தங்கப்புத்தகம்,செய்தி- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் முதல்கதையாக வந்தது. அதற்குப்பின் இன்னொரு கதையை படிக்கவே இல்லை. இப்போதுதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கதையின் மனநிலையை விட்டு விலக மனமில்லாமல் தொடர்ந்து மேலும் மேலும் அதையே வாசித்தேன். அதிலுள்ள செய்திகளை மேலும் சென்று தெரிந்துகொண்டேன். திபெத்தியப் பௌத்த தெய்வங்கள் போதிசத்வர்கள் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டபோது கதை இன்னும் விரிவானபடியே சென்றது.

அந்த அறை மலையின் கருப்பைக்குள் இருப்பது ஒரு அற்புதமான குறியீடு. மலைகள் ஒவ்வொன்றாக பொன்னொளி கொள்வதைப்பற்றி கதை பேசுகிறது. மலைகளுக்குள் தங்கப்புத்தகம் இருக்கிறது. மேலே சூரியன் பொழியும் தங்கமே உள்ளே குடிகொள்வதுபோல. மூன்று போதிசத்வ உருவங்கள் ஒன்றாக இணைந்த சிலையை பற்றி உருவகித்துக்கொள்ளாமல் அந்த நூலின் பொருள் என்ன என்று புரிந்துகொள்ள முடியாது.  மைத்ரேயர் வஜ்ராயுதமும் தாமரையும் ஏந்தி நின்றிருக்கிறார். அமிதாபர் அமுதகலம் வைத்திருக்கிறார்.மறுபக்கம் மஞ்சுஸ்ரீ. தண்டனை அளிக்கும் மைத்ரேயரும் முக்தி அளிக்கும் அமிதாபரும் ஞானமளிக்கும் மஞ்சுஸ்ரீயும் கலந்த சிலை அது.அதுதான் அந்த புத்தகத்தின் உள்ளடக்கம் என்று நினைத்தேன்

அதைநோக்கிச் செல்வது மிகவும் சிக்கலானது. வெளியேறுவது மிகவும் எளியது. அதிலிருந்து தப்புவது சாவது. அதை உதறுவது விடுதலை. இப்படியே சுற்றிச்சுற்றிச் செல்லும் அந்த படிம உலகம் பித்து ஊட்டுவதாகவே உள்ளது.

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு .,

தங்களின் கதைமாந்தரான ஔசேப்பச்சன் கூறும் த்ரில்லர் சாகச கதைகள் போல , முக்தா கூறும் கதைகள் அதற்கு மேலே சாகசத்தை நோக்கி விரிகிறது. ஔசேப்பச்சனுக்கு ஒரு மது விடுதி வேண்டும் கதை சொல்ல., முக்தாவிற்கு ஊட்டி குருகுலம். ஔசேப்பச்சன் கதை உலகியல் நோக்கி செல்லும்போது, முக்தாவின் கதைகள் ஞானத்தை நோக்கி தன் மென் சிறகை விரிக்கிறது.

தங்கப்புத்தகம் இலக்கியமும் தத்துவமும் சரியாக இணையும் பிரதியாக அமைகிறது. எல்லையற்ற ஞானமும் , எல்லையற்ற காமமும் இணையும் வஜ்ராயன பௌதம் போல. இக்கதையின் அமைப்பும் , கூறுமுறையும் தங்கப்புத்தகத்தை நோக்கி நம்மை அழைக்கிறது. ஒரு த்ரில்லர் நாவலைப் போல. தங்கப்புத்தகத்திற்கான தேடலும் , தங்கப்புத்தகமும் முதலில் படிமமாக மனதில் அமைகிறது. கதை முடிந்தபிறகு , அந்த படிமம் தான் நம்மை தத்துவத்தை நோக்கி நகர்த்துகிறது.

இந்த கதையே தங்கப்புத்தகத்தைப் போல ஒரு மாயத்தோற்றத்தை அளிக்கிறது. எந்த ஒரு நகலும் மூலப்பிரதியை விட்டு சிறிதலவேனும் மாறுபட்டவேயே என்ற வரிகள் எந்த தளத்திற்கும் செல்லுபடியாகும் போல் தோற்றம் தருகிறது. உதாரணமாக, உயிர்த்தோன்ற காரணமான புரதவிதையை மூலப்பிரதியாக எடுத்துக்கொண்டால் , அதிலிருந்து வந்த நகல்கள் தானே நாம். உலகில் வாழும் பல்லாயிர ஜுவராசிகளும் அம்மூலத்தின் நகல்கள் தானே. எவ்வளவு வேறுபாடு. எந்த நகலும் மூலப்பிரதியின் கூறு கொண்டவை மட்டுமே, மூலம் அல்ல.

இன்னொறு பார்வையில் , இக்கதையே பிரபஞ்ச தரிசனத்தை நோக்கிய பார்வையாக உள்ளது.  சங்கரரும் , இராமனுஜரும் , மத்வரும் இப்பிரஞ்ச மூலப்புத்தகத்தின் வெவ்வேறு நகலையே தங்கள் தரிசனமாக முன்வைக்கிறார்கள் என்று கதையின் ஆரம்பத்தில் வருகிறது. இந்திய ஞானம் அனைத்தும், அப்படி ஒரு தங்கப்புத்தகத்தின் நகல்கள் தானோ? அதை நோக்கிய தேடல் தானே முக்தாவின் தேடல். இறுதியில் அவர் அடைவதும் அப்படி ஒரு ஞானத்தை தானோ. “எதையும் அடையமுடியாதவனாக மாறினேன். ஆகவே எதையும் இழக்க இல்லாதவனாகவும் ஆன். ” இந்த இடத்திற்கு தானே ஞானம் ஒருவனைக் கொண்டு செல்கிறது.

முக்தா முதலில் தங்கப்புத்தகத்தைக் கண்டடைந்ததும் வரும் ஏமாற்றம், ஞானத்தை தன் கைகளால் தழுவ முயலும் அனைவருக்கும் உரியதே. இதுதானா ? இதற்குத்தானா இவ்வுளவு தூரம் அழைந்தோம் ? ஆனால், அந்த இடம்தான் தேடலின் உண்மையான தொடக்கமாக அமைகிறது. அங்கிருந்து, அவன் உள்சென்று அடைவதே ஞானம்.

பாட் கதாப்பாத்திரம் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகிறது. இப்புவியின் அறிவியல் காலகட்டத்து பிரதிநிதியாக உள்ளே வருகிறான் பாட். அறிவியல் உள்நுழைந்தபோது பிரபஞ்சம் ஞானம் மறைபொருள் எல்லாம் obsolete ஆகப்போகிறது என்று கூக்குறல் இட்டது. இப்பொழுது அது சென்று சேர்ந்திருக்கும் இடத்தை கதையில் அறியலாம். தங்கப்புத்தகத்தின் மாயத்தோற்றம் புலப்படும் போது, முக்தா உள்நுழைய எத்தனிக்கிறார். பாட் வெளியேறுகிறார். அற்புதமான படிமம்.

கயிற்றரவம் என்ற படிமம் வேதாந்த தத்துவத்தை விளக்குவதற்கு பயன்படுத்துவதைப்போல, தங்கப்புத்தகம் இப்பிரபஞ்ச ஞானத்தை விளக்கும் செவ்வியல் படிமமாக அமைகிறது.

கார்த்திக் குமார்.

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையின் இன்னொரு பக்கம் போல இருந்தது செய்தி. மனிதன் இந்த உலகிலுள்ள அனைத்தையும் உதறிக்கடந்து சென்று எதையோ தேடுகிறான். இங்கே உள்ள சின்ன உறவிலுள்ள இன்பத்திலும் திளைக்கிறான். இரண்டுமே தங்கம்தான். பொன்னொளிதான். நான் இந்த தங்கப்புத்தகம் கதையை முக்தா எவரிடம் சொல்கிறாரோ அவன்தான் செய்தி கதையை நினைத்துக்கொள்கிறான் என்று கற்பனை செய்துகொண்டேன். தங்கப்புத்தகம் கதை அளித்த பிரமிப்பு குழப்பம் ஆகியவற்றிலிருந்து தப்ப அவன் இதைக் கற்பனை செய்துகொண்டிருக்கலாம் என்று தோன்றியது. இரண்டுமே இரண்டு உலகங்கள். எது சிறந்தது என்று எவர் சொல்லமுடியும்? எந்த நினைவை மனசு சாகும்வரை பெணிக்கொள்கிறது என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

சண்முகசுந்தரம்

***

அன்பு ஜெ,

உலகம் பெயர் வைத்திராத உறவுகளும் உணர்வுகளும் இந்த உலகில் இருக்கின்றன தான். ஒவ்வொரு மனிதனும் இது போன்றவைகளை கடக்கிறான் தான். அந்த உறவுகளை, உணர்வுகளை தனக்குத் தெரிந்த உலகாயத உறவுகளுக்குள் அடைக்க முற்படுகிறான். அங்கு தான் சிக்கல் பிறக்கிறது.

இந்தக் கதையை அல்லது இது போன்ற உணர்வுக் குவியலின் கதைகளை முன்பெல்லாம் வெறுத்ததுண்டு. ஒருவகையில் மிஷனரிப் பள்ளிகளில் பயின்று வந்த குழந்தைகளின் தலையில் அறம் என்ற சுமையை ஏற்றி வைத்து விடுகிறார்கள். அது அப்போது சுமையாய்த் தெரிந்த தில்லை. வாழ்வின் பயணத்தை நான் மேற்கொள்ள அது ஓர் ஊன்றுகோலாய் எப்போதும் துணைக்கு அழைத்துக் கொண்ட ஒன்று. அதனாலேயே அது என் உயிர்நாடியாய் மாறிப் போயிருந்தது. அறப்பிறழ்வு என்ற ஒன்றை முற்றிலும் வெறுத்து ஒதுக்கியவள் நான். அதனாலாயே தி.ஜா வையும், பிரபஞ்சனையும், ஜெயகாந்தனையும் சில கதைகளில் கடிந்து கொண்டதுண்டு செல்லமாக.

இன்று இளமையின் முதிர்ச்சி வாழ்வின் நிதர்சனங்களை அதன் அப்பட்டங்களை தோலுரிக்கும் போது என்னையே சுயபரிசோதனை செய்து பார்க்கும் போது தான் தெரியவருகிறது  அறம் என்று உலகம் வகுத்த ஒன்றை நானும் மனதளவிலாவது மீறியிருக்கிறேனென்று. எத்துனை உணர்வுகளை, வாழ்க்கைகளை துச்சமாக அறப்பிறழ்வு என்ற வார்த்தையில் கல்லரையாக்கியிருக்கிறேன். எனக்காக நான் பரிதாபப் படுகிறேன் இன்று.

இன்றெல்லாம் உறவுகளை உணர்வுகளை என் மனம் சந்திக்கும் போது அதை அழுத்தி கொலை செய்வது கிடையாது. அவைகளை என் மனம் முழுமைக்கும் படர விட்டு இரசிப்பதுண்டு. சில பொக்கிஷ உணர்வுகளை என் நினைவடுக்கின் உயிருள்ள பகுதிக்குள் பத்திரப்படுத்தவதுண்டு. தனிமையின் போது நினைவுகளை மீட்டி அதை இரசித்திருப்பேன். இப்படி வாழ்க்கையில் தான் பெயர் வைக்கப்படாத எத்துனை உணர்வுகள். இவையாவையும் உள் நுகர அறப்பிறழ்வு என்ற மேலோட்டமான மாறுபடும் வரையறை கொண்ட சொல்லை சற்றே தள்ளி வைப்பதுண்டு. இப்படி தள்ளி வைப்பதனாலேயே பல நிதர்சனமான கதை எழுதிய எழுத்தாளர்களை கண்டடைந்தேன்.

ஒருவகையில் அனந்தனுக்கும் பகவதியம்மைக்கும் கிடைத்த உணர்வுகளை என்னால் இப்பொழுது புரிய முடிகிறது ஜெ. இவ்விருவரும் கால மாற்றத்தில் இவ்வுணர்வுகளை கடந்து விடுவார்கள். ஆனால் மறப்பது எளிதல்ல. அது தந்த சிலிர்ப்பை உள்ளம் பத்திரப்படுத்தும். இத்தகைய உணர்வுகளை துல்லியமாக நான் இங்கு உணர்ந்தேன் ஜெ.

பெண்கள் என் வரையில் உணர்வுகளின் குவியல் தான். உணர்வுகளுக்காக ஏங்குபவர்கள். பகதியம்மையைப் போல. பெயர் சொல்லத் தெரியாத இந்த உணர்வுகளில் சற்று நேர திழைப்பு எனக்கு ஒரு வகை அனுபவம் தான். நன்றி.

அன்புடன்

இரம்யா

***

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைஅன்னம்,லட்சுமியும் பார்வதியும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி