ராசிபலனில் நவீன இலக்கியம்

அன்புள்ள ஜெ

யூடியூபில் ராசிபலன் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு அபத்தம் வந்து பொங்கலில் கல் கடிபடுவதுபோல உறுத்தியது. ஒருவர் ராசிபலன் சொல்லி குறிப்பிட்ட தோஷத்திற்காக வெண்முரசில் இந்தந்த பகுதியை படியுங்கள் என்று சொல்கிறார். இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதை அறிந்தால் ஊக்குவிப்பீர்களா?

ஆர்.சிவராம்

***

அன்புள்ள ஆர்.சிவராம்,

முதல் கேள்வி நீங்கள் சோதிடத்தை ஏற்கிறீர்களா, நம்புகிறீர்களா என்பது. அதை மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் ஒரு வழிமுறை என்று ஏற்கிறவர்கள் உண்டு. ஆழமாக நம்புகிறவர்களும் உண்டு. நீங்கள் ஒட்டுமொத்தமாக சோதிடத்தை நம்பவில்லை என்றால் அதில் ஒன்று அபத்தம், இன்னொன்று சிறப்பு என்பதெல்லாம் இல்லை, ஒட்டுமொத்தமாகவே அபத்தம்தான்.விவாதமே தேவையில்லை.

[ஆனால் தமிழகத்தில் பொதுவெளியில் சோதிடத்தை இகழ்ந்துவிட்டு தனிவாழ்க்கையில் சிக்கலென்னும்போது தேடிச்செல்பவர்களே மிகப்பெரும்பாலானவர்கள். இதை நான் ஒருமுறை அமெரிக்காவில் சொன்னேன். உடனிருந்த வெள்ளையப் பேராசிரியர் அமெரிக்காவிலும் அப்படித்தான் என்று சொன்னார். உலகமெங்கும் அதுதான் வழக்கம் போலிருக்கிறது]

சோதிடத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றால், ஏன் இது அபத்தமாகத் தெரிகிறது? ஏனென்றால் இது வழக்கமாக எல்லா சோதிடர்களும் சொல்வதுபோல இல்லை — நீங்கள் நம்புவதுபோல இல்லை அவ்வளவுதான் இல்லையா?

திரு.குமரவேலை எனக்கு என் வாசகராக பதினைந்தாண்டுகளாகத் தெரியும். ஒன்று, அவர் கல்விபயிலாதவர் அல்ல.நுண்உயிரியலில் முனைவர் பட்டம் பெற்று, இந்தியாவின் முக்கியமான ஆய்வகமொன்றில் தலைமை அறிவியலாளராக பணியாற்றுபவர். செல் உருமாற்றம் பற்றிய நூல்களை எழுதியவர். ‘செல்லுக்குள் செல்வோம்’ அவருடைய எளிமையான அறிமுக நூல்.

அவருக்கு சோதிடம் தொழில் அல்ல. சோதிடம் சொல்ல எனக்குத்தெரிந்து இப்போது அவர் கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்வதில்லை. அவர் ஏற்கனவே மிக வசதியானவர். குழந்தைகளும் நல்லநிலையில் இருக்கிறார். இதை அவர் தன் கடமை என நினைக்கிறார்

ஏனென்றால் சோதிடம் அவருடைய குலத்தொழில். நெடுங்காலமாகவே குலத்தொழிலாக சோதிடத்தை கொண்ட சாதியைச் சேர்ந்தவர். கணியன் பூங்குன்றன் தன் குலம் என்று சொல்பவர். ஆகவே இதை விட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்.

இங்கே மரபான விஷயங்களில் குலமுறை என்ற ஒன்று முன்பு கணிக்கப்பட்டது. மருத்துவம் குறைந்தது மூன்றுதலைமுறையாகச் செய்யப்படவேண்டும்.சோதிடம் ஏழு தலைமுறையாக செய்யப்படவேண்டும். இது பண்டைய ஆசாரம், நம்பிக்கை. இதை நான் நம்புகிறேனா என்பது வேறுகேள்வி. ஆனால் இதுவே இங்குள்ள மரபு

ஏன் பாரம்பரியத்தை முன்வைக்கிறார்கள் என்றால் இத்துறைகளில் அறிவு இரண்டாம்பட்சம்தான். நுண்ணுணர்வு [Intuition ]தான் முதன்மையானது. பாரம்பரியமாக அதை செய்பவர்களில்தான் இளமையிலேயே அது உருவாகி வந்திருக்கும் என்பதும், மந்திர உபதேசம் அவர்களுக்கே பயனளிக்கும் என்பதும் இங்குள்ள நம்பிக்கை.

உடனே சாதிமேட்டிமை என்ற வழக்கமான ஒற்றைவரி எழுந்து வரும். நடைமுறை அப்படி அல்ல. ஆசாரிகள், கணியர், புள்ளுவர், பண்டாரம் போன்ற பல சாதியினருக்கு இப்படி பாரம்பரியமான நுண்ணுணர்வுகள் உண்டு என்பது இங்கே உள்ள நம்பிக்கை.  சோதிடம், மந்திரவாதம் ஆகியவற்றில் பறையர்களில் ஒருபிரிவினரான வள்ளுவர்கள் இயற்கையான பாரம்பரிய மந்திரசித்தி உடையவர்கள் என்ற நம்பிக்கை இன்றும் உண்டு.

இதை நான் ஏற்கிறேனா என்றால் என் மூளைக்கு இது ஒரு நம்பிக்கை என்ற அளவிலேயே தோன்றுகிறது என்பதே பதில். தர்க்கபூர்வமானதாக அல்ல. சோதிடத்தையே  நான் ஒரு நம்பிக்கையாகவே நான் பார்க்கிறேன். நான் இதுவரை சோதிடமே பார்த்துக்கொண்டது இல்லை. என் குடும்பத்திலேயே சோதிடம் பார்த்தவர்கள் இருந்தனர். குமரவேலிடமே கூட சோதிடம் கேட்டதில்லை. கேட்கும் எண்ணமும் இல்லை. நான் இங்கே எது பாரம்பரியமான நம்பிக்கை, வழிமுறை என்று மட்டுமே சொல்கிறேன்.

இன்று தமிழகத்தில் சோதிடம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியம் அற்றவர்கள்,அவர்களே நூல்கள் வழியாக கற்றுக்கொண்டவர்கள். தந்தையை குருவாகக்கொண்டு கற்கவேண்டும், அல்லது குருவை தந்தையாகக்கொண்டு கற்கவேண்டும் என்றுதான் தொல்நெறி. அது இங்கே இன்று இல்லை. சோதிடம் ‘அறிவியலாக’ கற்றுக்கொடுக்கப்படுகிறது. கல்லூரிப் பாடமாக உள்ளது.

மரபான பார்வைப்படி சொன்னால் சோதிடத்தை அப்படி புறவயமாகக் கற்பிக்கமுடியாது. சோதிடத்தில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளன. நோன்பு, மந்திரஉபதேசம், உபாசனை. சோதிடம் கற்க அதற்குரிய வாழ்க்கைமுறைதேவை, அதை நோன்பு என்கிறர்கள். குருவிடமிருந்து மந்திரம் பெற்று நுண்ணுணர்வை தீட்டிக்கொள்ளவேண்டும். அதை வாழ்க்கைமுழுக்க இயற்றவேண்டும்- அதை உபாசனை என்கிறார்கள். எவர் அதை கல்லூரிகளில் வழக்கமாக ஆக்கமுடியும்?

ஆகவே இங்கே ஒரு சோதிடம் இன்று வேரூன்றி உள்ளது. இதையே இயல்பானது, சரியானது என்று நம்பி, மரபானதை ஏளனம் செய்யும் ‘பகுத்தறிவை’ ஈட்டியிருக்கிறோம்

சோதிடத்தில் முக்கியமானது பரிகாரம். ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல, அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் சொல்வது அது. பரிகாரம் நான்கு படிகள் கொண்டது. நான் சொல்வது கேரளத்தில் வேரூன்றிய தொன்மையான சோதிடமுறையை. ஒன்று, நிஷ்டை அல்லது நோன்பு. இரண்டு, உபாசனை அல்லது வழிபாடு. மூன்று தானம் அல்லது கொடை, நான்கு பாராயணம் அல்லது வாசிப்பு

பரிகாரத்தில் முதலில் சொல்லப்படுவதே நோன்புதான். உணவுசார்ந்த நோன்புகள் முதன்மையாக. நான் இளமையில் பெரும்பாலும் எல்லா நோன்புகளிலும் அசைவத்தை ஒதுக்குவதைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாழ்நாள் முழுக்க விலக்குவது, ஓர் ஆண்டு விலக்குவது , ஒரு மண்டலம் விலக்குவது என அதில் பல படிநிலைகள். சோதிடம் இங்கே சமணத்தால் முன்னெடுக்கப்பட்ட அறிவியக்கம் என்பதனால் இது வந்திருக்கலாம்.

ஒருபொழுது உண்ணுதல், சிலகுறிப்பிட்ட உணவுகளை ஒதுக்குதல் [தமோகுணம் கொண்ட உணவுகள். குறிப்பாக கிழங்குகள்] போன்று பல உணவுநோன்புகள் உண்டு. [கடைசியில் சமண உணவுமுறைக்கே சென்றுசேரும் வேடிக்கையையும் கண்டிருக்கிறேன்]. ஆனால் புலால்மறுத்தல் பேசப்படாமல் பரிகாரம் நான் கேள்விப்பட்டதில்லை. இதைத்தவிர காலையெழுதல், இரண்டுவேளை நீராடுதல், பாலியல் ஒறுப்பு,தனிமைநோன்பு, பேசாநோன்பு என பல நோன்புகள் உண்டு

அடுத்தது உபாசனை. இன்னதெய்வத்தை வழிபடு என்று சொல்லுதல். விஷ்ணு,சிவன் , துர்க்கை போன்ற பெருதெய்வங்களை வழிபடச் சொல்வதுண்டு. ஆஞ்சநேயர், நரசிம்மர், சரபேஸ்வரர் போன்ற இணைவடிவுகளை மட்டுமல்ல குடித்தெய்வங்கள், காவல்தெய்வங்கள் போன்ற சிறுதெய்வங்களையும் வழிபடும்படி சோதிடர்கள் சொல்வதுண்டு. அது எந்த தோஷம், கிரகங்களின் நிலை, சம்பந்தப்பட்டவரின் குலமும் ஊரும் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது. அவ்வழிபாட்டின் முறைகளும் நெறிகளும் உபதேசிக்கப்படும்

மூன்றாவது, கொடை. கொடை என்பது பலவகை. பசுவுக்கு தழை கொடுப்பது பறவைகளுக்கு உணவிடுவது முதல் அந்தணருக்கும் பயணிகளுக்கும் கல்வியாளருக்கும் பணம் வழங்குவது வரை அதில் பல உண்டு. அன்னம், வஸ்திரம், பசு முதல் நிலம் வரை கொடையாக ஆணையிடப்படுவதுண்டு. கொடை என்பது பெறுபவரால் தீர்மானிக்கப்படக்க்கூடாது, கொடுப்பவர் நிறைவுறவேண்டும். ஒருவேளை சோறுபோட்டால் பிச்சைக்காரன் நிறைவடைவான். அது கொடை அல்ல, தன் செல்வநிலைக்கு ஏற்ப உண்மையாகவே கொடையளித்துவிட்டோம் என்ற திருப்தியை ஆழத்தில் கொடுப்பவன் அறியவேண்டும்.

இந்த வரிசையில்தான் பாராயணம் வருகிறது. இன்னின்ன நூல்களை படியுங்கள் என்னும் அறிவுறுத்தல். சிவபுராணம், திருவிளையாடல்புராணம் போன்ற புராணங்கள்தான் பெரும்பாலும் சொல்லப்படும். கம்பராமாயணம் பாலகாண்டம், சுந்தரகாண்டம் போன்ற காவியப்பகுதிகளைப் படிக்கச் சொல்வது உண்டு.

குமரவேல் பாராயணம் என்ற இடத்தில் ஏன் புராணங்களுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என நினைக்கிறார். முந்தைய பரிகாரங்களான நோன்பு, வழிபாடு, கொடை மூன்றும் உடல், மனம், ஆத்மா சார்ந்தவை. பாராயணம் மூளைசார்ந்தது. உடல்,மூளை,மனம், ஆத்மா நான்காலும் பரிகாரம் செய்வதற்காகவே இவை சொல்லப்பட்டுள்ளன.  இன்றைய மனநிலையில் புராணங்களை படிப்பவர் மூளையால் நிறைவடைவதில்லை. அவருக்கு சமகாலத்தின் தர்க்கம் தடையாக அமைகிறது. மொழி தடையாக அமைகிறது. ஆகவே புராணங்களை பரிந்துரைத்தால் அது நாலைந்து வரிகளை வாசிப்பது என்ற அளவில் சடங்காகவே நின்றுவிடுகிறது. ஆகவே நவீன இலக்கியங்களை பரிந்துரைக்கிறார்.

அவர் நல்ல வாசகர். வாசித்ததைப் பற்றியே பரிந்துரைக்கிறார். வெண்முரசைப் பற்றி மட்டும் சொல்லவில்லை, பா.ராகவன் முதல் சாரு நிவேதிதா வரை அத்தனை நூல்களையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பரிந்துரைக்கிறார்.நூல்களில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமென்றால் அது வேறு. நவீன நூல்களுக்கு அதற்கான தகுதி இல்லை என நினைக்கிறீர்கள் என்றால் அதைப்பற்றி அவரிடம் பேசலாம். ஆனால் அபத்தம் என்றெல்லாம் சாஸ்திரம் அறிந்தவராக பாவனை காட்டவேண்டாம்.

இது வேடிக்கையான விஷயம்தான். நான் சோதிடர்களிடம் அவர்கள் நோன்பு,கொடை இரண்டையும் வலியுறுத்துவதில்லையே என்று கேட்டிருக்கிறேன். “சார், நோன்புன்னா அசைவம் வேண்டாம்னுதான் முதல்ல சொல்லணும். சொல்லிட்டு மதுரையிலே தொழில்பண்ண முடியுங்களா? தாராளமா சாப்பிடலாம்னு அந்தப்பக்கம் ஒருத்தன் சொல்லுவான். அங்க போயிடுவாங்க” என்றார் ஒருவர். “தானம் சொன்னா முதல்பெருந்தானம் பிராமணனுக்கு குடுக்குறது. சொன்னா இங்க நம்மளை விட்டிருவானுகளா?நமக்கு தட்சிணை தரவே பேரம் பேசுறவன் அன்னதானம் போடுன்னு சொன்னா கேப்பானா?அதனாலே பசுவுக்கு அகத்திக்கீரை குடுன்னு சொல்லி நிப்பாட்டிக்கிடறது” என்றார் ஒருவர்

குமரவேல் அவருக்கு அவருடைய சாஸ்திரம் மீதும் பாரம்பரியம் மீதும் உள்ள நம்பிக்கையால் இதைச் செய்கிறார். அவருடைய துணிச்சலைத்தான் நான் பாராட்டுவேன்

ஜெ

அன்புள்ள ஜெ,

இந்த கொரோனா காலத்தில் ராசிபலன் மீதான நம்பிக்கை சிறிதும் இல்லாமல் ஆகிவிட்டது , கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருப்பதால் இப்படி தோன்றுகிறது என நினைக்கிறேன் , கறி விருந்துக்கு வரசொல்லி  நண்பனிடம் இருந்து வரும் அழைப்பைவிட இன்னும் குதூகலம் அளிக்கக்கூடிய வெள்ளிகிழமையின் இரவுகளே இப்போதெல்லாம் சாதரணமாகிவிட்டது .

நிலமை இப்படியிருக்க… கொஞ்சம் வாசிப்பு பழக்கம் இருக்கும் நண்பனொருவன் வாட்ஸப்பில் ஒரு சுட்டியை அனுப்பியிருந்தான் ,சொடுக்கிப் பார்த்தால் 20 நிமிடம் ஓடக்கூடிய ராசிபலன் காணொளி … இவனுக்கு ஏதோ புத்தி பேதலித்துவிட்டது என நினைத்துகொண்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அரைமணிநேரம் கழித்து மீண்டும் என்னை அழைத்து வாட்ஸப்பில் நான் அனுப்பிய வீடியோவை பார்த்துவிட்டாயா என்றான் … “அப்படி என்னடா இருக்கு அதுல?? சாதாரண ராசிபலன்தானே ??? ” என்றேன். “சாதாரண ராசிபலனில் ஜெயமோகன்,சுந்தர ராமசாமி , எஸ்.ராமகிருஷ்ணன் பெயர்கள் எல்லாம் வருமா??” என்று கேட்டான்…

ராசிபலனில் சந்திரனும் சுக்கிரனும்தானே வருவார்கள் இவன் என்ன ஜெயமோகன் , சுந்தர ராமசாமி பெயர்கள் எல்லாம் வருகிறது என்று சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டே அவன் அனுப்பிய ராசிபலனை பார்க்க ஆரம்பித்தேன் … உண்மைதான் ஒவ்வொரு ராசிக்கும் பரிகாரத்தை போலவே ஒரு எழுத்தாளரின் பெயரை சொல்லி இவரது எழுத்தை வாசித்துப்பாருங்கள் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று வழக்கமான ஜோதிட பாஷையிலே சொன்னார். கடக ராசி நேயர்களுக்கு ஜெயமோகனும் , பா.ராகவனும்!! ஆச்சரியமாக இருந்தது …

“ஒரு புத்தக வாசிப்பின் நிறைவு படித்த புத்தகத்தைப் பற்றி யாரிடமாவது சொல்லும்போதுதான் முழுமையாக கிடைக்கிறது ‘ என யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது , என்னை போலவே ராசிபலன் சொல்பவருக்கும் யாரிடம் சொல்வது என தெரியாமல் ராசிபலனுடன் சேர்த்து சொல்லிவிட்டார் என நினைக்கிறேன்… உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது.

வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள் : சுஜாதா, சாரு நிவேதிதா , பாலகுமாரன் , ஜெயமோகன், பா.ராகவன் , எஸ்.ராமகிருஷ்ணன் , சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன்.

அன்புடன் ,
பாலசுப்ரமணி மூர்த்தி
***

அன்புள்ள பாலசுப்ரமணிய மூர்த்தி

அவருக்கு அவர் சொல்லும் விஷயங்களில் தெளிவு உள்ளது. அதைத்தான் சொல்கிறார். சோதிடருக்கு அவருடைய கலையில், உள்ளுணர்வில் இருக்கும் நம்பிக்கையே முக்கியமானது

ஜெ

முந்தைய கட்டுரைகுளிர்ந்த நீரின் எளிய குவளை – -வேணு தயாநிதி
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]