விழுந்துவிட்டேன்.
கண்ணன் என்னை கையைப் பிடித்து தூக்கி கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான். எங்கே என்ன என்று தெரியாமல் நான் உயிர்விசையாலேயே ஓடினேன். பின்னால் யானைகளின் பிளிறல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
ஒரு பாறை சாலையோரமாக இருந்தது. அதன் இடுக்கின் வழியாக மேலேற இடமிருந்தது. முகுந்தன் ஏற்கனவே அதன்வழியாக மேலே ஏறி பாறை உச்சியில் நின்றிருந்தார். “ஏறி வாங்க. சீக்கிரம் வந்திடுங்க” என்றார்.
நான் புதர்களைப் பிடித்துக்கொண்டு தொற்றி ஏறி பாறைமேல் படுத்து தவழ்ந்து மேலே சென்றேன். என்னால் எழுந்து நிற்கவே முடியவில்லை. புரண்டு அமர்ந்தபோது கீழே யானைக் கூட்டம் காரைச் சூழ்ந்துகொண்டு துதிக்கையால் அறைந்து கொண்டிருப்பதைக் கண்டேன். கார் துள்ளி ஆடிக்கொண்டிருந்தது
பெரிய பிடியானை தன் தலையால் காரை தள்ளி அப்பால் பள்ளத்தில் இட்டது. கார் சரிந்து பின்னர் உருண்டு சற்று சறுக்கி ஒரு புதரில் தயங்கி முன்பக்கமாக கீழிறங்கி ஆழத்தில் விழுந்தது.
யானைகள் எல்லாமே கிளர்ச்சியடைந்து சிறிய வால்களை முறுக்கி வைத்திருந்தன. செவிகளை முன்னால் கோட்டியபடி அவை பிளிறலோசை எழுப்பின.
“இங்க உக்காரவேண்டாம்… மேலே வர்ரதுக்கு வழி ஏதாவது இருந்தாலும் இருக்கும்” என்றான் கண்ணன்.
“கீழ எறங்கவா?” என்றார் முகுந்தன்.
“கீழயா? கீழே போனா துரத்தி வந்திரும்… ஒரு யானைக்கு துதிக்கை சுட்டிருக்கு” என்று கண்ணன் சொன்னான். “இப்டியே மேலேறிப்போலாம்… இந்த ரோடு சுத்தி அங்கதான் வரும்”
“மேலேயா?” என்றேன்.
“ஆமாசார், வாங்க. வேற வழியில்லை. சாயங்காலம் ஆயிட்டே இருக்கு. நமக்கு ஏதாவது வண்டி கிடைச்சாகணும்”
“என் செல்போன் பர்ஸ் எல்லாமே கார்லதான் இருக்கு” என்றேன்.
“பரவாயில்லை சார், முதல்ல இங்கேருந்து போயிடுவோம். பிறகு ஆளனுப்புவோம்” என்றான் கண்ணன்.
நாங்கள் அந்த சரிவில் புல்பத்தைகளின் அடியில் கால்வைத்து மேலேறினோம். அவ்வப்போது நான் முட்செடிகளைப் பற்றிக்கொண்டேன்.
நெடுந்தொலைவு மேலேறுவது போலிருந்தது. “ரொம்ப போறமோ?” என்றேன்.
“ஹேர்பின் வளைவுன்னா ரோடு மேலே வருமில்லை?” என்றான் கண்ணன்.
ஆனால் மேலே மீண்டும் மரங்கள் அடர்ந்த ஒரு சோலைதான் வந்தது. கண்ணன் சுற்றும் பார்த்துவிட்டு ஒரு புதரிலிருந்து சிவந்த உருண்ட பழங்களை பறித்துவந்தான். “கொஞ்சம் சாறு இருக்கும் சார். தவிட்டைப்பழங்கள்… சின்னவயசிலே சாப்பிடுவோம்”
நான் ஆவலுடன் அவற்றை வாயிலிட்டு சாற்றை உறிஞ்சி கொட்டைகளை துப்பினேன். ஒரு காயில் ஒருதுளிதான் சாறு. அவன் மேலும் பறித்துவந்தான். மொத்தமே ஒரு அவுன்ஸ் சாறு இருக்கலாம், ஆனால் அதுவே எனக்கு கொஞ்சம் புத்துணர்வை அளித்தது
“எப்டியாவது மேலே ஏறிடுவோம் சார்” என்று கண்ணன் சொன்னான். “இருட்டுறதுக்குள்ள ஏதாவது வண்டியையோ ஆளையோ கண்டுபிடிச்சாகணும்.”
“எந்த நேரத்திலே கெளம்பினேனோ” என்றார் முகுந்தன்.
“ஏன், உம்ம நேரத்துக்கு என்ன?” என்றேன்.
“ஏனா? அங்க சாப்பாடு வச்சிருந்தாங்க. வழிதெரிஞ்சவனுக இருந்தாங்க. பாய்ஞ்சு ஏறியாச்சு, என்னமோ பெரிய இவரு மாதிரி.”
“டேய்” என்றேன்.
“என்ன டேய்? மரியாதையா பேசு… இல்லேன்னா மரியாதை கெட்டுப்போயிரும்.”
“சார் வாயை மூடுங்க” என்று கண்ணன் உரக்கச் சொன்னான். “பேசாம வாங்க”
“இல்ல, சும்மா கடுப்பை கெளப்பிட்டு” என்றார் முகுந்தன்.
“பேசாம வாங்க” என்று கண்ணன் மீண்டும் சொன்னான்.
மேலும் நாங்கள் ஏறிச்சென்றது ஒரு குன்றின் உச்சிக்கு. அங்கிருந்து பார்த்தால் எந்த சாலையும் தெரியவில்லை. அடர்ந்த காடு பச்சைநுரை போல மலைச்சரிவுகளை மூடியிருந்தது. அசைவில்லாமல் நிற்கும் பிரம்மாண்டமான பச்சை அலைகளைப்போல மலைகள் அடுக்கடுக்காக சூழ்ந்திருந்தன.
“சாயங்காலம் ஆயிடுச்சு…” என்றான் கண்ணன் “சீக்கிரமே இருட்டிரும்.”
“என்னோட கிரிடிட் கார்டு எல்லாம் அங்க பர்ஸிலே இருக்கு” என்றேன்.
கீழே பாதையைச் சுட்டிக்காட்டி, “நாம வந்த வழி அது…” என்று முகுந்தன் சொன்னார். “அந்த ரோடு இப்டி திரும்பலை. அப்டியே வளைஞ்சு எதிர்த்த குன்றுக்கு போகுது. நாம எதிர்த்திசையிலே போயிட்டோம்”
“எறங்கணுமா?” என்றேன்.
“ஆமா, வேற வழி இல்லை. இந்தக் குன்றுமேலே நிறைய யானைச்சாணம் கிடக்கு. இங்க புல்லுதிங்க வரும்னு நினைக்கிறேன்”
“இறங்குறதுதானே? போய்டலாம்” என்றார் முகுந்தன்.
நாங்கள் இறங்கிச் சென்றோம். பாதை என ஏதுமில்லை. வாள்போன்ற அரம்கொண்ட புல் வளர்ந்து இடுப்பு வரை நின்றது.
“சார் இந்தப்புல்லைப் பிடுங்கி அதோட கீழ்நுனியை மட்டும் மென்னு துப்புங்க. கொஞ்சம் சக்கரை உண்டு அதிலே” என்றான் கண்ணன்.
உண்மையில் அதில் மெல்லிய தித்திப்பு இருந்தது. என் நாக்குக்கு அதுவே கூட மிகவும் தேவைப்பட்டது. புல்லின் நடுவிலூடாக இறங்கிச் சென்றோம். இரண்டு இடங்களில் நான் சறுக்கி விழுந்து எழுந்தேன்.
“சார்” என்றான் முகுந்தன்.
தொலைவில் புல்லுக்குமேல் யானைகளின் முதுகுகள் தெரிந்தன.
“இது அந்தக்கூட்டமா?” என்றேன்.
“தெரியல்லை.. அதுவ இருந்தா ஆபத்து. துரத்தி வந்திரும்” என்றான் கண்ணன்.
“எந்த யானையா இருந்தாலும் ஆபத்துதான். நாம அடிச்சிருக்கிற செண்டு பௌடர் வாசனைக்கு.”
அவர் என்னை சொல்கிறார் என்று எனக்குத் தெரிந்தது. ஆனால் கோபம் அடைவதற்குக்கூட என்னிடம் ஆற்றல் எஞ்சியிருக்கவில்லை.
“திரும்பிருவோம்…”
“அங்க போயி என்ன பண்ண? மொட்டைக்குன்று. மழைபெய்ஞ்சாக்கூட ஒதுங்க இடமில்லை.”
“நாம என்ன இங்க தங்கவா போறோம்?”
“வேறவழி?”
“என்னோட டாக்குமென்ட்ஸ் எல்லமே காரிலேதான் இருக்கு… உடைஞ்சு உள்ள தண்ணிகிண்ணி போயிடுச்சுன்னா பெரிய வம்பு” என்றேன்.
நாங்கள் திரும்ப அந்தக் குன்றுக்கு வந்தபோது வானத்தில் ஒளி நன்றாகவே அணைந்திருந்தது. மேகங்கள் நிறைந்த இருந்தமையால் சூரியனைப் பார்க்கமுடியவில்லை. சுற்றிலும் காட்டுக்குள் இருள் நிறைந்துவிட்டது. வானத்தின் விளிம்புகளில் மட்டும் மேகங்களில் சிவப்பு படர்ந்திருந்தது.
“இன்னும் அரை மணிநேரத்திலே இருட்டிரும்” என்றான் கண்ணன்
“எங்க போறதுக்கு இப்ப?” என்றார் முகுந்தன் “ஏதாவது ரோட்டிலே நின்னாக்கூட யாராவது வருவாங்கன்னு எதிர்பார்க்கலாம். இது அத்துவானக்காடு”
“சார், ஒரு நிமிஷம்” என்று கண்ணன் ஒரு பாறையின் இடுக்கைச் சென்று பார்த்தான். அது செம்மண் போன்ற பாறை. அதன் விரிசலில் கருமையாக பசைபோல ஏதோ தெரிந்தது. அவன் சுற்றிலும் பார்த்துவிட்டு ஒரு பெரிய கருங்கல்லை எடுத்து அந்த செம்மண் பாறையை அறைந்தான். அது உடைந்து விழுந்த விரிசலுக்குள் சிறிய தவளை போல ஏதோ இருந்தது
அவன் அதை பிடுங்கி எடுத்தபோதுதான் அது ஒரு சிறிய தேன்கூடு என்று தெரிந்தது. “சிறுதேன் சார்… ஒரு அவுன்ஸ் அளவுக்கு இருக்கும்… அப்டியே புழிஞ்சு வாயிலே விட்டுக்கிடுங்க”
“இதையா?”
“வேறவழியில்லை சார்”
நான் அதை வாங்கி வாயில் பிழிந்து விட்டுக்கொண்டேன். ஒரு அவுன்ஸுக்கும் மேலாகவே இருந்தது. ஒருவகையான புகைந்த அரக்கின் நாற்றம் அடித்தது. ஆனால் கெட்டியான நல்ல தேன். காய்ச்சிய தேன் போலன்றி கொஞ்சம் புளித்தது.
“வாங்க” என்று கண்ணன் சொன்னான். மீண்டும் குன்றின் உச்சியை அடைந்தோம்.
“ஒருவேளை இங்கே சிக்னல் கிடைக்கலாம்” என்று முகுந்தன் சொன்னார்.
“செல்போன் இருக்கா?” என்றான் கண்ணன்.
“உங்கிட்ட இல்லையா?”
கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. மூவரிடமும் செல்போன் இல்லை. நான் பெருமூச்சுவிட்டேன். வினோதமான ஓர் அமைதி எனக்கு ஏற்பட்டது. களைப்பு என்னை மீறிச் சென்றுவிட்டதனாலேயே உருவான அமைதி அது. மனதில் எண்ணங்களே இல்லை. உதிரி உதிரியான சொற்கள் மட்டும் தயங்கித்தயங்கி நின்றன
குன்றின்மேல் நின்று சுற்றிலும் பார்த்தோம். பச்சைநிறம் இருண்டு இருண்டு கருமையாக மாறிக்கொண்டிருந்தது. எதிர்ப்பக்க குன்றின் விளிம்பில் நின்றிருந்த மரங்கள் வானத்தின் பகைப்புலத்தில் கரிய மையால் வரையப்பட்ட ஓவியங்கள் போலத் தெரிந்தன.
ஓசைகள் மாறிக்கொண்டே இருந்தன. பறவைகளின் குரல்கள் சீரான முழக்கமாக இருந்து மெதுவாக அலையலையான பூசல் ஓசையாக மாறின. எங்கோ தீப்பிடித்து அவையெல்லாம் பறந்து பதறிக்கொண்டிருப்பதுபோல. மேலும் மேலும் கூச்சல்கள் வலுத்து காடே முழக்கமிட்டது பிறகு ஓசை அடங்கத்தொடங்கியது.
சூரிய ஒளி முழுமையாக மறைந்தபோது காடு அமைதியாகியது. சீவிடுகளின் ஒலி பலமடங்கு கூர்மையும் முழக்கமும் கொண்டு செவிகளை அறுப்பதுபோல ஒலித்தது. யானைகளின் பிளிறல் தொலைவில் கேட்டது. காட்டு ஆடுகளோ மான்களோ ஒருவகையான கனைப்பொலியுடன் மிக அருகே கடந்து சென்றன.
“என்ன செய்றது?” என்றேன்.
கண்ணன் “தெரியலை சார்” என்றான்.
“மழை வேற வரும்னு தோணுது” என்றார் முகுந்தன்
“நாம இங்கேருந்து மறுபடி கீழே போறது ஆபத்து. யானை நிக்குது. இங்க பாம்புகளும் நிறைய உண்டு.”
“எனக்கு குடிக்க தண்ணி வேணும்” என்றேன்.
“பாக்கிறேன் சார்”என்றான்.
“அதென்ன வெளிச்சம்?” என்றார் முகுந்தன்.
“எங்க?” என்றபோதே கண்ணனும் நானும் பார்த்துவிட்டோம். கீழே காட்டுக்குள் தீ தெரிந்தது.
“அங்க யாரோ இருக்காங்க…” என்று கண்ணன் சொன்னான்.
“அங்கபோயிடுவோம்” என்று நான் சொன்னேன். “தண்ணி இல்லேன்னா நான் செத்திடுவேன்.”
“போகமுடியாது சார், நமக்கு இந்த இருட்டிலே வழி தெரியாது”
அங்கிருந்து குரவையொலி போல ஏதோ கேட்டது. “சத்தம் கேக்குது… அப்ப நம்ம சத்தம் அங்கேயும் கேக்கும்… கூச்சல் போடுவோம்” என்றார் முகுந்தன்
“இருங்க…” என்று கண்ணன் சொன்னான். “இங்க சத்தத்தை வச்சு இடம் கண்டுபிடிக்கமுடியாது. எதிரொலிதான் ஜாஸ்தியா இருக்கும்.”
அவனிடம் தீப்பெட்டி இருந்தது. அதை எடுத்தபின் “சட்டையை கழற்றிக் குடுங்க” என்றான்.
முகுந்தன் “இங்க ஏதாவது சருகு கிடைக்காது?” என்றார்
“இங்க எல்லாமே நனைஞ்சிருக்கு… கழட்டுங்க சார்.”
முகுந்தன் சட்டையை கழற்றினார். அவன் அதை கொளுத்தினான். அது சிந்தெட்டிக் துணி. சட்டென்று பற்றிக்கொண்டது. அதை கையில் தூக்கி சுழற்றிக் காட்டி “கூ கூ கூ” என்று கூச்சலிட்டோம்.
முகுந்தன் “யாரு அங்கே? அய்யா!” என்று கூவினார்
“வார்த்தையெல்லாம் அங்க கேக்காது. தொண்டையும் வீணாகும். கூவினாத்தான் கேக்கும். சீழ்க்கை இன்னும் கொஞ்சம் கேக்கும்” என்றான் கண்ணன்.
அவர்கள் சீழ்க்கை அடித்தபடி கூவினார்கள். கண்ணன் தீயை அணைத்தான். பிறகு “கேட்டிருப்பானுகளா?” என்றான்.
செவிகூர்ந்தபோது எந்த எதிர்வினையும் எழவில்லை. “அவனுகளுக்கு கேக்கல்லை” என்றான் கண்ணன் மீண்டும் சட்டையை பற்றவைத்து சுழற்றிக்காட்டி கூவினார்கள்.
மூன்றாவது முறை கூவியபோது சட்டை எரிந்து கைவரை வந்துவிட்டது. அதை கீழே போட்டுவிட்டு “கேட்டிருக்க மாட்டானுக” என்றான்.
முகுந்தன் “என்ன செய்ய?” என்றார்.
“கொஞ்சநேரம் விட்டு மறுபடி சத்தம் போடுவோம்” என்றான் கண்ணன் “வேற என்ன செய்ய?”
“அவனுக சத்தம் நமக்கு எப்டி கேக்குது?” என்றார் முகுந்தன்.
“காத்து அங்கேருந்து அடிக்குதுபோல”
மீண்டும் கூச்சலிட்டார்கள். நான் களைப்புடன் ஈரம் பரவிய புல்மேல் அமர்ந்தேன். கூர்ந்து நோக்கியபோது கீழே குரவைச்சத்தம் நின்றிருப்பது தெரிந்தது.
“கீழெ குரவை நின்னுட்டுது” என்றேன்.
கண்ணன் செவிகூர்ந்து “ஆமா, அப்டீன்னா கேட்டுட்டானுக” என்றான்.
“அப்ப ஏன் மறுசத்தம் குடுக்கமாட்டேங்குதானுக?”
“யாரா இருக்கும்? கஞ்சா விவசாயம் செய்யுதவனா இருப்பானோ?”
“அவனுக குரவையிடுவானுகளா?”
மீண்டும் ஒருமுறை உரக்க கூவினார்கள்.
“இனி ஒண்ணும் செய்யுறதுக்கில்லை…” என்று கண்ணன் சொன்னான் “இனி ஒரு தீக்குச்சிதான் இருக்கு. ஆனை வந்தா வேணும்”
அவர்களும் அமர்ந்துகொண்டார்கள். அது அமாவாசை நாள் என்று தோன்றியது. வானத்தில் ஓரிரு நட்சத்திரங்கள் தெரிந்தன. நான் தலை எடைகொண்டு வருவதுபோல உணர்ந்தேன். வானம் கீழிறங்கி வந்தது. நட்சத்திரங்கள் மிக அருகே தெரிந்தன. விழுவதுபோல் ஓர் உணர்வு.
மீண்டும் நினைவுகொண்டபோது கண்ணன் என்னை உலுக்கிக்கொண்டிருந்தான். “சார், சார்.”
நான் வாயை துடைத்துக்கொண்டு “தண்ணி” என்றேன்.
“இருங்க சார், பாக்கிறேன்.”
முகுந்தன் “என்னமோ சத்தம்” என்றார்.
“என்னது?” என்றான் கண்ணன்.
“என்னமோ வந்திட்டிருக்கிற மாதிரி” என்றார் முகுந்தன் “புதருக்குள்ளே சத்தம் கேக்குது.”
நானும் கேட்டுவிட்டேன். ஆபத்துணர்வால் எனக்கு மெய்சிலிர்த்தது. எழுந்து அமர்ந்தேன். எதுவோ அணுகி வந்தது. நாங்கள் அதைக் கேட்டுவிட்டதை உணர்ந்ததும் ஓசை நின்றது.
என் மேல் பார்வையுணர்வை அறிந்தேன். எத்தனை நிராதரவாக இருக்கிறோம் என்று உணர்ந்தபோது மொத்த உடலையும் அப்படியே மண்ணில் உதிர்த்துவிடவேண்டும் போல் ஒரு களைப்பு தோன்றியது.
புதருக்குள் இருந்து ஒருவன் தோன்றினான். கையில் ஒரு மூங்கிலால் ஆன ஈட்டி வைத்திருந்தான். அவனுக்குப்பின்னால் இன்னொருவன் கையில் இழுத்த வில்லுடன் வந்து நின்றான்
“ஆரு?” என்றான் முதல் ஆள். அவன் காணிக்காரனாக இருக்கவேண்டும். அது ‘ஆரி’ என்பது போல ஒலித்தது.
“நாங்க ஊரிலே இருந்து வழிதவறி வந்திட்டோம். எங்க காரை யானை மறிச்சுபோட்டுட்டுது… எங்களுக்கு இந்த எடம் தெரியாது. காப்பாத்துங்க” என்றான் கண்ணன்.
அவன் கூர்ந்து பார்த்தபின் அருகே வந்தான். தன் இடுப்பில் இருந்து சுரைக்காய் குடுவையை எடுத்து அதன் மரத்தாலான மூடியை திறந்து என்னிடம் நீட்டி “வெள்ளம்” என்றான்.
நான் அதை பாய்ந்து வாங்கி வாய்வைத்து குடித்தேன். என் உடலே தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். குடுவையை முகுந்தனுக்கு கொடுத்தேன். அவர் குடித்தபின் கண்ணன் குடித்தான்.
“அங்க உங்க ஊரு இருக்கா?”
“இல்ல தம்ப்ரானே, அங்க பூசையாக்கும்… பண்ணிமாடனுக்கு புழுக்கச்சோறு கொடை.”
“ஓ”என்று கண்ணன் சொன்னான். “அங்க போலாமா? நாங்க சாப்பிடலை. இவரு சாப்பிட்டாகணும்… இல்லேன்னா மயக்கமாயிடுவாரு”
“பண்ணிமாடனுக்கு புழுக்கச்சோறு தம்ப்ரானே” என்றான் காணிக்காரன்.
“பரவாயில்லை. எந்தச் சோறா இருந்தாலும் சரி.”
“வாங்க” என்று அவன் சொன்னான்.
அவர்கள் எங்களை அழைத்துச் சென்றார்கள். அதற்குமுன் கையை வாயில் வைத்து கூர்மையாக ஓர் விசிலோசையை எழுப்பினான். கீழிருந்து பதில் ஓசை வந்தது.
ஈட்டிவைத்திருந்தவன் முன்னால் செல்ல அம்பு வைத்திருந்தவன் பின்னால் வந்தான். அவர்களுக்கு கீழிறங்க குறுக்குவழி தெரிந்தது. ஊஞ்சல் ஆடுவதுபோல சரிந்து சரிந்து சென்ற பாதையில் சீக்கிரமே கீழே சென்றுவிட்டோம். அங்கே ஒரு நீரோடை ஒளியுடன் இருளுக்குள் ஓடியது. அதன் ஓசை மழைபெய்வது போல கேட்டது.
அதைக் கடந்து விழுந்து கிடந்த ஒரு மரத்தின்மேல் ஏறி அதன்வழியாக நடந்து அப்பால் சென்றபோது அந்த தீ அருகே தெரிந்தது. நெருப்பைச்சுற்றி நிறையபேர் நிற்பதை நிழலாட்டமாக காணமுடிந்தது. சட்டென்று குரவையோசைகளும் கூச்சல்களும் சேர்ந்து உரக்க எழுந்தன. மரங்களிலிருந்து பறவைகள் கலைந்தெழுந்து ஓசையிட்டன.
“என்ன அங்கே?” என்று நான் கேட்டேன்.
“தம்ப்றானே, கொடை…சோரிகொடை.”
பலவகையான கூச்சல்களும் ஓலங்களும் குரவையோசையுடன் இணைந்து கேட்டுக்கொண்டே இருந்தன. பின்னர் மெல்ல அடங்கின. மேலிருந்து பார்த்தபோது அருகே என தெரிந்த தீயிருக்கும் இடம் சமதளத்தில் தூரத்தில் இருந்தது.
மூச்சிரைக்க அங்கே போய் சேர்ந்தபோது அனைவரும் சேர்ந்து ஏதோ செய்துகொண்டிருந்தார்கள். வாயால் கூரிய ஓசை ஒன்றை எழுப்பியபின் எங்களை அழைத்துச் சென்றவன் உள்ளே சென்றான். நாங்கள் தயங்கி நின்றோம். அவன் எங்களை உள்ளே அழைத்தான்.
வட்டமாக காட்டை வெட்டி முற்றம் ஒன்று அமைத்திருந்தனர். அங்கே ஐம்பது பேருக்குமேல் இருந்தனர். பல வயதான ஆண்கள் பெண்கள் குழந்தைகள். ஒரு பெரிய பன்றி தலைவெட்டி கொல்லப்பட்டிருந்தது. அதைச் சுற்றி அமர்ந்து அதை தோலைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்பால் ஒரு நாவல் மரத்தடியில் ஒரு முழம் உயரமான ஒரு செங்குத்துக்கல் நின்றது. அதன்மேல் மஞ்சள்விழுது பூசி செந்நிற மலர்களால் மாலையிட்டிருந்தனர். அதன் இருபுறமும் இரு எண்ணைப்பந்தங்கள் எரிந்தன. அதன் முன் கமுகுப்பாளையில் துண்டாக வெட்டப்பட்ட பன்றியின் தலை வைக்கப்பட்டிருந்தது. வளைந்த தேற்றைகளும் பற்களும் தெரியும்படி அதன் வாய் திறந்திருக்க, அதற்குள் ஒரு உருளைக்கல்லை வைத்திருந்தனர். இரு காதுகளும் விடைத்திருக்க ,விழித்த கண்களும் மீசைமுடிகளுமாக, அது உறுத்து நோக்குவதுபோலிருந்தது
நான் சிலகணங்கள்தான் பன்றியின் தோல் செதுக்கப்படுவதைக் கண்டேன். ஒரு பெரிய அடிமரக்கட்டையை அவர்கள் கையாள்வதுபோலத்தான் தோன்றியது. என் தலை சுழன்றது. நான் மெல்லச் சென்று அங்கே ஒரு கல்மேல் அமர்ந்தேன். என்னருகே இருந்தவன் கரிய பற்களை காட்டிச் சிரித்து “தேற்றைப் பந்நி” என்றான்.
”ஆமாம்” என்று நான் தலையசைத்தேன்.
“வல்ய பந்நி…” என்று அவன் மகிழ்ச்சியுடன் சொல்லி தலையை அசைத்தான்.
தலையில் கமுகுப்பாளையாலான உயரமான கிரீடம் ஒன்றை அணிந்த கிழவன் ஒருவன் என்னருகே வந்தான். “பந்நிமாடனாக்கும்… காட்டுசாமி” என்றான். “என்பேரு காணன் மூப்பன்… நான் இங்கே பூசாரி.”
“இங்க எப்ப பூசை?” என்றேன்.
“சோரி கொடை கழிஞ்சுபோச்சு… இனி சோறுகொடை உண்டு… இப்ப சோறு வேவிக்கும்” என்றான்.
நான் சரி என்று தலையசைத்து கண்களை மூடிக்கொண்டேன். என் உடல் இரும்பாலானது போல எடைகொண்டிருந்தது. தரையில் அமர்ந்ததும் படுக்கத் தோன்றியது. படுத்ததுமே அமிழ்ந்து அமிழ்ந்து சென்றேன். அப்படியே எங்கோ சென்று மறைந்தேன்.
என் அருகே பேச்சொலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன. இனிய சோற்றின் மணம். ஒளிவிடும் நதிக்கரை ஒன்றின் மணற்பரப்பில் இருக்கிறேன். மணல் முழுக்க வெண்சோறாக மாறிவிட்டிருந்தது.
நான் விழித்துக்கொண்டபோது என் அருகே முகுந்தன் கண்ணன் இருவரும் இருந்தனர். கையை ஊன்றி முனகியபடி எழுந்து அமர்ந்தேன்.
முகுந்தன் “சோறு பொங்குதானுக… நெறைய சோறு” என்றார். “அக்கானி காய்ச்சுத ரெண்டு தகர அண்டாவை கொண்டு அடுப்பிலே வச்சு பெரிய காட்டு விறகுகலை போட்டு எரிச்சு சமைக்கிறானுக. ஒண்ணுமே இல்லை, கொதிக்கிற தண்ணியிலே பச்சரிசியைப் போட்டு வெந்து வர்ரப்ப கூடவே பன்னிஇறைச்சியை துண்டுபண்ணி அள்ளிப்போட்டு அப்டியே வேகவைக்கிறானுக.”
“வெறும் அரிசியும் கறியுமா?” என்றேன். கொதிக்கும் சோற்று அண்டாக்களை நான் கண்ணால் பார்த்துவிட்டேன். அவை கொதிக்கும் களகள ஓசையை, சோறு வெந்து மலர்ந்துவரும் இனியமணத்தை அறிந்தேன்.
“அது அரிசி இல்லை, சாமை” என்று கண்ணன் சொன்னான் “இவங்களுக்க சாமி எதுக்குமே அரிசியோ கோதுமையோ படைக்கமாட்டாங்க”
“வெறும் கறி மட்டுமா?”
“ஆமா சார், இவங்க சாமிக்கு கொடை அப்டியாக்கும். தானியமும் கறியும் மட்டும். உப்புகூட போடமாட்டாங்க.”
“நம்ம ஊரிலேயும் சாமக்கொடைக்கெல்லாம் படைச்சோத்திலே உப்பு போடுறதில்லை. கறிப்பொங்கலிலே அரிசியும் கறியும் மட்டும்தான்.”
“நீங்க பன்னிக்கறி திம்பிகளா?” என்று முகுந்தன் கேட்டார்.
“இல்லை” என்று நான் சொன்னேன்.
“நான் ஒண்ணுரெண்டுதடவை தின்னதுண்டு” என்று கண்ணன் சொன்னான்.
“சோத்த மட்டும் சாப்பிடலாம்… வேற என்ன வழி” என்று முகுந்தன் சொன்னார்.
சோறு என்ற சொல்லே என் உடலை பதறச்செய்தது. என் நாக்கு உலர்ந்து ஒரு மெல்லிய படலமாக தொண்டைக்குள் இறங்கியிருந்தது. என் நெஞ்சு பதைத்துக்கொண்டே இருந்தது.
உடல்முழுக்க வேகும் சோற்றின் மணத்தை உணர்ந்தேன். உணவின் மணம் நாவூறச் செய்ததை உணர்ந்தது உண்டு. அப்போது நா ஈரமாகவே இல்லை. பசியும் இல்லை. உடலில் ஒரு தவிப்பு மட்டும்தான். மிக ஆழமான பள்ளத்தைப் பார்த்ததும் பாய்ந்துவிடவேண்டும் என்று ஒரு தவிப்பை உடல் அடையுமே அதைப்போல.
பின்னர் மிக விந்தையான ஒன்று நிகழ்ந்தது, என் உடலுக்கு ஓர் உச்சம் நிகழ்ந்தது. பாலுறவின் உச்சமேதான். அதே சிலிர்ப்பு நடுக்கம் கூச்சம். பின்னர் முற்றாக வியர்த்து தளர்ந்து நான் மீண்டும் மல்லாந்து படுத்தேன். எங்கோ காற்றில் சென்றுகொண்டே இருப்பதுபோல குளிரை உணர்ந்தேன். குரலோசைகள் எல்லாம் கலந்து ஒரு நீண்ட ரீங்காரமாக ஆயின.
கறிச்சோற்றை பெரிய தகரஅண்டாவோடு நான்கு நான்குபேராகச் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். தரையில் மண்ணை ஒதுக்கிய இடத்தில் ஏற்கனவே வாழையிலைகளை விரித்திருந்தார்கள். அதன்மேல் அந்தச் சோறு கொட்டப்பட்டது. முழங்காலுயரத்தில் வெண்ணிறமான குவியலாகச் சோறு. கட்டிடங்கள் கட்ட சுண்ணாம்பும் மணலுமாக சுதை கலக்கப்பட்டு குவிக்கப்படுவதுபோல. இருநூறு முந்நூறுபேர் சாப்பிடும் அளவுக்கு சோறு இருந்தது
பின்னர் மடல்வளைவுடன் கூடிய பனைமட்டையை நெடுக்காகப் பிளந்து உருவாக்கப்பட்ட ஹாக்கிமட்டை போன்ற கோலால் அந்தச்சோற்றை தள்ளித்தள்ளி புரட்டி ஆறவைத்தனர். திரும்பத் திரும்ப கிண்டிக்கொண்டிருந்தார்கள். வெல்லம் காய்ச்சுபவர்கள் பாகைக்கிண்டுவதுபோல.
அது நன்றாக ஆறிவிட்டது என்று கைவைத்து பார்த்ததும் மீண்டும் அதை அள்ளி குவித்து ஒரு நீண்ட வேலிபோல ஆக்கினார்கள். பனைமட்டையின் பரந்த பகுதியால் அடித்து அடித்து அதை ஒரு வடிவத்திற்குக் கொண்டுவந்தனர். அந்த சோற்றுக்குவியலில் தலை உருவாகி வந்தது. மூக்கு குவிக்கப்பட்டு தலையும் வாயும் குழிகளாக ஆக்கப்பட்டன. விரிந்த நெஞ்சு, இடை. இரு கைகளும் இருபக்கமும் கிடந்தன. இருகால்கள் நீண்டிருந்தன. ஆனால் விரல்கள் செய்யப்படவில்லை
சோற்றுமனிதனின் நெற்றியில் ஒரு பூ வைக்கப்பட்டது. நெஞ்சில் ஒரு கலயத்தில் ஏதோ வைக்கப்பட்டது. தலையில் கமுகுப்பூக்குலைகள் முடிபோல பொருத்தப்பட்டன. கண்ணெதிரே சோற்றுக்குவியலாக இருந்த அது ஒரு மனிதனாக மல்லாந்து படுத்திருந்தது. மனித உடலைவிட மூன்றுமடங்கு பெரிய உடல்.
பணிமுடிந்தது என்று கண்டதும் முதிய காணி தலையை அசைத்தார். ஒருவன் எழுந்து சிறிய மூங்கில்குழல் ஒன்றிலிருந்து நீண்ட கூரிய ஓசையை எழுப்பினான். ஓரமாக அமர்ந்திருந்த நான்குபேர் எழுந்து வெவ்வேறு வாத்தியங்களை வாசிக்கத் தொடங்கினார்கள்
இரும்பாலான ஒரு வாத்தியம் ஒன்று செவிதுளைக்கும் ஓசையை எழுப்பியது. சொரசொரவென பல்லெழுந்து நின்ற ஒரு குழல். அது ஓர் இரும்புத்தண்டுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. அந்த இரும்புத்தண்டை தோளில் சாய்த்து சொரசொரவென்ற குழலை அதன்மேல் உரசி தாளத்துடன் ஒலியெழுப்பினான். ஏதோ பெரிய பறவையின் சிலம்பும் குரல் போலிருந்தது.
அதனுடன் இணைந்து ஒருவன் உடுக்கை மீட்டினான். இன்னொருவன் பானையின் வாயில் தோல் கட்டி உருவாக்கப்பட்ட முரசை இயக்கினான். உறுமலும் முரளலும் சிலம்பலுமாக ஓசைகள் கலந்து ஒருவகையான பதற்றமான சூழலை உருவாக்கின. அறியமுடியாத ஏதோ பறவைகளும் மிருகங்களும் பூசலிடுவதுபோல.
அது முதலில் வெறும் முழக்கமாக இருந்தது பிறகு அது தாளத்தில் அமைந்த ஒருவகை இசையாக தோன்ற ஆரம்பித்தது. அதற்குள் அந்த இசைவை நம் மனமும் அடைந்துவிட்டிருந்தது. ராரர ராரர ராரர என்ற தாளம். என்னஇது? என்னஇது? என்னஇது?- என்ற சொல்லின் ஓட்டம். என்னுடேது என்னுடேது என்னுடேது என்று அது மாறியது.
கண்ணன் “ஒண்ணையே சொல்லுகது மாதிரி இருக்கு. வேண்டீலல்லோ வேண்டீலல்லோன்னு தோணுது” என்றான்.
முகுந்தன் “அந்த இரும்பு சங்கதி என்னவாக்கும்?” என்றார்.
“அதுக்கபேரு கொக்கறை. காணிக்காரனுங்க நம்ம ஊரிலே மந்திரவாதத்துக்கு கொண்டுவருவானுக. அகஸ்தியமுனிவர் அவங்க ஜாதிக்கு குடுத்ததாக்கும். வாதையும் சீக்கும் அதைக்கேட்டா மாறி நின்னிடும்” என்றான் கண்ணன்.
சட்டென்று ஓ என்ற அலறலுடன் கையை வீசியபடி மூப்பன் பாய்ந்து வந்தார். பாளையாலான பெரிய கிரீடம் அணிந்திருந்தார். குருத்தோலையை கீறிச்செய்த நீண்ட தலைமுடியும் தாடியும் கட்டியிருந்தார். இடையில் இலையாலான ஆடை. முகத்தில் கரியை பூசியிருந்தார். கிரீடத்திலும் ஒரு முகம் உருண்ட கண்களும் இளித்த வாயுமாக தெரிந்தது
கையிலிருந்த நீண்ட கழியை வீசியபடி அவர் சுழன்று ஆடினார். வெறிகொண்ட காலடிகளும் கைவீசல்களுமாக தாவி எழுந்து அமர்ந்து கூச்சலிட்டார். துள்ளித்துள்ளி எழுந்து எழுந்து விழுந்து ஒரு கட்டத்தில் மனிதனால் எழமுடியாத அளவு உயரத்திற்கு துள்ளி எழுந்து விழுந்தார். அவருடைய குரல் நாயின் ஊளைபோலவும் புலியின் உறுமல்போலவும் மாறிமாறி ஒலித்தது
இசை உச்சமடைய அவர் பாய்ந்து சென்று அந்த சோற்று மனிதனின் நெஞ்சை இரு கைகளாலும் அள்ளி தன்மேல் அறைந்துகொண்டார். சோற்றை அள்ளி அள்ளி அந்த பன்றிமாடன் சாமிமேல் மேல் வீசினார். நடனம்போல் ஆடியபடியே சோற்றை அள்ளி நான்கு திசைக்கும் வீசினார். தரையெல்லாம் சோறு பரவியது. பின்னர் அவர்வீசிய சோற்றின் மேலேயே குப்புற விழுந்தார்.
குழல் உச்சத்தில் ஒலித்து அமைய அத்தனை பேரும் கூச்சலிட்டபடி சோற்றுக்குவியல் மேல் பாய்ந்து அதை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் வீசி அறைந்தனர். அள்ளி உண்ணவும் செய்தனர்.
“என்ன செய்யுதானுக?” என்று முகுந்தன் கேட்டார்.
“இங்க இப்டித்தான்… சோறு அது. திங்கவேண்டியதுதான்” என்றான் கண்ணன் “சாவுத நேரத்திலே சோத்துக்குப் பாவமில்லை.”
“என்னடே இது” என்றார் முகுந்தன் தவிப்புடன்.
“நான் போறேன்” என்று கண்ணன் எழுந்து சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.
அவன் அள்ளி அள்ளி தின்பதை நான் பார்த்தேன். எனக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் “எனக்க அம்மா… எனக்க அம்மா…” என்று அழுது கூவியபடி எழுந்து ஓடிப்போய் அந்த சோற்றின் மேல் பாய்ந்தேன். என் கால்கள் நிலையிழந்திருந்தமையால் குப்புற சோற்றின்மேல் விழுந்தேன். இரு கைகளாலும் அள்ளி அள்ளி தின்றேன். என்மேல் யாரோ விழுந்தார்கள். சோற்றால் வழுவழுவென்றாகியிருந்த உடல். என் சட்டையை கழற்றி வீசினேன். கைவீசிக் கூச்சலிட்டபடி எக்களித்துச் சிரித்தபடி அலறி அழுதபடி நான் அந்த சோற்றை அள்ளித்தின்றேன்.
சுவையை என் முழு எண்ணத்தாலும் உணர்ந்தேன். என் முழு உடலுமே நாக்காக மாறி அறிந்த சுவை. தின்னத்தின்ன வெறி ஏறிக்கொண்டிருந்தது. புழுக்கள்போல சோற்றின்மேல் கிடந்து நெளிந்து துழாவி அளைந்து நீந்தி அள்ளி உண்டு உண்டு உண்டு உடலெங்கும் சோறு நிறைந்து உடலே ஒரு சோற்றுப்பொதியென்றாகி என்னையே நானே தின்று தின்று தின்று திளைத்தேன்.
அங்கிருந்த அனைவருமே அப்படி வெறிகொண்டு தின்றிருப்பார்கள். அவர்கள் வழக்கமாகத் தின்பதைவிட மூன்றுமடங்கு நான்கு மடங்கு. உணவே போதையாகி களிவெறியாகி கூச்சலிட்டு நடனமிடச் செய்தது. நெஞ்சிலறைந்து வானோக்கி கூவ வைத்தது. எடையாகி மண்ணோடு மண்ணாக அழுந்தவைத்தது.
பிறகு நான் நினைவு மீண்டபோது பின்னிரவு. மரங்களிலிருந்து பனித்துளிகள் மழைபோல கொட்டிக் கொண்டிருந்தன. என் வெற்றுடல் ஈரத்தில் நடுங்கிச் சிலிர்த்தது. அங்கே முழுக்க ஆழ்ந்த இருட்டு. உடல்கள்மேல் உடலாக அனைவரும் மயங்கி தழுவி முயங்கி கிடந்தனர். நடுவே உறுமலோசைகளை கேட்டேன். காட்டுபன்றிகள் அந்த சோற்றுமலை சிதைந்து மண்ணோடு கலந்த களியை சுவையுடன் முட்டிமுட்டி தின்றுகொண்டிருந்தன. இருட்டே உருவங்களாக திரண்டு வந்து கொப்பளிப்பது போலிருந்தது. நூற்றுக்கும் மேல் பன்றிகள். என் அருகே சென்ற பன்றியின் மின்னும் கண்களைப் பார்த்தேன்.
என் மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டிருந்தது. எனக்கு நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை. அழுதுவிடுவேன் என்று தோன்றியது. அழுகையின் முந்தைய கணம். ஆனால் அழவில்லை. அந்தக்கணம் நீண்டு நீண்டு நீண்டு நீண்டு சென்றுகொண்டே இருந்தது. அதன்மேல் நீர்த்துளிகள் சொட்டிச் சொட்டிச் சென்றுகொண்டே இருந்தன.
***