மதுரையில் பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியின் அவைக்கு வடபுலத்தில் இருந்து வந்த பாணன் கன்னங்கரிய உடலும், வெண்ணிறமான பற்களும் வெள்ளை விழிகளும் கொண்டிருந்தான். தன் பெயர் சீர்ஷன் என்று அவன் சொன்னான். அவனை அவைக்காவலர் அறிவித்தபோது தன் புலவரவையில் அமர்ந்திருந்த பாண்டியன் “அழைத்து வருக!” என்று ஆணையிட்டான்.
அவன் அவைக்கு ஒவ்வொருநாளும் வடபுலத்திலிருந்து பாணரும் புலவரும் வந்துகொண்டிருந்தனர். ஆகவே மெல்லிய ஆவலே அவனிடமிருந்தது. ஆனால் வந்த பாணனின் தோற்றம் அவனை வியப்படையச் செய்தது. “வருக, பாணரே” என்று அவன் வரவேற்றான். அவைப்பீடம் அளித்து “உங்கள் வருகையால் முத்துக்களின் நிலம் மகிழ்கிறது” என்று முகமன் உரைத்தான். “அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான என் பெயர் சீர்ஷன். நான் தொல்குடிப் பாணன். வடக்கே இமைக்கணக்காடு என் குருநிலை” என்றான்.
அவனுடைய தோற்றத்தை பாண்டியன் நோக்குவதை உணர்ந்து “அரசே, என் முன்னோர் தென்புலத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் என்று என் அன்னைவழித் தொல்கதைகளில் இருந்து அறிந்திருக்கிறேன். ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் என்பவர் தொல்நாளில் தெற்கே கடல்கொண்ட நிலத்திலிருந்து மாமதுரை நகரினூடாக வடபுலம் சென்றார். அவருடைய குருதிவழியினன் நான்” என்றான்.
அவையிலிருந்த புலவர்கள் திகைத்தனர். அமைச்சர் குன்றூர் பெருஞ்சாத்தனார் எழுந்து “பாணரே, அப்பெயரை மீண்டும் ஒருமுறை கூறுக!” என்றார். அவன் “ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் என் மூதாதை” என்றான். “இங்கு ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் கூத்தன் கொடிவழியினராகிய கண்ணுதலார் அமர்ந்திருக்கிறார்” என்று பெருஞ்சாத்தனார் சொன்னார். அனைத்து விழிகளும் அங்கே திரும்பின.
ஏழ்பனைநாட்டு மருதூர் குன்றன் மகன் கண்ணுதலார் எழுந்து நின்று “அவர் உள்ளே வரும்போதே நான் நோக்கி சொல்லிழந்துவிட்டேன், அமைச்சரே. அவர் என்னுடைய ஆடிப்பாவை எனத் தோன்றுகிறார்” என்றார். அதை அனைவரும் உணர்ந்துவிட்டிருந்தனர். மூச்சொலிகளும் வியப்பொலிகளும் எழுந்தன. பெருஞ்சாத்தனார் “ஐயமே தேவையில்லை. இதுவே சான்று” என்றார். அவையினர் “ஆம்! ஆம்!” என்றனர்.
“அறிக பாணரே, என் மூதாதையான தென்குன்றூர் பெருஞ்சாத்தனார் முன்பு ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன் என்பவனிடம் அமைச்சராக இருந்தார். அவருடைய குறிப்புகளில் அங்கே உமது மூதாதையான ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் பாடிச்சென்ற இளிவரல்செய்யுள் உருவான கதை உள்ளது. அச்செய்யுள் இன்றும் சொல்சொல்லென அழியாது திகழ்கிறது. ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன் இன்று அவ்விளிவரலால்தான் நினைக்கப்படுகிறார்” என்றார் பெருஞ்சாத்தனார்.
அவையிலிருந்து சிரிப்பொலியும் வியப்பொலியும் எழுந்தது. பெருஞ்சாத்தனார் “அந்நிலம் இன்றில்லை. அந்த மக்கள் குடிபெயர்ந்து அடையாளமிழந்து மறைந்துவிட்டனர். பாடியோனும் இன்றி பாடப்பட்டோனும் இன்றி பாடுநிலமும் இன்றி அச்செய்யுள் மட்டும் நின்றுள்ளது. விதையில் மரமென அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது” என்றார். பாண்டியன் சிரித்து “பாடுக அச்செய்யுளை!” என்றான். ஒரு அவைப்பாணன் எழுந்து தன் கிணையை மீட்டி ஆழ்ந்த குரலில் பாடினான்.
கொற்றக் குடையோய் கொற்றக் குடையோய்
புதுமழை கலித்த வெண்குடை அன்ன
பொல்லா பெருநிழல் கொற்றக்குடையோய்!
இன்சோறு மணப்ப சூழ்ந்தெழு ஞமலியின்
பெருநிரை அன்ன பாணர் குழுமி
தினைப்புனம் புக்க புன்செவிக் காரான்
ஓட்டுதல் எனவே பெருஞ்சொல் ஒலிக்கும்
மாண்புகழ் சிறப்பின் பழையன் முடிமேல்
கவிகை செய்யா கொற்றக்குடையோய்
வாழிய அம்ம நின்திறம் இனிதே.
சீர்ஷன் சிரித்து “இதே பாடல் சில மாற்றங்களுடன் எங்கள் மொழியிலும் உள்ளது, என் தொல்மூதாதையே யாத்தது என்றான். “பாடுக!” என்றான் பாண்டியன். சீர்ஷன் தன் யாழை விரல்தொட்டு மீட்டி பாடினான்.
“வெண்ணிறமான காளான் கொற்றக்குடையாகிறது
அதன்கீழே உணவின் மணம் எழுகிறது.
நாய்கள்போல வாயூறி சூழ்கின்றனர் தவளைச்சூதர்
வயலில் புகுந்த எருமையை விரட்டுவதுபோல
கூச்சலிட்டு பாடுகின்றனர்.
கூழாங்கல்மேல் அமர்ந்திருக்கும் தவளை அரசன்
நான் நான் நான் என்று கொக்கரிக்கிறான்.
அப்பால் சுருண்டிருக்கும் பாம்புக்கு கேட்கும்படியாக.”
அவை உரக்கச் சிரித்து ஆர்ப்பரித்தது. பாண்டியன் முகம் மலர்ந்து “கூறுக சூதரே, நீங்கள் விழைவது என்ன?” என்றான்.
“தென்நிலத்தின் தலைவனே, நான் மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா எனும் நிரையில் நீடுவாழியாக இருந்துவரும் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசனின் மாணவராகிய உக்ரசிரவஸ் என்னும் சூததேவரின் மாணவர்நிரையில் வந்தவன். சூததேவரான உக்ரவாக் என்னை தன் மாணவனாக்கி சொல்லளித்தார். வழிவழியாக வந்த மரபின்படி ஒரு பெருநிகழ்வை நிகழ்த்தி அதன் சான்றென அமையும்பொருட்டு இங்கே தென்னிலம் தேடி வந்தேன்” என்றான் சீர்ஷன்.
அவை உளக்கூர் கொண்டது. “இங்கே கடல்கொண்ட தென்மதுரைக்கும் அப்பால் அஷ்டகுலாசலங்கள் என நூல்கள் கூறும் எட்டு மாமலைகளில் ஒன்று உள்ளது. மந்தரம், கயிலாயம், விந்தியம், நிடதம், நீலம், ஏமகூடம், கந்தமாதனம், மாகேந்திரம் என்னும் அவை எட்டில் பரதகண்டத்தின் தென்முனையில் அமைந்திருந்தது மாகேந்திர மலை. அங்கு அன்னை சிவை எவ்விழியும் தொடா இளங்குமரியென ஒற்றைக் காலில் நின்று தன் இறைவனுக்காக தவம் செய்தாள். பிறிதொரு காலை ஊன்றினால் பிறிதொன்று எண்ணியதாக ஆகும் என அவள் கருதினாள். ஒன்றன்றி பிறிது உளத்தெழாது அங்கே மலைமேல் எழுந்த இளங்குருத்தென நின்றாள்.
அவள் தவம் கண்டு அங்கே விண்ணில் எழுந்தார் முதலிறைவன். அவள் காதலைக் கண்டு புன்னகைத்து ஆம் என்றார். அவ்வொலியில் இருந்து எழுந்தது இப்புவியிலேயே இனிய மொழி. அதை தன் செவியின் மீன்வடிவக் குழையென அணிந்து எக்கணமும் ஒழியாமல் தன்னருகே அது ஒலிக்கச் செய்தார் விழிநுதலோன். ஓமென்னும் முதற்சொல்லில் எழுந்து முளைத்து பெருகியது அம்மொழி. தம் அமிழ்து என விழிநுதலோன் உணர்ந்த அந்த மொழி தமிழ் என்று அழைக்கப்பட்டது. என்றுமுள தொல்மொழி எழில் குறையாமல் வாழ்க!
முக்கண் முதல்வன் அகத்திய முனிவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் வெள்விடைமேல் அமர்ந்து காட்சியளித்து ஐந்திறம் என்னும் பெருநூலை நுண்சொல்வடிவில் அருளிய இடம் அது. அகத்தியரும் மாணவர்களும் தமிழாய்ந்து இலக்கணம் அமைத்த மலைமுடி. அங்கே பரசுராமர் ஷத்ரியர்களை அழித்த பழி தீர வந்தமர்ந்து ஊழ்கம் செய்து தூய்மை அடைந்தார் என்கின்றன வடநூல்கள். அது கடற்கோளால் நீருள் மறைந்தது. அம்மலையால் தடுக்கப்பட்ட பெருநீர் மேலும் மேலும் எல்லை கடந்து வந்து ஏழ்பனைநாட்டையும் ஏழ்தெங்குநாட்டையும் மூழ்கடித்து இறுதியாக மதுரையை உண்டது.
அரசே, சூதர்கதைகளின்படி மாபெரும் குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் மகாவியாசர் குருக்ஷேத்ரக் களத்துக்கு சென்றார். காலையொளியில் அச்செம்மண்வெளி குருதியால் கருமைகொண்டு கிடப்பதை கண்டார். அங்கே நடந்துகொண்டிருந்தது மானுடத்தின் மீதான மாபெரும் வெற்றியின் உண்டாட்டு என உணர்ந்தார். அதன்பின் வியாசர் குருக்ஷேத்ரத்தை விட்டு விலகிச்செல்வதையே தன் இலக்காகக் கொண்டு பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். பனிமுடிகள் சூழ்ந்த இமையத்தின் சரிவுகளிலும் மழையும் வெயிலும் பொழிந்துகிடந்த தென்னக நிலவெளிகளிலும் வாழ்ந்தார். கற்கக்கூடிய நூல்களையெல்லாம் கற்றார். மறக்கமுடிந்தவற்றையெல்லாம் மறந்தார்.
அறுதியாக அவர் வந்து சேர்ந்த இடம் மூன்று கடல்களின் அலைகளும் இணைந்து நுரைத்த குமரிமுனை. இங்கே அவர் வந்தபோது கடல் பின்வாங்கி பாறைகளை மேலே நீட்டி அவருக்கு வழியமைத்தது. கடலுக்குள் இருந்து மாகேந்திர மலையின் உச்சி மேலெழுந்து வந்தது. அங்கே நெடுந்தவக் குமரியன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் அலைகளை நோக்கி அமர்ந்திருந்தபோது அவர் தன்னுள் மோதும் மூன்று கடல்களை கண்டுகொண்டார். நூறுநூறாயிரம் சொற்களுக்கு அப்பாலும் அவருடலில் எஞ்சியிருந்த மீன்மணம் கண்டு கீழே நீல நீரலைகளில் மீன்கணங்கள் விழித்த கண்களுடன் வந்து நின்று அலைமோதின. கண்களை மூடி அவர் யோகத்திலமர்ந்தபோது மீன்கள் ஒவ்வொன்றாக விலக, அவருக்குள்ளிருந்து மறைந்த அத்தனை சொற்களும் சென்ற வெளியில் நிறைந்த ‘மா’ என்ற முதற்சொல்லை கண்டடைந்தார்.
அவ்வண்ணம் அவர் சொல்லை அடைந்த நாள் ஆடிமாதம் எழுநிலவு முழுமையுறும் நாள். அதை குருபூர்ணிமை என்றும் வியாசபூர்ணிமை என்றும் எங்கள் குருமரபு கொண்டாடுகிறது. அன்று பரதகண்டத்தின் எட்டு எல்லைகளிலும், அத்தனை குருநிலைகளிலும் எங்கள் ஆசிரியனின் அழியாச் சொல் ஓதப்படுகிறது. அதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் குருபூர்ணிமை நிறைநாள். அன்று தொல்மலைகள் எட்டிலும் சென்று அழியாப் பெருங்காவியத்தை முற்றோதுவது எங்கள் வழக்கம்.
“அதன்படி நான் தென்திசைக்கு வந்துள்ளேன். மாகேந்திரமலையின் உச்சிக்குச் சென்று அங்கே அதை ஓத எண்ணியுள்ளேன்” என்று சீர்ஷன் சொன்னான். பெருஞ்சாத்தனார் “அந்நிலம் கடல்கொண்டது என்றும் அந்த மலை நீருள் உள்ளது என்றும் நீர்தான் சொன்னீர்” என்றார். “ஆம், ஆனால் இன்னும் நான்கு நாளில் குருபூர்ணிமையில் என் ஆசிரியனின் சொல் கேட்க அந்த மலை கடலுக்குள் இருந்து எழும்” என்றான் சீர்ஷன். “நீர் ஏதோ கதைகளை நம்பி வந்துள்ளீர்” என்றார் பெருஞ்சாத்தன்.
“என் ஆசிரியர்கள் வந்துள்ளனர். நான் அதன்பொருட்டு பணிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இங்கிருந்து தோணியும் துழைவோரும் அளிக்கப்படவேண்டும். இல்லையேல் நானே செம்படவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு கடல்புகுவேன்” என்று சீர்ஷன் சொன்னான். “என் கடமை அது, என் சொல் என்னை வழிநடத்தும்.”
மேலும் பெருஞ்சாத்தனார் பேசுவதற்குள் பாண்டியன் கையமர்த்தி “அவர் விழைவதை அளிப்போம். அவர் சொல்லுக்கு மாமலை நீருள் இருந்து எழுமென்றால் அவர் தன் சொல்லை அதற்கு உரைக்கட்டும்” என்றான். “இம்முறை நானும் வருகிறேன். நம் அவையோரில் விரும்பியவர் உடன்வருக! தென்கடலுள் உறையும் இந்நிலத்தின் மூதாதை வடிவை காணும் பேறு எனக்கிருக்குமென்றால் அவ்வாறே ஆகுக!”
அன்றே மதுரையிலிருந்து பாண்டியன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதியும் அவன் அமைச்சர் தென்குன்றூர் பெருஞ்சாத்தனாரும் அவையினரும் கிளம்பி தென்குமரிநிலம் நோக்கி சென்றனர். அங்கே பெருமணல் பரப்பில் பாடிவீடமைத்து தங்கினர். முக்கடல் அலை வந்து அறைந்து உருவான மணல்மேட்டின்மீது தாழைப்புதர்கள் மண்டியிருந்தன. அங்கே கடற்சீற்றம் மிகுதியென்பதனாலும், பாறைகள் முதலைப்பற்கள் என எழுந்து நின்று உயிர்கொள்பவை என்பதனாலும் மீனவர்கள் எவரும் படகோட்டுவதில்லை. சூழவும் நெடுந்தொலைவுக்கு ஊர்கள் எவையுமில்லை.
தன்னந்தனிமையில் நீள்நிலத்து முனையில் பாண்டியன் காய்சினவழுதி கட்டிய சிறிய கல்லாலயம் அமைந்திருந்தது. சுட்டுவிரலில் தொட்டு கடல்நோக்கி நீட்டிய பனித்துளிபோல என்று பாணர் பாடும் ஆலயம் அது. அதன் கருவறையில் குமரியன்னை வைர மூக்குத்தி ஒளிவிட சிற்றாடை கட்டி சிறுமியென நின்றிருந்தாள். பாண்டியனும் அமைச்சரும் புலவர்குழாமும் அங்கே அன்னையை வணங்கி நோன்பிருந்தனர்.
குருநிலவு நாளில் மூன்று படகுகளிலாக அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். அவர்கள் கிளம்பும்போது மாலைவெளிச்சம் அணைந்துகொண்டிருந்தது. கடற்பறவைகள் செம்முகில்களின்மேல் நீந்துவனபோல சென்றுகொண்டிருந்தன. இருண்டுவந்த கடல் அலையில்லாது கருங்கல்பரப்பென தெரிந்தது. அலையறையும் பாறைகள் நீர்த்தடம் காய்ந்து நிறம் மாறிக்கொண்டிருந்தன.
அவர்களின் படகைச் செலுத்தியவன் பதினாறண்டு அகவை நிறைந்தவனாகிய கீரன் குலத்து கண்ணன். இளமையின் அழகு கொண்ட கண்களும் மின்னும் கரிய உடலும் கொண்டிருந்தான். அமைச்சர் ஆணைப்படி அருகிருந்த மீனவச்சிற்றூரில் இருந்து வந்தவன். அவன் தாய்மாமனாகிய குட்டன் கீரத்தன் “இந்தக் கடலில் மீன்படு வழிகள் மட்டுமே எங்களுக்கு தெரியும். இவன் ஒளிபடு வழிகளை தேடிச்செல்பவன். அரசே, நீங்கள் தேடும் இடம் ஒருவேளை இவனுக்குத் தெரிந்திருக்கும்” என்றான்.
துடுப்பை தன் உளமாக்கி படகை தன் உடலென்று ஆக்குமளவுக்குப் பழகியிருந்தான் கண்ணன் கீரத்தன். “நீ கடலுக்குள் பாறைமுகடுகளை கண்டுள்ளாயா?” என்று அமைச்சர் தென்குன்றூர் பெருஞ்சாத்தன் கேட்டார். “இக்கடலின் ஆழத்தில் உறைவன முடிவில்லாதவை” என்று அவன் சொன்னான். “நான் நகரங்களையே கண்டிருக்கிறேன்.”
அரசன் ஆழிநெடுவேலெறிந்த இளவழுதி வியந்து “நகரங்களையா?” என்றான். “ஆம் அரசே, உங்கள் தொல்மூதாதை நெடுவேலெறிந்த சினம் பொறாது ஆழி எழுந்து மூடிய தொல்நகர்களில் ஒன்று” என்று அவன் சொன்னான். “அதன் பெயர் கபாடபுரம்.” பாண்டியன் “அக்கதைகளை நீ அறிவாயா?” என்றான். “ஆம், நவின்றும் உள்ளேன்” என்றான் கண்ணன் கீரத்தன்.
“நீ நூலறிந்தவனா?” என்று அரசன் திகைப்புடன் கேட்டான். “ஆம், நானே கற்றுக்கொண்டேன்” என்று அவன் சொன்னான். “முத்துச்சிப்பிக்குமேல் கடல் வரிவடிவில் எழுதிய செய்தியையும் என்னால் படித்தறிய முடியும்.” அரசன் “நீ அறிந்துள்ளாயா மகேந்திர மலை எழுவதை?” என்றான். “நான் இருமுறை கண்டுள்ளேன். ஒருமுறை அதன்மேல் சென்றும் உள்ளேன்” என்றான் கண்ணன் கீரத்தன். “எங்களை அங்கு அழைத்துச் செல்க!” என்று அரசன் ஆணையிட்டான். “கடல் ஒப்புதல் அளித்தால் அழைத்துச் செல்கிறேன். நீரின் கதவுகளை நாம் தட்டுவோம். கடலரசன் திறக்கட்டும்” என்று கண்ணன் கீரத்தன் சொன்னான்.
வானில் நிலவு தோன்றியதும் கடல் கொந்தளிக்க தொடங்கியது. படகு அனைவரையும் தூக்கி தனக்குள் வீசிச் சுழற்றியது. அலைகள் மேலும் மேலும் பெரிதாக எழுந்தன. நீர்வளைவு ஒருகணம் மலையென அருகே ஓங்கி தெரிந்தது. மறுகணம் அவர்கள் அந்த மலைமேல் இருந்தனர். வீழ்ந்து எழுந்து வீழ்ந்து எழுந்து வானிலென அலைந்தனர். அடியில் நீர்ப்பரப்பு பாறை என அறைந்தது. கலம் உடைந்து சிம்புகளாக தெறித்துவிடுமென அச்சம் தோன்றியது. மறுகணம் படகுக்கு அடியில் வெறும் காற்றே இருந்தது. அது அடியிலி நோக்கி விழுந்துகொண்டிருந்தது.
தங்கள் படகிலிருந்து மற்ற படகுகளை பார்த்தவர்கள் மத்தகமும் துதிக்கையும் எழுந்த பேரலைகள் அப்படகுகளை தூக்கிச் சுழற்றி வீசிப் பிடித்து எறிந்து ஆடியதை கண்டனர். சுற்றி வளைத்தன மாநாகங்கள். படமெடுத்துச் சீறி வெண்நுரை நாக்கு காட்டின. பல்லாயிரம் புரவிகள் பிடரி பறக்க குளம்புக் கால்கள் தூக்கி தாவி அவர்கள்மேல் பாய்ந்து சென்றன. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை கயிறுகளால் பாய்மரங்களுடன் இறுக கட்டிக்கொண்டனர். அலையுமிழ்ந்த நீர் அவர்கள் மேல் அறைந்து சிதறியது.
அலைக்கொந்தளிப்புக்கு மேல் முழுநிலவு செந்நிறவட்டமென வந்து நின்றது. அது சுடர்கொள்ளும்தோறும் அலைகளின் வெறி கூடிவந்தது. அவர்களின் உடல்களில் நீரின் அறையாலேயே வீக்கம் எழுந்தது. நீர் அறைந்து செவியும் உதடுகளும் கிழியமுடியும், பற்கள் உடைந்து உதிரமுடியும் என அவர்கள் அறிந்தனர். நீரின் ஓலம் செவிகளை நிறைத்திருந்தது. அவர்களின் நோக்கும் நீரால் நிறைந்திருந்தது. உள்ளெழுந்த அச்சமும் நீரின் வடிவிலேயே அமைந்திருந்தது.
அரசனை அங்கே கொண்டுவந்திருக்கலாகாதோ என்ற எண்ணத்தை அமைச்சர் அடைந்தார். ஆனால் பாண்டியன் தன் படகின் அமரமுனையில் நின்று கடலை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். படகு ஊசலாடியபோது அவன் கயிற்றில் கட்டி சுழற்றப்பட்டவனாக வானில் பறந்தலைந்தான். ஆனால் அவன் கால்கள் நிலைதடுமாறவில்லை. அவன் உடலின் நிகர்நிலை பெயரவுமில்லை.
அவன் தொன்மையான பரதவக் குடியினன் என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார். கடலை அவன் கால்கள் அறிந்திருக்கும். அவனுக்குள் நிறைந்துள்ள குருதி கடலின் நீருடன் ஒத்திசையக் கற்றிருக்கும். அவன் முன்னோர்களில் ஒருவன் கடலை அம்பெறிந்து வென்றான். அச்சினம் பொறாது கடல் எழுந்து பஃறுளி ஆற்றோடு பன்மலை அடுக்கத்து குமரிக்கோட்டையும் மாமதுரை நகரையும் உண்டது. அவன் கடலின் மைந்தன், கடலுடன் போரிட்டு எழுந்தவன்.
பின்னர் கடல் ஓயலாயிற்று. அலைகள் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு திரும்பிச் சென்றன. நோக்கியிருக்கவே கடல் முற்றமைதி கொண்டது. காற்று வீசி அவர்களின் குழலையும் உடைகளையும் உலரச் செய்தது. கடலில் அலையெழுந்ததா என்ற ஐயமெழும் அளவுக்கு அமைதி நிலவியது. ஒரு சொல் ஒரு முனகல் இல்லாமல் நீர்ப்பரப்பு கிடந்தது. நிலவின் ஒளி அதன்மேல் பரவி நெளிந்துகொண்டிருந்தது.
தொலைவில் ஏதோ எழுந்து நின்றிருந்தது. நிழலுருவாகவே அது தெரிந்தது. அதற்குள் ஒவ்வொருவரும் மெய்ப்புகொண்டிருந்தனர். பாண்டியன் கைகூப்பியபடி படகில் நின்றான். “அதோ” என்றான் கண்ணன் கீரத்தன். துடுப்பிடுவோர் படகை செலுத்த அது மெல்ல அணுகியது.
அந்த மலைமுடி ஆலயக்கோபுரம் போன்ற அமைப்பு கொண்டிருந்தது. அதன்மேல் விழுந்த நிலவொளியில் அதில் பல ஆலயக்கோபுரங்கள் இருப்பது தெரிந்தது. அணுக அணுக அவை மேலும் கூர்கொண்டு தெரிந்தன. அக்கோபுரங்கள் அனைத்திலும் குடமுகடுகள் இருந்தன. எண்கோணவடிவில் எட்டுபுறங்களிலும் இணையாகச் சரிந்திறங்கும் வடிவம். வழிந்த நீரில் நிலவொளி கரைந்து பொன்பூச்சென தெரிந்தது.
அருகணைந்தபோது மிகத் தெளிவாக பார்க்க முடிந்தது. சிற்பங்களேதுமற்ற கோபுரவடிவங்கள் அவை. பதினெட்டு பெரிய கோபுரங்கள். நூற்றெட்டு சிறு கோபுரங்கள். நடுவே ஒற்றைக்கோபுரம் மையமென எழுந்து நின்றது. பாறைவிளிம்பில் படகை முட்டி நிறுத்தினர். முதலில் கண்ணன் கீரத்தன் தாவி அங்கே சென்றான். படைவீரர்கள் உடன் தாவி இறங்கி அந்தப் பாறையை கூர்நோக்கினர். அங்கே மீன்களோ கடலுயிரிகளோ ஏதுமில்லை. அதன் பின் அவர்கள் கைகாட்ட படகிலி்ருந்து பலகையை பாலமென அமைத்தனர்.
பாண்டியன் கைகூப்பியபடி அதனூடாக இறங்கி அப்பாறைமேல் கால்வைத்து குனிந்து தொட்டு சென்னிசூடினான். பிறகு பெருஞ்சாத்தனாரும் பிறரும் ஒவ்வொருவராக இறங்கி தொட்டு வணங்கி நின்றனர். சீர்ஷன் “இந்த இடம்தான்” என்றான். “எப்படி அறிவீர்?” என்று பாண்டியன் கேட்டான். “என் முன்னோர்களின் சொற்கள்” என்றான் சீர்ஷன். “பூனையின் செவிகள் என எழுந்த கற்கோபுரங்கள் குவிந்து கூர்ந்து ஒலிகூர்ந்திருக்கும் பெரும்பாறை முகடு. இங்கே ஒரு எண்கால் மண்டபத்தில் அன்னை ஒருகால்தவம் செய்த பாறைச்சுவடு உண்டு.”
கண்ணன் கீரத்தன் “இங்குளது அது” என்றான். அவர்கள் அவன் சுட்டிய திசையில் நடந்தனர். இருண்ட வாசல்களுடன் மண்டபங்கள் ஒழிந்து கிடந்தன. படிகள் ஏறிச்சென்றன. அமிழ்ந்து சென்ற குகைகளில் இறங்கி மறைந்தன. எங்கும் சொல்அதிரும் அமைதி. உள்ளத்தை அழுத்திச் சுருக்கி இறுக்கி முத்தென்றாக்கிவிடும் பேரெடை கொண்டது. அவர்களின் காலடியோசைகள் மெல்லிய முணுமுணுப்புகளாக கேட்டன. நிலவின் ஒளியில் அக்கல்மண்டபங்கள் பொன்னென்று இருந்தன. நீருக்கடியில் கிடந்து சற்றே உருவழிந்திருந்த அவை உருகி வழிந்துகொண்டிருப்பவை என்று தோன்றின.
எட்டு தூண்களால் ஏந்தப்பட்ட எண்கோண மண்டபத்தின்மேல் கவிழ்ந்த தாமரை வடிவிலான கல்மலர்க்கூரை. கீழே இயற்கையான பாறையில் பதிந்திருந்த காலடித்தடம். சீர்ஷன் அதனருகே அமர்ந்தான். அவனுக்கு முன் பாண்டியன் அமர்ந்தான். பிறர் அரசனுக்குப் பின்னால் அமர்ந்தனர். சீர்ஷன் தன் யாழ்மேல் மெல்ல விரலை மீட்டிக்கொண்டிருந்தான். அவன் சொற்களுக்காக பிறர் காத்திருந்தனர். நிலவின் ஒளியில் அவன் தலைமுடி மின்னியது. அவன் முகத்தில் ஒளியலைகள் நெளிந்தன.
சீர்ஷன் சொன்னான் “அரசே, இப்பெருங்காவியம் எங்கள் குருவழியின் முதல்வரான மகாவியாசர் கிருஷ்ணதுவைபாயனரால் இயற்றப்பட்டது. அவருடைய மாணவர்களான வைசம்பாயனரும் பைலரும் ஜைமினியும் சுமந்துவும் இக்காவியத்தை முழுமையடையச் செய்தனர். ஆனால் இக்காவியத்தின் முடிவை இயற்றியவர் எங்கள் ஆசிரியரான சூததேவர்.”
“உக்ரசிரவஸ் என்னும் பெயர் கொண்ட சூதமாமுனிவர். லோமஹர்ஷணர் என்னும் சூதர்குலத்து பெருங்கவிஞரின் மைந்தராகப் பிறந்தவர். நைமிஷாரண்யத்தில் நூற்றெட்டுமுறை இப்பெருநூலை அவர் சொல்குறையாது முனிவர்களுக்கு சொன்னார். அவ்வண்ணம் இப்பெருநிலத்தில் என்றுமழியாமல் இதை நிலைநாட்டினார். இதை நாடெங்கும் சொல்லிநிறுத்தும்பொருட்டு ஒரு குருநிரையை உருவாக்கினார். அவ்வழியில் வந்தவன் நான்.”
“முன்பு அஸ்தினபுரியில் சர்ப்பசத்ரயாகம் என்னும் பெருவேள்வி நடந்தது. அதில்தான் இப்பெருங்காவியத்தை முதல் வியாசர் அருளிச்செய்தார். அங்கே இதை முடித்துவைக்கும் பணியை தேவர்கள் என் ஆசிரியரான சூததேவரிடம் அளித்தனர். அங்கு அவர் இதன்மேல் முழுச் சொல்லுரிமையை அடைந்தார். அவர் புகழ் நீடுவாழ்க!” என்று சீர்ஷன் சொன்னான். யாழை மீட்டியபடி பாடலானான்.