கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நானும் நலம். நீண்ட இடைவேளைக்குப்பின் இந்தக் கடிதம் எழுதுவதற்கான காரணம் அன்னம். இந்த வரிசையில் ஓரிரு கதைகளைத்தான் என்னால் வாசிக்கமுடிந்தது. காரணம் வேறொன்றுமில்லை. இந்த நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள்தான். அவை எல்லாமே சீரியல்போல, ஆனால் சினிமாத்தரத்துட்ன் உள்ளன. காட்சிக்கலை என்பது மூளையை கொடுக்காமல் உட்காந்து பார்க்கவைப்பது. அதோடு கூடி அமர்ந்து பார்க்கவும் முடிகிறது. இந்த சோர்வுக்காலத்தில் இப்படி பார்ப்பது இளைப்பாறல். ஒரு கதையை வாசிக்கும் உழைப்பை கொடுக்கமுடியவில்லை.
அன்னம் என்னை நிறைவுறச்செய்த கதை. அன்னம் அளிப்பது ஒரு வேள்விதான். அதைச்செய்பவர் தெய்வத்துக்குத்தான் சேவை செய்கிறார். ஆனால் அதைப்படிக்கும்போது எனக்குத்தோன்றியது இந்துமதத்தில் இந்தமாதிரி அன்னம் அளிப்பது புராணம் முதல் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் பேதமில்லாமல் அளிக்க நம்மால் முடியவில்லை. அப்படி உணவு அளிக்குமிடத்தில் ஒரே ஒரு வைதிகர் அல்லது ஆசார இந்து இருந்தால்கூட போதும் தடுத்துவிடுவார்
நான் ஈஷா யோகமையத்திலே பார்த்திருக்கிறேன். அங்கே சமானமான உணவுதான். மாடர்ன் ஆன சூழலாதலால் ஹோட்டல் ஃபீல் வந்து யாரும் பெரிதாக பொருட்படுத்தமாட்டார்கள். ஆனால் அங்கேயும் வந்து எல்லாருடனும் அமர்ந்து சாப்பிட பிரியபப்டாமல் தனியாக போய் அமர்பவர்களை ஒவ்வொருமுறையும் பார்க்கிறேன். அன்னம் அன்னத்தை பேதமாக பார்க்க கூடாது. சாப்பிடுவதே அன்னம் அன்னத்துடன் லயிப்பதுதான். இதை நாம் சொல்கிறோம்.நம் ஆசாரங்கள் எல்லாமே இதற்கு எதிரானவை. இந்து ஆசாரங்களுக்கு நேர் எதிரான கொள்கை ஒன்று உண்டு என்றால் மானுட சமத்துவம்தான்
தேவராஜ்
***
அன்புள்ள ஜெமோ
நலம்தானே. அன்னம் குறித்து அநேக கடிதங்கள் வந்திருக்கும் அதன் பாத்திரப் படைப்பை பற்றியும், அதிலுள்ள உண்மை தன்மை பற்றியும், கதை அமைப்பு பற்றியும் பலவாறு சிலாக்கியங்கள் வந்திருக்கும். ஆனால் என்னைத் தொட்ட உண்மை மற்றொன்று..
சித்தர் ஞான மரபில் யோகவிஷயங்களைப் பற்றிய குறிப்புகளில் ஞானவாசல் திறப்புக்கான மிகப்பெரும் கருவியாக குரல்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய் ஒருவரது ஆன்ம சைதன்யம் என்பதை குரல்களோடு தொடர்பு படுத்தி செய்யும் யோகமுறைகள் கூட பலவுண்டு. நாம் அப்படியே அதை நூல் பிடித்து பண்டைய வேத மந்திரங்கள், சப்தங்கள் என்று பயணிக்கத் துவங்கினால் அதன் பாதை நமக்கு பல்வேறு விஷயங்களை மற்றொரு கோணத்தில் உணர்த்தும். ஓதுதலை அடிப்படையாகக் கொண்ட பலசமய, ஞான பீடங்களின் அடிப்படை இதுவே ஆனால் காலப் போக்கில் இந்த உண்மை மெல்ல மெல்ல உருமாறிச் சென்று கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
நீங்கள் தெரிந்தே தான் அந்தப்புள்ளியை அந்த நோக்கில் தொட்டு சென்றிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். சரிதானே?
கிருத்திகா ஸ்ரீதர்
***
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
அருள் என்னை தனிப்பட்டமுறையில் தீண்டிய ஒரு கதை. ஏனென்றால் என் அனுபவமும் இதற்கு இணையானது. என் அம்மாவுக்கு எட்டு ஆண்டுகளாக கான்ஸர் இருந்தது. அம்மா பதற்றமாகிவிட்டாள். அப்பல்லோவுக்கு கொண்டுபோ என்று ஒருநாள் சொல்வாள். எதாவது சித்தமருத்துவரைப்பற்றி நெட்டில் பார்த்துவிட்டு அங்கே கொண்டுபோ என்று சொல்லுவாள். அழுகை புலம்பல் வசைபாடல். எங்கோ நல்ல மருந்து இருக்கிறது, அங்கே சென்றுவிட்டால் மீண்டுவிடலாம் என்று நம்பிக்கை. நாங்கள் பணம் கணக்குபார்க்கிறோம் என்று வசைபாடுவாள்.
ஆனால் ஒருநாள் தாடிக்கொம்பு கோயிலுக்குப் போனோம். எங்கோ ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வரும் வழியில். அங்கே கொஞ்சநெரம் அமர்ந்திருந்தாள். அதன்பிறகு இனி மருந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். நாங்கள் நிறைய கட்டாயப்படுத்தினோம். அசைந்தே கொடுக்கவில்லை. மூன்றுமாதத்தில் செத்துவிட்டாள். அவள் அங்கே எதைப்பார்த்தாள் என்ன புரிந்துகொண்டாள் என்பது இன்றைக்குக்கூட மர்மம்தான்
என். மகாராஜன்
***
அன்பு ஜெ,
நான் பார்க்க வேண்டிய அடுத்த இடமாக தீர்த்தாமலையும் மாறிப் போனது. கூகுளில் தேடி இடங்களைப் பார்த்திருந்தேன். பயண இடத்தையும் தாண்டி பயணப் பாதையின் இரம்மியத்தையும் சொல்லியிருந்தீர்கள். அற்புதமான சித்தரிப்பு.
நீண்ட தியானம்/மௌனம்/இயற்கை இரசிப்பு, அழுதாற்றி தொழுத பின்னான மனநிலை முற்றிலும் எனக்கும் வேறாகத் தான் இருந்திருக்கிறது. எதிர்மறை எண்ணங்கள் யாவற்றையும் தொலைத்து என்னில் முழுமைக்கும் நேர்மறையையே படர்ந்திருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். சாதனாவுக்கும் அது நிகழ்ந்திருக்கும். அவளுக்குக் கிடைத்த தரிசனம் மாட் போலவே என்னையும் சிலிர்க்க வைத்தது. கூடு சிறுகதையில் வருவதைப் போல சாதனாவுக்கான கூடாக இந்த குகையைப் பார்த்தேன். இது அவளுக்கான அழைப்பு. அவள் தன்னை தன் ஆழம் வரை சென்று பார்த்திருக்கக்கூடும். திறப்பை அடைந்திருக்கக்கூடும். அதற்கு பின்னான யாவற்றிலும் அழகைக் காணும் மனநிலை ஒரு குழந்தை மனநிலை. அது அவளுக்குக் கிடைத்தது.
“…
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.”
என்று பாரதி பாடுவதற்கான ஒரு நிலையை அடைந்தானே அதை அந்த சாமுண்டீஸ்வரியிடம் சாதனா பெற்றிருக்கக் கூடும். அவளுக்காக மகிழ்ந்தேன்
அன்புடன்
இரம்யா.
***
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1