பெருவலி – நம்பகம் – விவாதம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு வாரமாக எனக்கும் முதுகு வலி. நல்ல வேளையாக சிறுவலிதான். கதையும்
முதுகுவலி என்று ஆரம்பித்ததும் அப்புறம் படிக்கலாம் என்று தள்ளி
வைத்துவிட்டேன். :-)

கோமலின் தரிசனம் சிறப்பாக இருந்தது. எனக்கு பொதுவாக வலி மூலம் ஆன்மிகம்,
mystic அனுபவங்கள் புரிவதே இல்லை. அப்படி இருந்தும் உலகின் துன்பங்களை
ஏற்பதாக அவர் நினைக்கும் தருணத்தின் அற்புதத்தை உணர முடிந்தது.

ஆனால் தன் தரிசனத்தைப் பற்றி அவர் தன் குடும்பத்தினரிடம், நெருங்கிய
நண்பர்களிடம் பேசலாம். சில முறையே சந்தித்த, ஒரு acquaintance என்ற
நிலையில் மட்டுமே உள்ள ஜெயமோகனிடம் மனதிலிருந்ததை எல்லாம் உயிர் போவது
போல வலிப்பதையும் பொருட்படுத்தாமால் நீளமாக பேசினார் என்பதில்
நம்பகத்தன்மை கொஞ்சம் குறைவாக இருப்பது போல தோன்றியது. அந்தத் தரிசனத்தை
அவர் வேறு யாரிடமும் – குடும்பம், நண்பர்கள் – பகிர்ந்துகொள்ளவில்லை,
ஜெயமோகன் எப்போது வருவார், அவர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியவர்,
ஜெயமோகனிடம் கொட்டி தீர்த்துவிட வேண்டும், பிற்காலத்தில் இதைப் பற்றி
எழுதுவார் என்று காத்திருந்தது போல அல்லவா ஒரு சித்திரம் வருகிறது?

 

ஆர்வி.

அன்புள்ள ஆர்வி

பொதுவாக கதைகளில் இந்த மாதிரி கேள்விகளுக்கு இடமில்லை. இப்படிக் கேட்க ஆரம்பித்தால் தஸ்தயேவ்ஸ்கியையே தூக்கிப்போடவேண்டியதுதான். இந்த கேள்விக்கு ஒரே பதில் சொன்னார், சொன்னதனால்தான் எழுதப்பட்டது. சொல்லியிருக்காவிட்டால் எழுதப்பட்டிருக்கமாட்டாது.

மேலும் இம்மாதிரி அனுபவங்களை எவரும் அந்த மனநிலை- அலைவரிசையை பகிர்ந்துகொள்ளாதவர்களிடம் சொல்லமாட்டார்கள்.

ஆனால் என் கதையில் இந்த கேள்விகளுக்கும் பதில் அதிலேயே இருக்கும். கதையை இன்னொரு முறை படியுங்கள்.

இந்தக்கதையை கோமல் பெயர் இல்லாமல் எழுதியிருந்தால் இப்படி முதுகுப்புற்றுநோயுடன் மலை ஏறுவது சாத்தியமே இல்லை, பீலா என்றுதான் பெரும்பாலான எதிர்வினைகள் இருந்திருக்கும்.ஒரு கதை அது உருவாக்கும் ஒரு பாவனையை பகிர்ந்துகொள்ள வாசகனை அழைக்கிறது. அப்போதுதான் கதை உருவாக்கும் வட்டத்துக்குள் வாசகன் செல்லமுடியும்

ஒரு நல்ல வாசகனின் அனுபவங்களை விட எழுத்தாளனின் அக அனுபவங்கள் அதிகமானவை. ஆகவே இலக்கிய வாசிப்பில் அந்த நம்பிக்கையை எழுத்தாளனுக்கு அளிக்கலாம். வாசகனின் சிறிய அனுபவ வட்டத்துக்குள் ஏற்கனவே அவர் அறிந்ததை, அனுபவித்ததை மட்டுமே நம்பமுடியும் என்றால் அவர் இருந்துகொண்டிருக்கும் வட்டத்தை விட்டு வெளியே வரவே முடியாது.

ஒருபேச்சுக்குச் சொல்கிறேன். கோமல் மொத்தம் 122345 பேரிடம் இதைப்பற்றி பேசியிருக்கிறார். இப்படியே. அவர்களில் ஒருவர்தான் சிறுகதை எழுத்தாளர் என்று சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்?

ஜெ

*

ஜெ,

பொதுவாக கதைகளில் இந்த மாதிரி கேள்விகளுக்கு இடமில்லை. // நீங்கள்
சொல்ல வருவது புரிகிறது. முன்பும் வேறு ஒரு கான்டெக்ஸ்டில் சொன்னீர்கள்.// சொன்னார், சொன்னதனால்தான் எழுதப்பட்டது.
உங்களோடு ஓரளவு பரிச்சயம் உள்ளவர்களுக்கு விளக்கம் தேவையே இல்லை. நீங்கள் சும்மா பீலாவிடுகிறீர்கள் என்ற அர்த்தத்தில் நான் எழுதவும் இல்லை.

ஆனால் இதை வேறு ஒரு தளத்தில் – ஸ்வாஹிலி மொழியில் படிப்பவர்களுக்கு –
இப்படி தோன்றலாம் இல்லையா? ஒரு நாள் உங்கள் கதைகள் அங்கும் போகும்
என்றுதான் நம்புகிறேன். அவர்களுக்காகவாவது ஒத்த அலைவரிசை என்பதை இன்னும்
கொஞ்சம் வலியுறுத்தி எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள்
சில சந்திப்புகள் மட்டுமே (வீடு தெரியவில்லை), குறைவான பழக்கமே
என்பதைத்தான் வலியுறுத்தி எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் என்ன இந்த
குழுமத்தில் இருக்கும் 200 பேருக்கோ, இல்லை உங்கள் தளத்தை ரெகுலராக
படிக்கும் இருபதாயிரம் பேருக்கோ, இல்லை ஏழு கோடி தமிழர்களுக்கோ மட்டுமா
எழுதுகிறீர்கள்? கோமல் யாரென்று தெரிந்தவர்கள், அவரது மற்றும் உங்களது
அலைவரிசை என்ன என்று புரிந்தவர்கள் எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள்?

ஒரு விஷயத்தை நானே இப்போதுதான் சரியாக உணர்ந்தேன். நான் பேசுவது கதையில்
வரும் கோமல் மற்றும் ஜெயமோகன் என்ற இரண்டு பாத்திரங்களைப் பற்றி. நீங்கள்
பேசுவது அவர்களுக்கு மூலமாக அமைந்த இரண்டு நிஜ மனிதர்கள் பற்றி. கதையில்
என்ன இருக்கிறதோ அது மட்டும்தான் எனக்கு ஆதாரம். அதன் சமகால உண்மைத்தனம்
(contemporary veracity) எனக்கு இந்த கதைகளில் காணப்படும் லட்சியவாதத்தை
வலுப்படுத்த மட்டுமே – இப்படியும் நிஜ மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்,
மனிதர்கலுக்கு மேன்மை சாத்தியம் – உதவுகிறது. நீங்கள் நிஜ வாழ்க்கையில்
ஒத்த அலைவரிசை இருக்கிறதே, என்னிடம் (மட்டும்தான்) பேசினார் என்பது
உண்மைதானே என்கிறீர்கள். :-)

ஆர்வி

*

அன்புள்ள ஆர்வி

உலகம் முழுக்க நவீன இலக்கியம் அறிந்தவர்கள் அதன் அடிப்படை இலக்கணங்களில் ஒரு சீரான புரிதல் கொண்டிருப்பார்கள். இது டிரமாட்டிக் மொனோலாக் என்ற வகை இலக்கிய உத்தி என்றும் நேர் வாழ்க்கையில் எவரும் இப்படி ஒரு தன்னுரை அல்லது பேருரையை நிகழ்த்துவதில்லை  என்றும் அறிந்திருப்பார்கள். ஆகவே அவர்கள் இந்த கேள்வியை ஷேக்ஸ்பியர் அல்லது தஸ்தயேவ்ஸ்கி அல்லது எஸ் எல் பைரப்பா அல்லது வோல் சொயிங்காவிடம் எப்படி கேட்கமாட்டார்களோ அதேபோல என்னிடமும் கேட்க மாட்டார்கள்

ஒரு டிரமாட்டிக் மோனோலாக் எப்போதும் மன உச்சம் சார்ந்தது. அந்த மன உச்சம் மூலம் வெளிப்படும் கவித்துவமும் உச்ச உணர்ச்சிகளுமே அங்கே முக்கியமானது. அந்த உணர்ச்சிகள் நேர்வாழ்க்கையில் அப்படியே இருந்தவை அல்ல. ஆகவே அந்த குறிப்பிட்ட எருமையை அப்படியே பார்த்திருக்க முடியுமா என்ற கேள்வியையும் கேட்க மாட்டார்கள். அந்த எருமையை எதன் கவித்துவக்குறியீடு என்று மட்டுமே பார்ப்பார்கள். ஸ்வாஹிலி என்றால் அது மரணம், எமன் வாகனம் என ஒரு * தேவைப்படும்

மேலும் அந்த டிரமாட்டிக் மோனோலாக் ஒரு யதார்த்தச் சித்திரம் மீது வைக்கப்படுவதற்கான விளக்கங்கள், நியாயங்கள் கதையில் சொல்லப்பட்டுள்ளன.

1.  சொல்பவர் கவித்துவமான மன அமைப்பும் சொல் திறனும் உள்ளவர் என்பது கதையில் உள்ளது

2. சொல்பவருக்கும் கேட்பவருக்கும் நீண்ட இலக்கிய விவாதங்களும் ஆழமான நட்பும் உள்ளது என்பதற்கான பல ஆதாரங்கள் – குறைந்தது எட்டு- கதையில் உள்ளன. சொல்பவர் கேட்பவரின் இலக்கிய மெண்டர் என்றே கதையில் உள்ளது.  மௌனியை மேற்கோள் காட்டினால் புரிந்துகொள்ளக்கூடியவர்களிடமே அவர் பேசமுடியும். இவர் சுந்தர ராமசாமியைப்பற்றி யோசிப்பவர்.

அவர்களிடையே உள்ள உரையாடலின் நெருக்கமே சாட்சி. அந்த நெருக்கத்துக்கு காரணத்தை கதையில் மேலும் சொல்லவேண்டும் என நீங்கல் நினைக்கிறீர்கள்.

3 சொல்பவருக்கும் கேட்பவருக்குமான உறவின் சகஜமும் நெருக்கமும் சொல்லப்பட்டுள்ளது. மரியாதையோ விலக்கமோ இல்லாத நெருக்கமான உறவு வெளிப்படும் உரையாடல் அது.

4. கடைசியாக இத்தனை நீளமாக அவர் பேசுவாரா என்பதைக்கூட கதை தர்க்கபூர்வமாக முன்வைக்கிறது.

முனகி முனகிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொண்டிருந்தார். பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை விரும்பினார் என்று தோன்றியது.

பெரும்பாலான மரணப்படுக்கை நோயாளிகள் பேசவிரும்புவார்கள் என்பது ஓர் அனுபவம். பேசவிடக்கூடாது என்று டாக்டர்கள் திரும்பத்திரும்பச் சொல்வது அதனாலேயே. ஒரேவிஷயத்தை திரும்பத்திரும்ப விரிவாகச் சொல்வார்கள். பலசமயம் அது சம்பந்தமில்லாத ஒன்றாக இருக்கும். நான் பலமுறை அதை கவனித்திருக்கிறேன். அவ்வளவு நெருக்கமில்லாத ஆனால் அவர்கள் ஏனோ முக்கியமென நினைக்கும் சிலரை சந்திக்க விரும்புவார்கள். கடைசியாக அருண்மொழியின் பாட்டி மரணப்படுக்கையில் இளம் வயதில் இறந்துபோன மகளைப்பற்றி பலமணி நேரம் புலம்பிக் கொண்டிருந்தார்

ஆர்வி நீங்கள் எத்தனை மரணப்படுக்கை நோயாளிகளை பார்த்திருப்பீர்கள்? நான் பலரை பார்த்திருக்கிறேன்.  நீங்கள் அறியாத ஒன்றை நான் சொல்லும்போது எனக்கு முன்னரே தெரியாதே ஆகவே நான் எப்படி நம்புவது என்று கேட்கிறீர்கள். அதைத்தான் முந்தைய கடிதத்திலே சொன்னேன். அப்போதுகூட அதை நீங்கள் சிந்தனைசெய்து பார்க்கவில்லை

5. கடைசியாக இது யதார்த்தவாத தளத்தில் இருந்து மேலே சென்று ஃபாண்டசியை தொடும் கதை. அத்தகைய கதைகள் அந்த இணைப்பை அதிகம் வெளியே தெரியாமல் நியாயப்படுத்தியிருக்கும்.

— நீண்ட அமைதி. அறைக்குள் இருந்த மங்கிய வெளிச்சத்தில் கோமலின் உடல் கிடந்தது. அவர் அப்போது அங்கே இல்லை. அவர் பேசினாரா இல்லை அனைத்தையும் நான் கற்பனைசெய்துகொண்டேனா? என் மனம் விம்மிக்கொண்டிருந்தது.

என்ற வரி உரிய இடத்தில் வருகிறது. இந்த டிரமாட்டிக் மொனோலாக்கே நிகழ்ந்திருக்க வேண்டியதில்லை. அல்லது இப்படி நிகழ்ந்திருக்க வேண்டியதில்லை. அது உதிரிச் சொற்களாக இருக்கலாம்.

அந்த மன உச்சத்தை இரு மனங்கள் சேர்ந்து தொடுகின்றன. கதை அதன் எழுத்துப்பதிவு, வெகுநாள் கழித்து. ’நான்’ எழுந்து வெளியே சென்றபின் நினைவுகூர்வது.

ஆகவேதான் கதையை மீண்டும் வாசியுங்கள், உங்களுக்கான பதில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் என்றேன். அதையும் செய்யவில்லை.

ஆர்வி, உங்களுக்கு மட்டும் அல்ல பொதுவாக இதே போல நினைத்துக்கொண்டு பேசாமல் இருக்கும் அனைவருக்குமாக இதை எழுதினேன்

மேற்கண்ட விஷயங்களை ஒரு ஒரு பத்தி வீதம் விரிவாக கதைக்குள் சொல்லியிருந்தால் நீங்கள் இதை கேட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் கதைகளுக்கு ஓர் உருவ அமைதி உள்ளது. கதை எதை முன் வைக்க்க விரும்புகிறதோ அதை மட்டுமே அங்கே முன்னிலைப்படும். மிச்ச எல்லாமே மென்மையாகக் குறிப்புணர்த்தத்தான் படும்.

உங்கள் சிக்கல்கள் இரண்டு. இலக்கிய எழுத்தை வாசிக்கத்தேவையான கூர்ந்த கவனத்துடன் வாசிப்பதில்லை. ஸ்க்ரோல் பண்ணிச்சென்று முடிவென்ன என்று பார்ப்பது போன்ற வாசிப்பு. இலக்கியக்கதையில் எல்லா வரிகளுமே முக்கியமானவை.

இரண்டு கதையில் சொல்லப்படாது விடப்பட்டவற்றை ஊகிக்க முயலாமல் அது ஏன் சொல்லப்படவில்லை என்று கேட்கிறீர்கள்

மூன்று உங்கள் சொந்த வாழ்வனுபவங்கள் மட்டுமே கதையில் இருந்தும் பெறப்படவேண்டும், அதற்கு மட்டுமே உங்கள் நம்பிக்கையை பெறமுடியும் என நினைக்கிறீர்கள்

ஜெ

*

ஆர்வி,

இலக்கியம் உட்பட எல்லா கலைகளுக்கும் சவாலே மனதையும் ஆழ்மனதையும்
சித்தரிப்பதுதான். அதற்குத்தான் அவற்றில் உள்ள எல்லா உத்திகளும் . மேலும்
மேலும் சோதனைகள் நிகழ்வதும் அதில்தான்

ஓவியத்தில் சர்ரியலிசம், இம்ப்ரஷனிசம் போன்ற எல்லா உத்திகளும் காட்சி
வடிவமாக மன நிகழ்வை பதிவுசெய்வதற்கான முயற்சிகள். வான்காவின் பச்சை
நிறமான சூரியனை அப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். அது ஒரு மனநிலையின்
பதிவு. ஒரு மன எழுச்சியின் கணம் காட்சிவடிவமாகியிருக்கிறது. இந்திய
ஓவியங்களில் ராதையுடன் கண்ணன் குழலூத சுற்றிலும் காடும் மலைகளும்
அதைச்சுற்றி கடலும் ஒரே சட்டத்தில் தெரிவதும் அப்படித்தான்

இன்று திரைபடக்கலை பல்வேறு முறைகளில் அதற்காக முயல்கிறது. காலத்தை
பொருட்படுத்தாத மன ஓட்டத்தை எப்படி காலத்தை மீறமுடியாத திரைப்படத்தில்
கொண்டு வருவது என்ற முயற்சியே இன்றைய திரைப்படக்கலையை இயக்கும் ஆதாரமான  தேடல்

இலக்கியம் தொன்றுதொட்டு மனதை, மன எழுச்சிகளை பதிவு செய்ய பல உத்திகளை
கையாண்டுள்ளது. நெடுங்காலம் அது டிரமாட்டிக் மோனோலோக் எனப்படும்
உணர்ச்சிகர தன்னுரைதான். அப்படி ஒருவர் பேசிக்கொள்வாரா என்ற கேள்விக்கு
இடமில்லை. அதன் வழியாக அவர் மனம் வெளிப்படும் முறையே அங்கே இலக்கு.

போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற நாவல்களில் இருபது முப்பது
பக்கங்களுக்கு நீளும் தன்னுரைகள், பேச்சுகள் உள்ளன.

அதைப்போல கனவுகள். தஸ்தயேவ்ஸ்கியும் தல்ஸ்தோயும் கனவுகளை மிகமிக விரிவாக பயன்படுத்துவதைக் காணலாம். குற்றமும் தண்டனையும் நாவலில் ஸ்வெஸ்திகைலோவ்  கடைசியில் காணும் கனவு மிக நுட்பமானது, முக்கியமானது

அதன் பின்னர் நனவோடை முறை வந்தது. டிரமாட்டிக் மோனோலாக்கில் இருக்கும்
ஒழுங்கும் தர்க்கமும் அந்த கூற்றுக்கு சில எல்லைகளை அளிக்கிறது என
எண்ணுபவர்கள் இதை உருவாக்கினர். டிரமாட்டிக் மோனோலாக்கின் மிகப்பெரிய
குறை என்னவென்றால் அது கற்ற- மொழி ஆளுமை கொண்ட- கவித்துவமான-
ஒருவரால்தான் முன்வைக்கப்பட முடியும் தஸ்தயேவ்ஸ்கியின் ரஸ்கால்நிகாஃப்
கூட ஓர் எழுத்தாளன் தான். ஆகவே சாமானியனின் அகத்தை வெளிப்படுத்த மனதை
அப்படியே எழுதும் எழுத்து கொண்டு வரப்பட்டது.

இந்த எல்லா முறைகளும் புனைவின் பாவனைகளே. தஸ்தய்வேஸ்கி சொல்வது போல
அத்தனை துல்லியமான குறியீட்டுத்தன்மையுடன் கனவுகள் வருவதில்லை. நனவோடை  [கவனிக்க நினைவோடை அல்ல.] முறை முயல்வதுபோல மனதை ‘அப்படியே’  பதிவுசெய்தால் அதற்கு ஒரு இலக்கும் ஒழுங்கும் இருக்காதென்பதுடன் பத்து  நிமிட சிந்தனைகளை பதிவுசெய்யவே நூறுபக்கம் தேவைப்படும். மனம்
திரும்பதிரும்ப ஒரே சொற்றொடர்களில் சலிப்பூட்டும்படி ஓடும் தன்மை
கொண்டது. அப்படியே எழுதினால் இலக்கியம் அல்ல. எழுதவும் முடியாது. அங்கும்
‘இது மனம் ஓடும் முறை’ என்ற பாவனையே உள்ளது

இன்று இந்த வழிகள் எல்லாமே இலக்கியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
அகத்தின் நுட்பங்களை தொட்டறிவதே இலக்கு. டிரமாட்டிக் மொனோலாக்கையும்
நனவோடைமுறையையும் இணைத்துக்கொள்வதுண்டு- உதாரணம் அசோகமித்திரனின் காந்தி.  என்ற சிறுகதை [அழியாச்சுடர்களில்படிக்கலாம்]

ஆனால் இந்த முயற்சிகள் வணிக எழுத்துக்களில் இருப்பதில்லை. அவை
நிகழ்ச்சிகளை மட்டுமே சொல்கின்றன. அந்நிகழ்ச்சிகளை அவை வாசகனுக்கு
ஏற்கனவே பழக்கமான ஒரு தர்க்கத்தில் அமைந்திருபப்தனால் அவன் அதை நம்பி
வாசிக்கிறான். நம்பவேமுடியாத சாகசங்களைக்கூட அவன் வாசித்து பழகியதனால்
நம்புகிறான்.

ஆனால் அவனே இலக்கியத்திற்கு வரும்போது இந்த அகவெளிப்பாடுகளை கண்டு
குழம்புகிறான். இதை சமீபத்தில் உலோகம் நாவலைப்பற்றி ஒருவர் எழுதியிருந்த
விமர்சனத்தில் வாசித்தேன். அவருக்கு இலக்கியப்பரிச்சயம் இல்லை என்று
தெரிந்தது.  அவ்வாசகர்களுக்கு நீண்ட தன்னுரைகள் கதையோட்டத்தின் தடைகளாக,
நம்பமுடியாதவையாக தெரிகின்றன

உலோகம் திரில்லர் அமைப்புக்குள் இலக்கியத்தையே முயல்கிறது. அதில் தன்னுரை
ஓர் இடத்தில் வருகிறது. கதாநாயகன் ஒரு இடத்தில் தன் கட்டுப்பாட்டை மீறி
நாலைந்து பத்திகளுக்கு தன் ஐயங்களையும் கசப்புகளையும் சொல்கிறான். அதிகம்
பேசாதவன் அவன் . பேசக்கூடாதென நினைப்பவன். அதை மீறி அவன் பேச ஆரம்பிப்பதன்  சித்திரம் அதில் உள்ளது. பேச ஆரம்பித்தபின் அவனால் நிறுத்த முடியவில்லை.
கேட்பவரின் ஆச்சரியமும் அதில் உள்ளது. அந்த மொத்த நாவலில் கதைநாயகனின்
அகம் வெளிப்படும் ஒரே இடம் என்ற வகையில் அது மிக முக்கியமாக
கவனிக்கத்தக்கது. ஆனால் அந்த விமர்சகருக்கு அது ஒரு பேச்சு ஆக மட்டுமே
தெரிகிறது. அப்படி தடையில்லாமல் பேச முடியுமா என்ற ‘தர்க்கபூர்வ’
கேள்வியை கேட்கிறார்.

அதுவே அவருக்கு மனித இயல்புகளை தெரியவில்லை, வணிக இலக்கியத்தில் வாசகனின்  உதாசீனமான கவனத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எழுதப்படும் சிறு உரையாடல்களை  தவிர வேறொன்றும் தெரியாது என்பதற்கான அடையாளம். பொதுவாக நண்பர் சபைகளில்  திடீரென ஒருவர் மிக நீளமாக நெடுநேரம் பேச பிறர் அதை ஆச்சரியத்துடன்  அமைதியாக கவனிப்பது அடிக்கடி நிகழ்வதுதான். அதிகம் பேசாதவராக அவர்  இருப்பதும் சாதாரணமாக வழக்கம்தான். அதுவரை எதிர்பாராத உணர்ச்சிப்பீரிடலாக  அது இருக்கும். பல பார்ட்டிகளில் இது நிகழும். தஸ்தயேவ்ஸ்கி அதை அருமையாக  பல கதைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த விமர்சகர் அறிந்தது கல்லூரி  பேருரைகளை மட்டுமே. அபப்டி ஒருவர் பேசினால் பிறர் கேட்க மாட்டார்கள் என்ற  ‘உறுதி’ இருக்கிறது. வாசகர் தன் எல்லைக்குட்பட்ட அறிவை இலக்கியத்தை  மதிப்பிட கையாளும்போது உருவாகும் பிழை இது.

இலக்கியம் ஆழ்மனதை வெளியிடுவதற்காக கண்டடைந்த உத்திகள் பல. உம்பர்ட்டோ எக்கோவின்  நேம் ஆஃப்த ரோஸ் நாவலில் சுவரோவியங்கள் பற்றிய மிக விரிவான சித்திரம் வரும். அந்த  விளக்கம் ஓர் ஆழ்மன படிமச்சித்திரம்தான். 18 ஆம் நூற்றாண்டு நாவல்களில்  நீண்ட கடிதம், டைரி பக்கங்கள் வரும். இன்றைய நாவல்களில் கதைநாயகன் எழுதிய  நாவல், அல்லது கவிதைகள் வருகின்றன. இவவ்ளவு நீளமாக கடிதம் எழுதுவார்களா, நான்  கார்டில்தானே எழுதுகிறேன் என்ற கேள்வியாக் அந்த நாவல்களை சந்தித்தால்  கஷ்டம்தான்

ஜெ


விரிவான எதிர்வினைகள்

 

பெருவலி[ சிறுகதை] -1

முந்தைய கட்டுரைமேலும் இரு கதைகள்
அடுத்த கட்டுரைஒருகெத்தேல் சாகிப்