கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

1788-ல் தர்மராஜா என்று அழைக்கப்பட்ட கார்த்திகைத் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் ஆட்சிக்காலத்தில், பத்மநாபபுரம் ராஜநீதிசபையின் விசாரணையின் அடிப்படையில், திவான் கிருஷ்ணன் தம்பியின் ஆணைப்படி, பேஷ்கார் எஸ்.சுப்பையரால் தீர்ப்பளிக்கப்பட்டு, பத்தொன்பது வயதான புலையனாகிய சுண்டன் கழுவிலேற்றப்பட்டான். கழுக்கோட்டையின் உள்ளே எட்டுநாட்கள் கழுவிலிருந்து உயிர்துறந்த பின்னர் அவனுடைய உடலை கொண்டுசென்று கோட்டைக்கு பின்புறம் அடவிக்காளி கோயிலுக்குப் போகும்வழியில் பெருமாள்குளம் மறுகால் ஓடும் கால்வாயின் கரையில் அமைந்த வயல்கரை மண்மேட்டில் எரியூட்டினர். அங்கே அவனுக்காக நிறுவப்பட்ட நடுகல் கழுமாடனாக வழிபடப்பட்டது.

ஆண்டுதோறும் அவன் கழுவேறிய சித்திரைமாதம் மூன்றாம்நிலவு நாளில் மூவந்தி நேரத்தில் அவனுக்கு அங்கே கோழி அறுத்து தலையில் குருதி வீழ்த்தியபின், எஞ்சிய குருதியை சோற்றுடன் பிசைந்து ஏழு கவளங்களாக்கிப் படைத்தனர். செவ்வரளியும் தெச்சியும் கலந்து கட்டிய மாலையை அணிந்து, மஞ்சள்பொடி நீரில் குழைத்து பூசப்பட்டும் செந்தூரத்தில் முகம் வரையப்பட்டு, கரியில் விழிபொறித்துக்கொண்டு அக்கல் அன்றுமட்டும் உயிர்கொண்டு நின்றது. அதன் முன் துடித்து அமையும் கோழியை வெறித்து நோக்கியது, குருதித்துளிகள் முகத்தில் வழிகையில் வெறிகொண்டது.

இளஞ்செறுமன் கண்ணனின் குறுந்துடியின் உறுமல் கேட்டுக் கொண்டிருக்க செறுமக்குடியின் மூத்தவர் முத்துசாமி அந்த பூசையைச் செய்தார். ஏழு கவளங்களில் நாலை நான்கு திசைகளுக்கும் வீசினார். மூன்றை கழுமாடனுக்கு முன்னால் படைத்துவிட்டு விரல்களை பிணைத்து பலிகொள்ளும்படி சைகை காட்டிவிட்டு எழுந்தார். நிணம்கலந்த அன்னம் படிந்த கையை மும்முறை தட்டி மூன்றடி எடுத்து வைத்து பின்னால் நகர்ந்து அப்படியே கீழே இறங்கி ஓடைநீருக்குள் இறங்கி நீர்வழியாகவே நடந்து அகன்றார். வாட்சின் ரேடியம் முட்களில் பொழுதைப் பார்த்துவிட்டு கண்ணனும் நீருக்குள் புகுந்து ஓடைவழியாகவே நடந்து சென்றான். வாதை தெய்வங்கள் நீருக்குள் செல்பவர்களை தொடரமுடியாது.

அவர்கள் சென்றபின்பு அங்கே கருக்கிருள் மூடியது. பறவைகளின் ஒலிகள் அடங்கிக்கொண்டே இருந்தன. பின்னணியில் எழுந்த பத்மநாபபுரம் கோட்டை இருட்டில் மறைய வானில் நட்சத்திரங்கள் தெளியத் தொடங்கின. அந்த வெளிச்சத்தில் ஓடையின் நீரில் அலைகளும் வளைவுகளும் மின்னின. நிலவு எழவில்லை, ஆனால் வானொளியிலேயே புல்நுனிகள் கூர்கொண்டவை போல மின்னத்தொடங்கின. கழுமாடனின் மஞ்சள்பூசிய தோற்றம் தனித்த ஒளியொன்றை அடைந்தது. அங்கிருந்த ஊன்சோற்றை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. ஊன்சோற்றை உண்ணாமல் அதைச்சுற்றி அது தன் மெழுகுமின்னும் உடலை வளைத்தது.

மின்மினிகள் எழுந்து அதைச் சுற்றிப்பறந்தன. ஒரு மின்மினி கழுமாடனின் மேலே வந்து அமர்ந்து சுடர்கொண்டது. பாம்பு வழிந்து விலகியபோது இலை இழுபட்டு ஊன்சோற்றுருளைகள் அசைந்து நீரில் விழுந்து கவிழ்ந்து கலந்து சுழித்து சென்றன. கழுமாடனின் விழிகள் அதை பார்த்துக்கொண்டிருந்தன. கல்லில் எழுந்த அவ்விழிகளில் இருந்த தவிப்பையும் தனிமையையும் எவரும் பார்க்கவில்லை. சாலையில் கார்களும் பைக்குகளும் செல்லும் ஒளி வளைவு திரும்பி மறைகையில் அவன் கண்கள் சீறிச்சீறி அணைவதை எவரும் அறியவில்லை.

ஓடையடிக் கழுமாடன் என்று சொல்லப்பட்ட அந்த படுதெய்வம் முத்துசாமியின் தந்தை சங்கரனால் விற்கப்பட்டு குமாரபுரம் பெருவட்டர் பரமார்த்தலிங்கத்திடம் சென்று அவரிடமிருந்து அவருடைய மருமகன் ஸ்டீபனுக்கு போய் அவனால் விவசாயம் செய்யப்பட்ட எட்டு ஏக்கர் நஞ்சை நிலத்தின் ஓரமாக அமைந்திருந்தது. அந்த மேட்டைச் சுற்றி அரைசெண்ட் நிலம் காடாக விடப்பட்டு கொடிகளும் புதர்களும் மண்டி சருகுகள் குவிந்து மேற்குமலைக் காட்டிலிருந்து கிழிந்து வந்த ஒரு சிறுபகுதி என தெரிந்தது.

அங்கே சிதல்புற்றுகள் எழுந்து நின்றன. நாகங்கள் அங்கே சட்டை உரித்துப்போட்டு இருப்புணர்த்தின. அதன்மேல் கிளைகவித்து நின்றிருந்த மருதமரக்கிளையில் ஆந்தைகள் வாழ்ந்தன. வயல்வேலை செய்பவர்கள் கூட காலோயும்போது அங்கே ஏறுவதில்லை. மறுபக்கம் அவர்கள் அமர மேடு இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் கழுமாடனின் இரண்டுமுழ உயரமுள்ள பண்படுத்தப்படாத கருங்கல்நிற்பு கண்ணுக்குப் படுவதில்லை. ஆனால் அங்கே எப்போதும் எவரோ இருந்துகொண்டிருக்கும் உணர்வை அடையமுடிந்தது.

முத்துசாமியின் குடும்பத்திற்கு அந்தப்பகுதியின் நிலங்கள் ஆலும்மூடு குடும்பத்தினரால் முதலில் வாரமில்லா போகத்திற்கு வழங்கப்பட்டன. மாடனுக்கு பூசை செய்வதற்கான ஊதியமாகவே அவை அளிக்கப்பட்டன என்று ஆவணங்களிலேயே இருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரே அந்நிலம் விலையாக நிலப்பதிவு செய்யப்பட்டது. முத்துசாமியின் குடும்பத்தினரின் மூத்தகாரணவருக்கு உரிமையானது என்று இருந்த அந்நிலம் 1952ல் அன்றைய காரணவரான வேலனால் அவருடைய பெயருக்கே பட்டா பெறப்பட்டது. அவர் மகன் சங்கரன் பெயருக்கு வந்து 1971ல் விற்கப்பட்டது.

முத்துசாமியின் பூர்வீகர்கள்தான் அப்பகுதியிலேயே முதல்முறையாக நிலத்திற்கு உரிமையாளர்கள் ஆனவர்கள். அது அவர்களுக்கு அவர்களின் சாதியில் மிகப்பெரிய செல்வாக்கை உருவாக்கி தலைமூப்பன் என்னும் இடத்தை பெற்றுத்தந்தது. அவர்கள் பின்னர் அந்த உரிமையை பயன்படுத்தி சாரோடு மலையடிவாரத்தில் ஏராளமான மலைநிலங்களை பதித்து வாங்கி அங்கே புலையர்களை குடியேற்றி விவசாய நிலங்களாக ஆக்கினார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அங்கே ஆயிரம் ஏக்கர் நிலம்வரை இருந்திருக்கிறது.

அக்குடும்பம் புலையச் சாதியினர் நடுவே நீதியளிக்கும் அதிகாரத்தை கொண்டிருந்தது. முதல்முதலாக அரசுக்கு நிலவரி கட்டியவர்கள் அவர்கள். அதன் அடிப்படையில் திண்ணையும் தாழ்வாரமும் வைத்த வீடு கட்டிக்கொண்டவர்கள். தோளில் துண்டு போட்டுக்கொள்ளவும் நாற்காலிகளில் அமரவும் உரிமை பெற்றவர்கள். சொந்தமாக மாட்டுவண்டி வைத்து அதில் பயணம் செய்தவர்கள்.

ஆனால் கூடவே அதற்கான பொறுப்பும் அக்குடும்பத்திற்கு வந்தது. புலையக்குடிமக்கள் திரண்டு தங்கள் உரிமைகளுக்காக குரலெழுப்பிய எல்லாப் போராட்டங்களிலும் அவர்கள் தலைமை கொண்டனர். அனைத்துக் கலகங்களிலும் முன்னால் நின்றனர். ஆகவே மூன்று தலைமுறையாக அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பத்தலைவர்கள் அனைவருமே பல அடிதடிகளில் குற்றவாளிகளாக்கப்பட்டனர், பலமுறை சிறை சென்றார்கள்.

1908-ல் அக்குடும்பத்தைச் சேர்ந்த சிண்டன் புலையன் அவர்களின் குடில்களை ஊடுருவி பெண்ணைத் தூக்கிச் செல்லமுயன்ற உடுங்கூர் செல்லன்நாயர் என்ற போலீஸ் கான்ஸ்டபிளை குத்திக்கொன்று அதன்பொருட்டு அந்தமானுக்கு சிறைக்கனுப்பப்பட்டார். அவர் அங்கிருந்து திரும்பி வரவில்லை. அதிலிருந்து அவர்கள் அந்தமான் குடும்பம் என்றே அழைக்கப்பட்டார்கள்.

அந்தப்பெயர் மருவி விரைவிலேயே அவர்கள் அந்தன் என்றாகியது. சாரோடு ஊரில் பாறையடி பகுதியில் இருந்த அவர்களின் வீடு அந்தன்வீடு எனப்பட்டது. அந்தன்குடும்பம் என்றுதான் அவர்கள் தங்கள் திருமண அழைப்பிதழ்களிலேயேகூட அச்சிட்டுக் கொண்டார்கள். 1954-ல் அவர்கள் குடும்பத்தில் அன்றைய முதல்வர் கே.காமராஜ் தலைமையில் நடந்த திருமணத்தில் அந்தன்குடும்பம் என்று பெயர் சாலையோரம் பெரிய தட்டியாகவும் வைக்கப்பட்டது.

சாதுஜன சங்கத்தையும் பின்னர் புலையர் மகாசபையையும் உருவாக்கி புலையர்களின் உரிமைக்காகப் போராடிய அய்யன்காளிக்கு அக்குடும்பம் நெருக்கமாக இருந்தது. அவர்கள் அய்யன்காளியின் போராட்டங்களுக்கு வண்டிநிறைய நெல்லும் ஆட்களும் அனுப்பிவைத்தனர்.1893-ல் அய்யன்காளி புலையர்கள் கௌரவமாக ஆடை அணியும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது சாரோட்டிலிருந்து நூறு இளைஞர்களை தடியுடன் அனுப்பி வைத்தவர் அந்தன்வீட்டு காரணவரான கூமன். அய்யன்காளி அவர்களின் இல்லத்தில் எட்டுமுறைக்குமேல் வந்திருக்கிறார். ஒருமுறை நாராயணகுருவே வந்ததுண்டு.

சுதந்திரப்போராட்ட காலத்தில் அந்தன்குடும்பத்தினர் காங்கிரஸின் முகமாக ஆனார்கள். ஹரிஜன இயக்கத்தை சாரோட்டில் தொடங்கி வைத்தவர் அந்தன்குடும்பத்து காரணவரான கருணன். அவருடைய வீட்டு முற்றத்திலிருந்தே வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் தன்னார்வலர்கள் கிளம்பினார்கள். அவர்களுக்காக தன் தோட்டத்தின் ஒரு மூலையில் கொட்டகை ஒன்றையும் அவர் கட்டினார். பின்னர் அது கஸ்தூரிபா மாதர் சங்கமாக மாறி இன்று அரசுப்பொறுப்பில் கூட்டுறவுசங்க அலுவலகமாக உள்ளது.

இவ்வளவும் தொடங்கியது சுண்டன் கழுவேற்றப்பட்டபோதிருந்துதான். சுண்டன் அவர்களின் குடும்பத்தில் ஓர் அன்னைக்கு பிறந்த ஏழு மைந்தர்களில் கடைசியானவன். சாரோட்டு பாறையடியில் அன்றிருந்த ஆயிரம் புலையடியார்களின் குடிகளில் ஒன்று அது. அவர்கள் பத்மநாபபுரம் கோட்டைப்புற ஊழியத்திற்குக் கடமைப்பட்டவர்கள். கோட்டைகாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது.

அவர்கள் தாய்வழித்தாய முறை கொண்டவர்கள். சுண்டனின் தாய்மாமா சிண்டன் புலையன் அன்று அரசனின் சங்குமுத்திரை கொண்ட கோலேந்தும் உரிமையுள்ள தலைப்புலையனாகவும் குடிகளுக்குமேல் சொல்நிறுத்துபவராகவும் இருந்தார்.

மாடனுக்கோ இசக்கிக்கோ பிற்காலத்தில் பலியாக மாறக்கூடிய ஆடும் சேவலும் இளமையிலேயே அந்தக் குணத்தைக் காட்டும் என்பார்கள். அவை பிற உயிர்கள் தங்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளாது. எப்போதும் துணிந்து எதிர்த்து நிற்கும். உணவில் தங்களுக்கே முதன்மை என்று நினைக்கும். போட்டிக்கு வருபவர்களை எதிர்க்கும். ஆடுகள் சீறி எழுந்து தலையால் முட்டி பிற ஆடுகளின் கொம்பையோ தலையையோ உடைத்துவிடும். அவை முட்டன் எனப்பட்டன. சேவல் செம்பூவன் எனப்பட்டது, அதன் வாலில் கூடுதலாக ஒரு பூ இருக்கும்.

கழுமாடனாக பின்னாளில் மாறும் இளைஞர்களிடையேயும் தெய்வாம்சம் இருக்கும் என்றார்கள் அவர்களைப் போற்றிப்பாடும் புள்ளுவப் பாடகர்கள். கழுமாடன் சன்னிதிகளில் புள்ளுவர்களை அழைத்துவந்து குடம்மீட்டி பாடவைக்கும் மரபு இருந்தது. புள்ளுவர்கள் மறைந்தபின் அவ்வழக்கமும் இல்லாமலாகியது. ஆனால் பாடல்கள் பலருக்கும் தெரிந்திருந்தன. பூசகர்கள் அவற்றில் சிலபகுதிகளை பாடுவதுண்டு. பின்னாளில் வில்லுப்பாட்டு புலவர்கள் அவற்றை தங்கள் மொழியில் விரித்து எழுதி பாடம்சொல்லி பாடினர்

கழுமாடசாமிகள் அனைவருமே இளமையில் தங்கள் அன்னையர் பிள்ளைக்கலியால் நொந்து வாடி, நோன்பு நோற்று வேண்ட சிவனருளால் பிறப்பார்கள். பிறப்பதற்கு முன்னரே அன்னைக்கு கனவில் தெய்வங்கள் வந்து வருகுறிகள் சொல்லும். அன்னை கருவுற்றதுமே அடையாளங்கள் தென்படும். உகந்த லக்கினத்தில், உரியபொழுதில் பிறப்பார்கள். அப்போது ஐந்து பூதங்களும் அவர்களின் பிறப்புக்குச் சாட்சி சொல்லும்.

அவர்கள் கால் நிலம்படும்போதே பல்லும் சொல்லும் கொண்டிருப்பார்கள். எவருக்கும் அடங்கமாட்டார்கள். ஆசிரியனின் கழியையும், அதிகாரியின் வாளையும், அரசனின் சொல்லையும்கூட மீறத்துணிவார்கள். எட்டு அழகுகளும் கொண்டவர்களாக இருப்பார்கள். எட்டு பெண்களால் விரும்பப்பட்டிருப்பார்கள். எங்கும் நுழைபவர்களாகவும் எல்லாம் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள். அஞ்சாது சென்ற இடங்களில் வென்று வருவார்கள். தெய்வம் முன்னுரைத்த விதியின்படி உரிய காலத்தில் அவர்கள் பலியாவார்கள்.

பலியானதுமே வானுலகம் சென்று சிவனிடம் அருள்பெற்று வாதை தெய்வங்களாக மீண்டு வருவார்கள். ஊரில் அழிவையும் அச்சத்தையும் பரப்பி ஆதாரம் காட்டுவார்கள். ஆண்களை அறைந்து கொல்வார்கள். பெண்கள்மேல் எழுந்து வெறியாடுவார்கள். பிள்ளைக் கரு உண்பவர்களும் உண்டு. ரத்ததாகம் கொண்டிருப்பார்கள். குடியும் நாடும் சேர்ந்து உரிய பலிகொடுத்து நடுகல்லில் நிறுத்தி, ஆண்டுபலியும் நாள்பூசையும் நடத்துவோம் என வாக்களிக்கையில் அடங்கி ஊருக்கும் குடிக்கும் அருள்வார்க்ள்

ஆனால் சுண்டன் அப்படி இருக்கவில்லை என்று அவர்களின் குடும்பத்தில் பெண்கள் பாடிய பாடல்கள் கூறின. அந்தப்பாடல் அப்பெண்களால் பானையில் ஆட்டுத்தோல்கட்டி உருவாக்கப்படும் தோல்பானை என்னும் முரசை சிறுகழியால் மீட்டிப் பாடப்பட்டதனால் பானைப்பாட்டு எனப்பட்டது. புள்ளுவர்களின் பாட்டுகளில் இருக்கும் அத்தனை வீரர்களுக்கும் பொருந்தும் பொதுவான வர்ணனைகளும் நிகழ்ச்சிகளும் அவற்றில் இருக்காது. அக்கதைகளில் தேவர்களும் தெய்வங்களும் ஊடாடுவதில்லை. அவை சற்றுமுன் நடந்து நினைவிலிருந்து சொல்வன போலவே ஒலிக்கும்.

சுண்டனின் அம்மா தேயி பதினேழு பெற்று பத்தை இழந்தவள். பதினேழாவது மகன் பிறந்தபோது இனியில்லை என்று அவளுக்கே தெரிந்தது. ஆகவே அந்தக் குழந்தைக்கு அவள் ஏழுவயதுவரை முலையூட்டினாள். அவள் வயலில் வேலைசெய்யும்போது அவன் அருகே நடந்தபடி இருமுலைகளில் இருந்தும் பால் உறிஞ்சிக் குடிப்பான். ஐந்துவயது ஆவது வரை அவள் அவனுக்குப் பெயரே போடவில்லை. பிள்ளே என்று பெயர் சொல்லாமல் அழைத்தாள்.

பெயரிட்டால் தீயதேவதைகள் பிள்ளையை கொண்டு போய்விடும் என்று அவள் அஞ்சினாள். அவை குழந்தை தனியாக இருக்கையில் பின்னாலிருந்து பெயர் சொல்லி அழைக்கும். குழந்தை திரும்பிப் பார்த்தால் அள்ளிக்கொண்டு சென்றுவிடும். ஆனால் பெயரில்லாக் குழந்தைகளை கண்டால் தெய்வங்கள் குழம்பி நின்றுவிடும்.

முலைசப்புவதில் சுவைகண்டுவிட்ட சுண்டன் முலையில்லாத நேரத்தில் கைவிரலைச் சப்பிக்கொண்டான். விளைவாக அவன் உதடுகள் சற்று பருத்து குவிந்திருந்தன. ஆகவே அவனுக்கு சுண்டன் என்று சிற்றம்மைகளும் அத்தைகளும் பெயரிட்டனர். தாய்மாமன் சிண்டன் அந்தப்பெயரே போதும் என்று சொல்லிவிட்டார்.

சுண்டன் தன் தாயை விட்டு அகல்வதே இல்லை. கைகால் தேறி தலையெழும்வரை அவன் குடிலிலேயே அம்மாவுடன் இருந்தான். அவளுடனேயே வயல்வேலைக்கும் காட்டுக்கும் சென்றான். ஆனால் வேலை ஏதும் செய்வதில்லை. அவன் கைகள் குழந்தைகளின் கைகள்போல மென்மையாக இருந்தன. முகம் இளம்பெண்களின் முகம்போல எண்ணைப்பூச்சும் பருக்களும் கொண்டிருந்தது. குரலிலும் பெண்மையும் தயக்கமும் இருந்தது.

அவன் எவர் கண்களையும் நேர்நோக்கிப் பேசுவதில்லை. எவரேனும் ஏதேனும் கேட்டால் அவன் தொண்டை இடறி குரல்தடுமாறி கண்கள் கலங்கி முகம் சிவந்துவிடும். அவன் நேராக நின்றே எவரும் பார்த்ததில்லை. ஒசிந்தும் வளைந்துமே நின்றான்.அவன் வயதை ஒத்த ஆண்கள் அவனை பெண்ணன் என்றார்கள். அவனை வேட்டியை பிடித்து இழுத்து கேலி செய்தார்கள். ஆகவே அவன் ஆண்களுடன் சேர்வதில்லை. ஆனால் பெண்களுடன் பேசவும் அவன் வெட்கப்பட்டான். பெரும்பாலும் அம்மாவுடனோ தனியாகவோதான் இருந்தான்

தனிமையில் அவனுக்கு இன்பம் இருந்தது. சாரோடு பாறையடியை ஒட்டியே வேளிமலை வளைந்து அலையலையாக மேலேறிச்செல்லும். வேளிமலையின் அடிவாரத்தில் காற்று மாபெரும் அந்தரநதியாக பெருகி ஓடிக்கொண்டிருக்கும். அவன் அங்கே ஒரு பாறையை கண்டு வைத்திருந்தான். அதன்மேல் படுத்து வானில் மேகங்கள் மிதப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பான். பகற்கனவுகளில் நாளெல்லாம் மிதந்து கிடப்பான்.

அவன் தன் கனவுகளில் மாயாண்டிசாமி போல ஆண்மை மிக்கவனாக இருந்தான். வானிலேறிப் பறந்தான். அரச மாளிகைகளுக்குள் நுழைந்து வைரங்களையும் தங்கநாணயங்களையும் திருடி வந்தான். அவற்றைக் கொண்டு மலைச்சரிவில் மாளிகை அமைத்து குடியேறினான். தொலைவான நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து இளவரசிகளைத் திருடிவந்தான். அவர்களுடன் அங்கே காமம் கொண்டாடினான்.

தித்திக்கும் அக்கனவுகளை எவருமே அறியவில்லை என்பதே அவனுக்கு மேலும் கிளர்ச்சி அளித்தது. ஒரு பகற்கனவை அவனே எல்லை மீறல் என்று உணர்ந்து படபடப்புடன் முகம் சிவந்து எழுந்து அமர்ந்து சுற்றிலும் பார்த்துவிட்டு புன்னகைத்துவிட்டு மீண்டும் படுத்து கனவு காண்பான்

அவனை ஊரில் பெரும்பாலும் எவரும் கவனிப்பதில்லை. அவன் எந்தக்குழுவிலும் பேசுவதில்லை. எங்கும் தென்படுவதில்லை. வேலைக்கும் செல்வதில்லை. ஆனால் அவன் வெளிப்படும் இடம் ஒன்று இருந்தது. காட்டுபன்றி பொறியில் சிக்கினால் அதை சுட்டு உண்டு இரவில் அவர்கள் நடனமாடும்போது அவனுக்குள் இருந்து இன்னொருவன் வெளிவருவான். எழுந்து நின்று அவன் துள்ளி ஆடும்போது அவன் உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் பிழையில்லாத தாளம் திகழும்.

அப்போது அவன் மிகமிக அழகானவனாக ஆகிவிடுவான். அவன் கைகளும் கால்களும் மிகமென்மையாக, பிழையற்றவையாக தெரியும். “அவன் அருச்சுனனில்லா?” என்று தேயி சொல்வாள். அப்போது அவன்மேல் அத்தனை பெண்களும் மையல் கொள்வார்கள். அத்தனை ஆண்களும் காழ்ப்படைவார்கள். மறுநாள் அவனை ஆண்கள் தாக்க எண்ணினர். பெண்கள் பேசவிரும்பினர். அவன் இருசாராருக்கும் சிக்காமல் தன் பாறையுச்சிக்குச் சென்றுவிட்டிருப்பான்.

அவன் தாய்மாமன் சிண்டனுக்கு அவன்மேல் கசப்பு இருந்தது. அவன் வேலை செய்யாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான், எதிலும் கலந்துகொள்வதில்லை, அவனை பெண்ணன் என்றும் சொல்கிறார்கள். ஆகவே அவனை வலுக்கட்டாயமாக வேலைக்குக் கூட்டிச் செல்ல தொடங்கினார். அவன் அம்மா முதலில் எதிர்த்துப் பார்த்தாள். சிண்டன் அவள் அண்ணன். அவர் ஓங்கி ஓர் அறைவிட்டபின் அவள் எதுவும் பேசமுடியாதவள் ஆனாள்.

சுண்டன் பலமுறை தப்பி மலைக்குமேல் ஓடி ஒளிந்து கொண்டான். தாய்மாமா சிண்டன் இளைஞர்களை அனுப்பி அவனை முயல்போல வேட்டையாடிப் பிடித்து கட்டி இழுத்து கொண்டு வரச்சொன்னார். அவனை பச்சை மட்டையால் அடித்து வேலைக்கு இழுத்துச் செல்லத் தொடங்கினார். வேலை செய்யாவிட்டால் சோறு இல்லை என்று ஆணையிட்டார்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்குச் செல்ல பழகினான். ஆனால் அவனால் எந்த வேலையையும் ஒழுங்காகக் கற்றுக்கொள்ள முடியவில்லை. வயல்வேலைகளைச் செய்யும் உடலாற்றல் அவனுக்கு இருக்கவில்லை. கூடைமுடைதல் மரத்தில் செதுக்குதல் உள்ளிட்ட எந்த வேலைக்கும் அவன் கை ஒருங்கவில்லை. அவன் மனம் எதிலுமே இல்லை. அவன் கூடை முடைகையில் கற்பனையில் மெய்மறந்து பலநாழிகைநேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் தோழர்களிடையே சிரிப்புக்கு இடமானான்.

சுண்டனை என்ன செய்வதென்று மாமன் சிண்டனுக்கு புரியவில்லை. அவர் அவனுக்கு கடுமையான வேலைகளை கொடுப்பதொன்றே அவனை தேற்றி எடுக்கும் வழி என நினைத்தார். அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து கட்டிவைக்கலாம் என்று அவன் அம்மா தேயி முடிவெடுத்தாள். குடியிலேயே நல்ல பொறுப்பும் திறமையும் கொண்ட காளி என்றபெண்ணை தேர்வுசெய்து அவள் அம்மாவிடம் சென்றுபேசி வெற்றிலைபாக்கும் கொடுத்துவந்தாள். காளி அவனைவிட ஆறுவயது மூத்தவள். ஒரு குழந்தையும் அவளுக்கு இருந்தது. கணவனை விரட்டிவிட்டவள். அவளைப்போன்ற ஒரு உறுதியான பெண்ணால்தான் அவனை பார்த்துக் கொள்ளமுடியும் என்று தேயி நினைத்தாள்.

அந்நாளில்தான் அவன்மேல் தெய்வம் ஏதோ குடியேறியது. முதலில் எவரும் கவனிக்கவில்லை. அவன் வழக்கம்போல அலைந்து கொண்டிருப்பதாகவே நினைத்தார்கள். பிறகுதான் வேறுபாடு தெரிந்தது. அவன் கைகளைச் சுருட்டி இறுக்கி பற்களை கடித்து ஏதோ சொல்லிக் கொண்டான். அப்போது அவன் முகம் கொலைவெறி கொண்டவன் போலிருந்தது. தனக்குத்தானே பேசிக்கொண்டான். கண்கள் கலங்கி வழிய கைகளை வானம் நோக்கி விரித்தான். மலைகளை நோக்கி கைநீட்டி பேசினான்.

இரவில் அவனுக்கு தூக்கமே இருக்கவில்லை. எந்நேரமும் எழுந்து அமர்ந்திருந்தான். பலநாட்கள் அவன் இருட்டிலேயே கிளம்பி மலைமேல் ஏறி தன் பாறைக்குமேல் சென்று நட்சத்திரங்களுக்கு கீழே படுத்துக்கொண்டான். எந்தக் கேள்விக்கும் அவனிடமிருந்து பதில் வரவில்லை. அவன் அம்மாகூட அவனிடம் பேசமுடியவில்லை. தேயி அவன் முன் நின்று அழுது கைகூப்பி மன்றாடியது எதுவும் அவனைச் சென்றடையவில்லை. அவன் கல்லில் எழுந்த தெய்வமுகம் கொண்டிருந்தான்.

அவன் அதன்பின் வேலைக்கும் செல்லவில்லை. அவன் மாமா சிண்டன் அவனை வேலைக்கு அழைத்தார். அவன் திரும்பிப் பாராமல் சென்றான். அவர் கோபத்துடன் கையை ஓங்கியபடி அவனை நோக்கிச் செல்ல அவன் திரும்பி “உம்!”என்றான். அவன் முகத்தில் எழுந்த உக்கிரத்தைக் கண்டு அவர் அஞ்சி பின்னடைந்துவிட்டார். அவனைப் பிடிக்க செல்ல இளைஞர்கள் எவரும் துணியவில்லை. அவனிடம் ஏதோ மலைவாதை கூடிவிட்டது என்றார்கள். அவனை இனி எவராலும் அடக்கமுடியாது என்றார்கள்.

மலைவாதையை அடக்கும் ஆற்றல்கொண்ட பூசகர்கள் காணிக்காரர்களே. சிண்டன் மலைக்குமேலே சென்று காணிக்கார பூசாரியான கும்பனை கண்டு பேசி ஒருபணம் கொடுத்து விட்டு வந்தான். அமாவாசை நாளில் பூசையும் பலியும் செய்து மலைவாதையை காடேற்றிவிடுவதாக கும்பன் சொல்லியிருந்தான். அதற்காக காட்டில் பொறிவைத்து பிடிக்கப்பட்ட பன்றி ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு காத்திருந்தது.

அப்போதுதான் குமாரபுரம் சாலையின் நாலுமுக்கு வழியாக மலையிறங்கி வந்த சுண்டன் அங்கே ஏழு புலையப் பெண்களை கைகள் பனைநாரால் சேர்த்துக்கட்டி விற்பனைக்குக் கொண்டுவந்து வைத்திருப்பதைக் கண்டான். அவர்களின் குழந்தைகளும் அருகே கைகள் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பத்து படைநாயர்கள் ஈட்டிகளும் வாள்களுமாக காவல்நின்றனர். ஆலும்மூடுக் குடும்பத்தின் அடிமைகள் அவர்கள். ஆலும்மூடு காரணவர் கேசவன் தம்பி தன் வீட்டிலிருந்து வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர்

அப்பெண்களின் கணவர்கள் தொலைவில் நின்று கதறி அழுதனர். அவர்களை வேலைக் காட்டி அச்சுறுத்தியும் கல்லைவீசி எறிந்தும் விரட்டினர் காவலுக்கு நின்ற படைநாயர்கள். குழந்தைகள் அவர்களை நோக்கி கைநீட்டி ஓலமிட்டார்கள். சிலபெண்கள் மயங்கிக்கிடந்தார்கள்.

அப்போது ஆலும்மூடு காரணவர் கேசவன் தம்பி தன் காரியஸ்தனுடனும் சேவகனுடனும் வரப்பின் வழியாக வந்தார். அவரை கண்டதும் “தம்பிரானே, வேண்டாம் தம்பிரானே” என்று அலறியபடி ஒரு புலையன் எல்லையை மீறி ஓடிவர படைநாயர் ஒருவன் அவனை ஈட்டியால் மண்டையில் ஓங்கி அறைந்து வீழ்த்தினான். அவனுடைய மனைவியும் குழந்தைகளும் கூச்சலிட்டு அழுதார்கள்.

அத்தருணத்தில் சுண்டனுக்குள் இருந்து மலைவாதை பெருகி எழுந்தது. அவனுக்கு எட்டு கைகள் முளைத்தன, வாயில் வீரப்பல் எழுந்தது. சிம்மம்போல பிடரி சிலிர்த்தது. கர்ஜித்தபடி அவன் பாய்ந்தான் என்று புள்ளுவர் பாட்டு சொன்னது. வானத்தில் இடி முழங்கியது. மின்னல் வெட்டியபோது மலைப்பாறைகள் அதிர்ந்தன. காகங்கள் வானில் ஊதிச்சிதறடிக்கப்பட்டவை போல பறந்தன.

பானைப்பாட்டுகளில் உள்ள கதையில் சுண்டன் உறுமியபடி பாய்ந்து சென்று முதல் படைநாயரை கல்லால் அறைந்து வீழ்த்தினான். அந்த ஈட்டியை பிடுங்கி மற்ற நாயர்களை குத்திக் கொன்றான். நான்குபேர் விழுந்ததும் மற்றவர்கள் அஞ்சி ஓடினார்கள். அவன் கேசவன் தம்பியையும் அவருடன் வந்த காரியஸ்தனையும் சேவகனையும் கொன்றான். காரணவரின் நெஞ்சை வாளால் வெட்டிப்பிளந்து உள்ளிருந்து துடிக்கும் உயிர்க்குலையை எடுத்து ரத்தம் குடித்தான்

ஒதுங்கி நின்றிருந்த புலையர்கள் ஓடிவந்து தங்கள் மனைவி குழந்தைகளை கட்டு அவிழ்த்து அழைத்துக்கொண்டு ஓடி காட்டுக்குள் தப்பிச் சென்றார்கள். ஓடிப்போன நாயர்கள் கொம்பூதி அழைக்க நாயர் படைவந்து சூழ்ந்துகொண்டது. அவர்கள் கல்லெறிந்து சுண்டனை வீழ்த்தினர். அப்போது பிடுங்கி எடுத்த இதயம் சுண்டனின் கையில் இருந்தது. காரணவர் கேசவன் தம்பியின் குடல் சேற்றில் நீண்டு கிடந்தது.

அவனை பத்மநாபபுரத்திற்கு கொண்டு சென்றார்கள். அவன் மயங்கி விழுந்து நினைவில்லாமல் கிடந்தான். கைகளை கயிற்றால் கட்டி தரையில் போட்டு இழுத்துச் சென்றார்கள். அங்கே புறக்கோட்டையில் அவனை ஒரு மரத்தில் கட்டி போட்டிருந்தனர். அவனை வேடிக்கை பார்க்க கோட்டை மக்கள் கூடினர். பிடிபட்ட காட்டுவிலங்குபோல அவன் சுருண்டு தன்னை மறந்து கிடந்தான். அவனில் எழுந்த தெய்வம் மறைந்துவிட்டிருந்தது.

மறுநாள் பேஷ்கார் வந்தார். அவன் குற்றம் விசாரிக்கப்பட்டது. கழுவேற்றியே தீரவேண்டும் என்று சபையினர் கூச்சலிட்டார்கள். கழுவேற்றும்படி பேஷ்கார் ஆணையிட்டார். கார்த்திகைத் திருநாள் ராமவர்மா மகாராஜாவின் முத்திரைப்படி திவான் கிருஷ்ணன் தம்பியின் பொறுப்பில் கழுவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மூன்றுநாட்கள் சுண்டன் அந்த மரத்தடியில் கட்டிப்போடப்பட்டிருந்ததான். பின்னர் கழுக்கோட்டையில் கழுவேற்றப்பட்டான். வழக்கமாக கழுபீடம் ஒருக்கும் அவன் தாய்மாமனான சிண்டன் தனியாகச் சென்று சாரோடு பாறையடியில் ஓர் இலஞ்சி மரத்தில் தூக்கிட்டு இறந்தார். பாறசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் கழுபீடம் ஒருக்கினார்கள்.

அவன் அம்மா அவனை அவர்கள் பிடித்துக் கொண்டு போவதைக் கண்டு உடன் வந்தாள். அவர்கள் அவளை அணுகவிடவில்லை. ஒரு மரத்தின்மேல் ஏறி நின்று அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கசங்கிய அழுக்குத்துணி போல கிடப்பதை உணர்ச்சியில்லா கண்களால் வெறித்தாள். அவனை அவர்கள் கழுவேற்ற கொண்டு போனதை கண்டதும் நேராகச் சென்று தன் கைகால்களை கட்டிக்கொண்டு செம்பன்குளத்தில் விழுந்து மூழ்கி இறந்தாள்.

கழுவன் சுண்டனை ஏழுநாட்களுக்குப் பின் கொண்டுவந்து வயல்மேட்டில் எரித்தனர். அங்கேயே அவனை கழுமாடனாக நிலைநிறுத்தினார்கள். ஆனால் அவன் அடங்கவில்லை. சிவனிடம் வரம்கேட்டுவந்து அவன் நாட்டில் ஆதாளி செய்தான். ஆலும்மூடு குடும்பத்தினரின் எட்டு வாரிசுகளை அவன் முதுகிலறைந்து கொன்றான்.

அவர்கள் கீழ்மடம் போற்றியை அழைத்துவந்து பிரஸ்னம் வைத்து பார்த்தபோது உக்ரரூபியான கழுமாடன் அவர்கள் குடும்பத்தை அழிக்க வெறிகொண்டிருப்பதைக் கண்டார்கள். சுண்டன் கழுமாடனுக்கு குருதிபலி கொடுத்து மிகப்பெரிய சாந்திபூஜையை நடத்தினார்கள்.

பூசகனின் உடலில் எழுந்த கழுமாடன் ‘என்குடியை வைத்து அடிமை வியாபாரம் செய்தவனின் குருதிகுடித்தேன், இனி செய்பவனின் குருதியையும் குடிப்பேன். என்ன தந்தாலும் அடங்க மாட்டேன்’ என்றான். “முக்காலி அடியும் சாணியடியும் நடந்தால் இனியும் பெருகி எழுவேன்” என்றான்.

“இனி குடும்பத்தில் எவரும் அடிமை வியாபாரம் செய்வதில்லை’ என்று ஆலும்மூடு குடும்பத்தினரின் புதிய காரணவரான ராமன் தம்பி நெய்விளக்கை தொட்டு சத்தியம் செய்தார். கழுமாடனுக்கு பலியும் பூஜையும் முறையாகச் செய்யும்பொருட்டு சுண்டனின் குடும்பத்திற்கே பொறுப்பை அளித்து கரமொழிவாக வயலும் நிலமும் அளித்து நீட்டு பொறித்து கொடுத்தார்.

கழுப்பிடி ஆசான் சுண்டனை கழுவில் அமரச்செய்தபோது அவன் முகம் புன்னகையுடன் இருந்ததாக புள்ளுவர் பாட்டு சொன்னது. “நிலாவெழுந்த சுனைபோலே, கனாவெழுந்த குழந்தை போலே’ அவன் முகம் இருந்தது. அவர்கள் அவனை கோட்டைக்குள் விட்டுவிட்டு கதவை மூடியபோது அவன் ஒரு வார்த்தை சொன்னான். “கரியாத்தா!” அதைக்கேட்டு அவர்கள் நடுங்கினார்கள். ஏனென்றால் அங்கே எட்டு மாதம் முன்பு கழுவேற்றப்பட்ட புலையனின் பெயர் அது.

கரியாத்தனுக்கு கழுபீடம் ஒருக்கியவர் சிண்டன். அப்போது அந்தக் கழுபீடத்தில் உடல்தடம் உருவாவதற்காக கரியாத்தனைப் போலவே உடல்கொண்ட சுண்டனை பச்சைக்களிமண் மேல் அவர் அமரவைத்தார். அந்த தடம் மீது அமர்ந்துதான் கரியாத்தன் கழுவிலேறினான்.

சுண்டன் கழுவிலேறிய அந்தப்பீடத்தை அமைக்கும்போதும் அவ்வண்ணம் ஓர் இளைஞனை அமரச்செய்து தடம் பதித்தனர். அவன் பெயர் உருமன். ஓடையடிக் கழுமாடனாகிய சுண்டனின் நடுகல்லுக்கு அப்பால் சிற்றாலக்காட்டின் அருகே கிளைபரப்பி நின்றிருக்கும் ஆலமரத்தடியில் நடுகல்லாக அமர்ந்திருக்கும் எழுமுடி கழுமாடன் உருமன்தான்.

***

முந்தைய கட்டுரைகீர்ட்டிங்ஸ், வண்ணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு,குங்குமம் -பேட்டி