கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
அன்னம் சமீபத்தில் நான் வாசித்த கதைகளிலேயே ஆழமான ஒரு விஷன் கொண்டது. தர்மம் என்று சொல்கிறோம். அதை நாம் எப்படி அடைய முடியும்? தர்மம் என்று சொல்வது ஒரு ஐடியா இல்லை. அதை ஒரு ஐடியாவாக ஏற்று அதை நம்பினால் அதன்பிறகு அதை நாம் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்போமே ஒழிய அது நம்மை எந்தவகையிலும் ஊடுருவி அதிலேயே ஈடுபட்டவர்களாக ஆக்காது. தர்மம் சர என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. தர்மம் ஒழுகவேண்டிய ஒன்று. ஒழுகவேண்டுமென்றால் அது நம் இயல்பாக ஆகிவிடவேண்டும். நம்முள் கலந்துவிடவேண்டும்.
அப்படி கலந்துவிடும் ஒருவரிடம் அது ஒரு ஐடியாவாக இருக்கது. ஒரு இமோஷனாகவே இருக்கும். ஒரு இயல்பாக இருக்கும். அவரால் அதை பேசி நிறுவ முடியாது. அவருடைய இயல்பு அதுவாக இருப்பதனால் அவரால் அதைவிட்டு வேறுமாதிரி இருக்கவும் முடியாது. மகாதார்மிகர் என்று சிலபேர் உண்டு. அவர்களின் இயல்புகளிலே முக்கியமானது, அவர்களெல்லாம் கள்ளம் கபடமற்றவர்கள் என்பது. கொஞ்சம் கூர்மை இருந்தாலே சுயநலம் வந்துவிடும். கணக்குகூட்டல்கள் வந்துவிடும். தார்மிகர்கள் கள்ளமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதை மகாபாரதத்தின் பல உதாரண கதைகளில் இருந்து காணலாம்
அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரமாகவே இதில் கறுத்தசாகிப் வருகிறார். அதற்கு நீங்கள் அளித்திருக்கும் டீடெயில்கள் அப்படி உண்மையிலேயே ஒருவர் இருந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. தன்னுடைய களங்கமில்லாத எளிமையால் இன்னொரு மனிதர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்ட மகாத்மா அவர். அவரை நினைத்து வணங்குகிறேன்
சுவாமி
***
அன்பு ஜெ,
“அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.” என்ன அற்புதமான தத்துவம் ஜெ. நினைத்து நினைத்து பூரித்திருந்தேன். யாவும் அன்னம் என்று கர்சித்தே சிரித்திருந்தேன். பாரதி அனைத்தையும் ஒன்று என்பானே…
“இவ்வுலகம் ஒன்று.
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு — இவை யனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி,
குழல், கோமேதகம் — இவ் வனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி — இஃதெல்லாம் ஒன்று.
மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி — இவை ஒருபொருள்.
வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் —
இவை ஒருபொருளின் பலதோற்றம்.
உள்ள தெல்லாம் ஒரேபொருள், ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.
‘தானே’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.”
இந்த வரிகளை சென்னை JK-வசந்த விகாரில் ஓர் இரவு பாட்டாக கேட்டு “தான்” -ஐக் கரைத்திருந்தேன். அதை நினைவு கூர்ந்தேன் ஜெ. யாவும் ஒன்றே எனும் போது காணும் உலகம் மாறிவிடுகிறதே. யாவும் அன்னம் என்பதை பிரமித்தேன். இது வேறோர் கண்ணோட்டம். அதில் திழைத்தேன் எனலாம் ஜெ.
நான் கூட அப்துல் ரஹ்மானைப். போல சாப்பாட்டுப் பிரியர் தான். உணவுகளை தேடித்தேடி கலையைப் போல இரசித்த துண்டு. அதன் மனம், நிறம், சுவை என, என் அனைத்து புலன்களையும் மீட்டி இரசித்திருப்பேன். சில விலை உயர்ந்த சுவைமிகு உணவுக்காக காசு சேர்த்து வைத்து காத்திருந்தெல்லாம் உண்டிருக்கிறேன். என் போன்றவர்களைக் கண்டால் “என் இனமடா நீ!” என்று ஆரத்தழுவிக் கொள்ளத் தோன்றும். அங்ஙனமே அப்துல் ரஹ்மானை “ஆகா! பேஷ் பேஷ்” எனும் போது மனதாரத் தழுவினேன். பிரியாணி என் உயிர் எனலாம். நீங்கள் விளக்கியிருந்த பிரியாணிப் பந்தியை கிருஷ்ணபட் போல நானும் இரசித்திருந்தேன்.
விருந்து ஓம்புதலின் முழுமையை இங்கு கண்டேன் ஜெ. குறளினிது என்ற உங்களின் பேச்சில் வருவிருந்து மற்றும் செல் விருந்து பற்றியெல்லாம் நீங்கள் சொன்னது நினைவிற்கு வந்தது. “செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்வருந்து வானத் தவர்க்கு.” என்ற குறளும் அதனோடு நினைவிற்கு வந்தது.
பலிக்கல்லைப் போல ராஜனைப் போல இந்த அன்னத்திலும் ஒரு சமூகக் குட்டு வைத்திருந்தீர்கள். அதையும் இரசிக்காமல் இல்லை.
“ஆனால் குரல்கள் ஆத்மாவின் பகுதிகள். நத்தை ஊர்ந்துபோகும்போது அதன் ஒரு பகுதிதான் ஒளிவிடக்கூடிய தடமாக ஆகிறது. அதுதான் சைதன்யம் என்பது” என்றீர்களே ஜெ. அதனை நான் உணர்ந்திருக்கிறேன். நான் ஒரு தனிமை விரும்பிதான். கிட்டத்தட்ட 3 வருடங்கள் தனிமையின் உச்சியைக் கண்டிருக்கிறேன். தோல்விகளால் உந்தப்பட்டு ஒருவகை மனஅழுத்தத்திற்கு ஆளானபோது தனிமைவிரும்பியாய் சற்றும் இருக்க முடியவில்லை. சென்னையின் இரைச்சல் மிகு பகுதியில் வெகு நேரம் உட்கார்ந்திருப்பேன். மனிதர்களின் குரல்களைக் கேட்பதையே ஓர் தெரப்பி போல் செய்திருந்தேன். கூச்சல் மிகு இடங்களில் தேனீர் சுவைத்து குரல்களில் சிலாகிப்பேன். முன்பெல்லாம் படிப்பதற்கு தனிமையான ஓசையற்ற இடங்களைத் தெரிவு செய்வேன். இன்றோ அதற்கு நேர்மாறாக மாறிவிட்டேன். எனக்கு அப்துல் ரஹ்மானை புரிய முடிகிறது ஜெ. ஒரு வகையில் இந்தக் கதையில் நான் தெரிந்து கொண்டது என்னைப் பற்றி தான். எனக்கு நோயில்லை. நான் இருப்பது ஒரு நிலை. முன்பெல்லாம் அதிகமாக செல்பேசியில் சதா பேசிக் கொண்டிருக்கும் என் அம்மிவிடம் கடிந்து கொண்டிருக்கிறேன். வேஸ்ட் ஆஃப் டைம் என்றிருக்கிறேன். இன்று அதே நான் அவளிடம் அளிப்பது புன் முறுவலைத் தான். அவள் தேடுவது குரல்களைத் தான். பல வித குரல்கள். தொலைபேசி வந்த காலகட்டத்தில் ராங் நம்பரில் பேசுவது ஒரு சுகம் என்பார் என் சிற்றப்பா. எல்லாம் வித விதமான குரல்களைத் தேடிதானோ…இரைச்சல்களல்ல உயிருள்ள குரல்கள்.
“அதனாலென்ன?” தெரியாத குரல்கள் தான். அற்புதமான முடிபு. அந்த வார்த்தையை சொல்லிக் கொண்டேன்.
“அதனாலென்ன?”
என்றும் அன்புடன்
இரம்யா.
***
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
மூத்தோள் தமிழ்ச்சிறுகதை உலகிலேயே கொஞ்சம் புதுமையானது. தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு இந்தியத் தொன்மங்களைப் பயன்படுத்தி எவரும் எதையும் பெரிதாக எழுதியதில்லை. அவற்றை ஒருவகையான metaphor tools ஆக கொள்ளலாம் என்ற எண்ணம்கூட இங்கே இருந்ததில்லை. அந்த குறைபாடு நம்முடைய பெரும்பாலான எழுத்துக்களில் உண்டு.
புதுமைப்பித்தன் சைவப்படிமங்களை பயன்படுத்தி எழுதிய கதைகள், தியானம் யோகம் போன்றவற்றைப் பற்றி எழுதிய கதைகள் எல்லாமே இங்கே பெரிதாக வாசிக்கப்படவில்லை. ஆகவேதான் தொடர்ச்சியாக அந்தவகையான எழுத்து உருவாகவில்லை. பிறகு இங்கே அந்த மரபுகளை அவநம்பிக்கையாக பார்க்கும் மனநிலை உருவாகியது. ஆகவே அவற்றை எவருக்கும் தெரிந்திருக்கவில்லை
எனக்கேகூட மூதேவி என்ற சொல் அறிமுகமான அளவு அந்த தெய்வம் தெரிந்திருக்கவில்லை. நீங்களே எழுதித்தான் அறிந்தேன். சேட்டை என்ற கட்டுரை. இந்தக்கதையை வாசிக்கும்போதுதான் அப்படி ஒரு தெய்வத்தை உருவகம் செய்வதிலுள்ள wisdom என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இரண்டு அம்சங்கள் கொண்டது அந்த wisdom. ஒன்று, அது ஒரு tribal vision. ஆப்ரிக்காவிலெல்லாம் கூட நோய், மரணம் ஆகியவற்றுக்கான தெய்வங்கள் உள்ளன. அதை ஒரு philosophical structure சந்திக்கும்போதுதான் இந்த தேவி உருவாகி வரமுடியும். அந்த பிளெண்ட் அல்லது டைலடிக்ஸ்தான் ஆச்சரியமான ஒரு விஷயம்
இந்தக்கதை அந்த இடத்தைத்தான் தொடுகிறது. குகைக்குள் இருப்பது சரியான ஆதிவாசி தர்சனம். அதை அந்த தாந்த்ரீகர் மதத்திற்குள் கொண்டுவருகிறார். அவர் அதற்கும் இங்கே இடமுண்டு, அது இல்லாமல் ஆகாது என்கிறார். அந்த ஆழத்தை அறிந்துகொள்ளாத மெக்கானிக்கலான தத்துவவாசிப்பு உருவாக்கும் மொண்ணையான puritanism தான் அந்தக்கதையின் சாராம்சம். இது ஒரு அரசியல் சார்ந்து நடந்துகொண்டிருக்கும் ஒரு revivalismத்தின் பகுதியாக எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது
இங்கே முன்பே நடந்ததுதான். பக்தி இயக்கத்தின்போது சைவத்தின் தாந்த்ரீகமதங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டன. அவை சித்தர் மரபாக திரும்பி வந்தன மறைமலை அடிகள் அவருடைய ‘சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடலாமா?’என்ற கட்டுரையில் இந்த நிலைபாட்டை எடுக்கிறார். சைவ revivalism இதைத்தான் பேசியது. அத்வைத revivalismமும் இதைத்தான் பேசியது. பாரதி மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள் என்று பாடியதும் இதைத்தான். இதையெல்லாம் தாண்டித்தான் அந்த age old wisdom இங்கே நிலைகொள்ள முடியும். இவர்களெல்லாம் சுவர்கட்டி மூடி அதன்மேல் இன்னொரு மதத்தை நிறுவுகிறார்கள். அடியில் அது இருந்துகொண்டிருக்கும்.
ராமச்சந்திரன்
***
அன்புள்ள ஜெ
மூத்தோள் ஒரு துணுக்குறலை உருவாக்கிய கதை. இந்த தொற்றுநோய் காலகட்டத்தில்தான் அந்தக்கதையின் வீரியம் புரிகிறது. நாம் ஐஸ்வரியங்கள் போதும் என்று நினைக்கிறோம். மற்றதெல்லாம் கண்ணிலேயே படவேண்டாம் என்று நினைக்கிறோம். எவராவது வந்து அதையெல்லாம் நீக்கிவிட்டால் எல்லாம் இல்லாமலாகிவிடும் என்று நம்புகிறோம்.
ஆனால் இந்த பிரபஞ்சத்தில் இருட்டுதான் நிறைந்திருக்கிறது. எங்கும் சாவு நிறைந்திருக்கிறது. நாம் பாம்பு என்றும் சாவு என்றும் சொல்லவே பயப்படுகிறோம். ஆனால் அது அங்கே இருக்கிறது என்ற உணர்ச்சி நமக்குத்தேவை. அந்த உணர்வு இல்லாமல் நம்மால் உண்மையில் எதையுமே புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
மூத்தவள் இந்த உலகம் முழுக்க நிறைந்திருக்கும் பராசக்தியின் இன்னொரு வடிவம்தான். யாதேவி கதை முதல் வெவ்வேறு வகையில் இந்த உலகம் முழுக்க வெவ்வேறு முகம் கொண்டு நிறைந்திருக்கும் பராசக்தியைக் காண்பதற்கான ஒரு தீவிரம் இந்தக்கதைகளில் இருந்துகொண்டிருக்கிறது. இந்தக்கதைகளை வாசிக்கையில் ஒன்றுடன் ஒன்று அவை இணைகின்றன. யாதேவி வரிசை கதைகள். தேவி, லீலை போன்ற கதைகள். ஆயிரம் ஊற்றுக்கள், லட்சுமியும் பார்வதியும் போன்றகதைகள். எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு வகையான சக்திதர்சனமாக ஆகின்றன. அதை நீங்கள் அறிந்தோ அறியாமலோ எழுதி எழுதி கூர்தீட்டி சென்றுகொண்டிருக்கிறீர்கள்
எஸ்.மகாதேவன்
***