கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
அன்புள்ள ஆசிரியருக்கு,
அன்னம் சிறுகதை கறுத்த சாகிப்பும் கார்த்தவீரியன் தான்.. தன் ஆணவத்தை ஆயிரம் கைகளென தவமிருந்து பெருக்கிக்கொண்டவன் கார்த்தவீரியன். ஆனால் அன்பை ஆயிரம் கைகளாக மனிதர்களில் பெருக்கிக்கொண்டவர் சாகிப். அன்பும் சமயங்களில் ஆணவம் தானோ என்னவோ. ஆயிரம் கைகளும் துண்டு பட்ட பின்பே கார்த்தவீரியன் இறக்கிறான். அன்பான மனிதர் சூழாமல் நிகர்மரணம் அடைகிறார் சாகிப்.
வண்ணக்கடல் நாவலில் துரியனுக்கு கார்த்தவீரியனின் கதை சொல்லப்படும் இடம் எனக்கு படித்து சில ஆண்டுகள் ஆகியும் நெஞ்சில் நிற்பது. “அரசே, நீ செய்ய முடியாதது என இனி இவ்வுலகில் ஏதுமில்லை. எனவே செய்யக்கூடாதவையும் பலவே. வல்லமை என்பது பொறுப்பே என்றறிக. எந்த உயிரும் தன் எல்லைகளை மீறுவதில்லை. மானுடன் மீறமுடியாத எல்லைகளும் சில உண்டு. அவற்றை மீறாதிருப்பது வரை உன்னை வெல்ல எவராலுமியலாது” என்று சொல்லி தத்தாத்ரேயர் மறைந்தார். (வண்ணக்கடல்23)
எல்லா வல்லமையும் கிடைக்கப்பெற்றவன், ஆனால் அறம் மீறி அழிந்தவன் கார்த்தவீரியன். ஆனால் அதற்கு நிகரான வாழ்வும் வல்லமையும் கிடைக்கப்பெற்ற சாகிப் அன்புக்காக ஏங்குபவர். ஆயிரம் குரல்கள், அன்பின் குரல்கள் அவரை சூழ்ந்து காக்க காரணம் அவர் பேணும் அறம் தானே, கார்த்தவீரியன் தவறவிட்ட இடத்தில் எழுந்து நிற்கிறார் ஆயிரம் குரல் சூழ்ந்த கறுத்த சாகிப்.
ஆயிரம் கைகள் இருந்தாலும் ‘அதனாலென்ன’ அறம் வேண்டும் காக்க… முகம் தெரியாத மனிதராயினும் ‘அதனாலென்ன’ அன்பு போதும் வாழ.
இப்படிக்கு,
பிரேம் குமார் ராஜா.
***
அன்புள்ள ஜெ
அன்னம் மீண்டும் ஒரு அழகான கதை. அன்னம் என்ற சொல் எங்கே வளர்கிறது என்றால் கறுத்தசாகிபுக்கு அன்னம் என்றால் என்ன அர்த்தம் என்ற இடத்திலேதான். அன்னம் என்றால் பிரியாணிதான், சோறுதான். ஆனால் விரிந்த அர்த்தத்தில் அது மனிதர்களையும், இந்த உலகையும். அவர் சோற்றின்மீதல்ல மனிதர்கள் மீதுதான் அன்புடனிருக்கிறார். அந்த அன்பைத்தான் சோறுவழியாக வெளிப்படுத்துகிறார். அவருடைய களங்கமற்ற உள்ளமும் அதை ஹெப்பார் கண்டடைந்து வெளிப்படுத்தும் இடமும் அபாரமானது. அன்னம் அன்னத்தால் நிறைக்கப்படுகிறது. அதை ஒரு பெரிய வேள்வி என்கிறார் ஹெப்பார். மனிதம் மீதான அன்பே பெரிய யோகம் என்கிறார்
ஹெப்பார் இது வட்டி, அசல் நிற்கட்டும் அடுத்த பிறவியில் தீர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லும் இடத்தில் நெகிழ்ந்துவிட்டேன்
ஜெயக்குமார்
***
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
ஜெ
மூத்தோள் ஒரு திடுக்கிடவைக்கும் கதை. கதையாக சொன்னாலே திடுக்கிடவைக்கிறது. என் அம்மாவுக்கு ஃபோனிலேயே கதையைச் சொன்னேன். கதை என்ற வடிவத்தின் முழுமை நிகழ்ந்திருக்கிறது. அந்த கோயிலுக்கு போனதுபோலவே தோன்றுகிறது
மூத்தவள் என்று ஏன் தீமையின் கடவுளை வைத்தார்கள் என்ற கேள்விக்கான விடை. இந்தப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அழுக்கு இருட்டு துன்பம் சாவு அனைத்துக்கும் அவள் தேவதை. அவளை ஒதுக்கவோ மறைக்கவோ முடியாது. அவளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.
அவள் மடியில்தான் ஸ்ரீதேவி பகவதி அமர்ந்திருக்கிறாள். அவளுக்குத்தான் எல்லா பூசைகளும் நடக்கின்றன. எல்லா பூசைகளையும் அவளும் பெற்றுக்கொள்கிறாள். மக்கள் அறியாமையில் அவள்மேலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
சிவராம்
***
அன்புள்ள ஜெ,
இருநாட்களாக நிதியாள்கையில் மாநிலங்களுக்கு சுயநிர்ணயம் வேண்டும் ( தமிழகத்தின் வரிப்பணம் பீகாருக்குச் செல்கிறது,…) என்னும் குரலுடன் உரையாடிக் கொண்டிருந்தேன் மானசீகமாக. இன்றைய மூத்தோள் கதை எனக்கு அவ்விவாத்தின் ஒருபகுதியாகவே ஒலிக்கிறது.
பிரிட்டன் ஐரோப்பிய சங்கத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தபோது அதை, ‘சங்கத்திலுள்ள அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்காக சில நாடுகள் அதிகமாக பங்களிக்கத்தான் வேண்டியிருக்கும். அதற்காக சங்கத்தைக் கலைத்தால் பாதிப்பு அனைவருக்கும்தான்’ என்று எதிர்த்தவர்கள்கூட இன்று ‘தமிழகத்தின் நிதி…’ எனப் பேசுகிறார்கள். வடமாநிலங்கள் அவர்களுக்கு ஒதுக்கிய நிதியைச் சரியாகப் பயன்படுத்தவில்லையெனில் இன்றைய தேவை நிதியை முறையாக கையாளும் அமைப்பொன்றை உருவாக்குவதல்லவா? என் மாநிலத்தில் ஈட்டிய பணத்தில் உனக்கு பங்கு கிடையாது – நீ ஈட்டும் பணத்தைக் கொண்டு வளர் என்னும் வாதத்தை ஏற்றால், அதே வாதத்தை இங்குள்ள மாவட்டங்கள் வைத்தால் என்ன செய்வது? என்னிடம் வாங்கும் வரியை அரசாங்கம் எனக்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்றால் அரசின் நலத்திட்டங்களுக்கு நிதி?
ஜெ, கஷ்மலங்கள் சூழ்ந்த மூதேவியென தூக்கியெறிந்துவிட்டு நாம் சர்வமங்கலை என நம்பும் தேவியை வணங்கலாம். ஆனால் நம் வணக்கத்தை ஏற்பது ஸ்ரீதேவிக்குப் பின்னுள்ள விஸ்வரூப ஜேஷ்டை அல்லவா? நல்லவேளையாக, என்னிடம் வாங்கும் வரியைக்கொண்டு தர்மபுரியை வளர்க்கிறாய் என சென்னைவாசிகள் குரலெழுப்பவில்லை. அதுவரை நல்லது.
இந்தக்கதைக்கும் நன்றி ஜெ.
அன்புடன்
செந்தில்நாதன்.
***