அன்னம்,செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அன்னம் உணர்ச்சிபூர்வமான கதை. கதை ஒரு டெக்னிக்கல் துப்பறியும் கதை போலத் தொடங்கி மிகநுட்பமாக நீண்டு நீண்டு செல்கிறது ஒரு இடத்தில் கதை அடையும் உணர்ச்சிநிலைகளே கதையின் அம்சங்களாக ஆகிவிடுகிறது.

இந்தக்கதை அளிக்கும் சில குறிப்புகளை வாசகனாக நான் வாங்கிக்கொண்டேன். அதைப்பற்றி எவராவது எழுதுவார்கள் என்று நினைத்தேன். அது இந்துவின் உள்ளத்தில் அசுரர்- அரக்கர் ஆகியோருக்கான இடம். அவர்கள்  ‘அந்நியர்கள்’ ஆகத்தான் அவனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அவன் அப்படித்தான் பார்க்கிறான். அவர்களுக்கு ஒரு தோற்றமும் அளிக்கப்பட்டிருக்கிற்து. கறுப்பு, பெரிய உருவம்.

ஆனால் இங்கே எல்லா அசுரச் சக்கரவர்த்திகளும் அரக்க சக்கரவர்த்திகளும் புராணங்களால் போற்றி புகழப்பட்டிருக்கிறார்கள். அதிலும் கார்த்தவீர்யார்ஜுனன், மகாபலி, நரகாசுரன் போன்ற சில அசுரர்கள் மக்களால் தங்கள் அரசர்கள் மூதாதையர் என்றும் நினைக்கப்படுகிறார்கள். மகாபலி கேரளத்தின் மூதாதை இல்லையா? கதகளி தெருக்கூத்து யட்சகானம் போன்ற கலைகளில் இவர்கள்தான் நாயகர்க்ள். இவர்கள் கொல்லப்படுவதை இந்தக்கலைகள் துயரத்துடன்தான் நடிக்கின்றன

ஹெப்பார் யட்சகான ஆசிரியர். அவர் கருத்த சாகிப்பை கார்த்தவீரியன் என்கிறார். கார்த்தவீரியனை தெருக்கூத்தில் பெரும் கொடையாளி, அன்னதாதா என்கிறர்கள். அவருடைய ஆயிரம் கையையும் வெட்டி பரசுராமன் அவரைக்கொன்றார்.   ஆனால் வடக்குதமிழ்நாட்டில் அவர் தெய்வம்போல. இங்கே எப்படி ஹெப்பாரின் மனசில் சாகிப் கார்த்தவீரியர் என்று தோன்றியது. எது அவரை அசுரர்களுடன் இணைத்தது. அவர் மனசுக்குள் நிகழ்ந்த தலைகீழாக்கங்கள் என்ன? ஆச்சரியமான விடைகளுக்கு நாம் செல்லமுடியும்?

ஹெப்பார் கருத்த சாகிப்பின் விருந்துபச்சாரத்தை வேள்வி என்கிறார். எந்த வேள்வியிலும் அந்த சமத்துவம் இருந்ததில்லை என்கிறார். அவர் பிராமணராக இருந்தாலும் ‘விலக்கப்பட்ட’ பிராமணர். ஆகவே இந்த அசுரவேள்வியை பார்க்கும் கண் அவருக்கு வந்துவிட்டிருக்கிறது. இங்கே சோறுதான் வேள்வி. புராணங்களில் எல்லா அசுரர்களுக்கும் வேள்விகள் உண்டு. அவர்கள் செய்த வேள்விகள் இப்படித்தான் இருந்திருக்கும்

கதைகளில் சப்டெக்ஸ்ட் என்கிறோம். அது ஆசிரியர் முடைந்து வைப்பது கிடையாது. இப்படி குறிப்புகள் வழியாக அவரை அறியாமலேயேகூட உருவாகி வருவதுதான்

எம்.பாஸ்கர்

***

வணக்கம் ஜெ,

அன்னம் சிறுகதையை வாசித்தேன். கறுத்த சாகிப் எனக்கு கெத்தேல் சாகிபைத்தான் நினைவுறுத்துகிறார். அவரின் இன்னொரு வடிவுதான் இவர். மைக்ரோபோனில் அறை முழுதும் ஒன்று நூறென முட்டிப் பொருளிலா மனித ஒலிகளாக நிறைந்த அறையில் கேட்டு மலர்ந்திருக்கும் சாகிபின் முகம் கூட காண முடிந்தது. இரு பக்கமும் பல மடங்கு உந்தி வந்த பின்னரே ‘அதனாலென்ன’ எனச் சொல்ல முடிகிறது. அதனாலும் என்ன…

அரவின் குமார்

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உங்கள் வாசகர்களுக்கு உங்களை வாசிக்காமல் ஒரு நாள் கடந்துசெல்வதில்லை. உண்மையில் 69 கதைகளும் முடிந்தபின் அத்தனை கதைகளையும் திரும்ப வாசித்தேன். பழைய கதைகளை திரும்ப வாசித்தேன். மன்மதன் போன்ற கதைகள் அவை வெளிவந்தபோதிருந்ததை விட மிகப்பெரிய அழகுடன் இப்போது இருப்பதை கண்டுபிடித்தேன்

இந்த வரிசையில் இன்றைக்கு என்னை மிகவும் கவர்ந்த கதை செய்தி. அந்தசிறுகதையை வாசிக்கும்போது வெண்முரசில் பீஷ்மர் ஒரு புல்லை பறித்து வீசி போரிடுவது ஞாபகம் வந்தது. அதிலிருந்துதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழி வந்திருக்கவேண்டும். புல் அம்பாகும் வித்தை என்றால் அது கூர்மையானதுதானே

ஒருசாதாரணமான சம்பவம். சம்பவம்கூட இல்லை. ஒரு தருணம். அதில் இருக்கும் இனிமையை தொட்டுக்காட்டிவிட்டது அந்தக்கதை.

ஆர்.ஜெயலட்சுமி

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

தொடர்சிறுகதைகளும்,  கல்பொருசிறுநுரையும் நிறைவடைந்திருக்கும் போது இந்த கதைத்திருவிழா துவங்கியதும், தொடருவதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. நெடுங்கதைகள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ’செய்தி’ மனதுக்கு மிகவும் பிரியமானதொன்றாகிவிட்டதது. ஒரு கையால் டிரெளசரை பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்த அனந்தன் இப்போது மீசையரும்பும் பதின் வயதில், அவ்வயதுக்கே உரிய  தவிப்புகள், குழப்பங்கள், ஈர்ப்புக்கள் அனைத்தும் இருக்கும் அனந்தன், லீலையின் உரப்பனை நினைவு படுத்திய அனந்தன், தொலைவிலிருந்து பகவதியம்மையை பார்க்கையிலேயே அவளது கன்னங்களின் பளபளப்பும் மார்பகங்களும், பதைக்கும் கழுத்துக்குழியும், மூச்சையும் கவனிக்கும், பெண்ணை உடலாக அறிந்துகொள்ளும் முதல்படியில் இருக்கும் அனந்தன்

கணவனின் அருகாமையை சமீபத்தில் தான் இழந்திருக்கும், பாம்பேன்னா வானத்துக்கு பக்கத்தில் என்று நம்பும், எழுதப்படிக்கத்தெரியாத  பகவதியம்மை, கூச்சமும், தயக்கமும், பதட்டமும், விருப்பமுமாக அனந்தன், இப்படி இரு கதாபத்திரங்களின் இயல்பே கதையின் சுவாரஸ்யத்தை துவக்கத்திலேயே கூட்டிவிடுகின்றது. இவர்களுக்கிடையில் குமரேசன் எழுதியதும் அனந்தன் தெரிவித்ததுமாக இருவேறு செய்திகளுடன் அழகிய கதை .

லெட்டரில் குமரேசனின், ”நான் சுகம் நீ சுகமா பணம் பத்திரம் பி்ள்ளைகள் பத்திரம்” என்னும்  அலங்கரங்களும், கூடுதல் அன்பும் பிரிவின் ஆற்றாமையும், ஏக்கமும் எதுவும் இல்லாத நேரடியான செய்திக்கும் , அனந்தனின் ஒரு கவிதையைப்போன்ற, செல்லக்குட்டி என்னும் விளியும், கண்களின் அழகையும் காராமணிப்பயறுபோன்ற பளபளக்கும் நிறத்தையும், பூவைப்போன்ற உதடுகளையும், பிரிவாற்றாமையையும், மீண்டும் பார்க்கவேண்டும் என்னும் ஏக்கத்தையும் தெரிவிக்கும் அந்த பூப்போன்ற உதடுகளில் ஒரு முத்தமும் கொடுத்திருக்கும் ‘அன்புள்ள’ கணவன் குமரேசனின் செய்திக்கும் இருப்பது  உண்மைக்கும் விருப்பத்திற்கும் இருக்கும் வித்தி்யாசமல்லவா?

அனந்தன் வாசிக்கையிலேயே அது அவளுக்கு தெரிந்துவிட்டிருக்கும். குமரேசனுக்கு எழுதப்படிக்க மட்டுமல்ல, பிரியத்தை  இப்படி காட்டவும் தெரியது என்று பகவதிக்கல்லவா நன்றாகத் தெரியும்?

ஆனால் அப்படி ஒரு செய்தி அவளுக்கும் வேண்டி இருந்திருக்கிறது. அனந்தன் அதை வாசித்தது, அனந்தனின் அருகாமை, அனந்தன் மகனின் பெயரைக்கேட்டது, இப்படி எல்லாமே அவளுக்கு தேவையானவையே அதனலேயே அவள் உலகதின் ஆகச்சிறிய ரகசியமான அந்த 300 ரூபாய்களைக் குறித்து அவனிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

பகவதியம்மையின் பூவைப்போன்ற சிறிய உதடுகளில் முத்தம் கொடுப்பதற்கு முன்னர் அனந்தன் எடுத்துக்கொள்ளும் அந்த அவகாசத்தில், மிக மிக அடர்த்தியான, குளிர்ந்த காற்றுப்பரப்பை உடலால் கிழித்து அப்பால் கடந்துவந்த அந்த இடைவெளியில் சிறுவனாயிருந்த அனந்தன் ஆணாகிவிட்டிருக்கிறான்.

அதை அறிந்துகொண்ட கிளர்ச்சியினால்தான், அங்கேயே செயலற்று அமர்ந்திருந்ததும், எங்கோ துணி துவைக்கும் ஓசை அவன் உடல்மேல் கூழாங்கற்கள் போல விழுந்து கொத்திக்கொத்தி துரத்துவதும், இலக்கில்லா பிரயாணமும்,  சினிமாவும், விஜயஸ்ரீயுமாக அத்தனை இம்சை

சிறுவனாக குற்றணர்ச்சியும் ஆணாக பெருமிதமுமாக கலவவையான உணர்வுகளால் அல்லாடும் அனந்தன்

பகவதிக்கு மட்டுமல்லாது, அனைத்துப் பெண்களுக்குமே மாதம் சுளையாக வரும் ருபாய்களைவிட அனந்தன் சொன்னதுபோன்ற செய்தியே அதிகமில்லாவிடினும் கொஞ்சமாவது வேண்டி இருக்கிறது.

நான் வசிக்கும் இந்த கிராமத்தில் டிராக்டர் பணிமனை வைத்திருக்கும் ஒரு மலையாளக்குடும்பமும் இருக்கிறது எனக்கு அவர்களுடன் நல்ல நட்பும் இருக்கின்றது. அவர்களின் இருமகன்களும், சென்றமாதம் திருமணமான  அவர்களின் மூத்த மகன் விஷ்ணுவின் மனைவியும் கூட என் மாணவர்களே!

கொரோனா கெடுபிடிகளால் சுருக்கமாக, சிக்கனமாக, எங்களூருக்கு பக்கத்திலிருக்கும் ஒரு மும்மூர்த்திகளின் கோவிலில் திருமணம் முடித்து மறுநாள் அதிகாலையிலேயே, ஊர் போய் சேர்ந்ததும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயத்துடன் சிறப்பு அனுமதியில் மணமக்கள் இருவரும் விஷ்ணு பணிபுரியும் வால்பாறை எஸ்டேட்டுக்கு இருசக்கர வாகனத்தில் பயணப்பட்டார்கள். ’எத்தனை அருமையான் தேனிலவு‘ என்று  ஊருக்குள் ஒரே பேச்சாக இருந்தது

விஷ்ணுவின் அம்மா ஜோதி சேச்சி சிலநாட்கள் முன்பு வீட்டுக்கு வந்திருந்து மகனின் மகிழ்ச்சியான திருமண வாழ்வையும், அவன் மருமகளை எத்தனை செல்லமாக வைத்துக்கொள்கிறானென்றும் சந்தோஷமும் பெருமையுமாக  சொல்லிக்கொண்டிருந்தார்கள். விடைபெற்றுக்கொள்ளுகையில் ’’எனக்கும் விவாகமாயி 28 வருஷமாச்சு இப்போ வரையில் ஒரே ஒரு முறைதான் என்னை இந்த மனுஷன் ஜோதிக்குட்டின்னு கூப்பிட்டிருக்காரு, சண்டை  போடாம இருந்தாலே அதே செல்லம்னு ஆயிருச்சசு, இவனெல்லாம் படிச்சு நாகரீகமானதால் பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கறதுன்னு தெரிஞ்சிருக்கு,என்று ஆதங்கமாக சொல்லிக்கொண்டு போனார்கள்

28 நீண்ட வருடங்களுக்குப்பின்னும் அந்த ’’ஜோதிக்குட்டி’’ என்னும் ஒற்றைவிளியை இன்னும் மனதில் இத்தனை பத்திரமாக வைத்திருக்கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு எத்தனை தேவையாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கொணடே இருந்தேன்

சென்ற வாரம் விஷ்ணு என்னை போனில் அழைத்து ‘’ மேம் நேத்து ராத்திரி இங்கே எஸ்டேட்டில் வீட்டுக்கு முன்னாடி ஒரு யானை, சக்கை மரத்தில் முன்காலிரண்டையும் வச்சு நின்னுகிட்டு பழத்தை சாப்பிட்டுது கணணாடி ஜன்னல் வழியே பார்த்தோம்,  இவ  யானையை அத்தனை பக்கத்தில் பார்த்து பயந்துடடா  பாவம்’’ என்றபோது எப்போதும் மழையும் மேகமுமாக நிறைந்திருக்கும், பச்சைதிண்டுகளாக தேயிலைச்செடிகள் சூழ்ந்திருக்கும் ஒரு மலைப்பிரதேசத்தில், புதுக்கணவனின் அருகாமையில் இரவில், கணணாடிச்சன்னல் வழியே யானையை பார்த்துக்கொண்டிருக்கும் இளம்பெண்ணின், அவளை அச்சப்படவேண்டாம் என்று தேற்றும் கணவனின் சித்திரத்தில்  எனக்கே சத்தியத்தில் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது.

பேருந்தில் அனந்தனும் பகவதியும் கண்களால் பரிமாறிக்கொள்ளும் செய்தியுடன் முடியும் இக்கதை அனந்தனின் அந்தரங்கத்தின் செய்தியை மட்டுமல்லாது மனைவியின் விருப்பங்களைக்குறித்து அறியாத லட்சோபலட்சம் ஆண்களுக்கான செய்தியும் இருக்கின்றது

அன்புடன்

லோகமாதேவி

***

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
அடுத்த கட்டுரைகணக்கு,சுக்ரர்- கடிதங்கள்