கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஏழாவது சிறுகதை பல்வேறு வகையில் கொந்தளிப்பான மனநிலையை உருவாக்கியது. அந்தக்கதை கிறிஸ்தவத் தொன்மம் சார்ந்தது. அதில் ஏழாவது முத்திரை உடைக்கப்படும்போது அனைவரும் உயிர்த்தெழுகிறார்கள் என்று வருகிறது. கிறிஸ்தவ மரபில் உயிர்த்தெழுதல்- மறுபிறப்பு என்பது மிகமுக்கியமானது. பாவங்களில் இருந்து வெளிவந்து கிறிஸ்துவில் உயிர்த்தெழுதல்தான் அது. அதைத்தான் நீங்கள் கால்டுவெல் பற்றியகதையிலும் சொல்லியிருந்தீர்கள். லாசர் என்ற கதை.
இங்கே மோசஸ் உயிர்த்தெழுகிறான். ஆனால் அதற்கு ஏழு முத்திரைகளும் உடைக்கப்படவேண்டியிருக்கிறது. ஏழுமுறை புதைக்கப்பட்ட ஆத்மா அவனுடையது. ஏழாம் ஆழத்தில் அது உள்ளது. அதை உடைத்தால் மட்டுமே அவன் வெளிவர முடியும். அவனுடைய அடித்தள வாழ்க்கை, அவனுடைய சுய இழிவு எல்லாம் சேர்ந்து அவன் ஆத்மாவை அந்த இருட்டிலே வைத்திருக்கிறது. ஏழுமுறை சாவிலிருந்து எழுவது அந்த கிழவரா? லாசர் அவரா? அது மோசஸ் சொல்வதாகவும் இருக்கலாம். ஏழுமுறை சாவிலிருந்து எழுந்து ஏழாவதாக மீட்படைந்தது மோசசாகவும் இருக்கலாம்
மோசஸ் போன்ற ஒருவரிடமைருந்து அப்படி ஆத்மா மீட்படைந்து வெளியே வரும்போது அது எப்படி வெளிவரும்? அது ஒரு தேவபுருஷனாக அகிம்சையும் இனிமையுமாக வெளிவருமா? இல்லை கொடூரமான கொலை ஆயுதத்துடன் வெளிவருமா? அதைத்தான் கதை சொல்கிறது. ஏன் மோசஸ் அதைச்செய்தான். ஏழாவது சீல் என்ன என்பது அந்தக்கதையிலிருந்து வாசகன் சென்றடையவேண்டிய இடம்
ஜான் ராஜ்குமார்
***
அன்பு ஜெ,
திருவெளிப்பாடு அதிகாரம் என்பதே தன்னளவில் புனைவின் உச்சம்தான். நான் முதன்முதலில் அதை எட்டாவது படிக்கையில் படித்தேன். ஓர் அமானுஷ்ய உலக முடிவு எனப்பட்டது எனக்கு. படித்த இரண்டு நாட்கள் பயத்தில் உரைந்திருந்தேன் ஜெ. ஒரு வகையில் இந்த தீர்ப்பு நாள் எல்லா மதங்களிலும் சொல்லப்படுகிறது. அது மிகக் கொடூரமாக இருக்கிறது.
“ஆதியிலே வார்த்தை இருந்தது“ என்று ஆரம்பிக்கும் பைபில் எத்துனை ரம்மியமானது என்று நினைப்பவர்கள் திருவெளிப்பாட்டில் கதி கலங்கக்கூடும். வெண்முரசிலும் இதைக் கண்டேன். விஷ்ணுபுரத்திலும் கண்டேன். ஒரு வகையில் ஆதி எப்பொழுதுமே அமைதியாய் அழகாய் உள்ளது. அண்டத்தையும் பூமியையும் கடவுள் உருவாக்குவதை சொல்கையில் ஏழு என்ற எண் வருகிறது. இறுதிக்காலத்தைச் சொல்கையிலும் ஏழு வருகிறது. விஷ்ணுபுரத்திலும் நான் ஏழு எண்ணைக் கண்டேன். எண்களில் புனைவை ஏற்றி வைக்கும் கலை காலந்தோறும் மனிதர்கள் செய்து வருகின்றனர் தான். அது மனதின் ஆழத்தில் பதிந்து விடுவதால் தலைமுறை தோறும் கடத்தப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் 13 எண்ணை வெறுப்பதும் ஒருவகையில் அவ்வாறு தான்.
மோசஸின் வாழ்க்கையுங்கூட அப்படியான ஒரு ஆதிப்புள்ளியினின்று இரம்மியமாகத் தான் தோன்றியிருக்கக்கூடும். அதன் திருவெளிப்பாட்டின் உச்சிப் புள்ளியில் அவன் மனந்திரும்பியிருக்கக்கூடும். அந்த வெளிப்படுத்தின சுவிசேஷ வசனங்கள் அவன் மனதின் ஆழத்தினின்று உயிர்த்தெழுந்து அங்கு வந்து ஓர் அழிவை ஏற்படுத்தியிருக்கக்கூடும். பித்து நிலை என்பதை விடவும் மோசஸின் மிகத் தெளிந்த நிலையில் நடந்திருகாகுமோ என்ற கேள்வி எழுந்தது என்னுள். குழப்பம் மோசஸுக்கல்ல. அவன் வரையில் அங்கு நடந்திருப்பது திருவெளிப்பாட்டு நிகழ்வு. குழப்பம் உண்மையில் போலிசுக்கு தான். பகுத்தறிவு வாசகர்ளுக்குத் தான். மனப்பிறழ்வு என்ற ஒற்றை வார்த்தையில் அவனின் அத்துனை புனைவையும் தீக்கிறையாக்க நான் விரும்பவில்லை. ஏழாவதின் புனைவை அதன் அருகமர்ந்து இரசிக்கவே விரும்புகிறேன். ஆகவே மோசஸிடம் செல்கிறேன். அவனைக் கேட்கிறேன். அவன் புனைவை இரசிக்கிறேன்.
அன்புடன்
இரம்யா.
***
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கணக்கு ஒரு கவித்துவப் படிமம் வழியாக- அல்லது இரண்டு படிமங்கள் வழியாகச் சொல்லப்பட்ட ஒரு அழகான கதை. இரண்டு உருவகங்கள் அதிலே வருகின்றன. ஒன்று, அந்த பலாக்காய். அது ஒரு கணக்குவிளையாட்டு. அதனால் பயனே இல்லை. அது கலைத்திறன். அதில் துல்லியத்துக்காக முயல்கிறார்களே ஒழிய அது எந்த வகையிலும் வாழ்க்கைப்பயன்பாட்டுக்கு உரியது அல்ல .ஆனால் நாயர் வைத்திருக்கும் பணப்பலகை ஒரு சூழ்ச்சி. ஒரு பயன்பாட்டுப்பொருள். அந்தக்குடும்பத்துக்கு பணத்தை வாரி வழங்கியது. அது கடைசியில் அந்த பலாக்காயையும் விலைக்கு வாங்கிவிட்டது
ஏன் காளியன் புலையனால் அந்த கணக்குப்பிழையை கண்டுபிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் சரியான கணக்குக்காக மட்டுமே தவம் செய்பவர். அதுதான் கலையின் வழி. கணக்கை வேண்டுமென்றே அவரால் தப்பாக போடமுடியாது. அந்த தப்பை கண்டுபிடிக்கவும் முடியாது. அந்த பிழை அவர்களின் கண்களுக்குப் படாது. ஒரு மொத்த சிஸ்டமும் பிழை வழியாக உருவாகி நின்றிருக்கிறது. சரிகளை அது கோமாளிகளாக ஆக்கி தோப்புக்கரணம் போடவைக்கிறது. காளியன் புலையன் தோப்புக்கரணம் போடும் இடம் மனசை கொந்தளிக்கவைத்த காட்சி
பாபு குமார்
***
அன்புள்ள ஜெ
காளியன் பாட்டன் புலையனுக்கு அந்த மரப் பலா வழங்கப் பட்டது அந்த இனத்தின் வித்தையை திருடிக்கொண்டதின் பின் தந்த பரிசு. கிட்ட தட்ட பாலாவை பெற்று கிலாவை தந்ததற்கு நிகர்.
புலையன் ஞானத்தை வைத்து ஒன்றும் செய்யும் நோக்கம் இல்லாததால் அவன் மென் மேலும் அதை சேகரிக்கவில்லை. அவன் வாழ்வியல் வேறு. ஆண்டைக்கு அந்த லௌகீக நோக்கம் இருப்பதால் அதை சேகரிக்கிறான். பின்னர் மேம் படுத்துகிறான், களவு செய்கிறான். ஞானம் உபரி ஆகிறது பின் அது பொருள் உபரி ஆகிறது.
புலையன் வர்கம் இழப்பது சிறிது எனினும் ஆண்டை பெறுவது பெரிது. உபரி கூடி அதிகாரம் ஆகிறது. முன்னர் வழங்கிய பலாவை மேலும் லாபத்திற்கு பெற்றுக் கொள்கிறது. சமூக அடுக்குகளுக்கு இடையே ஆன தூரம் காலம் காலமாக கூடுகிறது.
ஆண்டையின் சூழ்ச்சியே பணப் பலகை மனக் கணக்கை விட மேம்பட்டது என நம்ப வைப்பதில் தான் உள்ளது.
எழுத்தில் உள்ளபாட பேதம் வாய்மொழி கதைகளில் இல்லை என்பதே எனக்கு அதிர்ச்சி அளித்தது. காந்தி நீதிமன்ற முறையை எதிர்த்ததும் அதிர்ச்சி அளித்தது.
கள்ளமின்மையை களவு வெல்கிறது, உள்ளுணர்வை தர்க்கம் வெல்கிறது, ஞானத்தை அறிவியல் வெல்கிறது, நியாயத்தை சட்டம் வெல்கிறது, கிழக்கை மேற்கு வெல்கிறது.
கணக்கு உங்கள் உச்ச சில கதைகளில் ஒன்று.
கிருஷ்ணன் ஈரோடு
***