2. மறைந்து கிடப்பது என்ன?

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.

ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனை மரபில் இதற்கிணையான ஒரு முழுமை நோக்கு பதிவாகியிருக்கின்றதா? உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்ல முடிகிறது. நீங்களே இதற்கான விடையைத் தேடிக்கொள்ளலாம்.

என் எளிய வாசிப்பில் நான் அப்படி எதையுமே கண்டதில்லை. மனிதசிந்தனை வெளியில் இந்தியஞானமரபுடன் இணைநோக்கத் தகுதியான சிந்தனைமரபுகள் இரண்டே. தொன்மையான கிரேக்க சிந்தனைமரபு, தொன்மையான சீனச் சிந்தனை மரபு. இரண்டிலும் அறிவார்ந்த அணுகுமுறைக்கும் மாற்றுத்தரப்புடன் உரையாடுவதற்கும் பெரிதும் இடமுள்ளது.

குறிப்பாக கன்பூஷியஸின் தத்துவசிந்தனையில் எல்லா தளத்திலும் அமைதியான சமரசப்போக்குக்கே முக்கியத்துவம் காணப்படுகிறது. ஆனால் எல்லா சிந்தனைகளையும் மெய்யான உண்மையை நோக்கிச் செல்வன என்று சொல்ல அதனால் முடியவில்லை. உண்மை உண்மையல்லாமை என்ற பிரிவினையிலிருந்து கன்பூஷியஸாலேயே தப்ப முடியவில்லை.

இந்தியப் பண்பாட்டின் அடிப்படை மனநிலை என்று சாந்தோக்ய உபநிடதத்தின் அந்த நோக்கைச் சுட்டிக்காட்டலாம். ஐந்தாயிரம் வருட மரபில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த இணைவு- சமரசப் போக்கின் சாரமாக இருக்கும் தரிசனம் என்ன? அதுவே இந்தியப் பாரம்பரியத்தின் வெற்றியையும் சிறப்பையும் உருவாக்கியது.

பின்னோக்கிச் செல்லும்போது நாம் ரிக்வேதத்தையே சென்றடைகிறோம். மானுடசிந்தனை குழவிப்பருவத்தில் இருக்கும் காலகட்டம். மண்ணில் நாம் காணும் இன்றைய மதங்களில் அனேகமாக எதுவுமே தோற்றம்பெறாத காலகட்டம். மனிதசேதனை பிரபஞ்ச ரகசியத்தை நோக்கி சிறகடித்தெழுகிறது. தூய உள்ளுணர்வால் அது அலகிலா வெளியை துழாவுகிறது. ரிக்வேதத்தில் நாம் காண்பது அந்தத் தேடலையும் தத்தளிப்பையும் தரிசனங்களின் மின்மினிகளையும் மின்னல்களையும்தான்.

‘கஸ்மை தேவாய ஹவிஸ்ஹா விதோம?’ என்று ரிக்வேத ரிஷி வியக்கிறார் [யார் அந்த தேவன்? யாருக்கு நாம் அவியளிக்கிறோம்?] அவனை இந்திரன் என்றும் அக்னி என்றும் உஷை என்றும் சாவித்ரி என்றும் காயத்ரி என்றும் கண்டுகொள்கிறார்கள். அந்தியில் விண்ணைச்சிவக்க வைப்பது. அரணிக்கட்டையால் வேள்விக்குண்டத்தை ஒளிர வைப்பது. விண்ணகங்களைச் சுடர வைப்பது. சொல்லிலும் சிந்தனையிலும் சோதியை நிரப்புவது…

பின் அந்தப்பொதுமையை சென்றடைந்தது மானுடப்பிரக்ஞை.

ஏக ஏவாக்னிர் பஹுதா ஸமித்த:
ஏக ஸுர்யோ விஸ்வ மனுப்பிரஃபூத:
ஏகைவோஷா ஸர்வமிதம் விஃபாத்யேகம்
வா இதம் விபஃபூவ ஸர்வம்!

[பல இடங்களில் எரியும் நெருப்பு ஒன்றே
உலகை ஒளிரச்செய்யும் சூரியன் ஒன்றே
இவ்விடங்களையெல்லாம் சுடரச்செய்யும் புலரியும் ஒன்றே
அந்த ஒன்றே இவையெல்லாம்!]

அங்கிருந்து அதுசென்றடைந்த மாபெரும் ஒருமைத்தரிசனமே உண்மையில் வேதத்தின் உச்சம். அதையே வேதாந்தம் என்றனர் பிறகு. அந்தத் தேடலையும் கண்டடைதலையும் முன்வைத்தது ரிஷி பிரஜாபதி பரமேஷ்டி சிருஷ்டி பற்றிச் சொன்ன ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்னும் மகத்தான பாடல்.

*
சிருஷ்டி கீதம்
===========

அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை

ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?
அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை

இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!
தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது

அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!

ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன

ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?
திட்டவட்டமாக யாரறிவார்?

அதன் மூலகாரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?

அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது
அதுவும் அறியாது!

*

இந்திய தத்துவ சிந்தனையை இந்தப்புள்ளியில் இருந்துதான் விரித்தெடுக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். மாக்ஸ்முல்லர், குந்தர் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களையும், கெ.தாமோதரனைப் போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களையும் பிரமிக்கச் செய்த, பேரழகுமிக்க கவிதை என்று வியந்து பாராட்டச்செய்த இந்த மகத்தான வரிகளை இந்திய நாகரீகம் கண்டடைந்த உச்ச தரிசனத்தின் சாட்சியங்களாக நான் முன்வைப்பேன். இங்கிருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கின்றன.

அறியவொண்ணாமையின் பிரமிப்பால் மட்டுமே சென்று தீண்டச்சாத்தியமான அந்த ஒன்றை இங்கே பெயர் சுட்டக்கூட கவிஞன் முயலவில்லை. மீண்டும் மீண்டும் பிரமிப்பின் வினாக்களே அதை நோக்கி நீள்கின்றன. ‘வ்யோமன் த்ஸோ அங்க வேத யதி ! வா ந வேத!’ என்று சொல்லிமுடிக்கும் கவித்துவ உச்சத்தில் அப்பிரமிப்பே ஒரு இருப்பாக மாறி தன்னை நிறுவிக்கோண்டுவிடுகிறது.

அந்தப்பிரமிப்புக்கு அளிக்கப்பட்ட ஒலியே ‘பிரம்ம’ என்பது. ‘அம்ம!’ என்ற ஒலிக்கு நிகரானதுதான் அது. பெரியது, ஆச்சரியத்துக்குரியது, அச்சம் தருவது என்றெல்லாம் பிரம்மம் என்னும் ஒலி பொருள்கொள்ளப்படுகிறது. என்றாலும் அது எப்போதும் அதையே குறிக்கிறது. அலகிலாதது, அறியமுடியாமை என்ற அறிவை மட்டுமே அளிப்பது, இருப்பது, இருப்பின்மையாலேயே இருப்பை அறிய முடியாதது.

அதைச்சொல்ல நேதி நேதி நேதி என்று அனைத்தையும் மறுக்க வேண்டும். அல்லது ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று அனைத்தையும் ஏற்கவேண்டும். தத்வமசி என்று வெளியே சுட்டவேண்டும். அஹம்பிரம்மாஸ்மி என்று தன்னைச் சுட்டவேண்டும். முரண்பாடுகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் ஒரு முடிவின்மை அது.

பிரம்மம் என்ற தரிசனமே இந்திய ஞானமரபையும் இந்தியப் பண்பாட்டையும் உருவாக்கியது என்று விவேகானந்தர் சொல்கிறார். இந்திய வரலாற்றை முழுக்க இந்த விளக்கம் மூலம் கோர்த்துப் பார்க்க முடியும். இந்து ஞானமரபின் மையமாக இக்கணம் வரை இருந்துவருவது இந்தத் தரிசனமே ஆகும்.

ஒரு புரிதலுக்காக இப்படி யோசிப்போம். பண்டைய இந்திய நிலத்தில் உருவானது மத்தியக்கிழக்கில் மேலும் ஆயிரம் வருடம் கழித்து உருவான ஓரிறைவாதம் [Thieism] போல ஒன்றாக இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ஒற்றைப் பேருண்மையாக ஒர் இறை உருவகமும் அதன் குறியீடுகளும் அக்குறியீடுகளை உருவாக்கிய பண்பாடும் முன்வைக்கப்பட்டிருக்கும். அந்த ஓரிறைவாதத்துடன் மாறுபடும் தரப்புகள் எல்லாமே பொய்களாகவும் பிழைகளாகவும் கருதப்பட்டு கடுமையான கருத்தியல் பிரச்சாரம் மூலமும் ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறை மூலமும் முற்றாகவே துடைத்தழிக்கப்பட்டிருக்கும்.

பெருமைமிக்க மெசபடோமிய, பாரசீக, அபிஸீனிய, காந்தாரப் பண்பாடுகள் எல்லாம் அழிந்து தடமின்றிப் போனதுபோல இந்திய நிலப்பகுதியில் விளைந்த பண்பாடுகள் மறைந்திருக்கும். எகிப்தின் காப்டிக் மக்கள் ஒட்டுமொத்தமாகவே அழிக்கப்பட்டது போல இங்குள்ள எத்தனையோ இனக்குழுச்சமூகங்கள் மறைந்திருக்கும். ஐரோப்பியப் பாகன் பண்பாட்டின் கூறுகளை நாம் இன்று தொல்பொருட் தடயங்களில் இருந்து தேடிச்சேகரிப்பது போல இந்தியப் பண்பாட்டின் இன்றும் வாழும் எத்தனையோ கூறுகளை தேடிக்கொண்டிருப்போம்.

ஆனால் ரிக்வேதத்தின் அடிப்படைச் செய்திக்கு நேர்மாறானதும் புராதன பழங்குடி வழிபாட்டு முறைகளின் பெருந்தொகுப்புமான அதர்வண வேதமும் நால்வேதங்களில் ஒன்றாகவே நீடிக்கிறது இந்தியாவில். இந்த சமரசம் வேதங்களுக்கு உள்ளேயே தொடங்கிவிட்டது. வேதங்களின் கர்மகாண்டமும் ஞானகாண்டமும் தங்களுக்குள் கொள்ளும் முரண்பாடுகளையே வேதகாலம் சமரசப்படுத்திக் கொண்டது.

காரணம் பிரம்மம் என்னும் கருதுகோள். பிரபஞ்ச சாரமாக, பிரபஞ்சமேயாக, பிரபஞ்சம் கடந்த பேராற்றலாக ‘அனைத்துமான ஒன்றாக,’ ‘ஒன்றாக இருக்கும் பலவாக’ காண்பதும் காணப்படுவதும் காட்சியுமாக இருக்கும் பிரம்மம் தத்துவசிந்தனையின் ஓர் உச்சப்புள்ளி. இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை உருவகிக்கப்பட்டுள்ள எந்த ஒரு தத்துவ உருவகமும் பிரம்மம் அளவுக்கு விரிவானதும் முழுமையானதுமல்ல.

பிரம்மம் ஒரு பட்டுநூல். அதில் கோர்க்கப்படுகின்றன இந்து ஞானமரபின் எல்லா இறையுருவகங்களும். இந்திய நிலப்பகுதியில் உள்ள எல்லாவழிபாட்டுமுறைகளையும் எல்லா இறைவடிவங்களையும் பிரம்மம் என்ற கருதுகோள் சந்தித்து அதன் வழியாகக் கடந்துச் சென்றது. உபநிடதக் காலகட்டம் பிரம்மதரிசனத்தின் உச்சநிலைகள் வெளிப்பட்ட தருணம். உபநிடதங்களில் பிரம்மஞானம் எவற்றில் எல்லாம் கவித்துவ வீரியத்துடன் வெளிப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் மகத்தானவையாக ஆயின.

ஈஸ கேன கட பிரஸ்ன
முண்டக மாண்டூக்ய தைத்ரீய:
ஐதரேயம் ச சாந்தோக்யம்
பிருகதாரண்யகம் தத :

என பத்து உபநிடதங்கள் அவற்றில் மையமானவையாக குறிப்பிடப்படுகின்றன. அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர் வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் நம் மரபில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல சுயதரிசனங்கள் வழியாக பிரம்மம் என்ற பெரும் பொதுமையைச் சென்றடையும் வாசல்கள் அவை.

இந்தியஞான மரபின் எந்த ஒரு பிரிவும் பிரம்மம் என்னும் தரப்புடன் ஓர் விவாதத்தில் ஈடுபட்டிருப்பதை நாம் காணமுடியும். அதன்வழியாக அதுவும் சட்டென்று ஒரு பெரும்பொதுக்கருத்தை நோக்கி எழுந்திருப்பதை அறியலாம். உதாரணமாக ஆறுவகை தரிசனங்களில் முதலாவதான சாங்கிய தரிசனம் ஆதி இயற்கை என்னும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. தொன்மையான நிலவழிபாட்டில் இருந்து எழுந்தது அது. பிரபஞ்சத்தை நான்குவகை பருப்பொருட்களின் கூட்டாக மட்டுமே காணும் உலகாயத நோக்கு கொண்டது.

பிரம்மவாதத்துடன் விவாதித்த சாங்கியம் அதன் ஆதி இயற்கை என்ற கருதுகோளை நம்மைச்சூழ்ந்துள்ள அழியாத பருப்பொருள் என்ற தளத்திலிருந்து விரித்தெடுத்து பிரபஞ்சமளாவிய ஆக்கமும் அழிவும் இல்லாத மாபெரும் பொதுமையாக உருவகித்துக் கொண்டது. கிட்டத்தட்ட பிரம்மம் போல. பிரம்மத்தை பருப்பொருளாக உருவகித்துக் கொள்வதுபோல.

சாங்கிய தரிசனத்தின் நீட்சியாக சர்வாஸ்திவாதத்தை [அனைத்திருப்பு வாதம்] வளர்த்தெடுத்த பௌத்தமும், அனேகாந்த வாதத்தை உருவாக்கிய சமணமும் அந்தக்கருதுகோளையும் பிரம்மத்தின் அளவுக்கே கொண்டு செல்வதைக் காணலாம். பிரபஞ்சத்தின் பெருநியதியை தங்கள் இறையுருவகமாகக் கொண்டது பௌத்தம். மகாதர்மம் என்ற அவர்களின் கருதுகோள் மெல்லமெல்ல பிரம்மமேயாக மாறுவதை நான் பௌத்த சிந்தனைகளில் காணமுடிகிறது.

அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தே நம்முடைய மதங்களை எல்லா தரப்பினருடன் உரையாடவும் தங்களை நோக்கி திருப்புவனவற்றையெல்லாம் உள்ளிழுத்துக்கொள்ளவும் வழிவகுத்தது. இந்த அம்சத்தை மார்க்ஸிய ஆய்வாளரான டி.டி.கோஸாம்பி தனக்கே உரியமுறையில் விளக்கியிருக்கிறார். இந்தியநிலப்பகுதி எங்கும் பரவியிருந்த பல்லாயிரம் தாய்த்தெய்வங்கள் அனைத்தும் ஒன்றாக ஆகி பிரபஞ்ச ரூபிணியான தாய் என்ற ஒரு பெரும்பொதுமையை நோக்கிச்செல்வதை அவரது இந்திய தாய்தெய்வங்களைப் பற்றிய ஆய்வு காட்டுகிறது [Myth And Reality, தொன்மையும் உண்மையும். டி.டி.கோஸாம்பி]

மூதாதை வழிபாட்டிலிருந்தும் நிலவழிபாட்டிலிருந்தும் உருவான இறைவடிவமான அன்னை என்ற கருத்தானது பிரபஞ்சங்களை ஈன்ற ‘பராசக்தி’ என்ற கருதுகோளாக மாறியது பிரம்மம் என்ற கருதுகோளின் முன்வடிவத்தாலேயே. நம் சமகாலத்திலேயே நோய் காக்கும் அன்னையாக இருந்த கிராமத்து மாரியம்மன்கள் பராசக்தியின் வடிவங்களாக உருமாற்றம் பெறுவதைக் காண்கிறோம். இதை சம்ஸ்கிருத மயமாக்கம் என்றும் மேல்நிலையாக்கம் என்றும் இன்றைய ஆய்வாளர் சிலர் சொல்கிறார்கள். சரியான சொல் ‘தத்துவமயமாக்கம்’ என்பதே. இந்திய தத்துவத்தின் சாரமாக இருக்கும் பிரம்ம உருவகத்தை எந்த ஒரு வழிபாட்டு முறை சந்தித்தாலும் அது முதல்முழுமை [அப்சல்யூட்] என்ற கருத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுவிடும்.

இந்தியப் பெருமதங்களான சைவத்திலும் வைணவத்திலும் உள்ள இறை உருவகங்கள் நெடுங்காலம் முன்னரே அந்த பிரபஞ்சமளாவியப் பேருருவை எடுத்துவிட்டன. அண்டவெளியெனும் அம்பலத்தில் ஆடுபவனாக சிவன் உருக்கொண்டான். பிரபஞ்சரூபனாக அண்டவெளியெனும் பாற்கடலில் பள்ளிகொண்டவனாக விஷ்ணு விரிவுகொண்டார். அந்த பரம்பொருள் தோற்றமே அந்தமதங்களின் சாரமாக உள்ள தத்துவங்களில் பேசப்பட்டது. வைணவத்தின் விசிஷ்டாத்வைதமும் துவைதமும் பிரம்மவாதத்தின் விளக்கங்களே. பிரம்மவாதத்தின் இன்னொருவடிவம் என்றே சைவசித்தாந்தத்தைக் கூறிவிடமுடியும்.

மையத்தில் உள்ள இந்தப் பெருந்தரிசனமே இம்மதங்களை மாபெரும் தொகுப்புசக்திகளாக ஆக்கியது. இந்திய நிலப்பகுதியில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகளை வைணவம் எவ்வாறு உள்ளிழுத்துக் கொண்டது என்று ஆய்வாளரான சுவீரா ஜெய்ஸ்வால் அவரது ஆய்வான ‘வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் குறிப்பிடுகிறார். விஷ்ணுவின் அவதாரங்கள் மட்டுமல்லாமல் அனுமன், கருடன், சக்கரம் போன்றவையும்கூட தனிவழிபாட்டு முறைகளாகவே இருந்தன. ஸௌரமதம் பிற்காலத்தில் வைணவத்தில் இணைந்தது. அதேபோல சைவத்திலும் பல்வேறு மதங்களின் இணைவு உள்ளது. தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரஹங்கள் போன்றவையெல்லாம் தனிவழிபாட்டு முறையாக இருந்தவையே. தனிமதங்களான சாக்தமும் காணபத்யமும் கௌமாரமும் பின்னர் சைவமாக ஆயின.

ஒரு கட்டத்தில் சைவமும் வைணவமும் கூட தங்கள் முரண்பாடுகளை மீறி ஒன்றாக இந்துஞானமரபின் சாரமாக விளங்கும் பிரம்மதரிசனமே உதவியது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம் என்னும்போது இங்குள்ள எந்த ஒன்றை வணங்குவதும் பிரம்மத்தையே வணங்குவதாகும் என்னும்போது பிரம்மத்துக்கு அயலாக ஏதும் இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு மதமும் வழிபாட்டுமுறையும் பிரம்ம தத்துவத்தின் வெறுப்புக்கும் நிராகரிப்புக்கும் ஆளாக வேண்டியதில்லை. அதையே ஆருணியாகிய உத்தாலகன் சொல்கிறான். சூழ்ந்துள்ள ஆழியே பிரம்மம். மண்ணில் உள்ள ஒவ்வொரு ஆறும், ஏன் ஒரு இலைத்தளிரிலிருந்து சொட்டும் நீர்த்துளியும் கடைசியில் கடலையே அடைந்தாக வேண்டும்.

(24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி)

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.வி பாடும்போது