மலையரசி,செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மலையரசி, லட்சுமியும் பார்வதியும் இரு கதைகள் வழியாகவும் ஒரு ஆளுமையை முழுமையாக வரைந்துகாட்டுகிறீர்கள்.கௌரி பார்வதிபாய் வரலாற்றுப்பாத்திரமாக இருக்கலாம். ஆனால் இங்கே நம் முன் ஒரு பெண்ணாக வந்து நிற்கிறாள். அரசகுடும்பத்திலேயே பிறந்தாலும் பொதுவாழ்க்கையில் வந்து ஜெயிக்க பெண்ணுக்கு பெரிய சவால்கள் இருக்கின்றன. ஏன் லட்சுமி தோற்று கொல்லப்பட்டள்? பெண்ணுக்குரிய மெல்லுணர்வுகளுடன் இனிய மனநிலையுடன் இருந்தாள். பார்வதியும் அந்த மனநிலையை பகிர்ந்துகொள்பவள்தான் ஆனால் அவள் தன்னை உருக்கு மாதிரி மாற்றிக்கொண்டாள்.

நான் இந்தக்கதையில் வாசிப்பது இதைத்தான். இங்கே பெண்ணுக்கு என்று சில குணங்கள் சொல்லப்படுகின்றன. அவையெல்லாம் குடும்பப்பெண்களுக்கு உரியவை. அவற்றை அலுவலகத்திலோ தொழிலிலோ கொண்டுசெல்லவே முடியாது.  அவை அங்கே அவளை தோற்கடித்துவிடும். லட்சுமியாக வீட்டில் இருக்கலாம். துர்க்கையாகத்தான் பொதுவெளியில் இருக்கமுடியும்

எஸ்.கிருபா

***

அன்பின் ஜெ,

மலையரசி‘ வாசித்தேன்.

காந்தி தனது ராமனை வாளுடன் கூடிய க்ஷத்ரிய ராமனாக உருவகிக்கவில்லையென்றும், சாத்வீக ராமனாகவே உருவகித்தார் என்று ஒரு கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டது நினைவிலுள்ளது.ராமவர்மாவை அவ்வாறான ஒரு ராமனாகவே காண்கிறேன்.

அதே சமயம் ராணி பார்வதியை  காந்தியின் லௌகீக விவேகம் கைகூடிய நடைமுறை அரசியல் வல்லமை தெரிந்த ஒரு ஒரு சிறந்த நிர்வாகியாகவே காண முடிகிறது.புனைவில் விரவி வரும் தத்துவம், மேலாண்மை, அதே சமயம் அந்த புலி படிவம் (குட்டியைக் காப்பாற்றும் அன்னை புலி பலவீனமான குட்டியை குதறிக் கொல்வதற்கும் தயங்காதிருத்தல்) இவற்றின் ஒத்திசைவு அருமை.

ராணி பார்வதியின் லௌகீக விவேகத்தின் உச்சமாகக் கீழ்க்கண்ட வரிகளைக் கண்டேன்.

“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”

எந்தவொரு எளிய பெண்ணின் வாழ்விலும் பொருந்தும் மாபெரும் உண்மை ராணியின் வாக்காக வருவது  பார்வதியின் ‘நுண்மான் நுழைபுலத்திற்கான’ சான்று.கதை நெடுகவே கறார்தனத்துடனும் நடைமுறை ஞானத்துடனும் கூடிய அவரின்  விவேகம் பிரமிக்க வைக்கிறது.இன்றைய பெண்கள் கைகொள்ள வேண்டிய துல்லியமான உதாரணமாகவே பார்வதி காட்சியளிக்கிறாள்.

கோவிட் ஊரடங்கில் முடங்கிக் கிடக்கும் எத்துணையோ உள்ளங்களை உங்கள் கதைகள் மீட்டெடுத்திருக்கும்.அலுவலக இயக்குனர் ஒருவரின் கேள்வி (Does he have a team or writers?? How is he able to produce so much???). இது ஒன்றே உங்களின் பெருமைக்கு சான்றளிக்கப் போதுமானதாயுள்ளது

மிக்க நன்றி.

அன்புடன்
வெங்கட்ரமணன்

***

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

செய்தி கதையின் நுட்பமான adolescent age சித்தரிப்புகள் அழகாக இருந்தன. அதிலுள்ள கவற்சி உண்மையில் என்ன என்பது அந்தக்குறிப்புகள் வழியாக கிடைக்கிறது. அனந்தனின் காமத்தை எழுப்பும் அழகி வெண்ணிறமனா குண்டான விஜயஸ்ரீ. ஆனால் கறுப்பான பகவதியில் வேறொரு வகையில் காமம் எழுந்துவிடுகிறது. அது காமமா என்றால் அதேமாதிரி ஒன்று. அதற்கான சந்தர்ப்பம் அப்படி அமைந்தது. ஒரு மெல்லிய உரசல். ஒரு தொடுகை. இவள் நேர் எதிரான தோற்றம் கொண்டவள். எப்படி அப்படி ஒரு ஈர்ப்பு நிகழ்கிறது? எத்தனை விஜயஸ்ரீயை பார்த்தாலும் அது ஏன் அப்படியே நீடிக்கிறது? அதுதான் புரிந்துகொள்ளவே முடியாத காமத்தின் நுட்பம்

உமாநாத்

***

அன்புள்ள ஜெ அவர்களுக்கு

கதைத்திருவிழா-2செய்தி படித்து முடித்தேன்.அனந்தன் என்றபெயரை படித்ததும் அவர்சிறுவனாக,வளரிளம் பையனாக ,இப்போது இளைஞனாக பார்க்கின்றநேரத்தில் மொழி ,மாயப்பொன்  போன்ற கதைகளின்அனுபவங்களும் மேலெழுந்தது.வேற ஒண்ணும் எழுதவில்லையா என்றகேள்விக்கு பிறகுஅங்கேநிகழ்வது ஒருமாயக்கணம்.அதில் இருவருமே சுழல்கிறார்கள்.ஒலிக்கின்ற பாடல் ,பார்க்கின்ற மனிதர்கள் என யாவுமே அவன்உள்ளத்தை அறிய துடிக்கின்றது அல்லது மீறி நடந்தவைகளை முன்புபோலவே வைக்க நினைக்கின்றது.மறுபடியும் பார்க்ககிடைக்கின்ற அவள் கையில் உள்ள நீல நிறக்கவர் காட்சி அவனைஉறையச் செய்கின்றது.இறுதியில் உள்ள பகுதி அவள் விழிகளில் அனல் பற்றி எழுதியிருந்தீர்கள்.அந்தகணத்தை இருவருமே தவற விடவில்லை.கீழே ஒரு youtube காணொளி.முதல் ஒருநிமிடம் பாருங்கள்

குமார் ஷண்முகம்

***

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – ஜூன் 2020
அடுத்த கட்டுரைமூத்தோள்,அன்னம்- கடிதங்கள்