கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

டில்லி திரும்பிவந்தபோது அவன் காலடியோசை கேட்டு நைனா “ஒரேய்” என்று கூப்பிட்டார். “டில்லியாடா, டேய் டில்லியாடா? டேய், டில்லிதானே?”

“ஆமா நைனா” என்று அவன் சொன்னான்.

“கறி வாங்கினு வந்தியாடா?”

“இல்ல.”

“ஏன்டா?” என்றார். “கறி இல்லாம இங்க வந்து என்ன புளுத்தப்போறே?” அவருக்கு இருமல் வந்தது. தகரத்தில் தட்டுவதுபோன்ற ஓசை அது.

“துட்டு வாணாமா? எவன்கிட்ட இருக்கு துட்டு? நானே நாஷ்டா துண்ணாம வந்திருக்கேன்…”

“நீ எங்கியோ சாவு… போ. அந்தா உக்காந்திட்டிருக்கே. அதுக்கு என்ன சொல்லப்போறே? டேய், அதுக நம்மள நம்பி இருக்கிற சீவண்டா.”

“அதுக்கு இப்ப நான் என்ன பண்ணணுமுன்னு சொல்றே?”

“என்ன பண்ணணுமா? என்னைய கொல்லுடா.. என்னைய கொன்னு சதையை வெட்டி அதுகளுக்கு போடு.”

டில்லிபாபு சட்டையை கழற்றி ஆணியில் மாட்டியபின் பெருமூச்சுடன் ஒட்டுத்திண்ணையில் அமர்ந்தான். நைனா இருமிக்கொண்டே இருந்தார். அவன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.

“டேய், மெய்யாலுமே அதைத்தான்டா நினைச்சுக்கினு இருக்கேன். என்னைய வெட்டிப்போட்டா நான் நிறைவா செத்திருவேண்டா. இனி நான் செய்றதுக்கு அது ஒண்ணுதாண்டா மிச்சமிருக்கு”

அவர் இருமி ஓய்ந்தார். மல்லாந்து படுத்து மூச்சிளைப்புடன் முனகிக்கொண்டிருந்தார். அவன் குடிசைக்கு உள்ளே போய் பார்த்தான். இருட்டில் குறுக்காக வைக்கப்பட்ட மூங்கில் மேல் இரு கழுகுகளும் தலையில் மாட்டப்பட்ட தோல்தொப்பிகளுடன் அமர்ந்திருந்தன. அவற்றுக்கு அப்போது இரவு.

அவனுடைய காலடியோசையையும் மணத்தையும் அவற்றால் உணரமுடியும். ஆல்ஃபா கால்மாற்றி வைத்து சிறகைச் சரித்து மீண்டும் அடுக்கியது. பீட்டா தலையை உடலுக்குள் வளைத்து அழுக்கான துணிப்பொட்டலம் போல அமர்ந்திருந்தது. அவை ஓசையிடுவது குறைவு. கழுகுகள் அமைதியான, பொறுமையான பறவைகள்.

அவன் கீழே அமர்ந்து மண்ணெண்ணை ஸ்டவ்வை எடுத்து காற்றடித்தான். அலுமினியப் பாத்திரத்தை அதன்மேல் வைத்து இரண்டு கோப்பை நீரை ஊற்றினான். டீத்தூள் கொஞ்சம் இருந்தது. சர்க்கரை இல்லை.

நைனா முனகிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு மூச்சிரைப்பிலும் அவர் உடல் ஏறி இறங்கியது. அவன் ராயப்பேட்டை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோனபோது வயதான டாக்டர் நேரடியாகவே சொல்லிவிட்டார். “இனிமே மீண்டு எந்திரிப்பார்னு நினைக்கவேண்டாம். இங்க படுக்க எடமில்லை. திண்ணையிலே பிச்சைக்காரங்க நடுவிலே போட்டிருக்கிறதுக்கு வீட்டிலேயே வச்சுக்கிடலாம்.”

வீடு என்பது கூவத்தின் சேற்றுச் சரிவிலிருக்கும் குடிசைதான். பழைய லாரி டார்ப்பாயால் கூரையிடப்பட்டு வினைல் தட்டிகளால் சுவர் அமைக்கப்பட்டது. படுப்பதற்கு ஒரு பிளைவுட் பலகையை கட்டிலாக ஆக்கியிருந்தான். ஆனாலும் அவன் அவரை கூட்டிவந்துவிட்டான்.

டீத்தூளை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டியபின் ஒரு டம்ளர் டீயை மட்டும் சீனிப்பாத்திரத்திற்குள் விட்டு நன்றாக குலுக்கி மீண்டும் ஊற்றிக்கொண்டான். நைனாவை மெல்லத் தூக்கி சாய்வாக அமரவைத்து அவருக்கு ஊட்டினான். அவருடைய தொண்டை வரண்டிருக்கவேண்டும். நாக்கும் உதடுகளும் தவித்தன. குடித்து முடித்ததும் ஆசுவாசமாக பெருமூச்சுவிட்டார். உடலில் இருந்த நடுக்கமும் குறைந்தது.

“ஏண்டா, மெய்யாலுமே நம்ம உடம்போட இறைச்சிய போடமுடியாதா?”

“உனக்கென்ன பைத்தியமா? சும்மா கெட.”

“பார்ஸிகள்லாம் போடுறாங்கன்னு சொல்லுவாங்க…” என்றார். “அதுக்குன்னே கிணறு மாதிரி ஒண்ணு வச்சிருப்பாங்க. அதுக்கு அமைதிக்கிணறுன்னு பேரு.”

“ஆமா, அதெல்லாம் வேற…”

“நான் செத்துட்டா போட்டுடுரா.”

அவன் கீழே அமர்ந்து தன் டீயை எடுத்துக்கொண்டான்.

“மெய்யாலுமே சொல்றேன்… போட்ரு.”

“சும்மாகெட, அதெல்லாம் பெரிய தப்பு.”

“என்ன தப்பு? என் உடம்போட அதுக ரெண்டையும் அப்டியே விட்டுட்டு ஒரு ரெண்டு நாள் வெலகி இரு… திரும்பி வந்தா என்னைய அதுக தின்னிருக்கும். மிஞ்சினதை வைச்சு வேண்டியதைச் செய்”

“சும்மா கெடப்பியா?”

“நான் செஞ்ச தப்புடா… முட்டையிலே இருந்து எடுத்து வளத்து. செறகைவெட்டி, நகத்தை வெட்டி, தீனிபோட்டு பழக்கி எரைபிடிக்கத் தெரியாம ஆக்கி… பட்சின்னா அது வானத்துக்கு சொந்தம். அதை இந்த அழுக்குச்சாக்கடை குடிசைக்குள்ள அடைச்சு வச்சிட்டேன்… பீடைங்க மாதிரி இந்தா உக்காந்திட்டிருக்கு”

அவர் திரும்பி தலைமாட்டில் அமர்ந்திருக்கும் கழுகுகளை பார்த்தார். முகத்தில் புன்னகை வந்தது.

“கௌபாயி சினிமாக்களிலே சாகப்போறவன் பக்கத்திலே உக்காந்திட்டிருக்கும்… என் தலைமேலே அறுபது எழுபது வருசமா கழுகு உக்காந்திட்டிருக்கு. எப்ப சாவான்னு மூணு தலைமுறையா எதிர்பார்த்திட்டிருக்கு… அதுகளை நான் ஏமாத்தக்கூடாது.”

“நைனா நீ கொஞ்சம் தூங்கு.”

“ஒரு வாய் ரம்மு கிடைக்குமாடா?” என்றார். “இல்லேன்னா எதாவது ஒண்ணு. எங்கியாம் எவனாம் கள்ளச்சாராயம் வித்தான்னா…”

“இப்ப நான் அதுக்கு பைசாவுக்கு எங்க போக? இந்தா இதுகளுக்கு கறிபோட்டு இன்னியோட எட்டு நாள் ஆகுது.”

“மறுபடியும் தெறந்து விட்டுப்பாரு.”

“ஒவ்வொருநாளும் காலையிலே தெறந்துதான் விடுறேன். சுத்திட்டு ஒருமணி நேரத்திலே திரும்பி வந்திரும். அதுகளுக்கு ஏரியா தெரியல்ல. பறக்கவும் தெம்பு இல்லை. என்னத்தை செய்ய?” என்று டில்லி சொன்னான். “திரும்பி வராம போயிராதான்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். எங்கியாம் கண்காணாம விளுந்து செத்திடிச்சின்னாக்கூட நாம மனசை தேத்திக்கிடலாம்.”

“சும்மா இருடா, வாயாலேகூட அப்டி சொல்லாதே” என்றார் நைனா. “அதுக குளந்தைங்க… கோழிக்குஞ்சு மாதிரி என் கையிலே ஒக்காந்திட்டிருந்ததுங்க.”

“அதான் ஒண்ணுமே தெரியாம இருக்கு…”

“நீ சபரி சாரை போயிப் பாருடா” என்று நைனா சொன்னார் “அவருக்குத்தான் இதுங்க மேலே அந்தக்காலத்திலே அவ்ளவு ஆசை. அவரோட எல்லா படத்திலயும் ஒரு சீன்ல வந்திரும்.”

“அவருதான் இப்ப படமே எடுக்கிறதில்லியே.”

“அது அப்டித்தான், ஒவ்வொருத்தருக்கும் ஒரு சீசன்தான். பத்துப்பதினைஞ்சு வருசம், அவ்வளவுதான். அதுக்குமேலே என்ன?” என்றார் நைனா “ஆனா அந்தக்காலத்திலேயே நல்லா சம்பாரிச்சார். அவர் எடுத்த எல்லா படமும் கௌபாயி படத்தை பாத்து சுருட்டினதுதான்.”

டில்லி அவரை ஏற்கனவே இரண்டுமுறை போய்ப் பார்த்திருந்தான். அதன்பின் வீடுமாறி மகன்களுடன் போய்விட்டதாக சொன்னார்கள். அவருடைய பங்களாவை இடித்து அது இருந்த இடத்தில் அடுக்குமாடி கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தார்கள். எட்டு மாதம் முன் அவன் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டான்.

ஆனால் அப்போது அந்த கட்டுமானத்தில் இருப்பவர்களுக்கு அவருடைய அட்ரஸ் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்ததுமே உடம்பு பரபரப்படைந்தது.

“நைனா, நான் வெளியே போய்ட்டு வந்திடறேன்” என்றன்.

“இதுங்களை திறந்து விட்டுட்டுப் போடா” என்றார் நைனா.

“உடனே திரும்பி வந்திடுது… உறை இல்லேன்னா தூங்கவும் தூங்காது”

“ஆமா, ஆனா இப்ப ரெண்டும் பசியிலே எரிஞ்சிட்டிருக்கும்… இப்ப வெளியே போனா எதுனா எலியோ தவளையோ புடிச்சு திங்கலாம்.. இல்ல கசாப்புக்கடை வேஸ்டுக்கு போனாலும் போவும்…” என்றார் நைனா “அந்த பொட்டை செத்தாலும் செத்திரும்டா.”

“என்ன சொல்றே?” என்றான்.

“அதுக நல்லா தின்னா காலிலேயே கொஞ்சம் கழியும்… அதுக உடம்புச்சூடு குறையுறதுக்காக. அந்த வாடை இருக்கும்.. இங்கபாரு எந்த வாடையும் இல்ல…” என்றார் நைனா. “அதுக வயித்துக்குள்ள தீ இருக்கு. அதான் செத்ததையும் அழுகினதையும் தின்னாலும் அதுகளுக்கு ஒண்ணும் ஆகிறதில்லை. வெளிய வாற எச்சம் சாம்பல் வாடை அடிக்கும் பாத்திருக்கியா? இப்ப அந்த தீ அதுகளுக்க குடலை எரிச்சிட்டிருக்கும்.”

டில்லி இரு கழுகுகளையும் பார்த்தான். அவை தலையில்லாதவை போல் இருந்தன. சுதந்திரமான கழுகுகள் வானில்பறப்பதை அவன் நினைத்துக் கொண்டான். அவை அவ்வப்போதுதான் சிறகசைக்கும். அவற்றை வானமே கையில் எடுத்துக்கொண்டது போலிருக்கும். வானம் ஒரு கண்ணாடிப்பரப்பாகவும் அவை அதில் சறுக்கிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும்.

அவன் முழங்கையில் தோலுறைகளை மாட்டிக்கொண்டு அருகே சென்று ஆல்ஃபாவை வெளியே எடுத்தான். அது அவன் முழங்கையில் எடையுடன் அமர்ந்திருந்தது. வெளியே கொண்டுசென்று தலையுறையை நீக்கி கையை வீசி அதை பறக்கவைத்தான். சிறகடித்து சென்று தரையில் அமர்ந்தது. கழுத்தை நீட்டி ‘க்ரேய்க்’ என்று கீறலோசை எழுப்பியது.

அவன் உள்ளே சென்று பீட்டாவை வெளியே எடுத்துவந்தான். அதையும் தலையுறையை கழற்றிவிட்டு பறக்கவைத்தான். அதுவும் சிறகடித்துச் சென்று தரையில் அமர்ந்தது.

அப்பால் கூவம் கருப்பாக நுரைக்குமிழிகளுடன் ஓடிக்கொண்டிருந்தது. ஒருமாதம் முன்பு அதில் ஒரு செத்த மாடு வந்தது. அவன் அதை  கொக்கி போட்டு இழுத்து கரைச்சேற்றில் போட்டான். அதனருகே கழுகுகளை கொண்டுசென்று வைத்தான். அவற்றால் அதை கிழித்து உண்ண முடியவில்லை. கிளர்ச்சியடைந்து சுற்றிச்சுற்றி குதித்துக்கொண்டிருந்தன. ஆனால் கொத்தி இழுக்கவோ கிழிக்கவோ கற்றுக்கொண்டிருக்கவில்லை. அவற்றுக்கு சிறிய துண்டுகளாக நறுக்கிய மாட்டிறைச்சிதான் உணவு. எலிகளைக்க்கூட அவை உண்பதில்லை.

அவன் கைவீசி “இந்தா போ… போ… இந்தா” என்று அவற்றை துரத்தினான். அவை எழுந்து எழுந்து அமர்ந்தன. துடைப்பத்தை எடுத்து வீசி அவற்றை பறக்க வைத்தான். ஆஃல்பா எழுந்து பறந்தது. பீட்டாவும் “க்ரேய்க்!” என்ற ஓசையுடன் எழுந்து உடன் சென்றது. அவை வானில் மறைவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

டில்லி எரவாணத்தில் ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டான். செருப்பு நன்றாக தேய்ந்து கிழிந்திருந்தது. எங்கு சென்றாலும் அதை கண்மறைவாகவே கழற்றிப் போடவேண்டியிருந்தது. அவன் சட்டைகூட ஆங்காங்கே தையல் விட்டு அழுக்காக இருந்தது. கழுகுகளின் சிறகுகள் அழுக்கானவை. குளுமைக்காக அவை தங்கள் சிறுநீரில் மண்ணைக் கலந்து சேறாக்கி பூசிக்கொள்ளும். அவன் நைனாவின் காக்கிச்சட்டை எப்போதுமே சேறாகத்தான் இருக்கும்.

டில்லி சாலைக்கு வந்தபோது வெயில் ஏறியிருந்தது. அவனுக்கு பசி மந்தித்து தலைசுழன்றது. எலெக்ட்ரிக் டிரெயின் வரை நடந்துதான் போகவேண்டும். டிரெயினில் அவன் டிக்கெட் எடுப்பதில்லை.

அவன் வெயிலில் சட்டையை பின்னுக்குத்தள்ளி கழுத்தை உள்ளே தாழ்த்தி சிறிய கூனலுடன் நடந்தான். வியர்வையில் அவன் உடலில் இருந்து ஆவி கிளம்பியது. அவன் நிழல் கழுகின் நிழல்போலிருந்தது. அதை சினிமாவில் எல்லாருமே சொல்வதுண்டு, அவனும் அவன் நைனாவும் அவருடைய நைனாவும் எல்லாருமே கழுகுகளைப் போலிருப்பதாக.

வல்ச்சர் பாபு என்றுதான் அவனை அழைப்பார்கள். அவன் நைனா வல்ச்சர் ராமுடு. அவருடைய நைனா வல்ச்சர் ராஜுதான் சினிமாவுக்கே கழுகை அறிமுகம் செய்தவர். அதற்கு முன்பெல்லாம் பொம்மைதான் செய்து வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர் பதினைந்து கழுகுகள் வைத்திருந்தார். நூற்றுக்குமேல் கழுகுப்பொம்மைகள். அவற்றுக்குள் ஸ்பிரிங் வைத்தும் கறுப்பு ஒயர் கட்டியும் சிறகடிக்கவும் எழுந்து அமரவும் செய்யமுடியும். கழுகுகளும் கழுகுப்பொம்மைகளுமாக ஒரு ஃப்ரேம் முழுக்கவே அவரால் நிறைத்துவிடமுடியும். மாட்டுக்குடல் நிறைத்த துணியாலான டம்மி பிணங்களை அவை கொத்தி இழுக்கையில் உண்மையாகவே போர்க்களத்தை கண்ணில் பார்க்கலாம்.

1943-ல் வெளிவந்த ’கருட கர்வபங்கம்’ என்ற படத்திற்காக அவர்தான் உண்மையான கழுகுகளை பயன்படுத்தினார். அதன் டைரக்டர் கண்டசாலா பாலராமையா அவரைப்பற்றி எல்லாரிடமும் சொல்ல திடீரென்று பிரபலமானார். மேலும் இருபது பருந்துகளை வளர்த்தார். சென்னையில் அடையாறு ஓரமாக வீடு கட்டிக்கொண்டார். ஏழு துணைநடிகைகளை மணந்தார். ஒருகாலத்தில் அவரிடம் பதிமூன்றுபேர் வேலை பார்த்தார்கள்.

நைனாவும் எண்பதுகள் வரை புகழுடன் இருந்தார். அதன்பின் புராணப்படங்களும் போர்ப்படங்களும் குறைந்தன. கழுகுகளை அவ்வப்போது பாட்டுக்கு பின்னணியாக அமரவைத்தார்கள். சம்பளம் என்று எதையாவது பேசி எதையாவது கொடுத்தார்கள். நைனா சரசரவென்று சரிந்துகொண்டே வந்தார். அவரால் அதை உணர முடியவில்லை. எல்லாமே விட்டுப்போனபோதுகூட இன்னொன்றைச் செய்யவும் தெரியவில்லை.

இப்போது கழுகுகளை வளர்ப்பது குற்றம். அவன் வீட்டில் கழுகுகள் இருப்பது தெரிந்தால் காட்டிலாகா நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே அவன் மூன்றுமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறான். நைனா ஒருமுறை ஜெயிலுக்கு போயிருக்கிறார்.

அவன் மின்சார ரயிலில் ஒரு மூலையில் குந்தி அமர்ந்துகொண்டான். வீட்டில் எங்காவது பீடி இருந்திருக்கும், தேடி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டிருக்கலாம். அவன் நாவும் வாயும் பீடிக்காகத் தவித்தன. உடம்பெங்கும் பதற்றமாக இருந்தது. வாய் திறந்து கொட்டாவி விட்டுக்கொண்டே இருந்தான்.

எக்மூரில் இறங்கிக்கொண்டான். வெளியே வந்து சேத்துப்பட்டு வரை நடந்தான். வெயில் இப்போது மேலும் ஏறியிருந்தது. அவன் நிழல் காலடியில் குறுகி கறைபோல கிடந்தது. அவ்வப்போது நின்று நடந்தான். தண்ணீர் குடிக்கவேண்டும். எங்காவது தண்ணீர் வைத்திருக்கிறார்களா என்று பார்த்தான். ஒரு டீக்கடையில் சில்வர் டிரம்மில் தண்ணீர் இருந்தது. நீரில் குளோரின் நாறியது. சில்வர் கோப்பையில் சங்கிலி தொங்கியது. இரண்டு கோப்பை குடித்ததும் மீண்டும் கொஞ்சம் திடம் வந்தது.

அவன் சபரிகிரீசனின் வீடிருந்த இடத்தை அடைந்தான். அப்பார்ட்மெண்ட் முக்கால்வாசி எழுந்திருந்தது. அன்று வேலையேதும் நடக்கவில்லை. ஒரு வயதான வாட்ச்மேன் மெலிந்த உடலில் தொளதொளப்பான காக்கி சீருடையுடன் மடியில் கழியை வைத்துக்கொண்டு ஸ்டூலில் அமர்ந்திருந்தார். அவன் அருகே சென்று சலாம் வைத்தான்.

அவர் கண்களைச் சுருக்கி பார்த்தார். கிழவர் எதோ கிராமத்திலிருந்து வந்திருக்கலாம். கண்களில் நட்பு இருந்தது. அவன் புன்னகைத்தான்.

கிழவர் “சாப்புடலையோ?” என்றார்

“ஆமா.”

“அந்தாலே அந்த டீக்கடையிலே போயி டீயும் பொறையும் சாப்பிடு… என்னைய காட்டு.”

அவன் டீக்கடையில் சென்று டீயும் பொறையும் கேட்டான்.“அவரு கணக்கிலே” என்று வாட்ச்மேனை சுட்டிக்காட்டினான்.

டீக்கடைக்காரர் பார்க்க வாட்ச்மேன் கையை அசைத்தார். அவன் இரண்டு பொறை எடுத்துக்கொண்டான். இரண்டு இரண்டாகக் கிழித்து நான்கே வாயில் விழுங்கினான். டீயை சூடாக குடித்தான்.

டீ சாப்பிட்டுவிட்டு வந்தபோது மிகமிக தெம்பாக உணர்ந்தான். அவன் மீண்டும் அருகே வந்தபோது வாட்ச்மேன் ஒரு பீடியை நீட்டினார். தானும் ஒன்று பற்றவைத்துக்கொண்டார்.

“நம்ம பேரு டில்லிபாபு… சினிமாத்தொழில். இப்ப சினிமா இல்லை” என்று டில்லி சொன்னான். “கஷ்டதசைதான்… இங்க எங்க டைரக்டர் ஒருத்தரோட வீடு இருந்திச்சு.”

“இங்கயா?” என்றார்.

“ஆமா.”

“இந்த வீடு டாக்டருக்கு சொந்தமாக்குமே.”

“என்ன டாக்டர்?” என்றான் டில்லி.

‘கண்ணுடாக்டர்… அவரு கோட்டூர்புரத்திலே இருக்காரு…சாய்பாபா கோயிலாண்டை.”

“டாக்டருக்கு என்ன வயசு?”

“நாப்பது இருக்கும்…”

“அப்ப அவரு மகன்… நான் சொல்லுறது அவரோட நைனாவை…பழைய டைரக்டர்.”

“அது நமக்கு தெரியாதே தம்பி.”

“அவராத்தான் இருக்கணும்… நான் போய் பாக்கிறேன்” என்றான் டில்லி “நமக்கு எந்த ஊரு?”

“அது கெடக்கு மருதப்பக்கம். இங்கிட்டு வந்து ஏளெட்டு வருசமாச்சு. திரும்பி போகவே இல்லை.”

“ஏன்?”

“காஞ்சுப்போச்சுல்லா? அங்க என்ன இருக்கு?” என்றார் “அப்பன் பாட்டன் இருந்த ஊரு. அதைச் சொன்னா முடியுமா? கூழு ஊத்திக்கிடணும்ல?”

“புள்ளைங்க?”

“அவனுகளும் இங்கதான், மெட்ராஸிலே எங்கிட்டோ. நாம எங்கியும் போறதில்லை. இங்கியேதான் ராப்பகலா… இங்கேருந்தே கட்டை போயிரும்.”

“நாங்கள்லாம் கொல்லவார். ராஜ்முந்திரிப்பக்கம். ஆனா இங்க மூணுதலைமுறை முன்னாடியே வந்திட்டோம்” என்றான் டில்லிபாபு.

“நாங்க மறவர். எம்பேரு ஒச்சன்” என்று அவர் பீடியை பற்றவைத்தார். “இப்ப கஞ்சி சோறுக்கு பிரச்சினை இல்லை. ஆனா நாம இருந்த இருப்புக்கு ஒருத்தன் நம்மளை கையை சொடக்கு போட்டு கூப்பிடுறான். சரி, எல்லாம் அததுக்க கணக்கு… என்ன?”

“ஆமா… அதெல்லாம் நம்ம கையிலே இல்லை.”

அவர்கள் அமைதியாக பீடியை இழுத்தனர். டில்லி கன்னம் குழிய ஆழமாக இழுத்து விட்டான். அவர் கண்களைச் சுருக்கி சாலையை பார்த்தபடி பீடியை இழுத்தார்.

“வரேன்” என்று அவன் கிளம்பினான்.

“டீக்காசு இல்லேங்குறே… கோட்டூர் புரத்துக்கு எப்டி போவே?”

அவன் புன்னகைத்தான்.

“இந்தா இருபது ரூபா வச்சுக்கொ… இம்புட்டுதான் இருக்கு.”

அவன் கும்பிட்டு வாங்கிக்கொண்டான். “தேங்க்ஸ்” என்றான்.

“உங்கிட்ட ஒரு கொச்சை வாடை அடிக்குது… நீ என்ன பண்ணி வளக்கிறியா?”

“இல்லீங்க கழுகு.”

‘என்னது?” என்று வாய் திறந்திருக்க, கையில் பீடி புகைய திகைத்துப்போய் கேட்டார்.

“கழுகு… சினிமாவுக்கு கழுகு வாடகைக்கு உடுறது. இப்ப சான்ஸ் இல்லீங்க”

“அது உன் பேச்சை கேக்குமா?”

“ஆமா.”

“சிறகுவெட்டி வச்சிருப்பியோ?”

“ஆமாங்க. முன்னெல்லாம் சிறகுவெட்டி நகமும் வெட்டிருவோம். இப்ப எல்லாம் இருக்கு.”

“அதுகளை பத்திவிட்டுர வேண்டியதுதானே? தீனிபோட்டு கட்டுமா?”

“ஆமா, ஆனா அதுக கெளம்பணுமே” என்றான். “தொரத்தித் தொரத்தி விடுறேன். போறதில்லை.”

“நீ எங்கிட்டாவது போகவேண்டியதுதானே?”

“நைனா இருக்காரு. விட்டுட்டுப் போகமுடியாது. அதோட அதெல்லாம் வானத்திலே இருக்கிற உசிருங்க. நாம எங்கபோனாலும் வந்திரும்.”

அவர் “பாரு கதையை!” என்று வியந்தார்.

ஒருவர் பைக்கில் வந்து காலூன்றி நின்று “என்ன ஒச்சா, என்ன, இவரு யாரு?” என்றார்.

“டாக்டருக்க நைனாவை தேடி வந்திருக்காரு.”

“யாரு?” என்றார்.

“சினிமா டைரக்டரு?” என்றான் டில்லி.

“சபரிநாதனா அவரு பேரு?”

“ஆமா” என்றான்.

“அவரு ரெண்டுமாசம் முன்னாடியே போய்ட்டாரே.”

“எங்க?”

அவர் சிரித்து “எங்கன்னு யாருக்கு தெரியும்? ஹார்ட்டு அட்டாக்கு. வயசும் எம்பதாச்சுபோல…”

டில்லி பெருமூச்சு விட்டான்.

ஒச்சன் “என்ன செய்ய? நாம ஒண்ணு நினைக்கோம்” என்றார்

“வரேன்யா” என்றான் டில்லி. திரும்பி நடந்தபோது கோட்டூர்புரம் வரை போகவேண்டாமே என்ற ஆறுதலைத்தான் உணர்ந்தான். வெயிலில் நடந்துகொண்டிருந்தான். வழக்கம்போல ஸ்டுடியோக்களுக்கு போகலாம், அங்கேதான் தெரிந்த யாராவது இருப்பார்கள்.

அவனருகே வேன் நிற்கும் ஓசையை அவன் பொருட்படுத்தவில்லை. சட்டென்று பிடரியில் அடி விழுந்தது. “டேய், ஏறுடா வண்டியிலே ஏறுடா” என்று போலீஸ்காரர் அதட்டினார்.

“சார், சார்” என்று அவன் கையை ஏந்தி கெஞ்சினான். “சினிமாவிலே வேலைபாக்குறேன் சார்… சார்… நைனா உடம்பு சரியில்லாம கெடக்கு சார்.”

“ஏறுடா.. வண்டியிலே ஏறு… ரோட்ல டிராமா போடாதே.. ஏறு.”

அவனை கழுத்தை உந்தி வேனில் ஏற்ற முயன்றார்கள். அவன் “சார், என்னா சார் இது?” என்று கொஞ்சம் கோபமாகச் சொன்னான். “நான் வேலைபாக்குறவன் சார்.”

போலீஸ்காரர் படார் படாரென்று அவனை அறைந்தார். அவன் அடி முகத்தில் படாமலிருக்க கையை வைத்து தடுத்தான்.

“படவா, பேசாம இரு… அடிச்சு பல்லை பேத்திருவேன்” என்றார் போலீஸ்காரர்.

“நான் வேலையா போறேன் சார்… நைனா சாககிடக்கார் சார்”.

“டேய் பொத்திட்டிருடா… ” என்று மீண்டும் அறைந்து உள்ளே பிடித்து தள்ளி கதவைச் சாத்தி தானும் ஏறிக்கொண்டார்.

அவன் அழத்தொடங்கினான். அருகே இருந்த ஒரு தாடிக்காரன் அவன் தோளில் தொட்டான். அவன் திரும்பி பார்த்ததும் அவன் வேண்டாம் என்று தலையசைத்தான். அந்த வேனில் ஏற்கனவே எட்டுபேர் இருந்தார்கள்.

அவன் உடலில் அடிபட்ட இடங்கள் வலிக்கத் தொடங்கின. அவன் விசும்பி அழுதுகொண்டே இருந்தான்.

“டேய் என்னடா சத்தம்?” என்றார் போலீஸ்காரர்.

அவன் கண்களை மூடிக்கொண்டான். உடம்பை குறுக்கி தலையை தாழ்த்தி அமர்ந்தான்.

ஜீப் சென்று நின்ற இடம் போலீஸ் ஸ்டேஷன் என்று தோன்றியது. ஆனால் அது நீதிமன்றம் என்று இறங்கிய போதுதான் தெரிந்தது. அவர்களை உந்தி இறக்கி மிகப்பெரிய சிவப்புக் கட்டிடத்தின் திண்ணையோரமாக நிறுத்தினார்கள். அங்கே ஏற்கனவே ஐந்துபேர் நின்றிருந்தார்கள். சுற்றி போலீஸ்காரர்கள் நாலைந்துபேர் நின்றனர். ஒருவர் காக்கி கால்சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து திண்ணையில் பெரிய செங்கல் தூணில் சாய்ந்து அமர்ந்து மடியில் பேட் வைத்து தாளில் எழுதிக்கொண்டிருந்தார்.

எஸ்.ஐ இறங்கி சிகரெட் பற்றவைத்துக்கொண்டார். போலீஸ்காரர் அவர்களிடம் “டேய் அழுகை டிராமாவெல்லாம் வேண்டாம். பேசாம சொன்னதை செய்யணும்… இல்லே பிறகு அவ்ளவுதான்” என்றார்.

டில்லி கைகூப்பி விசும்பியபடி “சார், பெரியமனசு பண்ணுங்க சார். சினிமாவிலே வேலை செய்றவன் சார்” என்றான்.

“வக்காளி, இவன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டானாடா?” என்றார் எஸ்.ஐ.

போலீஸ்காரர் “வாயை மூடுடா” என்று கூவியபடி அவனை லத்தியால் முழங்காலில் மாறிமாறி அறைந்தார். அவன் கையை தலைக்குமேல் கூப்பியபடி தரையில் அமர்ந்தான். அவன் தோளிலும் கைகளிலும் அடிகள் விழுந்தன. பூட்ஸ்காலால் ஓங்கி மிதித்து கீழே தள்ளினார்.

அவன் ”சார், சார், சார்” என்று சொல்லிக்கொண்டே அழுதான்.

“வாய தெறந்தா தாயளி, இங்கேயே போட்டுத் தள்ளீருவேன்” என்றார் போலீஸ்காரர்.

அவன் வெறுந்தரையில் ஒருக்களித்து கிடந்தான். “எந்திச்சு உக்காருடா” என்றார் எஸ்.ஐ.

அவன் எழுந்து குந்தி அமர்ந்தான். மேலே எழுதிக்கொண்டிருந்தவர் ஒருவனிடம் “டேய் இதிலே கைநாட்டு வைடா” என்றார். ஒரு லுங்கிகட்டிய பரட்டைத்தலை ஆள் மையில் கட்டைவிரலை உருட்டி அந்தத் தாளில் ஒற்றினான்.

அவனை ஏற்கனவே தொட்டவன் குனிந்து கைநீட்டி “எந்திரிச்சு நில்லு… பேசாதே” என்றான்.

டில்லி அவன் கையை தொடாமலேயே எழுந்து நின்றான்.

“அடிப்பானுக… ஒண்ணையுமே காதிலே வாங்கிக்கிட மாட்டானுக” என்றான். “நியூசென்ஸ் கேசுதான் போடுவானுக… ஆயிரம் ரூபா ஃபைன், இல்லாட்டி ஜெயிலு… மூணுநாள் ஜெயிலுன்னாக்கூட ஒருநாளிலே விட்டிருவானுக… நாளைக்கேகூட கெளம்பி போயிட்டே இருக்கலாம்… சும்மா அனத்தாதே.”

அவன் “என் நைனா…” என்றான்.

“ஒருநாளுதானே. ஜெயிலிலே கெஞ்சினா டேட் போட்டுட்டு விட்டிருவானுக” என்றான்.

சுதைபெயர்ந்த பெரிய தூணில் சாய்ந்து நின்று டில்லி ஓசையின்றி கண்ணீர்விட்டான்.

மூன்றுநாட்கள் டில்லி சிறையில் இருக்கவேண்டியிருந்தது. நீதிபதியிடம் அவன் ஒரு வார்த்தைகூட சொல்ல வாய்ப்பிருக்கவில்லை. தோளைப்பிடித்து உந்தி உந்தி எங்கோ கொண்டுபோய், எங்கோ நிற்கவைத்து, எங்கெங்கோ கைநாட்டு வைக்கச் செய்து, வேனில் ஏற்றி ,ஓட்டலில் பிரியாணிப் பொட்டலம் வாங்கித்தந்து தின்னவைத்து, சாயங்காலமே ஜெயிலுக்கு கொண்டுசென்றுவிட்டார்கள்.

அங்கே அதட்டி சுட்டிக்காட்டப்பட்ட இடங்களில் கைநாட்டுக்கள் போட்டதும் ஒரு வேனில் வந்த அனைவரையும் கொண்டுபோய் ஒரே அறையில் அடைத்தார்கள். அங்கே அவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு அமரவும் படுக்கவும்தான் இடமிருந்தது.

ஆனால் அவனுடன் வந்தவர்களில் ஒருவன் தவிர எல்லாருமே அதற்குப் பழகிவிட்டவர்கள். அறைக்குள் அமர்ந்ததும் அவர்கள் சளசளவேன்று பேசவும் சிரிக்கவும் ஆரம்பித்தார்கள். அவனுக்கு ஆலோசனை சொன்னவன் பெயர் கருப்பசாமி. அவனும் அவர்கள் ஒளித்து கொண்டுவந்த பீடியை வாங்கி இழுத்துக்கொண்டு பேசத் தொடங்கிவிட்டான்.

டில்லி ஒடுங்கி அமர்ந்திருந்தான். உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. கருப்பசாமி பீடி வேண்டுமா என்று கேட்டபோது மறுத்துவிட்டான். கண்ணீர் பெருகி சொட்டி அதுவாகவே ஓய்ந்தது. ஒரு எண்ணமும் இல்லாமல் வெறுமையாக இருந்தது மனம்.

எப்போதோ நன்றாக தூங்கிவிட்டிருந்தான். விழித்தபோது விடியற்காலை. அறைமுழுக்க உடலின் வெப்பம் நிறைந்திருந்தது. கொசுக்கள் அத்தனைபேர் மேலும் அப்பியிருந்தன. சற்று அசைந்தால்கூட ரீங்கரித்தபடி எழுந்து பறந்தன. அவன் குடிசை இருக்குமிடம்கூட கொசுக்கள் நிறைந்ததுதான். ஆனால் அத்தனை கொசுக்கள் இல்லை.

அவனுக்கு சிறுநீர் முட்டியது. நகர்ந்து நகர்ந்து கதவோரம் வந்து அமர்ந்திருந்தான். விடிந்த பின்புதான் கதவை திறந்தார்கள். சிறுநீர் கழித்து பல்தேய்த்துவிட்டு வந்தான். அவனை விட்டுவிடுவார்கள் என நினைத்தான். ஆனால் காலைச்சாப்பாட்டுக்கு கூட்டிச்சென்றார்கள். இட்லி வடை. ஒரே கூச்சலாகவும் தட்டுகளும் கோப்பைகளும் உரசும் ஒலிகளாகவும் அந்த பெரிய கொட்டகை முழக்கமிட்டது.

டில்லி அங்கிருந்த தொங்குமீசை வார்டனிடம் “அய்யா என்னோட நைனா வீட்டிலே தனியா இருக்காருங்கய்யா… விட்டுரச் சொல்லுங்கய்யா” என்று கெஞ்சினான்.

“டேய், பொத்திட்டு போ… வம்பா அடிதிங்காதே” என்று அவர் லத்தியை ஓங்கினார்.

அவன் கைகூப்பி கண்ணீருடன் பின்னடைந்தான். சுவர் ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்தான். கருப்பசாமி அவனுக்கு அலுமினியத் தட்டில் இட்லி வாங்கிக் கொண்டுவந்து தந்தான். “டேய், சாப்பிடு… சாயங்காலம் விட்டிருவானுக.”

அவன் அதை வாங்கினான். இட்லியின் மணம் வந்ததுமே பசி பொங்கி எழுந்தது வெறிகொண்டு அள்ளி அள்ளி தின்றான்.

“நல்லா சாப்பிடு… கவலைப்படாதே” என்றான் கருப்பசாமி “இவனுக நம்மளை என்ன செஞ்சிர முடியும்? சோத்த மட்டும் தின்னுட்டே இரு. அதான் நமக்கு முக்கியம்.”

அன்று மாலையும் அவனை விடவில்லை. பகல் முழுக்க அவன் தன்னை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். மாலையில் அவன் இன்னொரு வார்டனிடம் கைநீட்டி  “அய்யா நைனா பட்டினி கிடந்து செத்திருவாருய்யா… வாயில்லா ஜீவன் ரெண்டு இருக்குய்யா” என்று கெஞ்சினான்.

ஆனால் அவர்களுக்கு அந்தவகையான கெஞ்சல்களும் கண்ணீரும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவன் கும்பிட்டு கூப்பிட்டுக்கொண்டே இருக்க அவர் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார்

“செரி, இன்னிக்கு வேலை லோடு ஜாஸ்திபோல… காலையிலே விட்டிருவாங்க… எப்டியும் விட்டாகணும். இங்க எடமில்லைல்ல?” என்றான் கருப்பசாமி “பேசாம சாப்பிட்டுட்டு தூங்கு… ஒண்ணியும் கவலைப்படாதே.”

மறுநாள் காலையிலும் அவனை விடாதபோது அவன் பொறுமையிழந்தான். வார்டனிடம் “அய்யா என்னைய விடச்சொல்லிட்டாங்களா? அய்யா” என்றான்.

“டேய், போடா” என்று அவர் லத்தியை ஓங்கினார்.

அவன் சட்டென்று வெறிகொண்டு கூச்சலிட்டான். “டேய் என்னாங்கடா செய்யுறீங்க? டேய் சங்கறுத்து செத்திருவேண்டா… இங்கயே சங்கை அறுத்துக்கிட்டு செத்திருவேண்டா” என்று கூவினான். கையில் கிடைத்த அலுமினிய தட்டை எடுத்து காலால் மிதித்து மடித்து கூராக்கி எடுத்துக்கொண்டு சென்று கழுத்தில் வைத்துக்கொண்டு வெறியுடன் அலறினான். “டேய், செத்திருவேண்டா… டேய்”

ஆனால் இருபக்கத்தில் இருந்தும் அவனை ஒரே சமயம் உதைத்து வீழ்த்தினார்கள். அவன் எழுவதற்குள் இருவரும் “சாவுடா சாவுடா” என்று உதைக்கத் தொடங்கினார்கள். மற்ற கைதிகள் அவனை அவர்கள் உதைப்பதை அமைதியாக நின்று பார்த்தனர்.

அவன் ஓசையில்லாமல் சுருண்டு கிடந்தான். அவர்கள் அவனை இழுத்துச்சென்று சிறிய அறை ஒன்றுக்குள் அடைத்தார்கள். கால்நீட்டி படுக்கக்கூட அதற்குள் இடமில்லை. அது ஒரு மாடிப்படியின் அடிப்பகுதி. முக்கோணவடிவமாக இருந்தது. எழுந்து நிற்கவும் முடியாது.

உடலெங்கும் வலியுடன் அவன் பகல்முழுக்க அதற்குள் கிடந்தான். வலி வெவ்வேறு இடங்களில் சுண்டிக் கொண்டும் துடித்துக் கொண்டும் அதிர்ந்து கொண்டும் இருந்தது. ஒரே சமயம் உடலெங்கும் பல கழுகுகள் கொத்திக்கொத்தி கிழிப்பதுபோல.

கதவை சற்றே திறந்து சாப்பாடு கொடுத்தார்கள். கெட்டியான சப்பாத்தியும் பருப்புக்கறியும். அவன் அவற்றை உண்டுவிட்டு படுத்துக்கொண்டான். அப்போது அந்தி ஆகிவிட்டிருந்தது. இரவில் கொசுக்கள் வந்து மூடிக்கொண்டன. வாயில் பட்ட கொசுக்களை துப்பிக்கொண்டே இருந்தான்.

அடிகளின் வலி அவனை நெடுநேரம் துன்புறுத்தியது. ஆனால் அடிவாங்கியபோது அழுது கொந்தளித்தமையால் ஏற்பட்ட களைப்பு அவனை ஆழ்ந்து உறங்கவைத்தது. விடியற்காலையில் அவன் ஒரு கனவு கண்டு விழித்துக்கொண்டான். அவன் அந்த சிறிய அறைக்குள் செத்து பாதிமட்கிய சடலமாக கிடந்தான். அவனை சூழ்ந்து கழுகுகள் அமர்ந்திருந்தன.

மறுநாள் அவன் வெளியே வந்தபோது கண்கள் மங்கலடைந்திருந்தன. வாய் உலர்ந்திருந்தது. அவன் விடியற்காலை கனவில் மனம் ஏங்கி நெடுநேரம் அழுது தூங்கி விழித்திருந்தான். வெயிலில் கண்கள் கூச முகத்தை கையால் மூடிக்கொண்டான். எதுவும் பேசாமல் தரையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு வார்டர் கொண்டுவந்த சாப்பாட்டை மட்டும் வாங்கி ஆவேசமாக சாப்பிட்டான்.

அன்று அவனை பொது அறையிலேயே வைத்தார்கள். எவரும் அவனிடம் பேசவில்லை. அவன் உடலெங்கும் புண்கள் பொருக்கோடியிருந்தன. கருப்பசாமி மட்டும் அவனிடம் “ரெத்தப்புண்ணுமேலே மூத்திரத்தை கையாலே புடிச்சு ஊத்திக்க… ஆறிரும்” என்றான். அவன் அதைச் செய்யவில்லை. அவர்கள் தரையில் கைவிரல்களை வைத்து எதையோ விளையாடினார்கள். டில்லி சுவர்மூலையில் சாய்ந்து அமர்ந்து உறங்கிவிட்டான்.

அதற்கு அடுத்தநாள்தான் அவனை விடுதலை செய்தார்கள். காலையில் டிபன் சாப்பிட்டபின் அவன் வராந்தாவில் வெயில் விழுந்த முற்றத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனை பெயர் சொல்லி அழைத்ததைக்கூட கேட்கவில்லை. கருப்பசாமிதான் அவனை உலுக்கி அழைத்து அவனை கூப்பிடுகிறார்கள் என்றான். “தைரியமா போ. விட்டிருவாங்க. பாக்கெட்டிலே பணம் கிணம் வச்சிருந்தா கேட்டு வாங்கிக்க.”

அவன் கைநாட்டு போட்டுவிட்டு அவர்கள் எடுத்து வைத்திருந்த இருபது ரூபாயையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது நல்ல வெயில். அவனால் தரையைப் பார்க்கவே முடியவில்லை. கண்கள் கூசி கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. கால்கள் தள்ளாடின. வானத்தில் சென்ற பறவைகளின் நிழல்கள் தரையை கடந்துகொண்டிருந்தன.

எக்மோர் வரை எலெக்ட்ரிக் டிரெயினில் வந்து இறங்கியதும் டில்லி மிகவும் களைத்துப் போயிருந்தான். காலையில் ஜெயிலில் சாப்பிட்டிருந்தான். களிபோன்ற இட்லி நான்கு, ஒரு வடை. டீயில் பால் வழக்கம்போல கெட்டுப்போயிருந்தது. ஆனால் ஜெயிலில் அவனுக்கு பசித்ததுபோல எப்போதும் பசித்ததில்லை.

எக்மூரில் இறங்கும்வரை தன்னிடம் பணமிருப்பதை அவன் உணரவில்லை. தற்செயலாக கையால் பையை தொட்டபோதுதான் ரூபாய் தட்டுபட்டது. இரண்டு பொறையும் நூறுகிராம் சீனியும் வாங்கிக்கொண்டான். நான்கு பீடியும் வாங்குமளவுக்கு காசிருந்தது. நைனா பீடியை விரும்புவார். ஆனால் அதை அவரால் பிடிக்க முடியாது, விரல்கள் நடுங்கும்.

டில்லி வெயிலில் மிகமெல்ல கால்களை இழுத்து இழுத்து வைத்து நடந்தான். பாதங்கள் வீங்கியிருந்தன. பாதங்களின் மடிப்பில் வீக்கம் அழுத்தியதில் ஒருமாதிரி புறுபுறுவென்றது.

அவன் வழியில் ஒரு பஸ்ஸ்டாப்பில் நின்று சற்று இளைப்பாறிக்கொண்டான். குடிசையிலிருந்து கிளம்பியபோது போட்டிருந்த அதே சட்டை. அதன்பின் குளிக்கவில்லை. அந்தச்சட்டையை கழற்றவே இல்லை. மண்ணில் தூசியில் எங்கெல்லாமோ விழுந்து புரண்டு தூங்கிவிட்டிருந்தான். ரத்தம் உலர்ந்து கருப்புக் கறையாக மாறிவிட்டிருந்தது.

அவன் சாலையில் இருந்து தன் குடிலை நோக்கி திரும்பிய சந்தை அடைந்தபோது அந்த நினைப்பு வந்தது. நைனா உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை.

அந்தச் சந்து உண்மையில் ஒரு சாக்கடை. அதன்மேல் போடப்பட்டிருந்த உடைந்த கான்கிரீட் கற்களில் காலை வைத்து தாவி உள்ளே சென்றான். கழுகுகளின் ஓசை கேட்கத்தொடங்கியதும் அவன் உடல் பரபரப்படைந்தது. கைவிரல்கள் நடுங்கின. நின்று தன் பதற்றத்தை குறைத்துக்கொண்டு மேலே சென்றான்.

அவனுடைய வாசனை கழுகுகளுக்கு கிடைத்துவிட்டிருந்தது. அவன் முற்றத்தை அடைந்தபோது எதிர்பாராமல் ஒரு குளிர்ந்த காற்று வந்து முகத்தையும் நெஞ்சையும் மூடிச் சூழ்ந்துகொண்டதுபோல ஒரு நிம்மதியை உணர்ந்தான். கைகள் தளர தோள்கள் தொய்ந்துவிழ அப்படியே நின்றான்.

அவனுடைய எல்லா பதற்றங்களும் வடிந்தன. மிகமிக நிதானமானவனாக ஆனான். அப்போதுதான் தன் முகம் அப்படி தசை இறுகி இழுபட்டு இருந்திருக்கிறது என்பதை அவனே உணர்ந்தான். முகத்தசைகள் ஒவ்வொன்றாக விடுபட்டு தொய்வடைவதை அவனே அறிந்தான்.

குடிலுக்குள் இருந்து ஆல்பா பறந்து வந்தது. அவன் தலைக்குமேல் க்ராவ்க் என்ற ஓசையுடன் கடந்துசென்று சுழன்றும் திரும்பி வந்து மீண்டும் கடந்துசென்று வளைந்து மண்ணில் அமர்ந்தது. பீட்டா உள்ளிருந்து நடந்து வெளியே வந்து சிறகடித்து எழுந்து காற்றில் சுழன்றி இறங்கியது. இரு கழுகுகளும் அவனைச்சுற்றி பறந்த சிறகுக்காற்று அவன் முகத்தில் பட்டது.

அவன் “நைனா” என்று அழைத்தான். அதற்குள்ளாகவே அழுகிய சடலத்தின் நாற்றத்தை அவன் மூக்கு உணர்ந்துவிட்டது. குடிலுக்குள் தலைகுனிந்து உள்ளே சென்றான். உள்ளே கட்டிலில் நைனா படுத்திருந்தார். அவன் மிகமெல்ல அருகே சென்றான். “நைனா” என்றான்.

கழுகுகள் உள்ளே வந்து குடிலுக்குள் சிறகுகள் கூரையிலும் தட்டிகளிலும் உரச சுழன்று பறந்தன. ஆல்ஃபா சடலத்தின் தலைமாட்டில் அமர்ந்தது. பீட்டா அதன் மார்பின்மேல் அமர்ந்து தன் கால்களை அலகால் மெல்ல கொத்திக்கொண்டது.

நைனாவின்  மெலிந்த உடல் நன்றாக உப்பியிருந்தது. அவர் மிக குண்டாக ஆனதுபோல. ஒட்டிய கன்னங்கள் வீங்கி கண்களை இடுங்கவைத்திருந்தன. வெறித்து திறந்திருந்த கண்களில் எறும்புகளோ சிறிய பூச்சிகளோ நிறைந்திருந்தன. வாய் கருமையாக திறந்து உள்ளே நாக்கு வீங்கியிருந்தது. வயிறு உப்பி தொந்திபோலிருந்தது. அறைக்குள் நீலநிறமான பெரிய ஈக்கள் ம்ம்ம்ம் என்று ஓசையிட்டபடி பறந்தன. பீட்டா அமர்ந்தபோது ஓசையிட்டபடி எழுந்து பின் அமைந்தன.

அவர் அவன் கிளம்பியபோதே இறந்திருக்கவேண்டும். ஆல்ஃபாவும் பீட்டாவும் அங்கே இல்லை என்றால் பெருச்சாளிகள் அதை குதறிவிட்டிருக்கும். வேறுபறவைகளும் வந்திருக்கும்.

அவன் இரு கழுகுகளையும் பார்த்துக்கொண்டிருந்தான். பீட்டாவால் பறக்கவே முடியவில்லை. சற்றுதூரம் பறந்ததும் அது சிறகு ஓய்ந்து மீண்டும் அமர்ந்தது. சிறகை விசிறி போல விரித்து தரைவரை தாழ்த்தி கழுத்தை உள்ளிழுத்தது. அதன் கீழ்த்தாடை பதைத்துக்கொண்டே இருந்தது. அடிக்கடி தாகம்போல வாய்திறந்து ஏங்கியது. அதுவும் இன்னும் ஓரிருநாளில் செத்துவிடலாம். ஆல்ஃபா மேலும் சிலநாட்கள் உயிருடன் இருக்கலாம்.

டில்லி வெளியே சென்றான். சந்து வழியாக போய் அதன் முனையில் இருந்த டோபி கந்தசாமியின் குடிசை முன் நின்று “கந்தண்ணே, கந்தண்ணே” என்றான்.

கந்தசாமி உள்ளிருந்து வந்து “இன்னாடா? நீ அங்க இல்லியா என்ன? உன்னோட பெரியகாக்கா ரெண்டும் கலைஞ்சுகிட்டே இருந்துச்சே” என்றான்.

“நைனா செத்துட்டார்” என்றான்.

“எப்ப?”

“ரெண்டுநாள் ஆயிருக்கணும்”

“அதான் நாத்தமா? நான் கூவத்திலே எதாச்சும் வந்திருக்கும்னு நெனைச்சேன்” என்றான் கந்தசாமி “உன்னோட பெரியகாக்காய்ங்க கொத்தி தின்னிருக்குமே?”

“இல்லை” என்றான். “பாடி அப்டியே இருக்கு… முனிசிப்பாலிட்டிக்குச் சொல்லணும்”

“துட்டு வச்சிருக்கியா?”

“இல்ல.”

“இல்லேன்னா அவன் வருவானா? பைசா கேக்கமாட்டான்?”

டில்லி ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

“அப்ப ஒண்ணு பண்ணு… நீ அப்டியே எங்கியாம் காணாமப் போயிடு… நான் சொல்லிடறேன். அவனே கொண்டுபோவான்”

“செரிண்ணே” என்றான் டில்லி.

அவன் திரும்பிப் பார்த்தான். அங்கே ஏதாவது எடுப்பதற்கு உண்டா?

கந்தசாமி “டேய், அதுக ரெண்டையும் கூட்டிட்டுப்போ… அதுகளை கண்டா அவனுக வரமாட்டானுக” என்றான்.

“அதுகளை கூட்டிட்டு போகமுடியாதுண்ணே.. அதுவும் இப்ப பகல் நேரத்திலே” என்றான் டில்லி.

“என்னடா பேஜாரா கீது” என்றான் கந்தசாமி

டில்லி அந்த முனையில் சற்றுநேரம் நின்றான். திரும்ப குடிசைக்குச் சென்று அந்த பொறை ரொட்டிகளையும் பீடியையும் சீனியையும் பிரித்து நைனாவின் அருகே வைத்தான். அவர் கால்களை தொட்டு கும்பிட்டுவிட்டு வெளியே வந்தான்.

சாலை நீர்ப்பரப்பு போல நெளிந்துகொண்டிருந்தது. அவன் சற்றுதூரம் நடந்தபோது வலப்பக்கம் ஒரு பள்ளிக்கூட மைதானம் தெரிந்தது. அங்கே யாருமே இல்லை. சிறிய மதில்தான், அதை ஏறிக்கடந்து உள்ளே சென்றான். செம்மண் பரப்பு வெயிலில் வெறிச்சிட்டு கிடந்தது.

சிறிய புங்கமரத்தின் அடியில் அவன் மல்லாந்து படுத்துக்கொண்டான். ஒரு பீடியை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டான். பெருமூச்சுடன் கால்மேல் கால்போட்டு வானத்தை பார்த்தான். மிகமிக உயரத்தில் நான்கு கரிய புள்ளிகள் மிகமெல்ல வட்டமிட்டுக்கொண்டிருந்தன. வானத்தில் ஒட்டி நகர்பவைபோல. அவன் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தான்.

***

முந்தைய கட்டுரைதிராவிட மனு- இரு எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைஇந்நிலவு