அருள்,மணிபல்லவம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மணிபல்லவம் மனதை கொந்தளிக்கவைத்த கதை. ஏனென்றால் நான் கடலில் பணியாற்றியிருக்கிறேன். கோஸ்டல் கார்ட்ஸில் இருந்தேன். மும்பை பக்கமும் கல்கத்தாப்பக்கமும் வேலையாக இருந்தேன். கடலில் போகும்போது படகிலிருந்து பார்த்தால் சிலசமயம் நீருக்கு அடியில் இருக்கும் பாறைகளும் கடல்பாசிகளும் பெரிய காடுபோலவும் நகரங்கள் போலவும் இருக்கும். நான் நிலவிலெயே பார்த்திருக்கிறேன். பெரிய கனவு போலிருக்கும். அப்படியொரு கனவுதான் மணிபல்லவம்.

நமக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடலுக்குள் நம்முடைய உலகம் ஒன்று உள்ளது என்ற கனவு உண்டு. துவாரகை கடலில் போய்விட்டது. பூம்புகாரும் மதுராபுரியும் கபாடபுரமும் கடலில்தான் இருக்கின்றன. தென்திசைதான் மூதாதையரின் திசை. கடலுக்குள் நாம் பெரிய கனவுகளை வைத்திருக்கிறோம். அந்தக்கனவிலே ஒரு துளிதான் மணிபல்லவமாக வந்து காட்சியளித்துவிட்டுச் சென்றிருக்கிறது

அருள்ராஜ்

***

அன்புள்ள ஜெமோ.. நலம் தானே.

மணிபல்லவம் வாசித்ததில் இருந்து பல எண்ணங்கள்  மீண்டும் மீNடும் வாசிப்பதற்கு அதில் ஏதோ ஒன்று புதைந்திருந்தது அந்தோணி கண்ட தீவைப் போல.

இக்கதையின் மொத்த புள்ளியும் அந்தக் கடைசி வரியில் தான் உள்ளது. அதுவரை ஒரு  சர்ரியலிஸ்டிக் உணர்வைத் தான் தந்து கொண்டிருந்தது.  இப்போதும் இது அவ்வகைக் கதை தான் என்றாலும், அந்தப் புள்ளியில் இருந்து துவங்கு போது அதன் வேறு வகைக் கோணங்களைச்  சாத்தியமாக்குகிறது.

முதலில் பன்னாசிங் பீகாரி என்பதினால்  கிருஷ்ணாவும், துவாரகையும் என்ற கோணத்தில் மனம் சென்றது, ஆனால் மீண்டும் வாசிக்க வாசிக்க அந்தோணியின் கூற்றின் படி அந்த இடம் அநேக புத்த, சமண விகாரைகளின் அமைப்புடன்  ஒத்து இருக்க மனம் மேலும் மேலும் அது புத்தர் என்றே வகுத்தக் கொள்ளத் துவங்கியது.

அப்போதுதான் மனம் கிருஷ்ணாவுக்கும் புத்தருக்குமான அநேக ஒப்புமைகளை வகுக்கவும் தொடங்கியது.  புற ஒப்புமைகளைத் தாண்டி, அகத்தே நின்று விசாரிககத்துவங்குகையில் திறந்த வாசல்கள் விடுக்கும் அழைப்பை மீறத் துணியாத மனங்களில் வசிக்கும் புத்தருக்கும் கிருஷ்ணருக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தோன்றியது.  நிலவும், கடலும், அலைக்கழிப்புகளும் உறுதிகளும் சேர்ந்ததுதானே அகவாழ்வு அந்த அதி உன்னதத்தை தேர்ந்தெடுத்த அனைவருக்குமான உணர்வையும் அலைக்கழிப்புகளையுமே அந்தோணியும் அடைகிறான்.   மீள்கிறான், கூடவே கதை சொல்லியும்.

ஞானம் என்பது 21 தலைமுறைகள் தொடரும் என்ற வழக்கின் படி அவனது தந்தையின் அழைப்பாகவே கூட இருந்தாலும்  எல்லோருக்கும் தந்தை  இறைவன் என்ற கூற்றும் மனதில் வந்து போனது.  சிலசமயம் மனம் பக்தியில் பொதிந்து கொள்வது இதம் தருவதாக உள்ளது.

’கிருத்திகா ஸ்ரீதர்

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே? கடுமையான வலியும் சாவும் தரும் நோயை எதிர்கொள்வதில் ஒரு நிலை உண்டு. சாவுடன் போராடுவது உயிர்களின் வழக்கம். ஆனால் ஒரு கட்டத்தில் சாவை ஏற்றுக்கொண்டாகவேண்டும். அதற்கு Palliative care என்னும் வலிநீக்கு மருத்துவத்தில் முக்கியமான இடம் உண்டு. கௌன்சிலிங் கூட கொடுப்பது உண்டு.

ஆனால் அது அத்தனை எளிய விஷயம் அல்ல. மிகமிக கடுமையான வலியில் அழிந்துகொண்டிருக்கும் உடல்கொண்டவர்கள்கூட மீளமுடியும் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள் அந்த நம்பிக்கை முழுசாக இருந்தால் பரவாயில்லை. அதுவும் இருக்காது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்து ஊடாடிக்கொண்டிருக்கும். அவர்களால் எந்தப்பக்கமும் போக முடியாது. அது மிகப்பெரிய அலைக்கழிப்பு.

aதைப்போல நான் ஏன் சாகவேண்டும் என்ற கேள்வி. நான் என்ன தப்பு செய்தேன் என்று அதைத்தான் இந்தக்கதையிலே கேட்கிறாள்.அதை இறைநம்பிக்கை உடையவர்களும் கேட்பார்கள். சாமானியர்களும் கேட்பார்கள். ஆனால் பொதுவாக இண்டெலெக்சுவல்களுக்குத்தான் அந்தக்கொந்தளிப்பு அதிகம்.

அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் succumb ஆகிறார்கள். அங்கே விடுதலை அடைந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்படி succumbஆகிறார்க்ள் என்பதை கண்டுபிடிக்க கஷ்டம். பல காரணங்கள் இருக்கலாம். தெய்வத்தை எப்படியோ உணர்ந்திருக்கலாம். cosmic law ஒன்றை உணர்ந்திருக்கலாம். இந்தக்கதையில் கதாநாயகி அந்த inevitabilityயை கண்டு அதன்முன் பணிந்துவிடுகிறாள். விடுதலை ஆகிவிடுகிறாள். ஒரு அபாரமான தருணத்தின் கதை ஜெ. நன்றி

ராதாகிருஷ்ணன் சங்கரராமன்

**

அன்பின் ஜெ,

வணக்கம்!.

நண்பர் வா.மணிகண்டன் குறிப்பு ஒன்றில் சென்னை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் வைத்திருக்கும் அவரது நண்பர் சொன்னதாக ஒரு தகவலை பதிவு செய்திருந்தார்.

உணவகம் ஆரம்பிக்க இடம் பார்க்கையில் சென்னையிலிருந்து வெளியேறும் பாதை பக்கமாக இடம் தேடியதாகவும், அதற்க்கான காரணமாக, சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் கார்களில் இருக்கும் மக்களின் மனநிலையும், சென்னை திரும்பும் பாதையில் செல்லும் கார்களில் இருக்கும் மனநிலையும்,அந்த மனநிலை உணவகத்தின் வியாபாரத்தில் ஏற்ப்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.

”அருள்” கதையின் அடிநாதமும், வானவில்லை ரசிக்கும் மனது, இரு வழி பயணத்தில், இடது வலமாய் இடம் மாறி இருப்பதற்க்கான காரணமும் இந்த குறிப்பை மீட்டெடுத்தது.அடுத்ததாய் அந்த சாமுண்டி.  காலையில் கதையை படித்துமுடித்தபோது சாதனா அடைந்திருந்த பதட்டத்திற்க்குள் சென்றுவந்திருந்தேன். நிலைமீண்டு நேரடியாகவே போய் பார்த்து வந்தேன் அந்த சாமுண்டியை. எங்கள் தலைச்சங்காடு கிராமத்தில் அவளின் பெயர் பேச்சாயி. வருடத்திற்க்கு இரண்டு குருதிகொடை குடும்ப சார்பாக உண்டு. பலியிடப்பட்ட நாட்டு சேவலை, சமைத்து படையலுக்கு கொண்டுவருவதற்க்காக மடியாக காத்திருப்பார் பூசாரியின் மனைவி.

பலியன்னத்தை  வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. பேச்சாயியின் காலடியிலேயே அமர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். பத்து வயதில், பயத்தோடு காலடியில் அமர்ந்து சாப்பிட்ட அச்சம் கலந்த நினைவுகள், இன்று போட்டோ எடுக்க அருகணைந்தபோதும் அப்படியே சில கணம் நீடித்தது.

சாதனா மீண்டுவிட்டாள், ஆனால் நானும், மாட்டும் மீள சின்னாள் ஆகும்.

-யோகேஸ்வரன் ராமநாதன்.

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைஒருபோதும் திரும்பாது.
அடுத்த கட்டுரைமூத்தோள்,செய்தி- கடிதங்கள்