கணக்கு,சுக்ரர்- கடிதங்கள்

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

சுக்ரர் கதை வினோதமான ஒரு நபரை அறிமுகம் செய்கிறது. ஏறத்தாழ இதேபோன்ற ஒருவர் எங்கள் பழைய அலுவலகத்தில் இருந்தார். நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் அவர்களின் பிற ஏஜென்ஸிகள் எல்லாவற்றையும் நினைவிலிருந்தே சொல்வார். ஒரு மனிதர் ஒரு விஷயத்திலேயே முழு ஈடுபாட்டுடன் வாழ்ந்துவிட்டால் இப்படி ஆகிவிடுகிறார். இந்த திறமை இயல்பான ஒன்று அல்ல. ஏனென்றால் மனிதர்களால் அப்படி ஒன்றிலே மட்டும் குவிந்து வாழ்ந்துவிட முடியாது. அது மனித மனத்தின் இயல்பு அல்ல.

இந்தக் கதை போன்றவைதான் உண்மையில் சிறுகதை என்னும் வடிவத்தின் சாத்தியங்கள் என்னென்ன என்பதை காட்டுகின்றன. இந்தக் கருவை சிறுகதை இல்லாமல் வேறு எவ்வகையிலும் சொல்லமுடியாது. விரிவாக நுணுக்கமாகச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் ஒரே ஒருவரின் ஒரே ஒரு விஷயம் பற்றியது இந்தக்கதை. அவருடைய தோற்றம், அவர் ஒரு மந்திரம்போல அந்த மானசீக மேப்பை விரிப்பது, அதில் கைவைத்து கைவைத்துச் சென்று ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டுவது எல்லாமே கண்முன் காட்சிபோல தெரிகிறது. ஒருவகையான பிரமிப்பு உருவாகிறது.

ஆனால் இப்படி ஒரு காட்சியைச் சொல்லிவிட்டாலோ, ஒரு மனிதரின் ஒரு பிரச்சினையைச் சொல்லிவிட்டாலோ அது கதையின் உச்சமாக ஆகிவிடுவதில்லை. இதுவும் பெருமாள்சேவைதானே என்ற வரிகூட கொஞ்சம் கம்மியானது. இதுவும் பெருமாள்தானே என்றுதான் அவர் சொல்கிறார். அத்தனை அசுரர்ர்கலும் விஷ்ணுவிலிருந்துதான் தோன்றியிருக்கிறார்கள். விஷ்ணுவிலிருந்து பிரம்மா பிரம்மாவிலிருந்து ஏதாவது பிரஜாபதி அவரிடமிருந்து அசுரர்குலம் என்றுதான் புராணம் சொல்லும். அந்த இடத்தில்தான் கதை அதன் மெய்யான ஆழத்தை அடைகிறது

சுவாமி

***

வணக்கம் ஜெ.

சுக்ரர் கதையை வாசித்தேன். பெருமாளில்லைன்னு யாரு சொன்னது என அரிகிருஷ்ணன் கேட்கும் இடத்தில் இருமை களைந்து ஒன்றாக ஆகும் இறையுணர்வு வெளிபடுகிறது. கிரிமினல்களின் வரலாற்றை நினைவு கூர்வதன் மூலம் தன்னை அவர்களாகப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார். அவர்களாக ஆகிறார்…அவர்களும் சேர்ந்துதான் பெருமாள்…

அரவின் குமார்

***

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கணக்கு ஒரு parable வடிவத்தில் அமைந்திருக்கும் கூர்மையான கதை சுருக்கமானது. நேரடியானது. ஆனால் parable கதைகள் நாம் தொட்டுத்தொட்டு விரிக்கமுடியும். இந்தக்கதை வர்க்கங்கள் உருவான விதத்தையே சொல்லிவிடுகிறது. ஒரு சின்ன டெக்னிக். கண்ணுக்கே தெரியாத அளவுக்குச்ச் சின்னது. அதுதான் பெரும் செல்வத்தையும் அதிகாரத்தையும் உருவாக்குகிறது. அது சிஸ்டத்தில் உள்ள ஒரு ஓட்டை. ஒரு பிழை. அதுதான் இங்கே பணமாக ஆகிறது. அதை வேண்டுமென்றால் உபரி என்று சொல்லலாம்.

அந்த உழைப்பாளிக்கு உழைப்பு தெரியும். அதில் அவர் உருவாக்குவது பெர்ப்க்‌ஷனை. அவருடைய பயனம் அதுதான். அந்த உழைப்பின்மேலும் பெர்பெக்‌ஷன் மேலும் தொற்றுண்ணி மாதிரி உட்கார்ந்து ரத்தம் உறிஞ்சி இந்த சுரண்டல் அமைப்பு உருவாகியிருக்கிறது. எல்லாவகையிலும் ஒரு கலாரீதியான முற்போக்குக் கதை. ஒரு முற்போக்கு மேடையி பெயரைச் சொல்லாமல் இந்தக்கதையை சொன்னால் மெய்சிலிருபபர்கள் என்று நினைக்கிறேன்.

சாரங்கன்

***

அன்பின் ஜெ,

கணக்கு வாசித்தேன்.

காளியன் கதாப்பாத்திரம் உங்களின் முந்தைய கதைகளில் வரும் ஆசாரிகளை நினைவிலிருத்தியது.

அம்மையப்பம்‘ கிறுக்கனாசாரி, ‘ஏழுநிலைப்பந்தல்‘ சங்கரன் மூத்தாசாரி, ‘தேனீ‘ சம்முகமணி ஆசாரி, கட்டக்கடைசியாக ‘புனைவுக்களியாட்டு’ கதைத்தொடரை நிறைவு செய்த ‘ஆகாயம்‘ கதையில் வரும் கோரன்/குமாரன் -(இந்த வரிசையில் விடுபட்ட ஒரு பெயரை இறுதியில் எழுதுகிறேன்)இவர்கள் அனைவருக்கும் பொதுவான சில அம்சங்களை கிரகிக்க முடிகிறது.

லௌகீகம் தீண்டாமல் தங்கள் கலையைப் பொத்திப் பாதுகாத்தவர்கள் – இதை எச்சரிக்கையாகவோ, தன்னுணர்வுடனோ இல்லாமல் ஸ்வதரமமாகவும் ஒரு வித அப்பாவித்தனத்துடனும் பேணுபவர்கள் இதனாலேயே பிறரை இயல்பிலேயே சீண்டுபவர்கள் (இது அவர்களின் குற்றமுமல்ல)

தங்கள் வித்தையைத் தவிர எதிலும் ஆர்வமில்லாதவர்கள் (சராசரித்தனம் மலிந்த இந்த உலகத்தில் மற்ற பொழுதுபோக்குகள் அவர்களை உண்மையில் குழப்பத்திலாழ்த்துகின்றன; அவர்களைப் பொறுத்தவரை கலையின் உச்சமே கொண்டாடப்படவேண்டும். அல்லாமால் வெறுமனே சராசரித்தனத்தைத் திருப்திப்படுத்தும் எந்த விஷயமும் வேறு ஏதோவோக இருக்கலாமே தவிர கலையல்ல. ஆனால் இதை ஓரளவு புரிந்துகொண்டிருக்கும் ‘மக்கள்திரள்’ தாங்களும் கலாரசிகர்கள்தான் என்று காட்டிக்கொள்வதற்காகவே சராசரிகளை ரசிக்கும் ஒரு பாவனையை மேற்கொள்கிறது. ஆனால் ஆசாரி போன்ற அசல் கலைஞர்களுக்கு அவர்களது கலை அளிக்கும் தன்முனைப்பும் ஆர்வமும் பிற போலி பொழுதுபோக்குகள் அனைத்தையும் எளிதில் புறந்தள்ளிவிட்டு தங்களது வித்தையில் ஒன்றி விடுகின்றனர். அப்படி ஒன்றை மேற்கொள்ள பொறுமையில்லாத திரள் மக்கள் ‘ரசிகன்’ பாவனையை மேற்கொள்கின்றனர்)

காளியன் X அச்சுதன் அண்ணா வின் வேறுபாட்டை யோசித்துக் கொண்டேயிருந்தேன்அச்சுதன் அண்ணனுக்கு வழிவழியாகவே அந்த குறுக்கு/குயுக்தி புத்தி (1000 நாணயங்களுக்கு ஒரு நாணயம் வீதம் லவட்டும்) உறைந்திருக்கிறது. அதனாலேயே அவர்கள் லௌகீகமாக மேலே வர முடிந்திருக்கிறது.
மாறாக காளியன் தன் குடும்பத்தின் வழியில் தனது கலையைக் கற்றுக்கொள்கிறார். அதிலும் அவர் தந்தையைப் பற்றி சொல்லும் விதம் – { வயலிலே எத்தனை நாத்து நிக்குதுன்னும், விளைஞ்சு கதிரு சாய்ஞ்சு நிக்குத வயலிலே எவ்ளவு  நெல்லு இருக்குன்னும்கூட சொல்லும் திறன்,
நான் கவனித்தவரையில் இந்த ரீதியிலான கதைகளில் நுட்பங்கள்/நுணுக்கங்களை விவரிக்கும் இடங்களில் அந்த கதை அபாரமாக மேலேழும்புகிறது. (அல்லது என்னைப் போன்ற எளிய வாசகனின் மனதில் இவைதான் சுலபத்தின் நினைவில் நிற்குமா?!)

தேனீ கதையில் அந்த ஆசாரி நகை செய்துகொண்டே இசை கேட்கும் விதம் (‘கேட்கும்’ கூட அல்ல, நினைக்கும் விதம்) }இதன் வழியாகவே நம்முள் விஸ்வரூபம் எடுக்கும் அக்கலைஞன்.
கடைசியில் ஒரு சின்ன ஏமாற்று வேலை வழியாக கலைஞனை தோற்கடிக்கும் விதம் – அதுவே கூட அப்போதைய வெற்றிதானே, கடைசியில் வெல்வது (புலி)கலைஞன் தானே!

இப்போது அந்த விடுபட்ட பெயருக்கு வருகிறேன்.அது ‘ஜெயமோகன்’ தான்! ஒரு முக்கியமான வித்தியாசம் – கடவுளின் அருளாலோ நல்லூழ் பயனாலோ ஒரு அண்ணாவும், அருண்மொழி போன்ற ஒரு துணையும் உங்களை வெவ்வேறு கட்டங்களில் பேணியிருக்கின்றனர். (‘மாஸ்டர்’ கட்டுரைகளில் தங்களின் லௌகீக அசமஞ்சத்தனம் கிண்டலடிக்கப்படும் விதத்தை நீங்கள் விவரித்திருந்ததை வினைத்துக்கொள்கிறேன் – “100லேர்ந்து 25ஐ கழிச்சா எவ்வளவு?”).

ஆம், அந்த ஆசாரிக்கு (/ஆசாரிகளுக்கு) அருளப்படாத ‘லௌகீகப் பேணுதல்’ உங்கள் அண்ணாவாலும் மனைவியாலும் உங்களுக்குக் கிடைத்திருப்பதே உங்களின் மேதமை முழுமூச்சாக உங்கள் கலையில் வெளிப்படுகிறது என்றே நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்
வெங்கட்ரமணன்

***

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைஅன்னம்,செய்தி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]