கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1
அன்புள்ள ஜெ
தங்கப்புத்தகம் ஒரு கனவுத்தன்மையை அடைவது பல காரணங்கள். ஆனால் உண்மையில் கனவின் இயல்புதான் அந்த தங்கப்புத்தகம் வாசிப்பது. நாம் கூர்ந்து பார்க்கப்பார்க்க மங்கலடையும். ஒன்று தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.
தங்கப்புத்தகத்தை ஒரு வாழ்க்கையனுபவமாக அறிய கொஞ்சம் வயதுபோகவேண்டும். நாம் வாழ்க்கைமுழுக்க இதேதான் இதெல்லாம்தான் என்று நம்பியவை எல்லாம் நாமே உருவாக்கிக்கொண்ட மாயைதானா என்று நாமே உணரக்கூடிய ஒரு காலம் வரவேண்டும். நான் நம்பிய அரசியல், நம்பிய மனிதர்கள் எல்லாரும் நானே கற்பனைசெய்துகொண்டவை மட்டும்தான் என்று இப்போது தெரிகிறது
தங்கம் என்பதே ஒரு மாயம்தான். அந்த நிறமே மனிதனை ஈர்த்து கட்டிப்போடுவது. மீனில் தூண்டிலுடன் பொன்னிறமான சரிகையை வைப்பார்களே அதுதான்.
எம்.விஜயகுமார்
***
அன்பு ஜெ,
ஆ! நான் அதைக் கண்டடைந்தேன். அதை, அந்த வார்த்தையை, அதன் முழுமையை இங்கு உணர்ந்தேன் ஜெ. ஒரு வாக்கியம், ஆகச் சிறந்த வாக்கியம், என் வாழ்வு முழுமைக்குமான வாக்கியம், அதன் குறுநாவல் எழுச்சியைக் கண்டு பிரமித்தேன்.
“ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக!” என்பதை. அதனைச் சுற்றி நான் எழுப்பிக் கொண்ட அத்தனை கேள்விகளுக்கும் இங்கே பதில் தேடினேன். கண்டடைந்தேன். நிறைவின்மை என்ற காரணத்திற்காக பாட் சோர்ந்தே போனான். அதே நிறைவின்மை என்ற காரணத்திற்காகவே முக்தா நிறைவின்மையின் உச்சிப் புள்ளியினின்று நிறைவைக் கண்டதாகப் புரிந்து கொண்டேன். இன்றிருக்கும் முக்தா அதை முற்றும் உணர்ந்தவர் என்றே பட்டது எனக்கு.
அது மட்டுமா? இல்லை இன்னும் பலவும். அவையாவற்றையும் உங்களுக்கு என் எழுத்தின் மூலம் சொல்லிவிட முடியுமா என்பதே என் ஐயம்.
அய்யோ அந்த சினிக்குகளை பாட் மூலம் கண்டு எள்ளி நகையாடினேன். அவனின் வீழ்ச்சிக்காக ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. இருந்தும் அது நல்லதெனப்பட்டது. அவனுக்கும் கூட. இது போன்று புதைபட வேண்டியவர்கள் இங்கு உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதைபட வேண்டும். அவர்களின் எண்ணங்களும் சேர்ந்து…
தங்கப்புத்தகத்தை மூச்சிரைக்க இரைக்க முடித்து, முட்டி உடைந்து போனேன்.
இந்த தங்கப் புத்தகத்தை வாழ்வாகக் கொண்டு மீண்டும் ஓட்டிப் பார்த்தால் வாழ்விற்கான கரு கிடைக்கிறது. எந்த ஒன்றை யோசித்துப் படித்தாலும் அதற்கான கரு கிடைப்பதாகப் பட்டது.
இந்தப் பிரபஞ்சமே முடிவில்லாத ஒரு மாயப் பெருவெளி தான். இந்தப் பெருவெளியை அறிவியல் என்ற ஒற்றை ஆயுதத்தால் கட்டமைக்க முடியுமா? ஆத்திகத்தால் அல்லது நாத்திகத்தால் முடியுமா. எல்லாம் அர்த்தமற்றததாதலால் வெந்ததைத் தின்று விட்டு விதி வந்தால் சாகத்தான் முடியுமா? அது நிறைவாகுமா? நிறைவின்மை என்ற கருந்துகளை கண்டடைய அதில் அமிழ எத்துனை தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது என்பதை முக்தா விளக்கியிருக்கிறார். அல்லது அவர் வழி நீங்கள் எனக்குச் சொல்லியிருக்கிறீர்கள்.
பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் தத்துவார்த்தவாதிகளாகவே இருப்பதைப் பார்க்கிறேன். அவர்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் கனவுகளில் நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். சிலர் ஆத்திகர்களாவும் நாத்திகர்களாகவும் இருக்கின்றனர். யாவரும் சென்றும் சேரும் புள்ளி ஒன்றுதான். அதனை மீட்டி மீட்டி கண்டடைவதென்பது என்பது ஒன்றைத் தான்.
**
“நான்“ என்ற ஒன்றை பல முறை தள்ளி வைத்துவிட்டு சிந்தித்து பயந்து நடுங்கியிருக்கிறேன் ஜெ. சாவதற்கு சற்றே முன்னதான மனநிலையை அதன் விளிம்பு வரை நினைத்துப் பார்த்து சிலிர்த்திருக்கிறேன். முக்தா வின் அந்த ‘நான் “- ஐ துரக்கும் பயணத்தை இரசித்திருந்தேன் ஜெ.
மதபோதனை மூலங்கள் யாவும் ஒன்றென நினைத்திருக்கிறேன். ஆனால் அதையே ஓர் மாயாவாத புனைவின் மூலம் நீங்கள் சொல்லியது எனக்கு சிலிர்ப்பை மூட்டியது ஜெ. மூலம் ஒன்றே. ஆனால் படிக்கும் பல்லாயிரக்கணக்கான நபர்களும் அதே அளவு பிரதியைப் பெறுகிறார்கள். மதங்களின் மூலங்கள் இத்தகைய நிலையை அடைவது துர்அதிர்ஷ்டம் என்பதா? அதிர்ஷ்டம் என்பதா? குழம்பித் தவித்தேன்.
“பாட், ஒருவேளை எல்லா மதங்களும் இப்படித்தானோ?; எல்லா மூலநூல்களும் இப்படித்தானா? ; கார்ல் மார்க்ஸின் மூலநூலும்கூட?” என்று முக்தா கூறும் போது திறப்பின் உச்சியை அடைந்தேன் எனலாம் ஜெ. பொத்தாம் பொதுவாக அனைத்து மதங்களும், தத்துவங்களின் மூலமும் ஒன்றே என்று கூறாமல் பாட் -ன் மூலமும் முக்தாவின் மூலமும் அதை தருக்கப்படுத்தி பாட் -ஐ வீழ்த்தி முக்தாவை நிறுவி… பல படிப்பினைகளை கற்றுத் தந்திருக்கிறீர்கள் ஜெ. நன்றி
இந்த மூலம் ஒன்றே என்பதின் மூலம் பல திறப்புகளை நான் பெற்றேன் ஜெ. உயிரின் பரிணாம வளர்ச்சியின் மூலம் என்பது ஒன்றே. ஒவ்வோர் உயிரும் மூலத்திலிருந்து அது வேண்டுதலை எடுத்து பல்லாயிரமாகியிருப்பதாகப் பட்டது எனக்கு. யாவரும் எதிலும் மூலத்தை நோக்காமல் கிளைகளின் நுனியைக் கொண்டு சச்சரவுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். தனிமனிதனுக்கும் மூலம் என்ற ஒன்றுள்ளதாகப் பார்க்கிறேன். அவனின் மூலத்தை விட்டு விட்டு அவனினின்று தாங்கள் வரையறுத்துக் கொண்ட பிம்பங்களைப் பற்றி மட்டுமே பேசி பேசி பூசல் செய்கிறார்கள். இன்னும் யாவற்றுடனும் தொடர்பு படுத்திப் படுத்தி நாட்களை தங்கப்புத்தகத்தில் கழித்தேன். நன்றி!!!
என்றும் அன்புடன்
இரம்யா.
***
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
மலையரசி, லட்சுமியும் பார்வதியும் இரு கதைகளுக்கும் தமிழ்சூழலில் இப்படியே மாற்று வடிவங்கள் உள்ளன. மராட்டிய மகாராணி மங்கம்மா பார்வதி என்றால் அவருக்கு பின்னால் வந்த ராணி லட்சுமிபாய் லட்சுமி. மங்கம்மா பெண்புலி போல இருந்து மதுரையை காத்தார். லட்சுமியால் அது முடியவில்லை. சந்தா சாகிப் செய்த சத்தியத்தை நம்பினார். ஒட்டுமொத்தமாக மதுரையே அழிந்தது.
என்.நாராயணசாமி
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு
வணக்கம். நலம்தானே?
மலையரசி கதை படித்தேன். உண்மையிலேயே பார்வதிபாய் மலையரசிதான். ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும். பாடுற மாட்டைப் பாடிக்கறக்கணும் என்ற தத்துவம் அறிந்தவர்.
கதை பெரும்பாலும் உரையாடல் வழியே வாசிக்கக் களைப்பின்றி தெளிந்த ஆற்று நீரோட்டம் போல் செல்கிறது. பார்வதி பாயின் சொற்கள் ஒவ்வொன்றும் எண்ணித் துணிந்து முன்வைக்கப்படுகின்றன.
பார்வதி பாயின் அரசு சூழ்தல் (இச்சொல் வெண்முரசின் உபயம்) கவனமாகக் காயை நகர்த்துகிறது. ராமவர்மாவின் இறப்பு இயற்கையானதா என வாசகர் ஐயப்படும் அளவிற்கு பார்வதிபாயின் நாட்டுப் பற்றும், மக்களை நேசிக்கும் மனப்பான்மையும் இருக்கிறது.
வேங்கை நோய்வாய்ப்பட்ட குட்டியை அகற்றுவது கூட குறியீடாகி ராமவர்மா அகற்றப்படுவார் என்னும் எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது.
ஒவ்வொரு கீர்த்தனைக்கும் உரிய ராகங்கள், அவற்றின் குணங்கள் ஆகியவை படிக்கும்போது சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வரும் சி.எஸ் ஜெயராமன் பாடல் நினைவுக்கு வந்தது.
ராமவர்மாவை நினைத்தால் ஒரு பக்கம் பரிதாபமும், மற்றொரு பக்கம் ஓர் அரசன் இப்படி இருக்கலாமா என்னும் சினமும் ஆத்திரமும் வரும் அளவுக்கு அவருக்குச் சொற்களை அமைத்துள்ளீர்கள்.
அக்காலத் திருவிதாங்கூர் வரலாற்றுடன் புனைவைக் கலந்து அற்புதமான கதை அளித்துள்ளீர்கள்.
இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்த மேற்கோள்கள்:
“திசை திரும்பாத அம்புதான் ஆற்றல் கொண்டது; அதுவே இலக்கடையும்”
முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்.”
“அரசனுக்கு சங்கீதம் வேண்டும்; அது குளியல் போல”
நெய்க்கருப்பன் கல் என்பது இதுவரை யாரும் அறியத அரிய செய்தி
வளவ. துரையன்
***
கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1